கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கங்கை மாதாவின் வாகனமாக கருதப்படும் கங்கை முதலைகள் (Gharial), தன் இருப்பை உறுதி செய்து கொள்வதில், மிகுந்த சிரமப்படுகின்றன. நன்னீரில் வாழும் இந்த முதலைகள், ஆற்றின் அடி ஆழத்தில், வாழ்கின்றன. அவ்வப்போது தலை நீட்டி தன் இருப்பை மற்ற உயிரினங்களுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விடும்.
சுமார் 60 முட்டைகள் இடும் இந்த முதலைகள், 90 நாட்களில் குஞ்சு பொறிக்கும். மீன்களை அதிகம் விரும்பி உண்ணும் இந்த முதலைகள், இந்திய துணை கண்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவி இருந்தன. பாகிஸ்தான், பர்மா, பூடான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.
தற்சமயம் இவை இந்தியா மற்றும் நேபாளத்தில் தன்னுடைய வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. கிர்வா மற்றும் சாம்பல் ஆறுகளில் வாழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு, நச்சு தன்மை ஆற்றில் கலந்து. அதன் விளைவாக பாதிப்புக்குள்ளான மீன்களை உணவாக உட்க்கொண்டதன் மூலம் சுமார் 100 முதலைகள் யமுனை ஆற்றில் இறந்து போயின. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், இந்த முதலைகளை அரிய வகை உயிரினமாக அறிவித்து சிகப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
ஆற்றில் எடுக்கப்படும் அதிகப்படியான மணல், புதிய அணை கட்டுகள், வேளான் மற்றும் மேய்ச்சல் தொழில் காரணமாக இவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.
அதிகப்படியான மீன் பிடி தொழிலால், இவற்றின் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
மணலில் முட்டையிட்டு வைத்திருக்கும் போது, அவை சேதப்படுத்தப்படுவதால் புதிய முதலைகள் பிறப்பதில் சிக்கல் உருவாகிறது.
ஆற்றில் கலக்கப்படும் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள், மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.
ஆற்றை தூய்மைபடுத்தினால் மட்டுமே இந்த முதலைகளை காப்பற்ற முடியும். இந்த முதலைகளுக்கு என்று சரணாலயங்கள் உருவாக்கப்பட்டு, மனிதர்களின் இடையூறுகளை தடை செய்ய வேண்டும்.
இந்த முதலைகளை காப்பாற்றி விட்டால், ஆறுகள் தூய்மையாகிவிட்டன என்று பொருள். ஆறுகள் தூய்மையாகிவிட்டால், நமக்கு ஏற்ப்படும் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. இந்த முதலைகள் வாழத் தகுதி இல்லாத ஆறுகள் யாவும், நமக்கும் தகுதி இல்லாத ஆறுகள் என்பதே இவை நமக்கு சொல்லும் பாடம்.
- விவரங்கள்
- சு.உலோகேசுவரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மண்புழுக்களும் மண்ணுக்குள் வாழும் பல கோடி நுண்ணுயிர்களும் மண்ணை வளப்படுத்துவதற்கு உதவுகின்றன என்பது புதிய செய்தியன்று. தரைக்கு மேலும் வானிலைக்கேற்ப பறவைகளும் தேனீக்களும் மலர்களிலிருந்து மகரந்தம் சேமித்தும் பகிர்ந்தளித்தும் மண்ணை வளப்படுத்த பெரும்பங்கு செய்கின்றன.
உழவர்கள் தமது காய்கனி பயிர் சாகுபடிக்கு மகரந்தச் சேர்க்கையின் இன்றியமையாத் தன்மையை நன்கு உணர்ந்திருப்பர். காய்கனி பயிர் வளர்ப்பு அதன் மலர்களிலுள்ள படியெடுத்தலைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இயற்கை வேளாண்மை என்பது தேனீக்கள் இன்றி அமையாது என்கிறார் தேனீக்கள் வளர்த்து வரும் சாமிநாதன் என்பவர். சிறு வயது முதலே இவர் தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்; இந்திய வகை, இத்தாலிய வகை ஆகிய தேனீக்களை வெவ்வேறு தேன்கூட்டுப் பெட்டகங்களில் வைத்து வளர்க்கிறார். குறிப்பாக தேன்கூட்டுப் பெட்டகங்களை நாட்டின் வெவ்வேறு இடங்களிலிருந்து பெற்றிருக்கிறார். கட்டுப்படியின்மையால் பல தச்சர்கள் தேன்கூட்டுப் பெட்டகங்களைச் செய்துதர மறுத்தனர்.
அரசு வழங்கும் பெட்டகங்களும் ஒரு மழைக்காலத்தைக் கூடத் தாங்குவதில்லை. இதனால், நல்ல தரமான தேன்கூடு பெட்டகங்கள் கிடைப்பதற்குத் தொல்லைகள் நேர்ந்தன. தேனீ வளர்ப்பிலுள்ள வேறு சிலருக்கும் இதே தொல்லைகள் இருந்திருக்கலாம். ஆனால், இவர் இதற்கு மாற்றாகச் சமையலறையில் பயன்படுத்தப்படும் கடப்பா பலகைகளை வைத்து தேன்கூடு அமைக்கத் தொடங்கினார். அவை கனமாக இருப்பதால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றக் கடினமாக இருக்கும். ஆனால் நெடுநாள் நீடித்திருக்கும்.
வணிக அடிப்படையில் பெருநகரங்களில் தேனீ வளர்ப்பு நடைமுறைக்கு ஒத்துவருமா?
ஊர்ப்புறங்களில் பயிர்களுக்கு அடிப்பது போல நகரங்களில் வளர்ந்துள்ள சில மரங்களில் பூச்சிக் கொல்லிகளோ வேதிப்பொருட்களோ அடிக்கப்படுவதில்லை. எனினும், இங்கு சுற்றுச்சூழல் மாசு மிகுந்திருக்கும். ஆனாலும் அவை பூச்சிக்கொல்லிகளைப் போலத் தேனீக்களுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
உணவுத்தட்டுப்பாட்டைத் தீர்க்கும் தேனீக்கள்:
- தனிப்பட்ட முறையில் பணம் பார்ப்பதற்காகத் தேனீக்களை வளர்ப்பதில்லை. அவற்றைப் படித்து அறிந்து கொள்வதற்காகவே வளர்க்கப்படுகிறது.
- தேனீக்கள் மட்டுமல்லாமல் மற்றைய பூச்சிகளும் வளர்வதற்கு நகரங்களில் ஏற்ற சூழல் உள்ளதாக சாமிநாதன் கூறுகிறார். பொதுவாக மக்கள் தேனீக்களின் கொட்டுக்கு அஞ்சுகின்றனர். ஆனால், சில ஆண்டுகளில் அவை நம்முடன் நன்றாகப் பழகிச் செல்லமாகிவிடும் என்று தமது அநுபவங்களைச் சொல்லி வியக்க வைக்கிறார்.
- அவை நம் கைகளின் மீது மென்மையாக ஊர்ந்து செல்லும். எப்போதாவது தான் கொட்டும்.
- நம் நாட்டில் பலர் தேனீக்களைத் தேன் சொரியும் பூச்சிகளாகத் தான் பார்க்கின்றனர். ஆனால், அவை இல்லாவிட்டால் உணவுத் தட்டுப்பாடு வருங்காலத்தில் மேலும் கடுமையாவது உறுதி என்றும் அச்சுறுத்துகிறார்.
- மனிதர்களோடு வயல் விலங்குகளும் இதனால் பாதிக்கப்படும். ஏனெனில், அந்த விலங்குகள் மேயும் மசால்புற்கள் வளர்வதற்குத் தேனீக்கள் மகரந்தம் சேர்க்கின்றன.
தர வரிசை:
- காய்கனி சாகுபடியில் சீனாவிற்குப் பின் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தேனீக்களைப் போன்ற மகரந்த சேர்ப்பிகளின் செழிப்புக்கும் காய்கனி விளைச்சலுக்கும் தொடர்பு உள்ளது. தேனீக்கள் அரிதாகும்போது காய்கனி விளைச்சலும் குறைந்து போகும் என்று கூறுகிறார்.
- ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அறிக்கையின் படி 140க்கும் மேற்பட்ட நாடுகளில் 90 விழுக்காடு உணவு வழங்கும் 100 பயிர்வகைகளில் 71 பயிர்கள் மகரந்தச் சேர்க்கையினால் செழிப்பவை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
- தேனீக்கள் காலை கூட்டிலிருந்து கிளம்பி சராசரி 3 முதல் 5 கி.மீ வரை பயணிக்கும். மலர்களிலிருந்து மகரந்தம் எடுத்து சேமித்துக்கொண்டு அதன் கூட்டில் தமக்கு உணவு சமைக்கும்.
தேனீக்களின் கழிவுகள்:
செரித்து மீந்த மகரந்த உணவைத் தேனீக்கள் கழிக்க வேண்டும். தேனீக்களின் கழிவு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்த்துளியைப் போன்ற நீர்மம். இவை தேனீச்சாணம் என்று அழைக்கப்படுகிறது.
தேனீக்கள் தமது கூட்டிலிருந்து 10 – 30 மீட்டர் தொலைவு கொண்ட இடத்தைக் கழிப்பிடமாகக் கொள்ளும். சராசரியாக ஒரு தேன்கூடு ஆண்டுக்கு 45 – 50 கிலோ சாணம் கழிக்கும். மழை பொழியும்போது இந்தச் சாணம் மண்ணோடு குழைந்து அருமையான இயற்கை உரமாகிவிடுகிறது. இதனால், இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்கள் தேனீக்கள் வளர்ப்பதன் வாயிலாகத் தேனீக்கழிவு இயற்கை உரம் கொண்டு கூடுதல் விளைச்சல் காணலாம்.
உழுவார் தாம் கொல்லைகளில் 3 – 4 கூடுகளில் தேனீக்கள் வளர்த்து அவை தரும் பயன்பாடுகளைப் பெற்று பயனடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
இவர் தேனீக்கள் வளர்ப்பிற்கு கூடுகளை வாடகைக்கு அளிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு:
ஆங்கில மூலம்: http://www.thehindu.com/sci-tech/article1564787.ece
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 1706 ஆக, உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களிலும், தேசிய வன விலங்கு சரணாலயங்களிலும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி புலிகளின் எண்ணிக்கை பதினைந்து சதம் உயர்ந்துள்ளது.
இதே அறிக்கை தெரிவிக்கும் மற்றொரு தகவல், தற்போதைய கணக்கெடுப்பில் 612 புலிகள் இரண்டு வயதுக்கு உட்பட்டவை. எனவே இந்த புலிகள் 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இருந்திருக்காது. எனவே புதிதாக பிறந்த இந்த 612 புலிகளை 1411 உடன் கூட்டினால் 2023 புலிகள் இருக்க வேண்டும். ஒருவேளை சில புலிகள் இயற்கையாகவே இறந்திருக்கலாம். புலியின் வயது 12 முதல் 15 க்குள் இருக்கும். எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் இறந்து போன எல்லா புலிகளும் 317 (2023 - 1706 ) புலிகளும் வயது முதிர்ந்து இறந்திருக்குமா என்பது சந்தகேமே. மத்திய அமைச்சர் புலிகள் வேட்டையாடப்பட்டதை ஒப்புக்கொள்கிறார். எனவே புலிகளை பாதுகாப்புக்காக மேலும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
இந்த முறை புலிகள் கணக்கெடுப்புக்காக முற்றிலும் அறிவியல் முறைகள் பின்பற்றப்படவில்லை. Camera Trapping என்ற முறை கொண்டு புலிகள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக அடையாளம் காண முடியும். எனவே துல்லியமான கணக்கெடுப்புக்கு இந்த முறை பின்பற்றப் பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இன்னமும் காலடி தடத்தை வைத்தே எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், புலிகளின் கழிவுகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி, புலிகளை தனித் தனியாக அடையாளம் காண முடியும்.
புலிகள் தங்களுக்கென்று ஒரு தனி எல்லையை நிர்ணயிப்ப்பதால் அவற்றின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு இல்லாத வண்ணம் காடுகளை இணைக்க வேண்டும். இரவு நேர போக்குவரத்தை வனப் பகுதிகளில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
மத்திய அரசின் சமீப கால முயற்சிகள் பாராட்டுக்குரியதே. ஆனால், இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொண்டாக வேண்டும்.
புலிகள் வேட்டையாடப்படும் தகவல் தெரிந்தாலோ, அல்லது புலியின் தோலையோ, உறுப்புகளையோ யாராவது வியாபாரம் செய்தாலோ, கீழ்காணும் இணையதள முகவரியில் புகார் செய்யலாம்.
Report a crime: http://projecttiger.nic.in/reportacrime.asp
தேசமெங்கும் திரியட்டும் செம்மஞ்சள் வரிப்புலிகள்.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மிகவும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் வெள்ளைப் புலிகள், உண்மையில் தனி இனம் கிடையாது. உலகில் சுமார் எட்டு வகையான புலிகள் வாழ்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவற்றில் தற்ச்சமயம் ஐந்து மட்டுமே காணப்படுகிறது. மற்ற இனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. எந்த வகை புலியாக இருந்தாலும், அவற்றின் நிரமிக்குறைபாடு காரணமாகவே அவை வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான மிருகக் காட்சி சாலைகளில் காணப்படும் வெள்ளைப்புலிகள் யாவும் வங்கப் புலிகளே. அவை தனிப்பட்ட புலி இனம் கிடையாது.
இது போன்ற நிறக்குறைபாடு பெரும்பாலான விலங்குகளுக்கு ஏற்ப்படுவதுண்டு. எனவே அப்படி மாறுபட்ட நிறத் தோற்றத்தில் இருக்கும் யாவும் தனி ஒரு உயிரினமாக எடுத்துக் கொள்ள முடியாது. சென்ற ஆண்டு வனப் பகுதியில் விலங்குகள் கணக்கெடுப்புக்காக நான் சென்றிடுந்த போது வெள்ளை நிற புள்ளி மான் ஒன்ற நேரடியாகவே பார்த்து அதிசயித்தேன்.
நிறக்குறைபாடு காரணாமாக இருந்தாலும், இவை நிச்சயம் அதிசயமான, அரிய உயிரினங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆப்ரிக்க சிறுத்தைகளிலும் இது போன்ற விலங்குகள் உண்டு. அவை முற்றிலும் நிறம் மாறாமல் அவற்றின் வடிவமைப்பில் மட்டும் மாற்றம் காணப்படுவதுண்டு.
வெள்ளை சிங்கங்கள் இன்றும் ஆப்ரிக்க காடுகளில் காணப்படுகின்றன. பராமரிப்பில் வளர்க்கப்படும் வெள்ளை சிங்கங்களும் உண்டு.
வேங்கை புலியோ அல்லது சிறுத்தை புலியோ நிறக்குறைபாடு காரணமாக முற்றிலும் கருமை நிறத்தில் காணப்படுவதுண்டு. கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும் இவை மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. கருஞ்சிறுத்தை என்று அழைக்கப்படும் இவை இந்தியக் காடுகளில் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளன.
பொதுவாகவே விலங்குகளும், பறவைகளும் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இயற்கையிலேயே அரிதாக உருவாக்கப்படும் இது போன்ற உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
அவ்வளவு சுலபத்தில் காணக் கிடைக்காத, இந்தியா காடுகளில் இல்லை என்று நம்பப்படுகிற, மிக மிக அரிய கருஞ்சிறுத்தை தோல், சென்ற மாதம் தாராபுரத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை வனத் துறையினர் (திரு.அருண்) கண்டுபிடித்தனர்.
- நம்முடன் வாழும் யானைகள்
- இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்
- பறவைகளுக்கும் பொருந்துமா காதலர் தினம்?
- புலிகள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
- மனங்கவரும் பறவைகள்
- நான் ஒரு குட்டி யானை
- பாண்டா கரடிகள்: சீனாவின் சூப்பர் ஸ்டார்
- சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு
- வீழ்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள்
- காணாமல் போகும் நீர் நாய்கள்
- அழிந்து வரும் சோலை மந்தி
- பழனி மலை தொடர்ச்சி
- மிரட்டும் தவளைகள்
- எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
- டார்வினின் விதி மீறும் நாய்கள்
- பறவைகளின் ரேடியேட்டர்
- மீன்களின் உலகம்
- அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா?
- நான்கு கொம்பு மான் (Four horned antelope–Tetracerus quadricornis)
- சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை