1

Hb pills 350தெற்கு டெல்லியில் ஒரு காட்சி. அரசின் ஒரு திட்டத்தை விளக்கும் விளம்பரப் பலகைகளில் இருந்த ‘டெல்லி அரசு’ என்கிற பெயரையும் அவ்வரசின் சின்னத்தையும் அந்த அரசின் ஊழியர்களே முன் னின்று கருப்புநிற சாயத்தால் மறைத்து அழித்துக் கொண்டிருந்தனர்.

அப்படி அழித்த பிறகு அவ்விளம்பரத்தில் ’மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத் துறை’ என்கிற பெயர் மட்டுமே எஞ்சியிருந்தது. அதாவது அவ்விளம்பரத்துக்கு நடுவண் அரசை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு டெல்லி அரசு தப்பித்துக்கொள்ளும் போக்கே இச்செயல்.

முதலில் பெருமையுடன் ஒரு திட்டத்தில் இணைந்து பங்கேற்றுவிட்டு பிறகு இப்படி தப்பித்துக்கொள்ள என்ன காரணம்? அது என்ன திட்டத்துக்கான விளம்பரம்?

இதுபோன்ற கேள்விகள் ஒருபுறமிருக்க அதே திட்டத்தை இப்போது தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. ஆளும் கட்சியின் உள்ளாட்சி அமைப்பினர் அதைப் பெருமையுடன் முன்நின்று நடத்தி வருவதைப் பத்திரிகைச் செய்திகளில் காணமுடிகிறது.

‘வாராந்திர இரும்புச் சத்து மாத்திரை வழங்கும்’ இத்திட்டம் நடுவண் அரசினால் தொடங்கப்பெற்றது. இத்திட்டத்தின்படி அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள 10 முதல் 19 வயது வரையிலான வளரிளம்பருவத்தினருக்கு வாரமொரு முறை இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டிலிருந்து தமிழகத்திலும் தொடங்கப் பட்டிருக்கும் இத்திட்டம் ஏற்கனவே பல மாநிலங்களில் கடந்த 2013ல் தொடங்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி ஹரியானா போன்ற சில இடங்களில் நிறுத்தவும் பட்டன. இதற்கு என்ன காரணம்?

டெல்லியில் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்ட 200 மாணவர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம். ஹரியானாவில் 800க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு குமட்டல், வயிற்றுவலி, வாந்தி. மகாராட்டிராவிலும், ராஜஸ்தானிலும், கர்நாடகாவிலும்கூட இதே வகையான புகார்கள். நமது அண்டையில் உள்ள காரைக்காலிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதைப் பற்றி கேள்விகள் எழுப்பியபோது “யாரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. ஒவ்வொரு மருந்தும் அதன் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கும்” என்று அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தார் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத். இவர் குறிப்பிடும் அளவுக்கு இம்மாத்திரையின் பக்க விளைவுகள் அவ்வளவு எளிதான ஒன்றா என்பதைப் பிறகு விளக்கமாகப் பார்ப்போம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு குலாம் நபி ஆசாத் அவர்கள் இதுகுறித்து நாடாளுமன்ற மேலவையில் வாசித்த அறிக்கையினை இப்போது சுருக்கமாகக் காண்போம்.

நம்நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளரிளம்பருவத்தினர் 5 கோடி பேருக்கும் அதிகம். புள்ளிவிபரப்படி ((NFHS III)) 55%க்கும் அதிகமான 15 &19 வயதுள்ள வளரிளம்பருவ பையன்களும், பெண்களும் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகமாக 56% அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 39% சிறிய அளவிலும் 15% மிதமாகவும், 2% கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே WIFS (Weekly Iron and Folic Acid Suppl iment ) என்கிற இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இதன்படி வழங்கப்பெறும் மாத்திரை 100மி.கி இரும்பு சத்தும் 500 மைக்ரோ கிராம் ஃபோலிக் ஆசிட்டும் அடங்கியது. இப்பருவ வயதினரிடையே இது இரத்த சோகையின் பாதிப்பைக் குறைக்கும். இத்தோடு குடற்புழுநீக்க மாத்திரையும் ((Albendazole 400mg) ஆறுமாதத்துக்கொரு முறை இலவசமாக வழங்கப்படும். இவையிரண்டும் ஆய்வு மற்றும் ஆலோசனைகளுடன் வழங்கப்படும். இதன் பயனாளிகள் ஆண் பெண் இருவருமாகச் சேர்த்து மொத்தம் 13 கோடி பேர் ஆவர்.

இத்திட்டம் குறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்பாக சில செய்திகளை முன்னறிந்துகொள்வது அவசியம். முதலாவதாக இத்திட்டமானது அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயலாக இருக்கிறது. இந்திய மருத்துவக் கழகத்தால் அலோபதி மருத்துவம் தவிர சித்த, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி முதலிய பிற மருத்துவ முறைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளிலும்கூட இது நடைமுறையில் இருக்கும்போது எந்த மருத்துவ முறையை ஒருவர் பின்பற்றுவது என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும். ஆனால் பள்ளிகளில் இப்படி இரும்பு சத்துக்கென அலோபதி மாத்திரைகளைக் கட்டாயப்படுத்தி விழுங்கச் செய்வதென்பது அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற ஒரு செயல். இரத்த சோகைக்குப் பிற மருத்துவ முறைகளிலும் பல எளிய வழிகள் இருக்கின்றன எனும்போது இம்மாத்திரைகளை இப்படி இராணுவ நடைமுறையைப் போல வழங்க முற்படுவதன் கட்டாயம்தான் என்ன என்பதே முதல் கேள்வி.

டெங்கு காய்ச்சலை முறியடிக்க அலோபதி மருந்துகள் மூச்சு திணறியபோது இதே தமிழக அரசுதான் நிலவேம்பு கசாயத்தின் மூலம் அதை குணப்படுத்திக் காட்டியது. எளிய முருங்கைக் கீரையும், தேன்நெல்லியும் சாதித்துக் காட்டக்கூடிய இந்த இரத்த சோகைக்கு இப்படி மாத்திரைகளை மாத்திரம் நம்புவது என்பது இத்திட்டத்தின் பின்னால் வழக்கம்போல் மருந்து நிறுவனங்களின் நலம் இருக்கிறதோவென்ற அய்யத்தை தவிர்க்க முடியவில்லை. மேலும் இத்திட்டம் சில அடிப்படை விதிகளை முற்றாக புறக்கணித்து செயற்படுத்தப்படுகிறது.

அதில் முதன்மையானது இம்மாத்திரைகளை வழங்குவது பற்றி மாணவிகளின் பெற்றோர்களுக்கு எவ்வித தகவலும் வழங்கப்படாதது தான்.

இப்படி தகவல் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த இரும்புச் சத்து மாத்திரைகளை யார் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் அல்லது கொடுக்கக் கூடாது என்பதற்கு சில மருத்துவ விதிமுறைகள் இருக்கின்றன. இதற்காகத்தான் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்கிறோம். முன்னாள் நலவாழ்வுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபடி சிறிய, மிதமான, கடுமையான என்ற மூவகை இரத்த சோகை பிரிவுகளை எப்படிப் பிரிப்பது என்பதற்குத் தேசிய ஊரகநல இயக்கத்தின் இரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டி அறிக்கை இப்படிச் சொல்கிறது.

வளரிளம்பருவத்தினருக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் 8 கிராமுக்கு (<8gm/dl) கீழே இருந்தால் அது கடுமையான பிரிவு. 88c10.9கி. இருந்தால் அது மிதமான பிரிவு. 1111.9கி. வரையுள்ளவர்கள் சிறிய என்கிற பிரிவுக்குள் வருவார்கள். இதன்படி 12 கிராமுக்கு மேல் வருபவர்கள் உடலுக்குத் தேவையான அளவுக்கு இரும்புச் சத்தைக் கொண்டிருப்பவர்கள் என்று பொருளாகிறது. இவர்களுக்கு இம்மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்தானா?

அமைச்சருடைய அறிக்கையின்படியே பார்த்தாலும் நம் நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளரிளம்பருவத்தினர் 5 கோடி பேருக்கு அதிகமானோர் எனில் மொத்தம் 13 கோடி பேர்களை பயனாளிகளாகத் தேர்ந்தெடுத்திருப்பது யாருடைய நலனுக்காக? 56% பெண் குழந்தைகளே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் மீதி 44% பேருக்கும் எதற்காக இது வழங்கப்படவேண்டும்? இப்படி சகட்டுமேனிக்கு இது அனைவருக்கும் வழங்கப்படுவது என்பது இம்மக்களின் நலனுக்காகவா அல்லது மருந்து நிறுவனங்களின் நலனுக்காகவா என்ற கேள்வி எழுகிறதே?.

இம்மாத்திரைகளைப் பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் கொடுக்கப்படும்போது தனது குருதியில் ஹீமோகுளோபின் அளவை நிறைவாகக் கொண்டிருக்கும் ஒரு மாணவி என்ன நினைப்பார் என அரசு யோசித்ததாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக ஒரு மாணவிக்குக் குருதியில் 14கி. என்ற அளவில் ஹீமோகுளோபின் இருந்தால் அவருக்கு மேலதிகமாக இந்த இரும்புச் சத்து மாத்திரைகள் தேவைப்படாது. இன்றைக்குப் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி, தான் பத்தாம் வகுப்பில் படித்த அறிவியல் பாடத்தை நினைவுகூர்ந்து ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்குத் தன்னிடம் விடையிருக்கிறதா என அரசு யோசித்ததாகத் தெரியவில்லை. ‘நம் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். ஆனால் மிக அதிக அளவு இரும்புச் சத்து இருந்தால் சிடரோசிஸ் ((Siderosis)) என்ற நோயை உண்டாக்கும்’ என அப்பாடப் புத்தகத்தில் கற்பித்ததும் இதே அரசுதான்.1

இத்திட்டத்தின்படி வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகளானது ’ஃபெரஸ் சல்பேட் வித் ஃபோலிக் ஆசிட்’ ((Ferrous Sulphate & Folic Acid tablets)) மாத்திரை களாகும். ஃபெரஸ் சல்பேட் என்பது இரும்புச் சத்தின் ஒரு வகை. நாம் உண்ணும் உணவிலிருந்து இது உடலால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த இரும்புச் சத்தானது ஹீமோகுளோபின் மற்றும் மயோகுளோபின் ஆகியவற்றின் அங்கமாக மாறுகிறது. இந்த ஹீமோகுளோபின்தான் குருதியினூடாக உயிர்வளியை திசுக்களுக்கும் உடல் உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது. மயோகுளோபினோ தசை செல்களானது உயிர்வளியை இருப்பு வைத்துக்கொள்ள உதவுகிறது.

ஃபோலிக் அமிலம் நம் உடலில் புதிய செல்களை உருவாக்கவும் அவற்றைப் பராமரிக்கவும் செய்யும். மேலும் டிஎன்ஏ மாற்றத்துக்குள்ளாவதையும் தடுக்க உதவுகிறது. (இது மாற்றத்துக்குள்ளானால் புற்றுக்கு இட்டுச் செல்லும்.) இந்த ஃபெரஸ் சல்பேட்டும் ஃபோலிக் ஆசிட்டும் இரும்புச் சத்து குறைபாடு கொண்ட இரத்த சோகையைக் குணப்படுத்த உதவுகிறது.

இந்த ஃபெரஸ் சல்பேட் ஃபோலிக் ஆசிட்டை உட்கொள்ளுவதற்கு முன்பு அதை உண்பவருக்கு ஏதாவது மருந்து ஒவ்வாமை உண்டா என்பதை முதலில் கேட்டறிய வேண்டும். அல்லது அவருக்கு ஹீமோலித்திக் அனிமியா (Hemolytic anemia), போர்பைரியா (Porphyria), தலசீமியா (Thalasemia) ஆகியவற்றுக்கான நோய்க்குறிகள் இருக்கிறதா என்பதையாவது மருத்துவ ஆய்வு செய்து அறிந்து கொண்டிருக்க வேண்டும். இவை இரண்டுமே பள்ளிகளில் நடைபெறவில்லை.

இதில் உலகளவில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து விழுக்காடு இந்திய துணைக்கண்டத்தில்தான் இருக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு 32,400 குழந்தைகள் ஹீமோகுளோபினோபதிஸ் பாதிப்புகளோடு பிறக்கின்றனர் என்கின்றன புள்ளிவிபரங்கள். (NRHM,p.4) இதுதவிர அடிக்கடி இரத்தம் ஏற்றிக்கொள்பவர்களும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.

மேலும் இம்மாத்திரைகளைச் சாப்பிடும்போது எதை எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற சில நிபந்தனைகளும் உண்டு. இம்மாத்திரையை உட் கொண்ட இரண்டு மணி நேரத்துக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஆன்டசிட்ஸ் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அல்லது இம்மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடும்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆண்டசிட் மாத்திரைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் பலவித வேதிப் பொருட்கள் அடங்கியிருப்பதால் அவற்றுள் சில ஃபெரஸ் சல்பேட் உட்கிரகிக்கப்படுவதைப் பாதிக்கலாம்.

மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்காத விட்டமின்கள் அல்லது மினரல்களையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இம்மாத்திரையைச் சாப்பிட்ட இரு மணி நேரத்துக்குப் பின்னரோ அல்லது முன்னரோ ஆண்டிபயோடிக் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் இதில் சிப்ரோஃப்ளாக்சசின், லிவோஃப்ளாக்சசின் என்று ஒரு பட்டியலே உண்டு. இதைத் தவிர வேறு சில மாத்திரைகளைச் சாப்பிடுபவர்களாக இருந்தால் அதையும் கேட்டறிய வேண்டும். ஏனெனில் 815 வணிகப் பெயர்களில் உள்ள 163 மருந்துகள் இம்மாத்திரையோடு வினைபுரிவதாகக் கருதப்படுகிறது. (பார்க்க. drugs.com))

எல்லா மாணவிகளுக்கும் இவற்றையெல்லாம் பற்றி தெரிய வாய்ப்பிருக்காது என்பதால்தான் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஒரு குழந்தை இதற்கு முன் ஏதாவது ஒரு நோய்க்காக மருந்து எடுத்துக்கொண்டு வருகிறதா இல்லையா? அப்படி எடுத்துக்கொண்டால் அது என்ன மருந்து போன்ற விபரங்கள் பெற்றோர்களுக்குத்தானே தெரியும்? ஆனால் ஏன் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை? அரசுப் பள்ளிகள் என்பதால் இந்நிலையா? தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இரத்த சோகையே இல்லையா? அரசுப் பள்ளிகளில் வழங்குவதைப்போல் தனியார் பள்ளிகளில் இம்மாத்திரைகளை இவ்வளவு எளிதாக வழங்கிவிட முடியுமா? முடியாது.

ஏனெனில் விபரம் அறிந்த பெற்றோர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்குமே? இம்மாத்திரையினை உட்கொள்ளுவதால் ஏற்படும் குறைந்த அளவிலான பக்க விளைவுகளென வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், கால் வலி, தோல் கருத்தல் அல்லது சிறுநீர் நிறம் கூடுதல் ஆகியவை ஏற்படுகிறது. இவற்றுக்கு சிறு அளவிலான சிகிச்சைகளே போதும். இதுதவிர தொண்டைப் புண், விழுங்குவதில் சிரமம், கடும் வயிற்று வலி, மலத்தில் இரத்தம் ஆகியவை இருந்தால் உடனே மாத்திரையை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும். இவற்றைத் தவிர படை, மூச்சு விடுவதில் சிரமம், முகத்திலோ, உதட்டிலோ, நாக்கிலோ, அல்லது தொண்டையிலோ வீக்கம் இருப்பது போன்ற அறிகுறிகளுக்கு அவசரநிலை உதவி தேவைப்படும் என்பது போன்ற எந்த விபரங்களும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்படவில்லை.

மாறாக இம்மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அரசு உங்கள் மீது கருணைகொண்டு செயற்படுத்தும் திட்டம் இது. இம்மாத்திரைகளைத் தின்றால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும். நீங்கள் அறிவாளியாக மாறிவிடுவீர்கள், நிறைய மதிப்பெண்கள் எடுப்பீர்கள் என்றெல்லாம் மயக்கு மொழிகள் மட்டுமே மொழியப்படுகிறது. இது இத்திட்டத்தை எப்படியும் செயற்படுத்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இவர்களுக்கு இருக்கிறது என்பதைத்தான் உணர்த்துகிறது. ஏனெனில் இது வெறுமனே மாநில அரசின் திட்டமோ அல்லது நடுவண் அரசின் திட்டமோ அல்ல. இதன் வேர் யுனிசெஃப், உலக நலவாழ்வு அமைப்பு வரை நீள்கிறது.

உடனே யுனிசெஃப் திட்டம் என்றால் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உப்பில் அயோடினை அது தேவைப்படாதவர்களுக்கும் கலந்து சாப்பிடச் சொல்லி சிறு உப்பளத் தொழில்களுக்கு நசிவையும், உப்பில் அயோடின் ஏற்றத்துக்கு மூலப்பொருளான ‘பொட் டாசியம் அயோடேட்’டை இறக்குமதி செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பெரு நிறுவனங்களுக்கு வருமானத்தையும் ஈட்டித் தந்த ‘அயோடின் உப்பு’ திட்டத்துக்கு பின்னணியில் உழைத்தது இந்த யுனிசெஃப்தான்.2

ஆனால் இத்திட்டத்தினால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்த அமைப்புகள் எதுவும் பொறுப்பேற்பதில்லை. இதற்குப் பயிற்றுவிக்கப்படும் ‘நோடல் ஆசிரியர்கள்’ என்பவர்களும் பள்ளி நிர்வாகத்தினரும்தான் பாதிக்கப்படுகின்றனர். டெல்லியில் அசோக் விகார் ‘ஹெச்’ பிளாக்கில் உள்ள சர்வோதயா கன்னியா வித்யாலயா பள்ளி மாணவிகள் இம்மாத்திரைகளைச் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டெல்லி வடமேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷ்னர் கருணாகரன் இது தொடர்பாக விசாரணை நடத்தி (?) இந்திய தண்டனை சட்டம் 337வது பிரிவின் கீழ் பள்ளி நிர்வாகத்தின் மீதுதான் வழக்குப் பதிவுசெய்தார். (tamil.oneindia.in)

2

இத்திட்டம் குறித்து கூறுகையில், “இது பழைய மொந்தையில் புதிய கள்” என்கிறார் டாக்டர். ஏ.கே.சுசீலா. சர்வதேச அளவில் ஃபுளோரைட் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் புதுடெல்லியுள்ள எய்ம்சில் ஃபுளோரோசிஸ் ஆய்வு மற்றும் ஊரக வளர்ச்சி அமைப்பின் (Flourosis Research
and Rural Development Foundation) ) இயக்குநர் ஆவார்

“இது எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை. 1970களிலேயே கருவுற்ற பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை கொடுக்கும் இத்திட்டம் நாடு முழுமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1986ல் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தால் (ICMR) மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது இரத்தசோகை பாதிப்பில் இத்திட்டம் எந்த மாற்றத்தையும் கொண்டுவர வில்லை என்பதைக் கண்டறிந்தது.

இதன் விளைவாக இரும்புச் சத்து மாத்திரையின் அளவானது 60 மி.கி என்ற அளவிலிருந்து 100 மி.கிராமாக உயர்த்தப்பட்டது தான் மிச்சம். பத்தாண்டுகளுக்கு முன்பாக குஜராத் அரசும் வளரிளம்பருவப் பெண்களுக்கு இப்படி இரும்புச் சத்து மாத்திரை கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியது. ஆனால் அதுவும் பெரும் தோல்வியில் முடிந்தது. டெல்லி மாநகராட்சியும் இதே திட்டத்தைக் கையிலெடுத்தது ஆனால் அதன் விளைவுகள் குறித்து எவரும் அறிந்தாரில்லை” என்கிறார் டாக்டர் சுசீலா.

இரத்த சோகைக்கு வெறும் இரும்புச் சத்து குறைபாடு மட்டுமே காரணமல்ல. ஃபோலேட், விட்டமின் பி12, விட்டமின் ஏ ஆகிய குறைபாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கிறது. ஹைதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ((National Institute of Nutrition) பணியாற்றும் ஊட்டச்சத்து வல்லுநரும், ஒரு மருத்துவருமான வீணா சத்ருகுணா அவர்கள் கூறுகை யில், “இரும்புச் சத்து என்பது ஹீமோகுளோபினின் ஓர் அங்கம்தான்.

ஆனால் இதைவிட முக்கியமான அங்கம் புரதம். (அதாவது உணவில் புரதம் நிறைந்திருக்க வேண்டும்) விட்டமின் சி, காப்பர் ஆகிய சத்து குறைபாடுகளாலும் ஹீமோகுளோபினின் எண்ணிக்கை குறையும். இந்த இரும்புச் சத்து மாத்திரை என்பது மிகக் குறைந்த அளவில் ஹீமோகுளோபின் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் பலனளிக்கலாம். ஆனால் உண்மையான நிவாரணம் என்பது சத்துணவில்தான் கிடைக்கும்” என்று உண்மையைத் தெளிவாக்குகிறார்.

உலக நலவாழ்வு நிறுவனம் இரத்த சோகையை கட்டுப்படுத்த மும்முனை உத்தியைப் பரிந்துரைக்கிறது. அதில் முதலாவதாக நுண்சத்துக்கள் நிறைந்த கீரைகள், விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்கள் போன்ற உணவு பன்மயத்தை அது பரிந்துரைக்கிறது. இரண்டாவதாக இரும்புச் சத்துடன் கூடிய நுண்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட உணவினைப் பரிந்துரைக்கிறது. இறுதியாகத்தான் அது Supplimentation என்கிற நிலைக்கு வருகிறது. அதாவது மாத்திரைகள், ஊசிகள் வழி விட்டமின் மற்றும் தாதுக்களை வழங்குவதைக் குறிப்பிடுகிறது.

இதற்கு முன்னதாக உலக நலவாழ்வுத் துறையின் அறிக்கை இதர சத்துக் குறைபாட்டைப்போல இந்த இரும்புச் சத்துக் குறைபாட்டைக் களைவதற்கு நான்கு அடிப்படைக் கூறுகளை முன்னிறுத்துகிறது. அவை:

1. வறுமையைக் குறைக்க வேண்டும்.

2. பன்மய உணவு வகைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

3. மக்கள் நலவாழ்வு சேவைகளையும், துப்புரவையும், மேம்படுத்த வேண்டும்

4. நல்ல பராமரிப்பையும் உணவு நடைமுறைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

இதை எளிய சொற்களில் சொல்வதானால் மேற்கண்ட நான்கையும் நிறைவேற்றுவதில் தோல்வி கண்ட ஓர் அரசுதான் இம்மாத்திரைகள் வழி சத்தினை அளிக்கும் திட்டத்தில் இறங்குகிறது.

நாளன்றுக்கு 26 ரூபாய் சம்பாதிப்பவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டைத் தாண்டியவர்கள் என்கிற அளவுகோலைக் கையில் வைத்து திரிந்து கொண்டிருந்த ‘ஹார்வர்ட்’ பொருளாதார மேதாவி களின் ஆட்சியில்தான் மக்களுக்கு சத்துப் போதவில்லை என்று இந்தத் திட்டம் துவங்கப்பட்டது என்பதும் உங்கள் நினைவுக்கு வருமானால் உங்களுக்கு ‘அம்னீசியா’ நோய் வந்து தொலையட்டும்.

நடுவண் உணவு சேமிப்புக் கிடங்குகளில் எலிகள் தின்று வீணாகிக்கொண்டிருக்கும் உணவு தானியங்களை மக்களுக்கு வழங்கினால் என்ன என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியபோது ‘நிர்வாக முடிவுகளில் தலையிட வேண்டாம்’ என்று பதில் தந்த பிரதமரைக் கொண்டிருந்த நாடல்லவா இது? இதில் எங்கே பன்மய உணவு வகைகள் கிடைக்கப்போகிறது? சத்துள்ள உணவு உண்ணும் ஒரு பெண்ணுக்குத்தான் இரத்த சோகை ஏற்படாது. ஆனால் இங்கு இரத்த சோகை யுள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குப் போதிய சத்துணவை அளிப்பதில் அரசு தோல்வி கண்டிருப்பதாகத்தானே பொருள்?

வளரிளம்பருவ நலவாழ்வு உதவி இயக்குநரான சுஸ்மா துரேஜா ((Sushma Dureja, deputy commissioner, adolescent health.) இவ்வாறு கூறுகிறார். “இரத்த சோகையுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்குத்தான் குறைந்த இரும்புச் சத்தும் குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதை பிறக்கும்போதே சரிசெய்யாவிடில் குழந்தைப் பருவத்திலோ பிறகு சிறார் பருவத்திலோ அதன்பிறகு வளரிளம்பருவத்திலோ இரத்த சோகையைக் கொண்டு வந்துவிடும்.

இப்பருவத்திலும் இதைச் சரி செய்யாவிடில் வாழ்நாள் முழுக்கவே ஒருவர் இரத்த சோகை நோயாளியாக இருப்பார்.” ஆக ஒரு தாய், பிறகு அவருடைய குழந்தை, சிறார், வளரிளம்பருவம் என இத்தனை நிலைகள் வரும்வரை சத்துணவு அளிப்பதில் தோல்வியுற்ற அரசுதான் இப்போது திடீரென விழித்துக்கொண்டு சத்து மாத்திரைகளை அளிக்கிறதாம். இங்கு ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிய வில்லை.

உலக நலவாழ்வு நிறுவனம் பரிந்து ரைக்கும் முதல் வழியைப் புறக்கணித்துவிட்டு மூன்றாவது வழி மீது மட்டும் ஏன் இவ்வளவு பற்றுக்கொள்கிறீர்கள்? உணவு பன்மய வகைகளுக்கு வழி செய்யும் வேளாண்மையை நசிய விடாமல் செய்து வளமைகூட்டி மக்க ளுக்குப் போதிய சத்துணவை அளித்திருந்தால் இந்த இரத்த சோகை நோயே வந்திருக்காதே? அதை விடுத்து இரண்டு இலட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டபோது காட்டாத கருணையை, பரிவை, அக்கறையை, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மேல் மட்டும் காட்டுகிறீர்களே?

தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் வழிகாட்டி அறிக்கையானது இரத்த சோகை நோய் ஏற்படுவதற்கு பத்து காரணங்களைப் பட்டியலிட்டுள்ளன. அதில் பத்தாவது காரணம் ‘சுற்றுச்சூழல் துப்புரவற்று இருப்பதும், பாதுகாப்பற்ற குடிநீரும்’ என்கிறது. சுற்றுப்புறச் சூழல் தூய்மையற்று இருப்பதுவே பல நோய்களுக்குக் காரணம் என்பது நாம் அறிந்ததே. இதில் கொசுக்கடியால் ஏற்படும் மலேரியா நோயும் ஒன்று. அதனால் மலேரியா நோயும் இரத்த சோகைக்கு ஒரு காரணம் என்று ஒத்துக் கொள்கிறது இவ்வறிக்கை. எனவே மக்களுக்குத் தூய்மையான சுற்றுப்புறச் சூழ்நிலையை அமைத்துத் தராதது யாருடைய குற்றம்? பாதுகாப்பான குடிநீரை அளிக்காததும் யாருடைய குற்றம்?

deficiency schooladults 600

டாக்டர். ஏ.கே. சுசீலா அவர்கள் மற்றொரு உண்மையையும் போட்டு உடைக்கிறார்.

“தோல்வியடைந்த ஒரு திட்டத்தை இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் ஏன் மறுபடியும் கையிலெடுத்தது என்றே தெரியவில்லை. உணவு மற்றும் தண்ணீர் வழியாக ஃப்ளோரைட் உட்கொள்ளப்படுவது குறைக்கப்படாவிட்டால் இரத்த சோகையை இந்த இரும்புச் சத்து மாத்திரையால் குறைக்கவே முடியாது என்பது அக்கழகத்துக்கே நன்றாகத் தெரியும். இந்தியாவிலுள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 ஃப்ளோரோசசினால் பாதிக்கப்பட்டவை. இதற்கு மிகவும் ஆழத்திலிருந்து நிலத்தடி நீரை எடுப்பதே காரணம்.”

இதைப் புரியும்படி சொல்வதானால் ஃப்ளோரைட் உடலுக்குள் உட்கொள்ளப்படுவது நிறுத்தப்படா விட்டால் இப்படி இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிடுவது பலனளிக்காது என்பதுதான். இந்த ஃப்ளோரைடானது எலும்பு மஜ்ஜையிலுள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைக் குறைத்துவிடுகிறது. இவ்வளவு செலவு செய்து மாத்திரைகள் வாங்குவதற்குப் பதிலாக ஃப்ளோரைட் நீக்கப்பட்ட குடிநீரை வழங்க வாவது முயற்சி செய்யலாம்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகள் கணக்கு வழக்கின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி காலி செய்வதை வேடிக்கை பார்த்துவிட்டு தம் சொந்த மக்களுக்கு ஃப்ளோரட் நீரை பரிசளிப்பதுதான் நடக்கிறது.

இந்திய நீரியல் மற்றும் நீர்வள தகவல் அமைப்பு ((hydrology and water resources information system for India)) தரும் தகவலின்படி இந்தியாவில் நிலத்தடி நீரில் ஃப்ளோரைட் கலந்திருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்குள்ள 19 மாவட்டங்களில் இப்பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் ஒன்றான தர்மபுரிக்கு ஒகனேக்கல் குடிநீர்த் திட்டமே கொண்டுவரப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

நாடு விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை தனது குடிமக்களுக்கு நல்ல சத்துணவையும், பாதுகாப்பான குடிநீரையும் வழங்கத் தவறிவிட்டது இந்நாடு. இதை மறைமுகமாக ஒப்புக்கொள்வதே இந்த சத்து மாத்திரை வழங்கும் திட்டம். இப்போதும்கூட இதற்கு மாற்று வழியிருந்தும் இன்னமும் பெருவணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான திட்டங்களைக் கொண்டு வருவதே அரசின் நோக்கமாக உள்ளது. இத்திட்டமும் அப்படித்தான். ஒரு குழந்தைக்கு வாரத்துக்கு ஒரு மாத்திரை எனில் ஓராண்டுக்கு 52 மாத்திரைகள் ஆகிறது. இது 13 கோடி பேருக்கு வழங்கப்படவிருக்கிறது எனில் 13,00,00,000 X 52 எவ்வளவு வருகிறது என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இதை மாத்திரையின் விலையோடு பெருக்கிக் கொள்ளுங்கள்.

மக்களின் குருதியில் இருக்க வேண்டிய ஹீமோ குளோபின்கள் இதுவரையிலான அரசுகளின் தவறான அணுகுமுறைகளினால் பெருவணிக நிறுவனங்களின் குருதியில் ‘பணகுளோபின்களாக’ சேர்க்கப்பட்டு விட்டது. இன்னமும் சேர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே நீடிக்க திட்டம்? இந்நிலையில்தான் தெளிவான இக்கேள்வி எழுகிறது.

முதலில் சத்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டி யது யாருக்கு? இரத்த சோகையால் பாதிப்புற்ற மக்களுக்கா? அல்லது இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய அரசு நிர்வாகத்துக்கா?

அடிக்குறிப்புகள்:

1. சமச்சீர் கல்விக்கு முந்தைய தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்ட பத்தாம் வகுப்புக்கான அறிவியல் பாடப் புத்தகம். மறுபதிப்பு 2007, பக்: 128.

2. அயோடின் உப்பு குறித்த விபரங்களுக்குப் பார்க்க: பாமயன் எழுதிய ‘அணுகுண்டுகளும் அவரை விதைகளும்’, தமிழினி பதிப்பகம்.

நன்றிக்குரிய தரவுகள்:

1. National Rural Health Mission,Guidelines of control of Iron deficiency Anaemia, National Iron + Initiastive – Towards infinite potential in an anaemia free India, Adolescent Division, Ministry of Health and Family Welfare, Government of India. P.4, 9.

2. Iron Deficiency anaemia: Assesment, prevention and Control. A guide for programme managers. WHO/NHD/01.3. p. 47 60.

3. Jyotsna Sing, Centre wants to treat anaemia with iron tablets. Can pills substitute nutrious food? Accessed on July 28, 2014, 3.15pm. <http://www.downtoearth.org.in/content/deficientprogramme>.

4. Nirmalaya Dutta, Will the Iron and Folic acid supplimentstation plan work this time? Accessed on July 28, 2014, 10.25 am,. http://www.thehealthsite.com/news/willtheironandfolicacid supplementationplanworkthistime/

5. Delhi Government tries to wriggle out of WIFS, Accessed on July 25, 2014, 08.25pm, http://cityplus.jagran.com/citynews/ delhigovernmenttriestowriggleoutofwifs_ 1385702691.html

6. Weekly Iron and Folic Acid Supplimentation Programme for adolescents, Accessed on July 23, 2014, 7.10am, http://pib. nic.in/newsite/erelease.aspx?relid=82516

7. Iron tablets every Monday for govt school students, Times of India, Accessed on July 23, 2014, 10.35am, http://epaper. timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIJ/20 13/07/26&PageLabel=3&EntityId=Ar00301&ViewMode

8. Ferrous sulfate and folic acid Acessd on July 22, 2014, 3.15pm, http://www.drugs.com/mtm/ferroussulfateandfolicacid.html

9. Fluoride affected Areas , Hydrology and water resources information system for India, Accessed on Auguest 4, 2014, 2.17pm, http://www.nih.ernet.in/rbis/india_information/fluoride.htm

10. மற்றும் பல நாளிதழ்கள்.

Pin It