kutralam

ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட 32 ஹாட்ஸ்பாட்களில் இமயமலைப் பகுதியும் மேற்குத் தொடர்ச்சிமலையும் இந்தியாவின் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. இங்கிலாந்தின் நார்மன் மையர் என்ற சூழல் ஆர்வலரால் 1988இல் உருவாக்கப்பட்ட ‘ஹாட்ஸ்பாட்’ என்ற கருத்தாக்கத்திற்கு “இயற்கைவளஞ் செறிந்த திணை நிலப்பகுதிகளில் தழைத்தோங்கியிருக்கின்ற பல்லுயிரிகளின் வாழ்வியில்/பல்லுயிர்ப் பெருக்கம், மனித இனத்தின் இடையூறால் அழிவைச் சந்திக்கிறதென்றால் அத்திணைப் பகுதியினைப் பல்லுயிரிய ஹாட் ஸ்பாட் எனலாம்.”

மேற்குத் தொடர்ச்சிமலையின் ஆரியன்காவு கணவாயிலிருந்து படிப்படியாக 5000 அடிவரை உயர்ந்து, அங்கிருந்து பொதிகை மலையைத் திரும்பிப் பார்க்கிறது ஒரு மலைத்தொடர். இது உயரமான சிகரம். இதற்குப் பஞ்சம் தாங்கி மலை எனப் பெயர். இந்த மலையிலிருந்துதான் குற்றாலம் எனும் குழந்தையைப் பெற்றெடுத்த சித்திரநதி பிறக்கிறது. பேரால், மாவால், வெள்ளால், கல்லால் என ஆலமரத்தில் பலவகை உண்டு. குற்றால் என்பது சிறிய வடிவத்தில் உள்ள ஒரு ஆலமரம். குற்றாலம் என்பது அந்த ஆலமரத்தின் நினைவாக வைத்த பெயர்.

இச்சிறப்பு வாய்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள குற்றாலம் அதன் அருவிகளால் சிறப்புற்று விளங்கும் எழில்மிகு இடமாகும். தென்காசியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் குற்றாலத்தில் பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி மற்றும் புது அருவி என வனம் முழுவதும் அருவிகள்தான். ஜூன் மாதம் சாரலுடன் அருவிகள் உயிர்பெறுகின்றன.

உலகில் குளிப்பதற்கென்று ஒரு நகரம் உள்ளதெனில் அது குற்றாலம்தான். பொதிகை மலையின் மூலிகைகள் கலந்த இந்த நீர் நம் உடலில் படும்போது பல்வேறு நோய்கள் குணமாகின்றன. இந்த நீர் உடலில் நேராகப் படுவதற்கு நாம் சோப்போ, ஷாம்புவோ, வேதியல் பொருட்கள் நிறைந்த எண்ணெயையோ பயன்படுத்த வேண்டியதில்லை. அருவியை நேராக உங்கள் உடலில் வாங்குங்கள். குற்றாலம் என்னும் பல்லுயிர் பெருக்கச் சூழலை அனுபவிப்பதோடு அதைக் காப்பது நமது கடமை. நமக்கும் அருவிக்குமிடையில் யாரும், எதுவும் வேண்டியதில்லையே!

 *** 

Pin It