ஒரு குழந்தை கணக்கு பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் மொழி, வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இன்னொரு குழந்தை வரலாறு பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் பிற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும், இதற்கு காரணம் அவர் களின் நுண்ணறிவாகும். 

                        மனிதனின் நுண்ணறிவு பல கூறுகளால் ஆக்கப்பட்டது. நுண்ணறிவைப் பற்றிய உளவியல் கோட்பாடு ஒன்றின் படி நம் அனைவரின் நுண்ணறி வும் இரண்டு கூறுகளால் ஆக்கப்பட்டது என கொள்ளப் படுகிறது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை வழங்கும் பொது காரணி ஒன்றும், ஏதேனும் ஓர் சிறப்பு தன்மைக்கு காரணமான  சிறப்பு காரணி ஒன்றும் நம் நுண்ணறிவில் உள்ளது. இதன்படி பள்ளி சென்று படிப்பதற்கு பொது நுண்ணறிவு காரணியும் அதோடு ஏதோ ஒரு படத்தில் சிறந்து விளங்கக் காரணமாக சிறப்பு காரணியும் எல்லா குழந்தைகளுக் கும் இருக்கும். அதன் காரணமாகவே எல்லா பாடங்களையும் படிப்பதோடு கணக்கு, அறிவியல் அல்லது மொழிப்பாடம் என ஏதோ ஒன்றில் மாணவர்கள் அதிக ஆர்வமும் தனிதிறமையும் பெற்று விளங்குகிறார்கள். சில குழந்தைகள் எந்த பாடத்திலும் ஆர்வமில்லாமல் ஓவியம், இசை, நடனம், சமூக சேவை என வேறு எதேனும் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கலாம். 

                        குழந்தைகளின் ஆர்வத்தை கண்டறிய உளவியல் நாட்டச் சோதனைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டச் சோதனைகள் குழந்தைகள் என்ன துறையில் அல்லது பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குகிறார்கள் என்பதை கண்டறியும் திறன் படைத்தவை. அதைப் போன்ற நாட்டமுள்ள பாடங்களில் கவனம் செலுத்திப் படித்தால் பிற்காலத்தில் என்னென்ன பணிக்கு செல்லலாம்  என்று தெரிந்து கொள்ள வசதியாக “பணி விவர அகராதிகளும்” உருவாக்கப் பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இசசோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி ஆர்வங்களை கண்டறிந்து விடுகிறார்கள் பின் அதற்கேற்ற படிப்புகளையும் வேலை களையும் தேர்ந்தெடுக்க குழந்தை களுக்கு பெற்றோர் உதவி செய்கிறார்கள். 

                        சிலர் நன்றாக நிறைய பேசும் இயல்பு கொண்டவர் களாக இருப்பர். அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நாலு பேரிடம் பேசிக்கொண்டிருக்கவே விருப்படுவர். பேசாமல் இருக்கச் சொன்னால் அவ்வாறிருக்க அவர்களால் முடியாது. அதைப் போன்றே பேசாமல் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவர் களை கலகலவென பேச கட்டாயப்படுத்தினால் அது அவர்களால் முடியாது. இதைப் போன்றதே பொறியியல் துறைகளில் ஆர்வமில்லா ஒருவரை அத்துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதும். தற்போது பெற்றோர்கள் நாட்டில் என்ன துறையை எல்லோரும் தேர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையை தம் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். அவ்வாறு கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம். எந்த துறையை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தாலும் அதில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அதை புரிந்து கொள்ளாமல் ஆர்வமில்லா குழந்தையை இலட்சகணக்கில் பணத்தை நன்கொடையாக கொடுத்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்த்து விட்டாலும் அவர்களால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி  பெற முடியாது. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்!.

Pin It