ஆளுக்கொரு இயக்கமாகச் சிதறிக் கிடக்கிறோம். சமூகப் பிரச்சனைகள் வரும்போது என்ன செய்கிறோம்?தனித்தனியா உட்கார்ந்து சுவரொட்டி முழக்கத்துக்காகத் தீவிரமாகச் சிந்திக்கிறோம். இதக் கூட செய்யலேன்னா இயக்க அடையாளத்துக்கு எதுவும் இல்லையே? ஒரு முழக்கத்தை கண்டுபிடிக்கத் தனித்தனி இயக்கமா இருக்கணுமா? நாம ஓண்ணா சேர்ந்தா சுவரொட்டி தவிர கூடுதலா இன்னொரு வேலையை யோசிக்கலாமே!

தெரிந்த இயக்கத்தினர் அனைவரிடமும் இதைப் பேசியிருக்கிறேன். வெகு அக்கறையோடு கேட்டவர்களில் பெரும்-பாலோர் அதே வேகத்தில் இதனை மறந்திருக்கலாம். ஆனால் சரியானது எதையும் அலட்சியப்படுத்தாத தோழர் மோகன்ராசு இதனை மறக்கவில்லை என்பதை அவர் அலைபேசியில் உணர்த்தினார். “தோழர் ,நம்ம தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழக மக்கள் விடுதலை முன்னணியும் ஓரே அமைப்பாச் சேருவதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். நம்ம அடையாளத்துக்காகத் தனித்தனி அமைப்பா இருக்க கூடாது தோழர், நீங்க அன்னைக்குச் சரியாச் சொன்னீங்க. மாத்துவோம் தோழர், சுவரொட்டி மட்டுமா வேலை? நிறைய இருக்கு. நிறையச் செய்யணும்.”

இயக்க ஒற்றுமைக்கும், இணைந்த பின்னால் இயக்கம் எதிர்கொள்ள வேண்டிய கடமைகளுக்குமாகத் திட்டமிட்டுக் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இதயம் நிறைந்த நமது தோழர் மோகன்ராசு படுகொலை செய்யப்பட்டார்.

தோழரின் இழப்பு நம் எல்லோரையும் நிலைகுலைய வைத்துவிட்டது. இப்படியான இழப்புகளை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டுமா? இந்தக் கேள்வி நம்மைத் திக்குமுக்காட வைக்கிறது.

தோழர் மோகன்ராசு உட்பட முன்னணித் தலைவர்கள் மற்றும் தோழர்களின் இழப்பு என்பது தனிநபர் கவனக்குறைவால் ஏற்படுவதல்ல. இது தனிநபர் சார்ந்த சிக்கல் அல்ல. இயக்கங்களின் நிலைப்பாடுகளால் ஏற்படும் சிக்கல் இது. நிலைப்பாட்டுச் சிக்கலைப் பொறுத்தவரை பல இயக்கங்கள் பேராபத்தில் இருக்கின்றன. இயக்கங்களுக்கும், முன்னணித் தோழர்களுக்கும் ஏற்படும் ஆபத்து என்பது ஒன்று தவறான நிலைப்பாடுகளால் ஏற்படுகிறது அல்லது நிலைப்பாடுகளே இல்லாததாலும் ஏற்படுகிறது.

தோழர் மோகன்ராசுவின் அமைப்புச் செயல் பாடு என்பது தொழிற்சங்கப் பணிகளில் இருந்து தொடங்குகிறது. தொழிற்சங்கப் பணியென்பது எவ்வளவு ஆபத்து என்பதை உணராதவர்கள் இயக்கத்தவர்களாக இருக்கமுடியாது. முதலாளிகளின் இலாபத்துக்கு மிக அடிப்படையானது தொழிலாளர்களை ஒட்ட உறிஞ்சுவதில் மட்டுமே இருக்கிறது. ஆகவே எந்த ஒரு முதலாளியும் மிக இயல்பாகத் தொழிலாளியைக் கசக்கிப் பிழியவே செய்வான். வேலை நேரத்தை அதிகரிப்பது, உணவு, தேநீர், சிறுநீர் கழிக்க என எந்த இடைவேளை நேரத்தையும் இல்லாமல் செய்வது, மிகக் குறைந்த கூலியை வழங்குவது, குறைந்த கூலிக்காகப் பெண்கள் மற்றும் பிழைப்புத் தேடி வரும் வெளிச் சமூக மக்களைப் பணியில் அமர்த்துவது, தொழிலாளர்களுக்கு மருத்துவ ஊக்கத்தொகை, வைப்புநிதி என எந்தப் பாதுகாப்பும் வழங்காமல் தினக்கூலிகளாக வைத்திருப்பது, நவீன இயந்திரத்தின் மூலம் தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்வது என அனைத்து ஏமாற்று வேலைகளையும் முதலாளி செய்வான். தனது அயோக்கியத்தனத்திற்கு துணை செய்கின்றவர்களின் சங்கங்களையே முதலாளி தன்னுடைய ஆலையில் செயல்பட அனுமதிப்பான். மீறுகிறவர்களைக் காவல்துறை, ரவுடிகள், அரசியல் அடியாட்கள் மூலம் நசுக்குவான்.

ஆக இத்தகைய கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதில்தான் தொழிற்சங்கத்தின் வெற்றி அடங்கியுள்ளது. முதலாளிகளின் கொடுமைகளையும், அவனது கொலைகாரக் கூட்டணியின் தடைகளையும் தகர்த்து சங்கம் அமைப்பதில் எண்ணற்ற உயிர்கள் பலியாகி இருப்பது உலக வரலாறு. தோழர் மோகன்ராசுவின் ஆரம்பச் செயற்களமான ஈரோட்டுக்கு அருகில் உள்ள கோவையிலும், திருப்பூரிலும் இதற்கான ஆதாரங்கள் ஏராளமுள்ளன. சின்னியம்பாளையம் தியாகிகள் முதல் ஆசர் மில் தியாகிகள் வரை தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களின் இரத்தம் வழியெங்கும் பெருகிக் கிடக்கிறது.

ஆயிரம் தொழிற்சங்கம் இருந்தாலும் நேர்மையான தொழிற்சங்கத்தின் கீழ்தான் தொழிலாளர்கள் அமைப்பாவர். அவ்வகையில்தான் தோழர் மோகன்ராசு செயல்பட்ட தமிழகத் தொழிலாளர் முன்னணியின் கீழ் பல துணி உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும், ஆட்டோ ஒட்டுநர்களும், பெட்ரோல் நிலையத் தொழிலாளர்களும் பெண்களும், ஆண்களுமாக அணி திரண்டனர். பெரும்பாலும் அமைப்புச் சாராத தொழிலாளர்களான இவர்கள் தமிழகத் தொழிலாளர் முன்னணியின் கீழ் திரண்ட பிறகு தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளையும் மிக விரைவாகப் பெற்றனர்.

இதனால் முதலாளிகள் இழப்பைச் சந்திக்கின்றனர். இம்முதலாளிகளின் அடிவருடி தொழிற்சங்கத்தினர் பிழைப்பு கேள்விக்குள்ளாகிறது. இவர்கள் சார்ந்த அரசியல் அடியாட்களுக்கு வாழ்க்கை சிக்கலாகிறது. இவர்கள் அனைவரின் பாதுகாப்பு மூலம் பலனடையும் காவல், நிர்வாகத் துறையினர் பரிதவித்துப் போகின்றனர்

தோழர் மோகன்ராசுவின் செயல்பாட்டால் இவ்வர்க்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிரிகளாவது தவிர்க்க இயலாதது. கூடவே மருத்துவக் கழிவு முதலான சமூகவிரோதத் தொழில்களையும், அது சார்ந்த சமூக விரோதிகளையும் தடுத்து நிறுத்தியதால் எதிரிகள் பெருகுவதும் இயல்பானது. இவற்றோடு ஈழச் சிக்கல், நதிநீர்ச் சிக்கல், சாதி ஆதிக்க எதிர்ப்பு, மது ஒழிப்பு, அணு உலை எதிர்ப்பு எனத் தமிழகம் தழுவிய அரசியல் செயல்பாடுகள் மூலம் ஆளும் வர்க்க எதிர்ப்பை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

இதுதான் பிரச்சினை. மக்களின் நடுவே நாம் அரசியல் போராட்டம் நடத்தும் போது எதிரிகள் நம்மை எப்படி அணுகுவார்கள்? அவர்கள் நமக்கு அரங்கம் அமைத்துத் தந்து அரசியல் விவாதத்துக்கு அழைப்பார்களா?

கனவில் கூட இது நடக்காது. எதிரிகள் இயல்பாக நம்மை அடக்கவோ அல்லது ஒழிக்கவோ முயற்சிப்பார்கள். எதிரிகளின் இந்நடவடடிக்கைகள் பல கொடூரவகைகளைக் கொண்டிருக்கும். நேரடியாக நம்மைத் தாக்குவார்கள். அல்லது நமக்கு நெருக்கமானவர்களைத் தாக்கி நம்மை நிலைகுலைய வைப்பார்கள். என்னவாக இருந்தாலும் எதிரியின் செயல்பாடு தாக்குதல் தன்மையிலேயே இருக்கும்.

 இந்தச் சிக்கல்தான் நம்மை அரசியல், ஆயுதப் போரட்டங்களுக்கு இடையில் உள்ள உறவை தெளிவுப்படுத்திக் கொள்ளத் தூண்டுகிறது;

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மக்கள் எதோ ஒருவகையில் வாழ்க்கையைத் தகவமைத்துக் கொள்ளும் நிலையில்தான் உள்ளனர். அவர்களின் உயிர்வாழும் உரிமை உடனடிச் சிக்கலாக இல்லாததால் மக்களின் போராட்டங்கள் தீவிரமானதாக இல்லை. அரசுக்கு எதிராக கலகமோ சதியோ வன்முறையோ நிகழ்த்த வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. ஆகவே இங்கு ஆயுதப் போராட்டம் உடனடியாக இல்லை.

 அதே நேரத்தில் மக்களைச் சமூக மாற்றத்திற்காக அமைப்பாக்கப் போராடுகிறவர்களுக்கு எதிரிகளால் ஆபத்தும் இருக்கிறது. போராளிகள் உயிருக்கு உத்தரவாதமில்லை.

 இதை எப்படி எதிர்கொள்வது? அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் இல்லை என்பதாலேயே நாம் நமது உயிரைப் பாதுகாக்க வேண்டியதில்லை என்றாகுமா? இல்லவே இல்லை. நாம் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட நாம் எவ்விதத் தற்காப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் இருப்பது முட்டாள்தனமேயாகும். இவ்வகையில் அரசியல் போராட்டமும் அதனோடு இணைந்த தற்காப்பு நடவடிக்கையும் மேற்கொள்வதென்பது மேலோட்டமானதல்ல. அது இயக்கங்களின் அடிப்படை நிலைப்பாடு சம்மந்தப்பட்ட கொள்கை முடிவாகும்.

இன்றைய சூழலில் தமிழ்நாட்டுப் புரட்சிகர இயக்கங்கள் பெரும்பாலானவற்றில் ஆயுதப் போராட்டம் நிகழ்ச்சி நிரலாக இல்லை. இயக்கங்கள் அரசியல் போராட்டத்தையே முதன்மையாக்கியுள்ளன. இது சரியே. ஆனால் அரசியல் போராட்டம் என்பது தற்காப்பு நடவடிக்கையைக் கொண்டது என்ற கொள்கை முடிவு எந்த இயக்கத்திடமும் இல்லை. இவ்வாறு தற்காப்பு நடவடிக்கை இல்லாத அரசியல் போராட்டம் என்பது ஒரு வகைத் தற்கொலை வழிமுறையே என்பதை நமக்கு இதற்கு முன்பும் பல தோழர்களின் உயிரிழப்புகள் உணர்த்தியுள்ளன. தோழர் மோகன்ராசுவின் உயிரிழப்பும் இதையே உணர்த்துகிறது.

 செயல்முடக்கமாகி விட்ட அடையாள இயக்கங்கள் வேண்டுமானால் அரசியல் போராட்டத்தை வெற்றுப் பிரசங்கமாகக் கொச்சைப்படுத்தட்டும். மக்களுக்காக மக்களோடு செயல்படுகிறவர்களும் அவர்களது இயக்கங்களும் அப்படி இருக்க முடியாது. நமது கொள்கை முடிவென்பது தற்காப்பு நடவடிக்கைகளோடு இனணந்த அரசியல் போராட்டம் என்பதாக இருக்கட்டும். இனியேனும் அவசியமில்லாத உயிரிழப்புகளை இயக்கங்கள் தவிர்க்கட்டும்.

- குணா (தேசிய முன்னணி இதழ்க் குழு)

Pin It