எறும்புகளின் கூட்டு வாழ்க்கையில் காணப்படும் ஒரு சுவையான நிகழ்வு இப்போது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்களுடைய வாரிசுகளை பிரசவிக்கும் பொறுப்பை ஏற்கும் பெண் யார் என்பதை வேலைக்கார எறும்புகள்தான் முடிவு செய்கின்றன என்பதுதான் அந்த சுவையான நிகழ்வு. 

ant_378ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த எறும்புக்கூட்டங்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டன. ஸ்பெயின் நாட்டு எறும்புக்கூட்டத்தில் மட்டும் இராணி எறும்பை வேலைக்கார எறும்புகளே தேர்ந்தெடுக்கின்றனவாம். இந்தப் போட்டியில் ஈடுபடும் மற்ற இராணி எறும்புகளை வேலைக்கார எறும்புகளே கொன்றுவிடுகின்றன. ஆனால் இங்கிலாந்து நாட்டின் எறும்புக்கூட்டம் இந்த அளவிற்கு தீவிரம் காட்டுவதில்லை. இராணி எறும்புகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அவை கீழ்படிந்து போய்விடுகின்றனவாம். லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் Proceedings of the Royal Society B இதழில் வெளியிடப்பட்டுள்ளன.  

சிலவகை எறும்புகள் பயிர்களை அழித்தொழிக்கும் தன்மை உடையவை. இவை நாடுவிட்டு நாடு  மட்டுமன்றி கண்டம் விட்டு கண்டம் பரவி ஏராளமான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. எறும்புகளின் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அவற்றின் சமூக கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாகவே அவை கண்டம் விட்டு கண்டம் பரவியுள்ளன. அழித்தொழிக்கும் பண்பில்லாத எறும்புக்கூட்டங்களின் சமூக கட்டமைப்பை தெரிந்துகொள்வதன் மூலம் மாற்று குழுக்களின் சமூக கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ள செய்தி: ஸ்பானிஷ் எறும்புக்குழுக்கள் மட்டுமே ஒற்றைக்குடும்ப அமைப்பிலானவை. இங்கு ஒரே ஒரு இராணி எறும்பு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து எறும்புக்குழுக்கள் சிக்கலானவை. அங்கே பல குடும்பங்களின் கலவையாக எறும்புக்குழுக்கள் காணப்படுகின்றன. வாரிசுகளை உற்பத்தி செய்யும் பணியில் பல இராணி எறும்புகள் அனுமதிக்கப்படுகின்றன. 

மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் சமூக குழுக்களாகவே வாழ்கின்றன. குழுவின் உறுப்பினர்களிடையே சச்சரவும், வாக்குவாதமும் உண்டாவது உறுதி. எறும்புக்கூட்டங்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கவை. இவ்வளவு காலம் அவை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அவற்றிற்கிடையே கூட்டுறவு இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.  தங்களுடைய குழுக்களில் ஏற்பட்ட சச்சரவுகளை அவை எவ்வாறு தீர்த்துக்கொண்டன என்பதை ஆராய்வது சுவையானது மட்டுமல்ல, முக்கியமானதும்கூட. கூட்டமாக வாழும் அனைத்து உயிரினங்களிலும், வாரிசுகளை பெற்றுக்கொடுக்கும் உரிமையை யாருக்குக்கொடுப்பது என்பதை முடிவுசெய்வதில் ஓர் ஒழுங்கு காணப்படுகிறது. காலாஹரி பாலைவனத்தில் வாழக்கூடிய மங்கூஸ் குடும்பத்தைச் சேர்ந்த மீர்காட் என்னும் பாலூட்டியின் அனைத்து பெண் உயிரிகளும் இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுத்த சில மீர்காட்டுகள் மட்டுமே வாரிசுகளை பெற்றுக்கொடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இது போன்றே பாலைவனத்தில் வாழும் mole rats இனத்தில் ஒரே ஒரு இராணி எலி மட்டுமே வாரிசுகளை உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 

சிங்கக்கூட்டத்தில் குழுவில் உள்ள அனைத்து பெண் சிங்கங்களும் வாரிசுகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. 'twig ant’ எனப்படும் குருத்து எறும்புகளை லீசெஸ்டர் விஞ்ஞானிகள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு எறும்புக்கூட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட இராணி எறும்புகள் காணப்பட்டன. ஆனால் ஸ்பானிஷ் எறும்புகளிடையே ஒரே கூட்டில் உள்ள பல இராணி எறும்புகளும் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலைப்பெற்றிருந்தாலும் ஒரே ஒரு இராணி எறும்பு மட்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டது. இந்த இராணி எறும்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை வேலைக்கார எறும்புகள் பெற்றிருந்தன.

ஒரு இராணி எறும்பைத்தவிர பிற இராணி எறும்புகளை அடித்துக்கொல்லுவதும், ஒரே ஒரு இராணி எறும்பு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் காணப்பட்டது. வேலைக்கார எறும்புகளின் இந்த ஆதிக்கம் எல்லா குருத்து எறும்புக்குழுக்களிலும் ஒன்றுபோல் இல்லை என்பதுதான் ஆய்வின் முடிவு. ஸ்பானிஷ் எறும்புகளின் ஆதிக்கம் செலுத்தும் தன்மை பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து பகுதிகளில் உள்ள எறும்புக்குழுக்களில் காணப்படவில்லை. ஸ்பெயினில் எறும்புக்குழுக்கள் ஒரே குடும்பமாக இருக்கையில் பிற நாடுகளில் பலகுடும்ப எறும்புக்குழுக்கள் காணப்படுகின்றன. குருத்து எறும்புகளின் வியத்தகு இந்த நடத்தைக்கு மரபியல், சூழியல் காரணிகளின் தாக்கம் குறித்து இனிமேலும் ஆராய இருப்பதாக லீசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/11/101102191839.htm 

Pin It