செழிப்பான பகுதிகளுக்கு தமிழகத்தில் “தஞ்சாவூர் ஜில்லா’’ என்றொரு பெயருண்டு. இராமநாதபுரம் பகுதி என்றதும் வறட்சியும், சீமைக்கருவேல முள்ளும் நினைவுக்கு வரும். ஆனால் அங்கேயும் செழிப்பானதொரு “தஞ்சாவூர் ஜில்லா” இருக்கின்றது. அது திருவாடனை பகுதியாகும். அந்தப் பகுதியில் விளையும் நெல்லுக்கு தஞ்சாவூர் நெல்லே தோற்றுப் போகும் என்கிறார்கள் அங்கே வேளாண்மை செய்வோர். வேளாண் தொழில் வேரோடும், வேரடி மண்ணோடும் அற்றுவரும் வேளையில் இப்பகுதியில் மட்டும் வேளாண்மை தொற்றிக்கொண்டு நிற்கிறது.

இப்பகுதியில்தான் ஆயிரம் குறுக்கம்(ஏக்கர்)அளவில், பத்தாயிரம் கோடி செலவில் அனல் மின்நிலையம் அமையவிருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டம் உப்பூரில் இரண்டு 800 மெகா வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 952.5 குறுக்கம் பட்டா நிலமும், 379.6 குறுக்கம் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது.

இவ்விடம், உப்பூர் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து 600 மீட்டர் தொலைவிலும், கடற்கரை யிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இத்திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகத் திலிருந்து நிலக்கரி தொடர்வண்டி மூலம் கொண்டு வரவும், ராமநாதபுரத்திலிருந்து தனி ரயில் பாதை அமைத்து, திட்ட இடத்திற்கே கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சூழல் விளைவு மதிப்பீட்டு ((Environmental Impact assessment) ) திட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது.

இத்திட்டம் இப்பகுதியில் வந்தால், வறண்ட நிலமான இராமநாதபுரம் பகுதி வளமடையும், வளர்ச்சி ஓங்கும், வேலை வாய்ப்பு வெள்ளமெனப் பெருகும் என்று வழமையான பரப்புரையுடன் அரசு இயந்திரங்கள் வலம் வருகின்றன.

தமிழகத்தின் மின்வெட்டுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் உணவு, எரிபொருள், மின்சாரம் என மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தனது முதலாளிய கட்டுக்குள் வைத்துகொண்டு, பெருநிறுவனங்களின் வணிகத்துக்கு இணங்க இயங்கிவரும் அரசு, முன்வைக்கும் தீர்வுகள் சரியானவையன்று. இவர்கள் மீண்டும் மீண்டும் உலக நாடுகள் உதறித்தள்ளிவரும், உளுத்துப்போன மின் உற்பத்தி முறையான ‘நிலக்கரியை எரித்து, மின்சாரம் தயாரிப்பது’ என்பது தெரிந்தே. கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரிந்து கொள்ளும் வேலையேயாகும். இந்த உற்பத்தி முறையோடுதான் நாம் முரண்பட்டு நிற்கிறோம்.

இந்தத் திட்டத்திற்காக நிலக்கரியானது முழுக்க இறக்குமதி செய்யப்படவிருக்கிறது. நடுவணரசு நிலக்கரி கொடுத்தால் மட்டுமே சிறிதளவு உள்நாட்டு நிலக்கரியைக் கொண்டு இயங்கும். இறக்குமதி செய்யப்படவிருக்கும் நிலக்கரியின் அளவு ஆண்டுக்கு 4.64 மில்லியன் டன்கள். இதில் கந்தகத்தின் உள்ளடக்கம் 0.8 விழுக்காடு, சாம்பலின் உள்ளடக்கம் 10 விழுக்காடு.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் கந்தகம் உள்ளடக்கிய நச்சுக்களின் அளவானது நமது உள்நாட்டு நிலக்கரியில் இருக்கும் அளவினைவிட அதிகமாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அனல் மின்நிலையத்தின் தண்ணீர்த் தேவைக்காக கடல் நீரானது ஒரு மணி நேரத்திற்கு 15376 கன.மீ வீதம் பயன்படுத்தப்படும். கடல் நீரானது கரையிலிருந்து 5.8 கி.மீ தொலைவு கடலிலிருந்து எடுக்கப்படுகிறது. கடல்நீர் உப்பு நீக்கம் செய்யப்பட்டு குளிர்விப்பானுக்குப் பயன்படுத்தப்படும். பின்னர் அவை மீண்டும் கடலுக்குள் 6.5 கி.மீ.க்கு அப்பால் விடப்படும்.

நிலக்கரி எரிப்பதால் ஏற்படும் தூசுக்களைக் கட்டுப்படுத்தும் கருவிகளும், மாசுக்களை அருகில் அண்ட விடாமல் உயரத்தில் வெளியேற்ற 275 மீட்டர் புகைபோக்கியும் கட்டப்படவிருக்கிறது. திறந்தநிலையில் இறக்கிவைக்கப்பட்டு, புறவெளியில் குவிந்து கிடக்கும் நிலக்கரியின் மாசுக்கள் காற்றில் பறந்து விடாமலிருக்க நீர்த் தெளிப்பானைக்கொண்டு கட்டுப்படுத்துவார்கள். 

அதேபோன்று எரித்தபின்பு மிச்சப்படும் சாம்பல் குவியலின் மீது தொடர்ந்து நீர் இருந்த வண்ணம் இருக்க வேண்டும். அனல் மின் நிலையத்தின் எரிசாம்பல் தேக்கும் குட்டைக்காக 275 குறுக்கம் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது. சாம்பல் கொட்டப்படும் இடங்களிலெல்லாம் பசுமை வளைய மேம்பாடு, காடு வளர்ப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்றெல்லாம் திட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது.

நிலக்கரியை எரிப்பதால் வெறும் சாம்பல் மட்டும் வெளியேறப்போவதில்லை, உயிர்ச்சூழலையே அழிக்கக்கூடிய நச்சுப்பொருளான பாதரசத்தையும் வெளியேற்றக் கூடியதாகும். உதாரணமாக, பல வருடங்களாகச் சேர்ந்த 0.9 கிராம் பாதரசம் 10 எக்டேர் பரப்பளவுள்ள ஏரியை நச்சுப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

100 மெகாவாட் திறனுள்ள ஒரு நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையம் 11.33கி.கி பாதரசத்தை ஆண்டு ஒன்றுக்கு வெளியேற்றுகிறது. 1600 மெகாவாட் திறனுள்ள சூப்பர் கிரிடிகல் தொழில்நுட்பம் கொண்ட அனல்மின் நிலையம் ஆண்டொன்றுக்கு எவ்வளவு கி.கி பாதரசத்தை வெளியேற்றுமென நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இவ்வாறு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மேட்டூரிலும், தூத்துக்குடியிலும் இயங்கி வரும் அனல் மின் நிலையங்களின் நிலை என்னவென்று நெருங்கிப் பார்த்தாலே தெரிந்துவிடும். திட்ட அறிக்கையெல்லாம், வெற்றறிக்கை யாக மாறிப்போனதைக் காணலாம்.

சூழல் விளைவு மதிப்பீடு என்ற பெயரில் வெளியாகி யிருக்கும் அறிக்கையும் முழுமையானதாக இல்லை. ஒரு திட்டம் செயல்படுத்தும்போது, அத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நிகழப்போகும் மாற்றங்களை மிகத்துல்லியமாக அளவிடவேண்டும். ஆனால் தற் காலத்தே வெளியாகும் அறிக்கைகள் முழுமையானதாக இல்லாமல் நிறுவனச்சார்புடையதாகவே அமைந்து விடுகின்றன.

இவ்வறிக்கையில் பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டத்தக்கவைகளாக இருந்தாலும் சிலவற்றை மட்டுமே இங்கு பார்ப்போம்: அனல் மின்நிலையத்திற்காகத் தேவைப்படும் நீர்யாவும் கடல்நீரினைக் கொண்டே உப்பு நீக்கம் செய்து பயன்படுத்தப்படவிருக்கிறது. உப்பு நீக்கும் ஆலைகள் ஏதேனும் காரணத்தால் செயல்படாத நிலை ஏற்பட்டால், மாற்றாக எந்த வழியில் நீரினைப் பெறுவார்கள் என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.மாற்று வழி நீரைப்பற்றி குறிப்பிடவேயில்லை.

கடலிலிருந்து நீரைக்கொண்டு வரும்போது அந்தக் குழாய்கள் தரையையட்டி வருமா? கடல் மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட நிலையில் குழாய்கள் கொண்டு வரப்படுமா? என்பது பற்றியும் குறிப்பிடவில்லை. இது குறித்துப் பின்னரே முடிவு செய்யப்படும், பின் விளைவு கள் பின்னரே ஆராயப்படும் என்பதாக அமைகிறது.

கொதிகலன்களைக் குளிர்வித்தபின் பயன்படுத்தப்பட்ட நீரானது குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும். அந்நீர் குளிர்வித்த பின்னே கடலில் கலந்தாலும், கடல்நீரில் 2.5 கி.மீ சுற்றுப்பரப்புக்குள் தட்ப வெப்பம் 0.5 முதல் 0.75 டிகிரி செல்சியசு அளவுக்கு உயரும்.

நன்னீருக்காக நீக்கப்படும் உப்புத்தன்மை கொண்ட அடர் உப்புக்கரைசலானது கடலுக்குள்ளேயே வெளியிடப்படும். அடர் உப்புக் கழிவானது கலக்குமிடத் திலிருந்து 2கி.மீ சுற்றுப்பரப்புவரை குறிப்பட்டளவு கடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றால் ஏற்படும் விளைவுகளால் கடல் வளத்தில் உண்டாகும் விளைவுகள் குறித்து அவ்விடத்தை அடிப்படையாகக்கொண்டு வாழும் மக்களுக்கு விளக்கமளித்திருக்க வேண்டும். இவை குறித்தும் விளக்கப்படவில்லை.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டு வரப்படும் என்ற ஒற்றை வாக்கியம் மட்டுமே இருக்கிறது. ஆய்வில் உள்ள நிலைப்படி தூத்துக்குடி துறைமுகத் திலிருந்து, உப்பூர் மின்நிலையம் அமையவுள்ள திருப் பாலைக்குடி வரை, தனியாக சரக்கு ரயில் அகலப்பாதை அமைக்கப்படும். (இந்தப் புதிய ரயில் பாதை அமைய காலதாமதமானால், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, தற்போது பயன்பாட்டிலுள்ள பாதையிலேயே, தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர், மானாமதுரை வழியே ராமநாதபுரத்திற்கு நிலக்கரி கொண்டு வர, மாற்று வழிப்பாதை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.) இவ்விரு வழிகளே பின்பற்றப்படும்.

ஆனால் இவை குறித்தெல்லாம் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை. இதற்காக நிலம் கையகப்படுத்து வது போன்ற நடைமுறை செயல்கள் குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை.

அப்பகுதியில் வேளாண்மைத்தொழில், கடலோர மக்களின் மீன் பிடித்தொழில், கடற்கரையோர மக்களின் உப்பளத்தொழில் எனப் பல்வேறு தொழில்கள் நடை பெற்று வருகின்றது. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் தொழில்கள் ஏதும் நடைபெறவில்லை என்றே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றை யெல்லாம் ஒரு தொழிலாகக்கூட கருத்தில் கொள்ள வில்லை என்பதுதான் இவர்களின் ஆய்வறிக்கை.

இதுபோன்று பல்வேறு குறைகளுடன் திட்ட அறிக்கையும், அவற்றால் ஏற்படும் சூழல் விளைவு அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. கருத்துக் கேட்பு கூட்டமும் நடந்தேறிவிட்டது.

“வாசலுக்கு வெளியே விரிகடல் இருபதடி தொலை வில் அலையின்றி துயில்கொண்டிருக்கிறது. அரை மைல் தொலைவு, கடலில் முழங்கால் நனைய நடக்கலாம்.” அவ்வளவு குறைவான ஆழம், பின்னர் நிறுத்தப் பட்டிருக்கும் நாட்டுப்படகை அடையலாம்.

அங்கிருக்கும் ‘மோர்ப்பண்ணை’ என்ற மீனவ கிராமத்தின் நில அமைப்பும் கடல் அமைப்பும் இப்படித் தான் இருக்கிறது. நிலக்கரி எரிக்கவிருக்கும் மேடை (அனல் மின் நிலையம்) அமையும் உப்பூர், உப்பு விளைச்சலுக்கு பெயர் பெற்றதாலே உப்பூர் என்றானது. அடுத்திருக்கும் ‘வளமாவூர்’ ‘வளமான ஊர்’ என்றதாலே வளமாவூர் என்றானது.

அடுத்திருக்கும் திருப்பாலைக்குடி என்ற ஊரில் திறந்த நிலையில் குடிநீருக்கான ‘ஊருணி’ அமைந்திருக்கிறது. கிழக்குக் கடற்கரைச்சாலை என்பதாலும், அவ்வழியே ராமேசுவரம் செல்வதாலும் தமிழ் உள்ளடங்கி பிற மொழிகளிலும் இது குடிநீருக் கானது, தீங்கு செய்யாதீர்கள் என அறிவிப்புகள் இருக்கும். நண்பகலில் அப்பகுதிகளில் விளைந்திட்ட ‘மீன் சோறு’ எனும் சுவையுறும் ‘ஊண் சோறு’ கிடைக்கும்.

ஒரு பக்கம் வேளாண் குடிகளின் ஊர் இருக்கும். அதன் பக்கம் நெல் விளையும் நிலமிருக்கும். எதிர்ப்பக்கம் மீனவ குப்பமிருக்கும்; அதன் பக்கம் உப்பு விளையும் அளமிருக்கும்.

environment 600

வேளாண்நிலங்களை அளவிட ‘முந்திரி’ என்ற பழங்கால அளவீட்டுச்சொல் வழக்கில் உள்ளது. உப்பூருக்கு அருகில் ‘பேயாறும்’, தொலைவில் ‘உப்பாறும்’ ஓடிக்கொண்டிருக்கிறது. ஏந்தல், சிறுகுளம், பெரியகுளம் என நீளும் நீர்நிலைகளின் எண்ணிக்கை பலவாகும். பாக் நீரிணை எனும் கடல் பகுதியும் அங்குதான் அமைந்துள்ளது. பக்கத்திலிருக்கும் ‘பாம்பன்’ மீனவர்களும் படகோட்டிவரும் வளமான கடற்பகுதி. கடலுக்குள் அமைந்திருக்கும் ஒன்பது வழிபாட்டுச் சிலைகள் கொண்ட தேவிபட்டினம் என்ற ஊர். இப்படியாக மரபார்ந்த வாழ்வும் வளமான இயற்கையும் கொண்ட பகுதியாக இருக்கிறது.

இப்பகுதியின் உயிர்ச்சூழல் பெரிதும் கடல் வாழிடமாக இருக்கிறது. அவ்விடம் வாழும் உயிர்கள் அதிகளவு உப்புத்தன்மையைத் தாங்குமளவு தகவமைவு கொண்டவை. கடலோரத்தின் இயற்கையமைப்பு நிலம், கடல், காற்று ஆகியவற்றின் ஆழ்ந்த இடைத்தொடர்பால் பிணைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வேதியியல், உயிரியல் அளவீடுகளின்படி நீரானது மிகவும் உயிர்வளி (Oxygen) உடையதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும், உயிரியல் அடிப்படையில் முதல்நிலை, இரண்டாம் நிலைகளில் உற்பத்தித் தன்மை உடையதாகவும் இருக்கிறது. கடல்நீரின் இப்பண்புகள், பல்வேறு தாவர, விலங்கினங்களின் பல்லுயிர்ப் பரவலை பறை சாற்றுகிறது.

கடற்கரையோரத்தை அடர்த்தியான வகையில் அலையாத்திக்காடுகள் போர்த்தியிருக்கின்றது. Avicennia Marina என்ற அரியவகை அலையாத்தி (Mangrove)) மரங் கள் அதிகமாக இருக்கின்றது. இம்மரங்கள் பல்வேறு மருத்துவ குணமுடையவை என்று அறியப்பட்டு பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. Rhizo Phoraapiculata என்ற தாவர வகையினமும் கடலோரப் பகுதியில் காணப்படுகின்றது. இவை அழிந்துவரும் தாவர வகைகளில் ஒன்றாக உலக அரிய வகையினங் களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கரையோரத்தில் உப்பளங்கள் இருக்கின்றன.இறால் பண்ணைகள் இருக்கின்றன. இவற்றுக்கு இடையே இடைவிடாது கழிமுகங்களும், அலையாத்தி மரங்களும் நிறைந்து காணப்படுகிறது.

இப்பகுதியில் இருக்கும் மீனவர்கள் யாவரும் நாட்டுப்படகு மீனவர்களே. இவர்களால் கடலில் அதிக தூரம் செல்ல முடியாது. கரையோர மீன்பிடிப்பில் வாழ்ந்து வருபவர்கள். இவர்களின் மீன் விளைச்சலுக்குக் காரணமாக அமைவது கடலோர அலையாத்திக் காடுகளே. நிலக்கரிச் சாம்பல், அலையாத்திக் காடுகளை அழித்துவிடும் வல்லமை கொண்டவை. கடலிலிருந்து நீர் எடுக்கும் குழாய்களும், தடுப்புகளும் படகுகளின் இயக்கத்திற்கு இடையூறாக அமைந்திடும். அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் சாம்பல் மேடுகள் மட்டுமே இருக்கும். வேறு எதுவும் இருக்காது.

நூறு விழுக்காடு வெளிநாட்டு நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின்நிலையங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்காகவே காத்திருக்க வேண்டி வரும். அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ‘இறக்குமதி’ செய்பவர்கள் வைப்பதே விலை. உலகச் சந்தையின் நிலைக்கு ஏற்ப விலையில் அலையடிக்கும்.இவ்வாறு அதிகக் கொள்முதல் கொண்டு இயங்கும்போது, மின் உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். மின் கட்டணமும் உயரும். அல்லது அரசுக்கு மானிய இழப்பாக செலவு மிகும்.

வெளிநாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களை வைத்திருக் கும் பெருவணிகத்தினர் தமிழகத்தின் மின்தட்டுப் பாட்டைக் கரணியமாக வைத்து, அவர்களின் விற் பனைக்குச் சந்தை விரிக்கும் வேலையைச் செம்மையாக செய்திடவே அனல் மின் திட்டங்களைத் திணிக்கிறார்கள்.

இயற்கை ஆற்றல்களைக் கொண்டு பெறும் நீடித்த மின்னுற்பத்தியில் ஈடுபடாமல்,காலத்தால் கைவிடப் பட்ட நிலக்கரி எரிப்பு மேடைகளை நிறுவுவது என்பது நம்மை நாமே எரியூட்டும் நிலைக்குச் சமமாகும்.

Pin It