அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஜெ.பிரபாகர்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.
பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.
இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது. இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.
21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.
2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.
உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.
7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.
மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர இருக்கிறது.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.
1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.
எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
- ஜெ.பிரபாகர் (
(நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, பூவுலகின் நண்பர்கள்)
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக வங்கி பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும், உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய மூன்று முழக்கங்களும் இந்தியாவைச் சுரண்டும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள வளரும் நாடுகளில் தங்கள் வணிகத்தையும், மூலதனத்தையும் செலவிட்டுப் பெருவாரியாக இலாபம் ஈட்ட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான சபை 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழலுக்காக உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து நடத்திய உச்சி மாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத்தைச் சுற்றுச் சூழல் சீரழிவிலிருந்து பாதுகாக்க இதுவே கடைசி வாய்ப்பு என்று உலக நாடுகள் ஆவலுடன், எதிர்பார்ப்புகளுடன் கலந்து கொண்டன. அந்த புவி உச்சி மாநாட்டில் மூன்று முக்கியமான சிக்கல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
புவி வெப்ப உயர்வுக்கு மூல காரணமாக இருப்பது காற்றின் மாசுபாடு ஆகம். குறிப்பாகக் கார்பன்-டை-ஆக்சைடு காற்று மண்டலத்தில் அதிகமாவதற்குத் தொழிற்சாலைகளும், வாகனங்கள் வெளியிடும் புகையும் முக்கிய காரணம். பணக்கார நாடுகள் காற்றின் மாசுபாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மேலை நாடுகள் அதிலும் அமெரிக்கா தனது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று புவி உச்சி மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அப்போதைய அமெரிக்கா ஜனாதிபதி பேசும்போது, அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் எரிபொருள்களைக் குறைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆணவமாக பதிலளித்தார்.
பல்லுயிர் பெருக்கம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மிகப் பெரும் சொத்தாகும். உயிரினத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாணிபம் செய்யும் பல பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தப் பகுதியில் உள்ள உயிரினங்கள், தாவர வகைகள் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளன.
உயிரித் தொழில் நுட்பத்துக்காக ஒரு நாட்டில் இருந்து உயிரின மாதிரியை இந்தக் கம்பெனிகள் பயன்படுத்தினால் அதன் வருமானம் அந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகள் இந்த முடிவுல் கையெழுத்து போட மறுத்துவிட்டன.
பசுமையான ஒரு உலகத்தைப் படைத்திட உலக நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டத்தை அஜெண்டா 21 எடுத்துரைக்கிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன. ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பணக்கார நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டுமென புவி உச்சி மாநாட்டில் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் திட்டத்திற்கான நிதியுதவி, தொழில் நுட்ப உதவி போன்றவைகளை மேலை நாடுகள் இன்றுவரை செய்யவில்லை.
மேலும் புவி உச்சி மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சம் உலகின் இயற்கை வளங்களைப் பங்கிடுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் சமத்துவ நிலை வேண்டும் என்பதாகும். உலகின் 80 விழுக்காடு இயற்கை வளங்களை மேலை நாடுகளே அனுபவித்து வருகின்றன. இயற்கை வளங்களை அனுபவிக்க அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். ஆனால் சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார வளாச்சி என்பதும், தொழில் வளர்ச்சி என்பதும், இயற்கைச் சூழலைப் பாதிக்காத வகையிலும், நிலைத்த நீடித்த வளர்ச்சிக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலக மயமாக்கலைத் தீவிரப்படுத்த நிர்பந்திக்கும் வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை எதிர்மறையாகச் செயல்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
கார்பன் - டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள் ஆகிய வாயுக்கள் (இவை பசுமைக் குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படுவையாகும்) காற்று மண்டலத்தில் அதிகமாகும்போது காற்று மண்டலத்தின் வெப்பம் உயர்வடைகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிப் பொருட்களை எரிப்பதானது மனிதர்களின் வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 2100 ஆம் ஆண்டில் 1.47 டிகிரி சென்டிகிரேட் உயரும். இந்த உயர்வால் பங்களாதேஷ், சீனா, எகிப்து போன்ற நாடுகளின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுந்தது நிலப் பரப்பை அழிக்கும். மாலி போன்ற பல சிறு தீவுகளும், கடல் நீருக்குள் மூழ்கிவிடும் அபாயமும் உண்டு காற்று மண்டலத்தில் வெப்பம் உயர்வதைத் தடுக்க வளர்ந்த மேலை நாடுகள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளிப்படுத்தும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
1997 இல் ஜப்பான் நகரான கியோடோவில் மேற்கொண்டு நடத்திய விவாதங்களிலும், பேச்சுவார்த்தைகளிலும் 2008-2012க்குள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடுவதை மேலை நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கியோடோ உடன்படிக்கை இன்னும் அமலுக்கு வரவில்லை.
வளர்ச்சியடைவதற்கும், இயற்கை வளங்களை அனுபவிப்பதற்கும் எல்லா மனிதர்களுக்கும் உள்ள சமத்துவ உரிமையை அடிப்படையாகக் கொண்டு வளரும் நாடுகள் வலியுறுத்தி வரும் இந்த உடன்படிக்கை நடைமுறையில் கேள்விக் குறியாக உள்ளது.
உயிரினத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல பெரிய கம்பெணிகள் (மான்சான்டோ, கார்கில்) அமெரிக்காவில் உள்ளன. கீழை நாடுகள் தங்களின் உயிரின வகைகளைத் தங்கள் நாடுளில் பாதுகாத்து வந்தால், இதைப் பயன்படுத்தி வரும் தாவர வகைகள், உயிரியல் வகைகளின் மேல் அந்த நாடுகளுக்கு உள்ள உரிமையைக் கேள்விக் குறியாக்கி வருகின்றன.
ஓசோன் படலம் பாதிப்படைவது பற்றி உலகத்தில் பார்வை 1970-இல்தான் திரும்பியது. 1988 ஆம் ஆண்டில் 2600 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவுக்கு வாயு மண்டலத்தின் மேற்பரப்பில் ஓசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது. பில் ஒசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது பூமியின் வடக்குப் பகுதியிலேயேதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வகையான இரசாயனங்கள் காற்று மண்டலத்தில் பரவி மேற்பரப்பை அடையும்போது ஓசோன் வாயுவை கரைத்துவிடும். துன்மைக் கொண்டுள்ளது. குளோரோ, புளோரோ கார்பன்கள் (ஊகுஊ) என்று அழைக்கப்படும் இந்த வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், அதற்கான செயல் திட்டத்தையும் 1987 இல் கையொப்பமிட்ட மான்ட்ரீஸ் உடன்படிக்கை வலியுறுத்துகிறது. ஆனால் டுபான்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் குளோரோ புளோரோ கார்பன்கள் என்ற வாயுக்களைத் தங்கள் உற்பத்தியில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் ஓசோன் படலத்தின் ஓட்டை அதிகரிக்கும்.
அபாயகரமான கழிவுகள்
மேலை நாடுகள் அபாயகரமான கழிவுகளை வளரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் விலைக்கு விற்றுவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த 1992 ஆம் ஆண்டில் பேசல் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. இதில் 148 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இதன்படி அபாயகரமான கழிவுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியை நியாயப்படுத்துவதாக உள்ளது எனச் சுற்றுச் சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன்பேரில் அபாயகரமான சில கழிவுகளை ஏற்றுமதி செய்வதை அறவே தடுக்கக்கூடிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திருத்தத்தை இதுவரை 26 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.
உலகமயமாக்கலின் மிக அபாயகரமான அம்சம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வேறு தொழிலகங்களை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் அமைப்பதாகும்.
கடந்த பத்தாண்டுகளில் உலகின் பல இடங்களில் போர் ஏற்பட்டுள்ளது. ஈராக் மீது அமெரிக்காவினர் நடத்தி வரும் போர், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆகியவற்றால் நீரும், நிலமும் மாசடைந்துள்ளன. இரசாயன மருந்துகளாலும், பெட்ரோலியப் பொருட்களாலும் மக்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
உலகம் முழுவதும் மக்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அரசுகள் உலக வங்கியிடமும், அமெரிக்காவிடமும் மண்டியிட்டுக் கிடக்கின்றன. சுற்றுச் சூழலில் அக்கரை கொண்ட விஞ்ஞானிகள், அறிஞர்கள், கட்சிகள், மக்கள் இயக்கங்கள் பங்கு மிக முக்கியமானது. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரச்சாரம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராட வேண்டியது சமூகக் கடமையாகும்.
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் தோன்றிய பார்த்தீனியச் செடியின் கொடிய விளைவுகள் ஆப்பிரிக்கா, ஆஸ்டிரேயா, ஆசியா கண்டங்களில் அதிகமாக உணரப்பட்டது.அமெரிக்காவிலிருந்து கோதுமைத் தானியங்களோடு பார்த்தீனியம் விதைகளும் கலந்து இந்தியாவிற்கு மும்பைத் துறைமுகத்தின் வழியாக 1956 ஆம் ஆண்டு வந்திறங்கின.
பார்த்தீனியம் பூண்டு, சீதேவியார் செங்கழுநீர் , செவ்வந்தி போன்ற தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடி ஆகும். ஒன்றரை மீட்டர் உயரத்துக்கும் மேலாக வளரக் கூடியது. பார்த்தீனியச் செடிகள் காலியிடங்கள், தரிசு நிலங்கள், பயிர் நிலங்கள் , குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், பழத் தோட்டங்கள் , சாலையோரங்கள், கரையோரங்கள் என அனைத்து இடங்களிலும் வளர்ந்து வருகின்றன.
பார்த்தீனியச் செடிகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் பரவி,நெருக்கமாக முளைத்து, நிமர்ந்து சடைத்து விரைவிலேயே ‘ பச்சைக் கம்பளம் ’ விரித்தது போல நிலத்தை மூடிவிடுகின்றது.
பார்த்தீனியச் செடிகள்களைகளுக் கெல்லாம் தலைiயாயக் களையாகும்இதன் தண்டுகள், கிளைகள் மற்றும்இலைகள்உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இச்செடியானது அதிக எண்ணிக்கையிலான பூக்களையும்,குறைந்த எடையுடைய விதைகளையும் உற்பத்தி செய்கிறது.அதன் விதைகள் குறைந்த எடை உள்ளதால்காற்றின்மூலம்மற்றஇடங்களுக்கு எளிதில் விரைவாகப் பரவுகிறது.
ஒரு பார்த்தீனியம் செடியானது 2500முதல் 5000வரையிலான விதைகளை உற்பத்தி செய்கிறது. மேலும்,பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்குத் தேவையான சூழ்நிலைகள் இல்லாத போது, சாதகமான சூழ்நிலை வரும் வரை 20ஆண்டுகள் கூட உறக்கத்தில் கிடந்து முளைக்கக் கூடிய தன்மை வாய்ந்தது.பார்த்தீனியம் செடியானது இந்தியாவில் 35மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் பரவியுள்ளது.
பார்த்தீனியம் செடிகளின் கீழ் செடி கொடிகள் எதுவும் முளைத்து வளர முடிவதில்லை. தண்ணீருக்காகவும், சூரிய ஒளிக்காகவும், வேர்ப்பிடி மண்ணுக்காகவும் செடிகள் போராடிச் சாகின்றன. இவற்றின் மீது பார்த்தீனியச் செடிகள் நஞ்சூட்டி அழிக்கிறது.
பார்த்தீனியம்- பார்த்தீனியன், அம்புரோசின் போன்ற நச்சு வேதிப்பொருள்களைச் சுரக்கிறது. இந்த நச்சுப் பொருட்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் நமது நாட்டுத் தாவரயினங்கள் அழிந்து விடுகின்றன. ‘எதற்கும் அடங்காமல் எதனையும் அடக்காமல் ’ பல நூறு ஆண்டு காலமாக இயற்கைச் சம நிலையில் பெரும் பங்காற்றி வந்த உள்ளூர் தாவர இனங்களின் சாம்பல் மீது நின்று கொண்டு பார்த்தீனியம் கோலோச்சுகிறது.
-
பார்த்தீனியச் செடியானது கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
-
வேளாண்மைப் பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. வேளாண்மை உற்பத்தியில் 30% ஐ குறைக்கிறது.
-
மண்ணில் கசிய விடும் நச்சுப் பொருட்களின் மூலம் பயிர்களின் வளர்ச்சியைத் தாக்குகிறது.
-
உளுந்து,பயறு போன்ற பயிர்களின் அருகாமையில் பார்த்தீனியம் செடிகள் வளரும் போது பயிர்களின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கிறது.
-
அவரையினப் பயிர்களின்,சிறப்பாக அவற்றின் வேர்களில் ‘இரைசோபியம் ’ பாக்டீரியாக்களைக் கொண்ட வேர் முடிச்சுகள் காணப்படுகின்றன. இவை, நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உறிஞ்சக் கூடிய அயனிநிலைக்கு மாற்றித் தருவதுடன், வளி மண்டபத்தில் நைட்ரஐனின் சமநிலையைப் பேணியும் வருகின்றன.பார்த்தீனியச் செடிகளின் நஞ்சுகள் இந்த வேர் முடிச்சுகளையும் விட்டு வைப்பதில்லை என தாவரவியல் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
-
பார்த்தீனியச் செடிகள் மனிதர்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
-
பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ள இடங்களில் காற்றில் மிதக்கும் மகரந்தங்களில், பார்த்தீனியச் செடிகளின் மகரந்தங்கள் தான் அதிகம் உள்ளது. இம்மகரந்தங்களும் தம்மீது நச்சுப் பொருட்களை பூசி வைத்துள்ளன. இதனைச் சுவாசிப்பவர்கள் ‘ஆஸ்த்மா' நோயால் பாதிக்கப் படுகின்றனர்.
-
பார்த்தீனியம் செடியைத் தொடர்ச்சியாகத் தொடுபவர்களுக்கு தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுகிறது.
-
பார்த்தீனியம் செடிகளால் ஏற்படும் நோய்கள் எவ்வித மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படுவதில்லை.
-
பார்த்தீனியம் செடிகள் கலந்த பசுந்தீவனங்களை உண்ணும் கால்நடைகளின் பால் கசப்புத் தன்மை பெறுகிறது.
-
பார்த்தீனியச் செடிகள் கரியமில வாயுவை அதிகமாக வெளிவிடுவதால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-
பார்த்தீனியம் செடிகள் பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது.
இவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை இந்தியா முழுவதும் அழித்திட உடனடியாக நடுவண் அரசும்,மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பார்த்தீனியம் செடிகள் அழிப்பை இயக்கமாக நடத்திட வேண்டும். வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை, சுகாதாரத்துறை முதலிய அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்த்தீனியம் செடிகள் அழிப்பில் ஈடுபடவேண்டும்.
பார்த்தீனியம் செடிகளை வேருடன் பிடுங்கி மண்ணுக்குள் புதைப்பதால் அவை மக்குரமாகிவிடுகிறது. உயிரியல் முறையில் பார்த்தீனியச் செடிகளின் இலைகளை விரும்பி உண்ணும் பூச்சிகளை விட்டும் கட்டுப்படுத்தலாம். பார்த்தீனியச் செடிகள் அதிகம் உள்ள இடங்களில் கேசியா இனத்தைச் சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டும் இவை பரவாமல் தடுக்கலாம்.
நிலத்தை நன்கு உழுது களைகளின்றி பண்படுத்தும் போதும் பார்த்தீனியம் செடிகள் வளரவாய்ப்பு இல்லாமல் செய்யலாம். பார்த்தீனியம் செடிகளை கட்டுப் படுத்தும் எளிய வழி, சிக்கனமான வழி, அனைவரும் உடனடியாக செய்யக்கூடிய வழிமுறை என்ன வெனில் ஒரு கிலோ உப்பையும்,ஒரு லிட்டர் சோப்பு எண்ணைய்யும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதாகும். இதனால் மூன்று தினங்களுக்குள் பார்த்தீனியச் செடிகள் வாடி வதங்கி கரிந்து அழிந்து போகும்.
மக்களிடம் மார்த்தீனியச் செடிகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டு, பயிர்களையும், கால் நடைகளையும், மனிதர்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்திட வேண்டும்.
- பி.தயாளன்
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு அருகில் 1858ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை முதன் முதலில் தொடங்கப்பட்டது.தொழிற்புரட்சியின் போது ஆஸ்பெஸ்டாஸ் மிகவும் பிரபலமடைந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் 1866 ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.1874ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கப் பயன்படும்தாதுப்பொருள்ஆந்தோபிலைட்( Anthophyllite) ஆகும்.
இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் தீப்பிடிக்காமல் இருப்பதற்கான பூச்சுகள், கான்கிரீட்டுகள், செங்கல்கள், குழாய்கள், வெப்பம், தீ முதலியவைகள் தாக்காமல் இருப்பதற்கான கேஸ்கட்டுகள், குழாய்கள் பதித்தல், மேற்கூரை போடுதல், தீப்பிடிக்காத சுவர், தரை, கூரை அமைத்தல், சுவர்களை இணைத்தல் முதலியவற்றில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டன.
ஆஸ்பெஸ்டாஸ் தனியாகவும், சிமெண்ட் அல்லது பிளாஸ்டிக்குடன் சேர்த்தும் பயன்படுத்தப்படுகின்றன.கப்பல் கட்டுதல் மற்றும் அவற்றின் தரைப்பூச்சுகள், கொதிகலன்கள் அமைத்தல்,கொதிநீர்க் குழாய்கள், நீராவிக் குழாய்கள் அமைத்தல், மின் விநியோகத்தின் மின்சாரக் கம்பிகளின் காப்பு உறைகள், மோட்டார் வாகனங்களில் தடுப்புச் சப்பாத்துகள், கிளச் பட்டிகள், ஆடைத் தொழிலில் தீப்பிடிக்காத போர்வைகள், திரைச்சீலைகள் என்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன் படுத்தப்படுகிறது. மேலும், தொலைத் தொடர்புகள், அலைமின் நிலையங்கள், இரசாயணத் தொழிலகங்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.
குண்டு வீச்சு, சுனாமி, சூறாவளி, பூகம்பம் முதலிய இயற்கை இடர்பாடுகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடு கட்டுவதற்கு ஆஸ்பெஸ்டாஸ் தான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நாடுகளில் புதுப்பிக்கும் பணிகளில் உதவிக்கு வருகின்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும்,உலக வங்கியும் விற்பனை முகவர்களையும் விஞ்சும் அளவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைப் பரிந்துரை செய்கின்றன.
இந்தியா, சீனா முதலான வளரும் நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் சிமிண்ட் சீட்டுகள் (Asbestos cement sheets or A/C sheets) மேற் கூரைகளுக்கும், பக்கச் சுவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மில்லியன்கணக்ககான வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுரிகள், கூடாரங்கள், தங்குமிடங்கள் முதலியவற்றுக்காக ஆஸ்பெஸ்டாஸ தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இ ந்தியாவில் கிராமப்புறங்களில் கூரைகள் அமைப்பதற்கு ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாக பயன்படத்த ஊக்குவிக்கப்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் அனைத்து வழிகளிலும், அனைத்து நிலைகளிலும் உடல் நலத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் கெடுக்கக் கூடியது.முதன் முதலில் 1906ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் பாதித்து மரணம் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டது.சிறுவயது மரணம்,நுரையீரல் பாதிப்பு முதலியவைகள் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது என்பதை அமெரிக்காவில் ஆய்வு செய்து 1914 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர்.
‘மேசோதாலியமா’ என்னும் நோய் 1931 ஆம் ஆண்டு மருத்துவ உலகில் அறியப்பட்டது. 1940 ஆம் ஆண்டில் தான் இந்நோய் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டது. அப்பொழுது தான் அமெரிக்க அரசு பொது மக்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவித்தது. 1970 களில் நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகளினால் ஏற்படும் நோய்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் நாட்டில் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்காக, ஆஸ்பெஸ்டாஸ், அம்மோனியம் சல்பேட்டில் பயன்படுத்தப்பட்டது, மேலும், இரயில் ரோடு கார்கள் ( Rail Road cars) , கட்டிடங்கள், சுவர்கள் முதலியவற்றிற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.ஜப்பான் நாட்டில் 1974 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி மற்றும் பயன்பாடு உச்சநிலையை அடைந்தது.1990ஆம் ஆண்டு வரை இந்நிலை தொடர்ந்தது.
ஆஸ்திரேலியாவில் 1945 முதல் 1980 வரை கட்டிடப் பணிகளிலும், தொழிலகங்களிலும் ஆஸ்பெஸ்டாஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
உலகில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்களை வெட்டி எடுக்கும் நாடு கனடா ஆகும். கனடாவில் கிடைக்கும் ஆஸ்பெஸ்டாஸில் 95 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், ரஷ்யா, ஜிம்பாப்வே (Zimbabwe) முதலிய நாடுகள் தொடர்ந்து இந்தியாவை ஆஸ்பெஸ்டாஸைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வருகின்றன.
ஆஸ்பெஸ்டாஸ் சந்தையில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகவும் மோசமான பாதுகாப்பற்ற உற்பத்தி இடம்,முறைப்படுத்தப்படாத விதிமுறைகள், அமல்படுத்தப்படாத சட்டங்கள் முதலியவற்றால் மிகப்பெரும் அழிவுகள் நேர்கின்றன.
உலகத்திலேயே பழுதடைந்த கப்பல்களை உடைக்கும் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலோரம் ‘ஆலாங்கில்’ உள்ளது. இதில் 55,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அகமதாபாத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்கள் சுரங்கத்தில் வெட்டியெடுக்கும் போதும், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்களைத் தயாரிக்கும் போதும், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போதும், கட்டிடங்கள் இடிக்கப்படும் போதும், கப்பல் உடைக்கும் தளங்களில் பழைய கப்பல்களை உடைத்து பிரிக்கும் போதும் ஆஸ்பெஸ்டாஸிசிலிருந்து நுண்ணிய துகள்கள் காற்றில் கலக்கின்றன.
காற்று , ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்களை அரித்து எடுக்கிறது. காற்றை நாம் ஏதோ ஒரு வகையில் தினமும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.காற்று மூலம் ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்கள் நமது மூக்கின் வழியே உடலினுள் செல்கிறது. ஒரு கன மீட்டர் அளவில்,அதாவது ஒரு மணி நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து ஆஸ்பெஸ்டாஸ் நார்த்துகள்களாவது இருக்கும். நகர்புறத்துக் காற்றில் இந்த அளவு பத்து மடங்கு அதிகமாக உள்ளது என்று கணக்கிட்டுள்ளனர். மேலும், ஆஸ்பெஸ்டாஸைக் கையாளுகின்ற வேலைத் தளங்களில் 5 மில்லியன் துகள்கள் வரை கூடச் செறிந்த போய் இருக்கும்.
மூச்சுக் காற்றுடன் சுவாசப்பாதையினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உடல் தன் பலத்தைப் பிரயோகித்து தும்மியோ,இருமியோ வெளியே தள்ளுவதற்கு முனையும். ஆனால் ,இந்தத் தள்ளு முள்ளுகளில் 5மைக்குரோன்கள் அல்லது அதனினும் பெரிய அளவு ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உடலில் எதிர்ப்புப் பொறிகளினால் எதுவும் செய்துவிட முடியாது.அவை நுரையீரலின் ஆழமான பகுதிகளைச் சென்றடைந்து விடுகின்றன. மீண்டும், மீண்டும் ஆஸ்பெஸ்டாஸ் காற்றையே சுவாசிப்பவர்களின் நுரையீரல்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஒரு படையாகவே படிந்து விடுகிறது.இது நுரையீரலை இயல்பாகச் சுருங்கவோ, விரியவோ செய்யவிடாமல்,சுவாசித்தலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரல்களை இயங்கச் செய்வதற்கு இதயம் அதிக அளவில் செயல்பட வேண்டியுள்ளது. மேலும், நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியவும் தொடங்குகிறது. இந்த நோயை மருத்துவர்கள் ‘ஆஸ்பெஸ்டாஸிஸ்’ (Asbestosis) எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த நோய்க்குத் தகுந்த சிகிச்சையும் சரியான மருந்து மாத்திரைகளும் இல்லாததால், நோய்வாய்ப்பட்டவர்கள் பெரும்பாலும் செயலிழந்து போவார்கள் அல்லது மரணத்தைத் தழுவுவார்கள்.
நுரையீரலினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் நுரையீரல் புற்று நோயை (Lung cancer) ஏற்படுத்துகிறது. ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயை விட நுரையீரல் புற்று நோய் அதிக அளவில் மனித உயிர்களைப் பறிக்கிறது.
ஆஸ்பெஸ்டாஸ் வெட்டியெடுக்கும் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் பணிபுரிபவர்கள், கட்டுமானப் பணியாளர்கள் முதலிய பிரிவினர்கள் நுரையீரல் புற்று நோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்தப் புற்று நோயைவிடவும் நுரையீரலின் உட்பக்கத்தைப் போர்த்தியிருக்கும் மெல்லிய சவ்வில் ‘மீசோதீலியோமா’ (Mesothelioma) என்னும் கொடிய புற்று நோயையும் ஏற்படுத்துகிறது. மீசோதீலியோமா நோய் சுவாசப்பாதையில் மட்டுமின்றி, தொண்டை, இரைப்பை, பெருங்குடல், சிறுநீரகங்கள் முதலியவற்றிலும் பாதிப்பை உருவாக்குகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் துகள்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளியாகும் கிருமிகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் குடிநீர் விநியோகக் குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் மூலமும் ஆஸ்பெஸ்டாஸ் உணவுக் குழாயை வந்தடைகிறது.இப்படி உணவுக் குழாயில் சேரும் ஆஸ்பெஸ்டாஸின் ஒரு பகுதி அங்கிருந்து குடற்சுவரின் இரத்த ஓட்டத்தினுள்ளும் நுழைந்து,இரத்தத்தில் கலந்து சிறுநீரகங்களை பாதிப்படையச் செய்கிறது.
ஆஸ்பெஸ்டாஸ் துகள்களைச் சுவாசிப்பவர்களுக்கு உடனடியாக நோயின் அறிகுறிகள் தெரிவதில்லை. 25 ஆண்டுகள் கடந்த பின்பு கூட நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தோல் நோய், பல்முனேரி (Pulmonary) நோய், கர்ப்பப்பை புற்றுநோய் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. விலங்கினங்களுக்கு ‘டியூமர்’(Tumors) நோய் ஏற்படுகிறது. இயற்கை வளங்களையும், நீரையும் ஆஸ்பெஸ்டாஸ் மாசுப்டுத்துகிறது.
ஆஸ்பெஸ்டாஸ்சின் கொடிய தீய விளைவுகளைக் கருத்தில் கொண்டு, உலகின் பல முன்னணி நாடுகள் முற்றிலும் தடை செய்து உள்ளன. உலகில் சுமார் 52 நாடுகள் ஆஸ்பெஸ்டாஸை தடை செய்துள்ளன.ஜப்பான் நாடு ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிப்பதையும்,இறக்குமதி செய்வதையும் முற்றிலுமாகத் தடைசெய்துள்ளது. தென்னாப்பிரிக்காவும், ஐரோப்பிய குடியரசு நாடுகளும், ஆஸ்திரேலியா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் ஆஸ்பெஸ்டாஸை முற்றிலுமாக தடை செய்துள்ளன. வளர்ந்த நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸை பயன்படுத்தி புதிதாக ஆரம்பிக்கும் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆஸ்பெஸ்டாஸ் கட்டுப்பாட்டுச் சட்டம் 2006 (Control of Asbestos Regulation Act ) இயற்றப்பட்டு உள்ளது. அய்க்கிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) 1989 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
கேரள மாநில மனித உரிமை ஆணையம் சனவரி 2009 முதல், பள்ளிகளில் கூரைகள் அமைப்பதற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள ‘தேசிய தொழிலக சுகாதாரநிறுவனம் (NIDH) மேற்கொண்ட ஆய்வின்படி,“ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரையில் வாழ நேர்ந்தால், நுரையீரல் புற்று நோய், மீசாதீலியோமோ முதலிய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது ”-என அறிவித்துள்ளது.
ஆஸ்பெஸ்டாஸின் தீமைகளை அறிந்த பின்பும் இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸைப் பயன் படுத்துவது மக்கள் விரோதச் செயலாகும். ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுவதுதொடர்கிறது.ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதி தாராளமாக நடைபெற்றும் வருகிறது.
ஆந்திராவில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த தடையில்லை, வளர்ச்சிக்கு அவசியம் எனக் கூறப்படுகிறது. காதம் விவேக்கானந்த் என்ற பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் 25 விழுக்காடு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்கிறார்.அவருக்கு எட்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளன.
“வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் (பயன்படுத்த இறக்குமதிக்கு தடை விதித்தல்) மசோதா 2009“– இராஜ்யசபாவில அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும், தொழிலபதிர்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு, அறிவியல் தொழில் நுட்பக் குழு, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முதலியவற்றின் முட்டுக்கட்டையால் பாராளுமன்றத்தில் அம்மசோதா இன்றுவரை நிறைவேற்றப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது.
தமிழகத்தில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டிற்கு எவ்விதத் தடையும் கிடையாது. கும்பகோணத்தில் பள்ளியின் கூரையில் ஏற்பட்ட தீவிபத்தையடுத்து, பள்ளிகளின் கூரைகள் அனைத்தும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதக்க வேண்டும். ஆஸ்பெஸ்டாஸின் தீமைகள்குறித்துபொதுமக்களுக்கும்,தொழிலாளர்களுக்கும்,மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளுக்குப் பதிலாக, செல்லுலோஸ் பைபர், பிரமிட் பைபர், இரும்புத் தகடு முதலியவற்றைப் பயன் படுத்தலாம்.மேலும், நமது முன்னோர்கள் பயன்படுத்தியது போல சுட்ட களிமண் ஓடுகளைப் பயன்படுத்தலாம்.
இந்திய அரசு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.