ஒரு நாட்டின் உணவையும் தட்பவெட்ப நிலையையும் சிதைப்பதன்மூலம் ஒரு நாட்டை அழிக்க முடியும். அணு ஆயுதங்களுக்குப் பிறகு விதைகளை ஆயுதமாகப் பயன் படுத்த முடியும் என்று நம்முடைய வரலாறுகள் தொடர்ச்சியாக அறிவுறுத்துகின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் நமது நெல்வகைகள், சிறுதானியங்கள், நீராதாரங்கள், விதை சேகரிப்பு முறைகள், மூவாயிரம் வருடங்களுக்கு மேலான மரபுசார் வேளாண்முறைகள் முற்றிலுமாக அழித் தொழிக்கப்பட்டு விவசாயி கடைகளில் போய் விதைகளை வாங்கும் அடிமைமுறைக்கு ஏகாதிபத்திய நாடுகளால் தள்ளப்பட்டான். இவையனைத்தும் நம்முடைய நாட்டின் சிறப்பு வேளாண் விஞ்ஞானிகளின் உதவியுடன் செய்யப்பட்டன.

தமிழர் மரபில் விதைகள் பெண்களின் கைகளில் நீண்டகாலமாக இருந்துவந்துள்ளது. வீடுகளில் நெல் மற்றும் சிறுதானியங்களின் விதைகளை வருடக்கணக்கில் சேமித்துவைக்கும் தொழில்நுட்பத்தைப் பெண்கள் தெரிந்து வைத்திருந்தனர். விதைகளைச் சேமிப்பதன் மூலமாக பெண்களே விதைகளாயிருந்தனர். விதைகள் நம் கையைவிட்டுப்போய் நீண்டகாலமாகிவிட்டது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி தமிழகத்திற்கு வந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. இயற்கைக்குத் தாக்குப்பிடிக்காத கம்பெனி விதைகளை அன்றாடம் விவசாயிகள் விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக் கின்றனர். இவ்விதைகளைப் பயிரிடுவதென்பது சூதாட் டத்திற்கு ஒப்பானது. கடும்மழை, வறட்சிக்கு இவ்விதைகள் தாக்குப்பிடிப்பதில்லை.

ஆனால் நம்முடைய மரபான விதைகளோ ஒற்றைத் தன்மை உடையதல்ல. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு இந்தியா முழுமைக்கும் லட்சக்கணக்கில் விதை வகைகள் இருந்தன. கடும் வறட்சி, மழை, வெள¢ளம், புயல் போன்ற இயற்கையின் அனைத்து இடர்ப்பாடுகளுக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய நெல் வகைகள் இருந்தன. நோயுற்றவர்கள், ஒல்லியானவர் கள், குண்டானவர்கள் என்று ஒவ்வொருவரின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு நெல் வகைகள் நம்மிடையே இருந்தன. இன்று நம்மிடம் எதுவுமே முழுமையாக இல்லை. மரபான விதைகளைச் சேகரிப்பதும் பாதுகாப்பதும் அதை விவசாயிகளுக்கு விநியோகிப்பதும் மட்டுமே இன்றைய அரசியல் கடமை.

ஒவ்வொரு ஊரிலும் நெல் விதைத் திருவிழாவை நடத்தி விதைகளைப் பரப்புவோம். தற்சார்புடன் வாழ்வோம்.

சிறுதீவுகளும் காலநிலைப் பிறழ்வும் 2014

கரீபியக் கடல், அட்லாண்டிக் கடல், பசிபிக் மற்றும் இந்தியப்பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளை வளரும் குட்டித்தீவு நாடுகள் (SIDS) என்று அழைக்கப்படுகின்றன. மழைக்காடுகள், ரம்மியமான மலைத்தொடர்கள் என அற்புதமான சூழல் மண்டலங்களைக்கொண்ட இத்தீவு நாடுகள் இயற்கை வரைந்த கவிதை எனலாம்.

இந்நிலையில் காலநிலை மாற்ற சிக்கலின் விளைவான கடல் நீர் மட்ட உயர்வு எனும் பெரும் அச்சுறுத்தலை இத்தீவு நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

இது தொடர்பான விழிப்புணர்வை முன்னெடுக்கவும் குட்டித்தீவு நாடுகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் நடப்பாண்டை சர்வதேச வளரும் குட்டித்தீவு நாடுகளின் ஆண்டாக கடந்த பிப்ரவரி மாதம் ஐநாவின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிற வளரும் குட்டித்தீவு நாடுகளின் வளம்குன்றா நீடித்த வளர்ச்சிக்கான மாநாடு குறித்த விழிப்புணர்வுக்கும் இது உதவும் என்று ஐநா கூறுகிறது.

வளரும் குட்டித்தீவு நாடுகளின் கூட்டமைவு, 1992ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐநாவின் சூழல் மற்றும் வளர்ச்சிக்கான மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வகையான அறிவிப்புகளும் மாநாடுகளும் கடல் மட்ட உயர்வை தடுப்பதற்கு உதவுமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவ்வுலகம் எதிர்கொள்கிற சூழலியல் சிக்கலானது வளர்ந்த முதலாம் உலக நாடுகளின் திட்டமற்ற பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகும். உண்மை நிலை இவ்வாறு இருக்க முதலாம் உலக நாட்டின் அங்கமாகத் திகழ்கிற ஐநாவால் ஒருங்கிணைக்கப்படுகிற காலநிலை மாநாடுகள், உலக மக்களின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருவதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச சமூகத்தின் முன்பாக வெறும் வெற்று சொல் சிலம்பாட்டங்களை நிகழ்த்தி வருகிற ஐநாவின் பித்தலாட்ட அறிவிப்புகளை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம். 

Pin It