manjolai

ஒரு போரில் உதவியதால் கேரள மார்த்தாண்ட வர்மாவினால் சிங்கப்பட்டி ஜமீனுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்து ஜமீனால் 8,500 ஏக்கரை பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனிக்கு (பி.பி.டி.சி.) 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏக்கர் வெறும் பத்து ரூபாய்க்கு. குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட இடம் உலகின் மிக முக்கியமான பல்லுயிர் பெருக்கம் நிறைந்த சோலைக்காடுகளாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை கடல் மட்டத்திலிருந்து 3500 அடியிலிருந்து 4500 வரை உயரம் கொண்டது.

விடுதலைப் பெற்ற பிறகு அனைத்து ஜமீன் மற்றும் ரயத்துவாரி முறைகளும் ஒழிக்கப்பட்ட பின்னரும் எவ்விதக் கேள்வியுமின்றி மாஞ்சோலைக் காடு வனத்துறைக்கு ஒப்படைக்கப்படாமல் இன்னும் வடஇந்திய தனியார் கம்பெனி கையில் வைத்துள்ளது. இதுவே அயோக்கியத்தனமானது. முதலில் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனியிலிருந்து இந்தக் காடுகளை மீட்பது தமிழக அரசின் முதல் கடமை. இங்கு இருந்த மாபெரும் உயிர்ச் சூழல்கள் அழிக்கப்பட்டு அவை தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கேரள தலித் மற்றும் ஈழவர்களை இங்கு கொத்தடிமைகளாக தேயிலைத் தோட¢டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கொத்தடிமை முறை இன்றும் தொடர்கிறது. 1962லேயே களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. புலிகளின் பெயரைச் சொல்லி காணி பழங்குடிகள் காட்டைவிட்டு கீழே இறக்கப்பட்டனவர். ஆனால் மாஞ்சோலையில் இருந்து தேயிலைத் தோட்டம் அகற்றப்படவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் பி.பி.டி.சி. மாஞ்சோலையிலிருந்து முதலில் மூடப்பட வேண்டும்.

பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் தொழிற்சாலையின் சத்தங்கள், வாகனங்கள், டன் கணக்கில் கொட்டப்படும் செயற்கை உரங்கள் மற்றும் எண்ணற்ற அழிவுகளை பி.பி.டி.சி. செய்துவருகிறது. இங்கிருக்கும் மழைக்காடுகள் அழிக்கப்படக் கூடாது என்று ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் பி.பி.டி.சி. 249 ஏக்கர் நீர்ப்பிடிப்புப் பகுதியான சங்கிலியாறு காடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது. புலிகள் காப்பகம் ஆரம்பிப்பட்ட பிறகு, இங்கிருக்கும் புலிகள் படிப்படியாகக் குறைந்துகொண்டேதான் வந்துள்ளது. புலிகளைக் காக்க வேண்டுமென்றால் பாம்பே பர்மா கம்பெனி மூடப்பட வேண்டும்.

Pin It