கில்லிஸ் எரிக் செலானி, பிரான்ஸ் தேசத்தின் நார்மண்டியில் உள்ள கேயான் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். இரண்டு வருடங்களுக்கு முன், 2012 ல், அவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அதைப் படித்ததும் உலகமே அதிர்ந்தது. இந்த ஆராய்ச்சி மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு மைல்கல் ஆய்வாகும். அவர்,பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட மரபணு மாற்று மக்காச்சோள உணவைத் தன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்குத் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கொடுத்து வந்தார். வழக்கமாக (சராசரியாக), எலிகளின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்தான்....

இந்த இரண்டு ஆண்டுகளில், அந்த எலிகளுக்கு, நாம் வழக்கமாகக் காண்பதைக் காட்டிலும், மிகப்பெரிய பால்சுரப்பிகள் உருவாகின. அது மட்டுமல்ல, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களும் அவற்றுக்கு வந்து சேர்ந்தன.

இந்த ஆய்வு, எலிகளின் முழு ஆயுட் காலத்திற்குமாகச் செய்யப்பட்ட முதல் ஆய்வாகும். எலிகளின் மீது இரண்டாண்டுகளாகச் (அதன் முழு ஆயுட் காலத்திலும்) செய்யப்பட்ட இந்தப் பரிசோதனை, மனித ஆயுளின் 80 ஆண்டுகால வாழ்க்கையின் மீது செய்யப்படும் பரிசோதனைக்கு நிகரானதாகும். வழக்கமாக, இந்தியாவில், எலிகளின் மீது 90 நாட்களுக்குத்தான் பரிசோதனை செய்யப்படும். இது மனித ஆயுளில் 20 ஆண்டுகால வாழ்க்கையில் செய்யப்படும் பரிசோதனைக்குச் சமமானதாகும்.

இந்த அதிர்ச்சியூட்டக்கூடிய ஆய்வு, மரபணு மாற்றுப் பயிர் ஆதரவு விஞ்ஞானிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அனைத்து விதமான குற்றச்சாட்டுகளும், Dr.செர்லானி மீது சுமத்தப்பட்டன. பரிசோதனை முடிவுகளைத் தன் வசதிக்கேற்ப மாற்றிவிட்டார் என்பதும் அதில் அடங்கும். முதலில், Dr.செர்லானியின் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட விஞ்ஞானப் பத்திரிக்கை, அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால் இது எப்படி நடந்தது என்றால், , மான்சான்டோவின் ஆதரவில் உள்ள ஒருவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்ற போதுதான். இருந்தபோதிலும், ’ஐரோப்பிய சுற்றுச் சூழல் விஞ்ஞானம்’, என்ற இன்னொரு விஞ்ஞானப் பத்திரிக்கையில், இந்த ஆய்வறிக்கை மறு பதிப்பு செய்யப்பட்டு மீண்டும் வெளியானது.

ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளினால் ஏற்படும் பாதிப்புகள், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரக் கூடியதாக இருக்கும் என்ற ஆய்வுகள் தற்போது வந்து கொண்டே இருக்கின்றன. இந்தச் சமயத்தில், மனித வாழ்க்கையின் 20 ஆண்டுகளுக்குச் சமமான, 90 நாட்கள் எலி பரிசோதனைகளில், இந்தியாவின் ஒழுங்காற்று அமைப்புகள் திருப்தியடைந்துவிட்டன, என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ஒருவரின் சிறுநீரக நோய்களுக்கு, அவரது பாட்டி உட்கொண்ட உணவில் கலந்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தே காரணம் என்று சமீபத்தில் வந்த ஓர் ஆய்வு தெரிவிக்கிறது (https://news.wsu.edu/2014/07/24pesticidelinkedtothreegenerationsofdisease/#.UCSIKOJWRM<https://news.wsu.edu/2014/07/24pesticidelinkedtothreegenerationsof disease/>) வாஷிங்டன் மாநிலப் பல்கலைகழகப் பேராசிரியரும், அதன் ‘‘இனப்பெருக்க உயிரியல் மையத்தின்” நிறுவனருமாகிய மைக்கேல் ஸ்கின்னர் என்பவரும் அவரது சகாக்களும் சேர்ந்து தங்களது கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தி ஒரு ஆய்வறிக்கையை PLOSONE நேரலையில் பதிவு செய்திருக்கிறார்கள்.) http://dx.plos.org/10.1371/journal. pone.0102091) இந்த ஆய்வுக்கு தேசிய பொது சுகாதார நிறுவனம், (National institute of Public Health) நிதி உதவி அளித்தது.

ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் தாக்கம் பற்றிய இந்த ஆய்வுகள் உண்மையெனில், மரபணு மாற்று உணவுப் பயிர்களின் பாதுகாப்பை மறு உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, அவைகளை நீண்டகால அவற்றை உட்படுத்த வேண்டாமா? மரபணு மாற்றுப் பயிர் ஆதரவு விஞ்ஞானிகள், ஏன் இவற்றை ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் மீது இப்படி வேக, வேகமாகத் திணிக்கிறார்கள்.

”மரபணு மாற்றுப் பயிர் பரிசோதனைகளை நாம் அனுமதிக்கா விட்டால், அதன் செயல்பாடுகளை எவ்விதம் அறிந்து கொள்வது?” என்ற வாதத்தை தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் முன்வைக்கின்றன. ஆனால், உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட, மரபணு மாற்றுப் பயிர் பரிசோதனைகளின் நச்சு, காட்டுத் தீயாய் அனைத்து இடங்களுக்கும் பரவி வருகின்றன என்கிற செய்தியை இந்த ஊடகங்கள் மக்களிடம் சொல்லாமல் மறைக்கின்றன. மரபணு மாற்றுப் பயிர்களில் உள்ள அந்நிய மரபணு, காற்றின் மூலமாகவும், அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவும் இயற்கைச் சூழலின் அனைத்து இடங்களுக்கும் பரவுகின்றன.

அமெரிக்காவில், மரபணு மாற்றுப் பயிர்களின் நச்சுப் பரவலால், பத்து கோடி ஏக்கருக்கும் மேலான நிலங்களில், பூதாகரமான களைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இந்தப் பூதாகரக் களைகளை அழிக்க மிக அதிக சக்தி வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன் படுத்த வேண்டியதாயிற்று. ஆனால், இந்தக் களைகள் மிகக்குறுகிய காலத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கெதிரான எதிர்ப்பாற்றலைப் பெற்றுவிட்டன. விளைவு, களைகளை, மனித உழைப்பால், அறுத்தெரிய வேண்டியதாயிற்று எனவே, மரபணு மாற்றுப் பயிர் விதைகள் விசயத்தில், நீண்டகால உணவு சோதனைகளுக்குப் பின்னர்தானே, களப் பரிசோதனைகளுக்கு இந்தியா அனுமதியளிக்க வேண்டும்? உண்மையில்.

விஞ்ஞானப் பரிசோதனைகளை எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் மரபணு மாற்றுப் பயிர்களின் அந்நிய மரபணுக்கள் எளிதில் காற்றில் கலந்து இயற்கையோடு ஒன்றிணையும் ஆபத்து இருப்பதால், அதை முற்று முதலான கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்கான ஒழுங்காற்று விதிமுறைகள் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், மரபணு மாற்றுப் பயிர்களின் அந்நிய மரபணுக்கள் எளிதில் இயற்கையோடு கலந்து, நம் உணவுச் சங்கிலியைப் பாதிக்கும்.

இப்படி இருக்கையில், மனிதர்கள் மீதான பாதிப்பை முழுவதும் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நீண்ட கால சோதனையை நடத்தும்படி மரபணு மாற்றுப் பயிர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம், நமது சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஏன் கேட்டுக் கொள்ளவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக, நோய் எதிர்ப்பும், சுகாதாரக் கேடுகளும் இன்னமும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் ஒரு தேசத்தில், இருப்பதெல்லாம் போதாதென்று, மேலும் மேலும் நெருக்கடிகளை ஏன் அதிகப்படுத்த வேண்டும்?

ஆனால், நீண்டகால மனித ஆரோக்கியத்தின் அவசியம் பற்றிய கேள்வியை நீங்கள் எழுப்பிய மறு விநாடியே, திருப்பித் திருப்பிச் சொல்லும் வெறுப்பூட்டக் கூடிய ஒரு பதில் நமக்குக் கிடைக்கும். ”அமெரிக்க மக்கள் கடந்த 20 வருட காலமாக, மரபணு மாற்று உணவை உட்கொண்டு வருகிறார்கள். அவர்கள் யாரும் அதனால், செத்து மடிந்து விடவில்லை”, என்பார்கள்.

ஆனால், மரபணு மாற்று உணவால் ஏற்படும் மனிதப் பாதிப்புகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை நடத்துவதற்கு, மரபணு மாற்றுத் தொழில் அனுமதிக்கவே இல்லை என்பது பற்றி இவர்கள் வாயைத் திறக்கவே மாட்டார்கள். இதுவரையிலும். ஒரே ஒரு மருந்தகம்சார்ந்த மனித பரிசோதனை (clinical human trial)) மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது.

அதிலும் கூட, எலிகளை வைத்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் எப்படியெல்லாம் பிரச்சனைகள் கிளப்பப் பட்டதோ, அதேபோல், இதிலும் கிளப்பப் பட்டது . மரபணு மாற்றுத் தொழில் துறையால். அதன் பின் மருந்தகம் சார்ந்த மனிதப் பரிசோதனை (நீறீவீஸீவீநீணீறீ லீuனீணீஸீ tக்ஷீவீணீறீ) எங்குமே நடைபெறாமல் பார்த்துக் கொண்டது, மரபணு மாற்றுத் தொழில் துறை.

1994ல் மரபணு மாற்று தக்காளி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்காவில், நோய்கள் பரவியது. ஒவ்வாமை 400% விழுக்காடு அதிகரித்தது; மூச்சிறைப்பு நோய் (ஆஸ்துமா ) 300 விழுக்காடு அதிகரித்தது ; ஆட்டிசம் (Autism) 1500 விழுக்காடு அதிகரித்தது. மேற்கூறியவைகள் எல்லாம், சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே. வளர்ச்சியடைந்த நாடுகளில், அமெரிக்காதான் மிகவும் நோய்வாய்ப்பட்ட நாடாகும், என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இதற்கு மரபணு மாற்று உணவுப்பயிர்கள்தான் காரணம் என்று நேரடியாகச் சொல்ல முடியாது. ஆனால், அப்படியில்லையென்று மறுத்துவிடவும் முடியாது.

இறுதியாக, மரபணு மாற்றுத் தொழில் அடித்துச் சொல்லும் ஒரு விசயத்தைப் பற்றி பார்ப்போம். மரபணு மாற்றப்பட்ட பயிர்களால், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போனதாகவும், அதனால் சுற்றுச் சூழல் நன்றாகத் தூய்மை அடைந்து வருவதாகவும் உரிமை கோரி வருகிறது, மரபணு மாற்றுத் தொழில் துறை.

1996 முதல் 2011 வரையிலுமுள்ள 15 ஆண்டுகளில், சுமார் 4 கோடி பவுண்டு பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன, என்று வாஷிங்டன் மாநிலப் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர், சார்லஸ் பென்புரூக் தன் ஆய்வில் தெரிவிக்கிறார். 2012ல், வழக்கமான விவசாயிகளையும் விட, மரபணு மாற்றுப் பயிர் விவசாயிகள் 20 விழுக்காடு அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

லத்தீன் அமெரிக்காவில், பிரேசில், அர்ஜென்டினா ஆகியன, மரபணு மாற்றுப் பயிர்களை அதிகம் விளைவிக்கக் கூடிய நாடுகளாகும். அர்ஜென்டினாவில், மரபணு மாற்ற சோயாபீன்ஸ் பயிர்களை விளைவிக்க ஆரம்பிக்கும்போது, 3.4 கோடி லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதுவே, 2012ல் 31.7 கோடி லிட்டராக உயர்ந்து விட்டது. சராசரியாக, அர்ஜென்டினா விவசாயிகள் அமெரிக்க விவசாயிகளைக் காட்டிலும், இரு மடங்கு பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

அர்ஜென்டினாவைப் போல் அல்லாமல், பிரேசிலில் வெகு சமீபத்தில்தான் மரபணு மாற்றுப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அங்கும் கூட, பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மிகப் பெரிய பிரச்சனைகளுக்கும் கூட, மிக எளிதாகத் தீர்வு கண்டு விடும் நாடு சீனா என்று சொல்வார்கள்.

ஆனால், அங்கும் ஒரு அதிர்ச்சி வெடி வெடித்தது. கார்னெல் பல்கலைகழகமும் சீன விஞ்ஞானக் கழகமும் சேர்ந்து கடந்த 2006ல் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் மூலம், மரபணு மாற்றுப் பயிர்களின் அறிமுகத்திற்குப்பின், சீனாவில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு 20% விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்பது தெரிய வந்தது.

நமக்குக் கிடைக்கும் விசயங்கள் இப்படி இருக்கையில், மரபணு மாற்றுப் பயிர்கள், நமக்குத் தேவைதானா?. அதிலும் குறிப்பாக, நம்மிடம் இருக்கும் அதிக விளைச்சலைத் தரக்கூடிய பலதரப்பட்ட வீரிய விதைகளைக் காட்டிலும், மரபணு மாற்றுப் பயிர்கள் அதிக விளைச்சலைத் தரப் போவதில்லை என்று தெரிந்த பின்னும் கூட, மரபணு மாற்றுப் பயிர் நமக்குத் தேவைதானா? அமெரிக்க விவசாயத் துறையும் கூட மரபணு மாற்றுப் பயிர்கள், அதுவல்லாத மற்றைய பயிர்களைக் காட்டிலும் அதிக விளைச்சலைத் தரவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறது.

ஆங்கில மூலம்: தேவேந்தர் ஷர்மா (<https:// devindersharma.blogspot.in/2014/08/whydowe/needGMcrops/ html>)

Pin It