மனிதன் சிந்திக்கவும், சிந்தித்ததை வெளிப் படுத்தவும், பிறர் வெளிப்படுத்துவதைப் புரிந்து கொள்ளவும் உதவுவது மொழி - சுருங்கக் கூறின் இது கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவுவது.

மனித சமூகம் தனக்குரிய மொழியை இலக்கியம், இலக்கணம், தத்துவம், அறிவியல், அரசியல், வரலாறு எனப் பல துறைகளில் பயன்படுத்தும் போது அது நன்கு வளரும். அந்த வளர்ச்சியில் சில மாற்றங்கள், அரசியல் சமூக மாற்றத்திற்கு ஏற்ப ஏற்படுவதுண்டு.

ஒரு பகுதியில் அல்லது ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கிலிருக்கும் போது அவற்றிற்கு இடையே கொள்வினை, கொடுப்பினை, கொடுக்கல், வாங்கல் நிகழும். இது பெரும்பாலும் சொற்களைப் பொருத்தே அமைந்து, இலக்கண மாற்றங்கள் குறைவான அளவில் நடை பெறும். இம்மாற்றங்கள் அறிவியல் தமிழ் உட்பட எல்லாத் துறைகளிலும் நிகழும்.

இதனை மனத்திற் கொண்டு மாற்றங்களை ஆராய்வோம். தமிழில் முதல் மாற்றத்தை, சொல் கலப்பை கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியர் மூலம் வட சொல்லைத் தமிழில் பயன்படுத்தும் முறையை அறிகிறோம். பின்னர் நன்னூலார் இதைத் தற்சமம், தற்பவம் மூலம் விரிவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து பிற மொழிச் சொற்கள் புகுந்ததற்குத் தமிழ்நாட்டில் வேற்றுமொழிகள் ஆட்சி அடிக்கடி மாறியதே காரணமாகும். கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர்கள் பிராகிருத மொழியையும் வடமொழியையும் ஆதரித்தனர். களப்பிரர் காலம் ஒரு இருண்ட காலம். பிற்காலச் சோழர்கள் பல்லவர் களை வென்று தமிழ்நாட்டை கி.பி.12 முடிய ஆட்சி புரிந்தார்கள். இக்காலத்தில் தமிழ் மொழியில் சமயத் தொடர்பினாலும் பல நாடுகளிலும் கண்ட வெற்றியாலும் மொழிக் கலப்பு ஏற்பட்டது. சைனர்களும் வைணவ உரையாசிரியர்களும் வட சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் கலந்து நூல்களை மணிப்பிரவாள நடையில் இயற்றினர். அதன் பின்னர் முஸ்லீம் ஆட்சி 45 ஆண்டுகளும்; பின்னர் தமிழ்நாடு முழுவதும் 366 ஆண்டுகள் தெலுங்கு ஆட்சியும் இருந்து வந்தது. இக்காலத்தில் தெலுங்கர்களும் கன்னடர்களும் இங்குக் குடியேறி னார்கள். தெலுங்குச் சொற்களும் கன்னடச் சொற் களும் தமிழில் நுழைந்தன. மராட்டியர் ஆட்சி 179 ஆண்டுகள் 1855 வரை நடைபெற்றது. ஐரோப்பி யர்கள் ஆட்சியில் போர்ச்சுக்கீசியச் சொற்களும் பிரெஞ்சுச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் தமிழில் கலந்தன.

புதிய நாகரிகத்தாலும் புதிய வாழ்க்கையாலும் புதிய ஆட்சி முறையாலும் புதுக் கல்விமுறையாலும் புதுப்பொருள் புகுந்தமையாலும் அயல்நாட்டினர் கூட்டுறவாலும் தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் அறிவியல் சார்ந்தவை கூட நாம் விரும்பாமலே வந்தேறின.

போர்த்துக்கீசிய சொற்கள் - கிராம்பு

தெலுங்கு - சரக்கு, சாகுபடி

கன்னடம் - அக்கறை

அராபிய, பாரசீக, இந்துஸ்தானி - காகிதம், ஜோடி, பாத் போன்றவை ஆகும்.

இன்று நாம் படித்துக் கொண்டிருக்கின்ற அறிவியல் வாழ்வியல் படிப்பு பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். 1830களில் இதற்கான தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் ஏற்பட்டது. அப்போது வெளிவந்த இதழ்களிலும் அறிவியல் செய்திகள் இடம்பெறலாயின. இரேனியுசு பாதிரியார் “பூமி சாஸ்திரம்” என்கிற நூலை தமிழர்கள் அறிவு பெறுவதற்காக எழுதி 1832இல் வெளியிட்டார். இப்பாதிரியாரே பூமி சாஸ் திரத்திலே குறிக்கப்பட்டிருக்கிற நாமங்களின் அட்டவணை சொற்பெயரில் 51 கலைச் சொற்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். இதில் எளிமை காணப்படுகிறது. 1849இல் இலங்கையில் ‘பாலகணிதம்’ என்ற நூல் வெளியாயிற்று. 1885இல் “Algebra” பற்றிய நூல் இயற்கணிதம் எனத் தமிழாக்கப்பட்டு வெளிவந்தது. “வீச கணிதம்” என்ற இன்னொரு நூல் இதே ஆண்டில் வெளி வந்தது. இதுவும் Algebraவைப் பற்றியது தான். இயற்கணிதம், வீச கணிதம் என்பதன் பின் புலத்தில் தமிழ், வடமொழிப் பார்வை இருப்பதை அறியலாம். இதன் பின்னர் 1850இல் மிகப் பெருஞ் சாதனை இலங்கையில் நிகழ்ந்தது. டாக்டர் ஃபிஷ்கிறீன் (1882-1884) என்ற மருத்துவர் 11 நூல் களையும் இரண்டு கலைச்சொல் தொகுதியையும் வெளியிட்டார்.

இவர் முயற்சியில் வெளிவந்த நூல்கள்

1. மனுஷ அங்காதிபாதம் 2. இரண வைத்தியம்

3. மனுஷசுகரணம் 4. கெமிஸ்தம் என்பன. இந்த நூல்களின் பெயர்களே வடமொழிச் செல்வாக்கு மிகுதியைப் பறைசாற்றுகிறது. கிறீனின் கலைச் சொற்களை எண்ணிக்கை அடிப்படையில் தொகுத்துப் பார்க்கும்போது வடசொற்கள் முதல் நிலையிலும் ஆங்கிலக் கலைச் சொற்கள் மூன்றாம் நிலையிலும் காணப்படுகின்றன.

கிறீனின் வார்த்தையிலேயே இக்கருத்தைக் கூறவேண்டுமெனில் “அரும்பதங்களுள், சில செந்தமிழ்ச் சொற்கள், சில சமஸ்கிருதச் சொற்கள். அநேகம் தமிழ் எழுத்தில் அமைந்த இங்கிலீஷ் சொற்களாயிருக்கும். பதம் ஒவ்வொன்றும் தனித் தனியாக ஆராய்ந்து சேர்க்கப்பட்டது. ஆயினும் தாய் நூலில் உள்ள இங்கிலீஷ் சொல்லைத் தமிழில் எழுதும் போதெல்லாம் அது குறையவும் அதற்குரிய ஓசை கெடாமல் ஏற்ற கோலங் கொள்ளவும் தக்கதாய் இயற்றி இருக்கும்” என்று கூறுகிறார். ஆனால் 1872இல் அவர் வெளியிட்ட கலைச்சொல் பட்டியல் Belly- வயிறு போன்ற புதிய தமிழ்ச் சொற்கள் காணக்கிடைக்கின்றன. வடமொழியும் ஆங்கிலமும் சொற்களில் விஞ்சி இருக்கக் காரணம் ஃபெப்ரீஷியஸ் (1778) இராட்லர் (1830) வின்சுலோ (1845) ஆகியோரின் அகராதிகள் இவர் காலத்திலேயே வெளிவந்துவிட்டன. இக்காலகட்டத்தில் வடமொழியே உயர்ந்த மொழி என்ற கருத்தும் நிலவி வந்ததால் கிறீன் வடமொழியையும் ஆங்கிலத்தையுமே கலைச் சொல்லுக்கு மிகுதியாகப் பயன்படுத்தினார்.

இதே போல் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக சுகாதார வாழ்விற்குப் பலவித இடை யூறுகள் ஏற்பட்டுப் பல நோய்களும், சமூகப் பிரச்சினைகளும் பெருவாரியாகப் பரவின. இங்குத் தோன்றிய நூல்கள் தூய்மை இன்மையைக் கருத்திற் கொண்டு வெளிவந்தன. அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. (எ.கா 1869இல் சுகாதார விளக்கம்) இதன் பொருள் அட்டவணையில் ஆகாயம், போஜனம், தேகசுத்தம், வஸ்திரம், வாசஸ்தலங்கள் என்ற வடசொற்களே மிகுந்து காணப்படுகின்றன. இதுபோலவே புதிய கண்டு பிடிப்புகளான எந்திரங்களைப் பற்றிய “ஆயில் என்ஜின்” “மோட்டார் ரிப்பேர் இரகசியம்” போன்ற நூற்களும் வடசொற்களும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதப்பட்டது. டாக்டர் கிறீனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ம.ஜகந்நாத நாயுடுவினால் நூல்கள் எழுதப்பட்டன. இதன் தலைப்புகள் “சாரீர வினாவிடை”, “பைஷ ஐகல்பம்”, “பிரசவ வைத்தியம்” போன்றவை. கிறீனைப் போலவே இந்நூல் தலைப்புகளும் வடமொழியே. வடசொற்களே கலைச் சொற்களாக நூலில் மிகுதியாகப் பயன்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் நூலில் கலைச்சொல் பட்டியலில் நல்ல தமிழ்ச்சொல் இருந்தாலும் வடசொல்லே உரை நடையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது அக்காலத்திய சொல்லாட்சியை அறிவுறுத்துகிறது.

சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு 1900இல் விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சாரசங்கிரகம் என்ற நூலை வெளியிட்டார். இதில் வடமொழியும் தமிழும் இடையிடையே ஆங்கிலமும் கலந்த பல கலைச் சொற்கள் உள்ளன. எ.கா. Geologist- தத்துவ சாஸ்திரிகள்.

இதனைத் தொடர்ந்து 1916இல் வெளிவந்த தமிழ் சாஸ்திர பரிபாஷை சங்கத்தாரின் இதழ் ராஜாஜி மற்றும் வெங்கட சுப்பையரும் சேர்ந்து அதனை ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இதில் வெளிவந்த கலைச்சொற்கள் வடமொழிச் சொற் களேயாகும். (எ.கா.) chemistry- இரசாயன சாஸ்திரம்

1921இல் ஆயுள்வேத, அலோபதி மருத்துவ இதழ்களில் இம்மருத்துவங்கள் எம்மொழியி லிருந்து வந்தனவோ அம்மொழியின் தாக்கத்திற்கு உட்பட்டு, தமிழிலும் அம்மொழியின் கலைச் சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயுள் வேதக் கட்டுரைகளில் 40 விழுக்காடு வடசொற் களும், கிரந்த எழுத்துக்களும் கலந்துள்ளன. ஆனால் அலோபதி மருத்துவக் கட்டுரைகளில் வடசொற்கள் சற்றுக் குறைவு; கிரந்த எழுத்துக்களும் குறைவு. (எ.கா.) ஆயுள்வேத இதழ் வைத்திய கலாநிதி (1921) “ஆயுஷ்ய ரஸாயநம்” - இது வெகு சிலாக்யமான விருத்தி மருந்து ப்ருங்காமல தைலம் முதல் தரமான ஸ்நான தைலம் சிரஸ்களையும் கண்களையும் பொதுவாக தேஹத்தையும் குளிரச் செய்வது.

1926இல் சிதம்பரநாத முதலியார் மொழி பெயர்த்து வெளியிட்ட இந்திய நர்சுகளுக்கான பாட நூலில் தமிழ்க் கலைச்சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லும் தரப் பட்டுள்ளது. (எ.கா.) சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்Chicken Pox)

1932இல் தமிழைப் பயிற்றுமொழியாக அறிவித்த பின் அரசால் வெளியிடப்பட்ட கலைச் சொற்கள் பெரும்பாலும் வடசொல்லாகவும் ஆங்கிலமாகவும் இருந்தன. Analytical Chemistry - விபேதன ரஸாயன நூல்.

1940இல் இந்தியாவிற்கு ஒரு கலைச் சொல் என்பதற்காக தமிழறிஞர்கள் இல்லாது கலைச் சொல்லாக்கக்குழு உண்டாக்கப்பட்டது. இப்படி யாகத் தமிழ் நூல்களில் சமஸ்கிருதமும், ஆங்கிலமும் எழுத அரசே வாய்ப்பளிப்பதை உணர்ந்த தனித் தமிழ் இயக்கம் தமிழில் தூய்மையைக் காக்க முற்பட்டது. பல நல்ல தமிழ்ச் சொற்கள் உருவாகின.

ஆனாலும் 1940ல் மீண்டும் வடமொழிச் செல் வாக்கு மேலோங்கியது. அதற்குக் கண்டனம் எழவே கல்லூரித் தமிழ்க் கல்விக்குழு ஒன்று தோற்றுவிக்கப் பட்டது.

1960க்குப் பிறகு வடமொழி ஆங்கிலச் சொற் களை நீக்க முயற்சி தோன்றி கருத்துத் தெளிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1962இல் தமிழ்நாட்டுப் பாட நூல் நிலையம் 1975 வரை 663 அறிவியல் நூல்களை வெளியிட்டது.

1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் பொறியியல், மருத்துவம், தாவரம் முதலிய துறைகள் சிறந்த கலைச் சொற்களைத் தொகுத்தது. 1990இல் அவை வெளிவந்தன.

மொழித்தூய்மையும் சமூகமும்:

ஆரம்பத்தில் குருகுலக் கல்வி தமிழகத்தில் உயர்குல மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பிரபுத்துவ சமூகத்தைப் பாதுகாப்பதற்குப் பயன்பட்டது. இக்காலகட்டத்தில் கல்வியறிவு பெற்றவர் 15 விழுக்காட்டினரே. அவர்களில் பெரும்பாலோர் நகரங்களிலும் பேரூர்களிலும் வசித்தவர்களே. இந்நாட்டில் தனிப்பெரும் தொழிலாக இருந்த வேளாண் தொழில் செய்தோர் உழுதுண்போர் உழுவித்துண்போர் என்று பாகுபடுத்தப்பட்டு எழுத்தறிவு பெறத்தகாதவர்கள் என்ற எண்ணத்தைப் பரப்பி அவர்களை அறிவு ஒளி அண்டாமல் பார்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. மேலும் குருகுலக் கல்வியும், மதக் கல்வியும், கல்வி முறையில் அறிவியல் தத்துவக் கருத்துக்களை வளர விடாமல் தடை செய்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக 1706-1868ஆம் ஆண்டு வரை 4200 வெளியீடுகளைக் கொண்ட நூலடைவு ஒன்றை ஜான் முர்டாக் என்பார் தொகுத்தளித்தார். இந்நூலடைவில் வகுப்பு ‘டி’ எனும் பிரிவில் இயற்கை அறிவியல் என்னும் தலைப்பில் அறிவியல் நூல்கள் வெளியீடு பற்றி மதிக்கப்படும் போது “தமிழர்களை மட்டும் நோக்கினால் அறிவியல் செய்திகளைத் தாங்கியுள்ள நூல்கள் ஏதுமில்லை” என்று குறிப்பிடுகிறார்.

இக்காலகட்டத்தில் 1832இல் வெளியான பூமி சாஸ்திரத்திலிருந்து 1860 வரை தமிழ் அறிவியல் நூல்களைப் படைத்தவர்கள் பெரும்பாலும் புராட்டஸ்டண்ட் பாதிரியார்களே. இதைத் தொடர்ந்து 1858இல் இருந்து கிறிஸ்துவ பள்ளிப் பாடநூல் சங்கம் பிறகு கிறிஸ்துவர் லிட்ரேச்சர் சொசைட்டி மூலமும் பல அறிவியல் நூல்கள் எழுதப்பட்டன. இவர்கள் நூலிலும் மிக அதிகமாக வடமொழியும் ஆங்கிலமுமே கலைச் சொல்லாகப் பயன்படுத்தப் பட்டன.

இதன் பிறகு மதராஸ் ஸ்டேட் புக் அன்ட் வெர்னாகுலர் லிட்ரேச்சர் சொசைட்டி மூலம் தமிழர்கள் எழுதிய நூல்கள், பாதிரியார்கள் எழுதிய நூல்களை விமர்சித்துப் பதில் கொடுக்கவே எழுதப் பட்டன. (எ.கா.) பூகம்பம் எரிமலை இவைகளின் வரலாறு, பூகோள பகோள சாஸ்திரம். இந்நூல் களிலும் வடமொழியே மிகுதி.

1900-1920 வரை கல்விக் கொள்கையின்படி 64 அறிவியல் நூல்களும் பாட நூல்களும் வெளியிடப் பட்டன. தமிழ் மக்களே அறிவியல் நூல்களை எழுதினார்கள். ஆனால் இக்காலகட்டம் அனைத்துக் கல்விக்கும் வடமொழியே தகுதி யானது என எண்ணப்பட்ட காலம்.

இதே காலத்தில் தொழிற் புரட்சி காரணமாக எழுதப்பட்ட நூல்களின் பெயர்களிலும் மொழி பெயர்ப்புகளிலும் ஆங்கிலம் ஒலிபெயர்ப்பு மிகுதியாகக் கலந்தது. (எ.கா.) 1896 ஆயில் என்ஜின், 1916 மோட்டார் ரிப்பேர் இரகசியம்.

தனித்தமிழ் இயக்கம்:

இதனைத் தொடர்ந்தே மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், பாவாணர் போன்றோர் தனித்தமிழ் இயக்கத்தை வேரூன்றச் செய்து தமிழின் தூய்மைக்காக முற்பட்டதால் நல்ல கலைச்சொற்கள் உருவாகின. (எ.கா.) Heart என்பதற்கு ஹிர்தயம் என எழுதப்பட்டது. பின்னர் இதயம் ஆகியது.

இலங்கையில் மொழித் தூய்மை:

இதே காலகட்டத்தில் அறிவியலில் வட சொற்கள் இடம் பெற்றதற்கு மாறாக, இலங் கையில் நல்ல தமிழில் மொழித் தூய்மைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. எ.கா. மருத்துவர் சின்னதம்பியின் நூல்கள் (1932-1972)

Kidney Tray        -           குண்டிக்காய் தட்டம்

Anti Pyretics       -           காய் வெதிரிகள்

கிரந்த எழுத்துக்கள் முழுவதும் தவிர்க்கப் பட்டுள்ளது.

எ.கா. Zam - யாம், Gelly - யெல்லி, Syringe - சிறுங்கி.

இதன் காரணமாக இந்நூலில் உள்ள ஓர் அறிவியல் சொல்லில் பொருள் மாறுபட்டு, எளிமை மற்றும் இனிமையற்றுக் காணப்பட்டது. ஆரம்பத்தில் அறிவுப் பரப்பல் முதல் நிலையிலும் மொழி உணர்வு இரண்டாம் நிலையிலும் இருந்தன.

இதே போல் தமிழகத்திலும் ஆங்கிலமற்ற சொற்கள், பெயர்ச் சொற்கள் வழக்கத்திற்கு மாறாக மாற்றி எழுதிக் கலைச் சொற்களை உருவாக்கினார்கள்.

(எ.கா.) Bock Cock -பாப் காக்கு, ஸ்டாலின் - இசுடாலின் இவைகளும் நாளடைவில் எழுது வாரற்றுப் போயிற்று.

இன்றைய நிலையில் இலக்கண நெகிழ்வுகள்:

உரைநடையில், கலைச் சொல்லாக்கத்தில் இலக்கண நெகிழ்வுகள் காணப்படுகின்றன.

1.            க் ச் ட் த் ப் ற் கடைசியில் வருகிறது   (எ.கா.)-டாக்டர், டானிக்

2.            மொழி முதலில் ப் வருகிறது

                (எ.கா.)-ப்ரோம்

3.            Laser என்பது இலேசர் ஆகாது லேசர் ஆனது

4.            Chloroform க்ளோரோபோம் என்று எழுத வேண்டியது குளோரோபார்ம் என்றாகியது.

5.            குருதி என்ற நல்ல தமிழ்ச் சொல் இருப் பினும் இரத்தம் எனும் சொல் எல்லோ ராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

6.            கூச்சச் சொற்கள் களையப்பட்டுள்ளது.          (எ.கா) முலை - மார்பகம்

7.            இதனைத் தாண்டி கருவியின் பெயர், வாய்ப் பாடுகள், குறியீடுகள், சமன்பாடுகள், ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமெனில் சர்வதேசச் சொற்கள் அப்படியே எடுத் தாளப்படுகின்றன. (எ.கா) பாரன்ஹீட், செல்சியஸ்.

8.            மருந்து, கருவிகளின் பெயர்களைக் குறிப் பிடும் பொழுது சாதாரணமாக கிரந்த எழுத்துக்கள் உபயோகப்படுகிறது. (எ.கா) Anti Histamine - ஆண்டிஹிஸ்டமின்; Jenner- ஜென்னர்.

இவ்வகை இலக்கண மாற்றங்கள் தானாகவே நடைபெறுவதைப் பேரா.அ.கி.பரந்தாமனார் “இலக்கணமும் காலத்துக்குக் காலம் மாறி வருவது கண்கூடு. மாறி வருவதுதான் வளரும் இலக்கணத் திற்கு அறிகுறி, வாழும் இலக்கணத்திற்கு அடை யாளம்” என்று கூறுவது ஏற்புடையதாகவே உள்ளது.

இன்றைய நிலையில் மொழி வளர்ச்சியா? தேய்வா?

இம்மாதிரியான மாற்றங்கள் தேவைதான். ஏனெனில் “மனித சமுதாயம் வெகுதூரம் முன்னேறி விட்டது. இன்றைய சமுதாயத் தேவையும் மாறி விட்டது. தமிழ் மொழி அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சங்கத் தமிழ்க் கூறுகள் இன்று மொழியில் மாறிவிட்டன. எழுத்தில், சொல்லில், பொருளில் இன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றை நோக்கும்பொழுது தமிழில் இன்றைய நிலையைக் காணும் பொழுது அதன் வளர்ச்சி நிலை நமக்குப் புலப்படும்” - ஓ. பாலகிருஷ்ணன்.

ஆனால் இன்றைய நிலையில் அறிவியல் உரையாடலில் அல்லது எழுத்தில் தமிழ்க் கலைச் சொற்களின் பயன்பாடு குறைந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது மிகுதியாக உள்ளது. சில சமயங் களில் சில ஆங்கிலச் சொற்களை மட்டும் பேசு வதும் மற்றும் சில சமயங்களில் வாக்கியங்களை அப்படியே ஆங்கிலத்தில் பேசுவதும் நடைமுறையில் உள்ளன.

இதுபோலவே பல லட்சம் மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியிலும் “வீவோர்ஸ் இன்னைக்கி சந்திரனைப் பற்றி கொஷ்சின் கேட்ட பின் ரைட்டா அல்லது ராங்கான்னு சொன்ன பின் ஒரு சூப்பரான சாங் உங்களுக்குப் போடுவேன்” என்பதும், பல்லாயிரம் பேர் பார்க்கும் விளம்பரப் பலகையில் கடையின் பெயர் “இங்கிலீஷ் பார்மஸி” என்பதும் எழுதப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய தமிழகத்தின் தமிழ்.

கலைச் சொல் அகராதி:

இத்தனை நடந்துகொண்டிருக்கும் தமிழ் நாட்டில் மணவை முஸ்தபா (1991, 94) அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் எனச் சில கலைச் சொல்லகராதிகளை வெளியிட்டுள்ளார். அ. கிருஷ்ண மூர்த்தி மற்றும் டாக்டர் சம்பத் குமாரால் அறிவியல் அகராதி வெளிவந்துள்ளது. இதே போல் முனைவர் மணவை முஸ்தபா, டாக்டர் சாமி சண்முகம் மற்றும் முனைவர் ஜோசப்பினாலும் மருத்துவ அகராதிகள் சிறப்பான முறையில் வெளி வந்துள்ளன. இவைகள் நல்ல தமிழை எழுத உதவுகிறது என்றால் மிகையில்லை.

பரிந்துரைகள்:

தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதுவது ஏன் என்ற வினாவிற்குக் கிடைக்கும் பதில் “சயின்ஸ் புரியும்படி எல்லாம் காஷ்வலாக இருக்கணும்” என்பதே.

சொல் கலப்பிற்குத் தேவைக்கு ஏற்படக் கடன் வாங்கலாம். ஆனால், எல்லாமே கடனாக இருந்தால் நாம் நாமாகவே இருக்க மாட்டோம். “தமிங்கிலம்” என்ற ஒரு புதுமொழி உருவாகிவிட்டது. இது போய் நாம் பயப்படும் அளவிற்கு எப்படி தீவுகளில் Pidgin மொழி பேசப்படுவது போல; பல மொழியினர் உள்ள தமிழர் குடியேறிய மொரீசியசில் பேசும் கிரியோல் மொழி போல இக்கணினி யுகத்தில் இப்படியே விட்டுவிட்டால் தமிழ்நாட்டிலும் கிரியோல் மொழி பேசப்படும், எழுதப்படும். ஆகவே, தேவைக்கேற்ப கிரந்த எழுத்துக்களையும், சர்வதேசச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும் எடுத்துக்கொண்டு தூசு படிந்த தமிழை மாசுபடியாது விளங்குமாறு செய்ய வேண்டும். இதற்கு இன்றைய நிலைக்குத் தேவைப் பாடுகள் சில உடனடி நடவடிக்கைகள். இதழ், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்ற வற்றில் நல்ல தமிழ்த் தெரிந்த எழுத்தாளர்கள் இருக்க வேண்டும். எல்லாத் தொலைத்தொடர்பு சாதனங்களிலும் தமிழைச் சரிவர எழுத கண் காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.

சிங்கப்பூர் வழிகாட்டுகிறது

சீனமொழியில் மாண்டரின் சைனீஸ் (Mandarin Chinese) என்றும் காண்டோனீஸ் (Cantonese) என்றும் இரண்டு வகையாகப் பேசப்படுகிறது. இதில் மாண்டரீன் சைனீஸ் மொழியே பேசப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டுள்ள சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் ஹாங்காங் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் காண் டோனீஸ் சின்னத் திரைப்படங்களை மாண்டரீன் மொழியில் மொழி மாற்றம் செய்தே (DUBED) ஒலி பரப்புகிறது. மேலும் அதன் அண்டை நாடான மலேசியா தொலைக்காட்சி - 3 என்ற தொலைக் காட்சியில் வரும் காண்டோனீஸ் - இல் வெளி வரும் செய்திகளை சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இதழ்களில் அம்மொழியிலேயே வரத் தடைசெய்து உள்ளது.

இதுபோலவே ஆங்கிலம் கலந்து கிரையோல் “சிங்கலீஸ்” சிங்கை தொலைக்காட்சியில் வெகு வாகப் பயன்பாட்டில் இருந்தது. இதன் காரண மாக இளைஞர்கள் இதுதான் ஆங்கிலம் என்று எண்ணக்கூடும் என்பதால், இக்கிரையோல் மொழி தவிர்க்கப் பட்டு மிகக் குறைந்த அளவிலேயே தொலைக் காட்சியில் வழக்கத்தில் உள்ளது.

பரிந்துரை

இந்தோனேஷியா, பிரான்ஸ், மலேசியாவைப் போல் பிற மொழிக் கலப்பை ஒரு குற்றமாகக் கருதி அதனை நீக்கச் சட்டம் இயற்ற வேண்டும்.

மற்ற மொழிச் சொற்களுக்கு நிகரான சொற்கள் எளிதில் கிடைக்க புதிய அகராதிகள் அவசியம். இது தவிர ஒரு மேற்கொள் அகராதியும், வட்டாரச் சொல் அகராதியும் இன்றியமையாதது.

புதிய கண்டுபிடிப்புகள், கருவிகள் பல நாடுகளில் உருவாக்கம் பெறும்பொழுது அப்போதே தமிழ்ச் சொல் இங்குப் புழக்கத்தில் வர வழிசெய்தல் வேண்டும்.

இளங்கலை, முதுகலை மற்றும் இதழியலிலும், இலக்கியம் சார்ந்த பாடங்களோடு இணைய பயன்பாட்டுத் தமிழ், கலைச்சொல் உருவாக்கத் தமிழ் மற்றும் மொழி சார்ந்த சிறப்புத் தமிழும் பாடமொழியாக இருக்க வேண்டும். அதாவது தமிழ் பயனாக்க மொழிப் படிப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

ஊடகங்கள் கையில் ஊடாடும் அறிவியல் தமிழும், அறிவியல் பாடத் தமிழும் ஒரே தமிழாக, துறைக்கேற்ற பயன்பாட்டுத் தமிழாக மாற்ற வழியமைக்க வேண்டும். இதிலே ஒன்று, அதிலே ஒன்று கூடாது.

கல்லூரிகளில் பகுதி - 1, என்று தமிழ் இருந் தாலும் அந்த மதிப்பெண்கள் பட்டம் வழங்கும் போது தர மதிப்பீடுகளுக்கு ஏற்கப்படுவதில்லை. எதிர்காலத்தில் இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு அந்த மதிப்பெண்களும் தர மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது இல்லாத நிலையிலேயே மாணவர்கள் தமிழை ஊன்றிப் படிப்பதில்லை. தமிழாசிரியர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள் கிடையாது.

தமிழைப் பொறுத்தவரை கலைச்சொற்கள் தூய தமிழில் இருத்தல் வேண்டும் என்ற எதிர் பார்ப்பு உண்டு. இவற்றை நடைமுறைப்படுத்த மருத்துவம், பொறியியல் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட சொற்களும் சமூக அறிவியல் ஏற்பாடுகளும் தொகுக்கப்பட்டுச் சிறுசிறு தொகுதி களாக இலங்கையிலும், தமிழகத்திலும் வெளி வந்துள்ளன. இவற்றையெல்லாம் தெரிந்து ஆவணப் படுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள மரபு வழித் தொழிலாளர்களிடமிருந்து கலைச் சொற்களைத் திரட்ட வேண்டும். புதுச்சொற்களை ஆக்க வேண்டும். தேவையான அகராதிகளை வெளியிட வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்க் கலைச்சொல் தரப்படுத்தக் குழு ஒன்று உடனே அமைக்க வேண்டும். இதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் சார்பாளர்களும் இடம் பெற வேண்டும். துறை அறிஞர்களோடு மொழியியல் அறிஞர்களும், தமிழ் அறிஞர்களும் இடம் பெறுதல் வரவேற்கத்தக்கது. இது ஒரு தீர்வகமாக (Clearing House) இருந்து செயல்பட வேண்டும். இக்குழு கலைச் சொல் பட்டியல்களை மட்டும் வெளியிடாது தரப்படுத்தப்பட்ட கலைச்சொல் அகராதிகளைத் துறை வாரியாகவும், பொதுவாகவும் வெளியிட வேண்டும். அவற்றைப் பயன்படுத்திப் பாட நூல்கள் எழுதப்பட வேண்டும்.

அறிவியல் மூல நூல்களை எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான அறிவியல் இலக்கிய மொழிபெயர்ப்பு மையம் (Centre of translating Science and Literature) ஒன்று நிறுவப்பட வேண்டும். இவற்றையெல்லாம் பயன்படுத்தத் தமிழே பயிற்று மொழியாக வேண்டும். மொழியை புதிய சூழலுக்குப் பயன்படுத்தும் பொழுது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு அவ்வப் பொழுது தீர்வுகள் ஏற்பட்டுக்கொண்டே வரும்.

மலேசியாவிலுள்ள தன் பாஷா புஸ்தக நிறுவனம் மலாய் மொழியில் கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பாடங்களை பல்கலைக்கழக நிலை வரை பாட நூல்களை எழுதி மௌனப் புரட்சி செய்துவருகிறது. இதே போல் இலங்கை அரசாங்க மொழித் திணைக்களம் பல்கலைக்கழக நிலை வரை ஏராளமான ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து வெற்றி பெற்று வருகிறது.

மொழித் தூய்மையைக் காத்தல்

உலகில் பல மொழிகள் இந்த மொழிக் கலப்பால் சிக்கல்களை எதிர்நோக்கின. சோமாலி, மாயன், போலிஷ், ஹங்கேரி முதலிய மொழிகள் தங்கள் இயல்பைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடின; ஓரளவு வெற்றியும் பெற்றன.

மொழித் தூய்மை நடைமுறைக்கு ஏற்றதா? சாத்தியமா? முடியுமா?

பிறமொழிச் சொற்களைக் கூடுமானவரை தவிர்ப்பதன் மூலம் மொழித் தூய்மையைக் காப் பாற்றலாம்; நடைமுறைப்படுத்தலாம். ஆனாலும், தவிர்க்க முடியாத சொற்களும் உள்ளன. குறிப்பாக பெயர்ச்சொற்கள். (எ.கா) பாரன்ஹீட், செல்சியஸ், நைட்ரஜன். இவ்வகைச் சொற்கள் பெரும்பாலும் வேதியியல், மருந்தியல் தொடர்பானவை. தூய் மையைக் காப்பதில் இடர்ப்பாடுகள் ஏற்படுவதும் உண்டு.

பேச்சு வழக்கு / எழுத்து வழக்கு

எழுத்து வழக்கில் தூய்மையைக் காப்பாற்று வதில் அதிகத் தொல்லை இல்லை. ஆனால், பேச்சு வழக்கில் இது சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியே. ஏனெனில், இருமொழிக் கலப்பு என்பது இயல்பாக இருக்கிறது. மேலும் இன்று தொலைக் காட்சி மற்றும் ஊடகங்கள் இந்த இரு மொழிக் கலப்பை ஊக்குவிப்பதால் மொழித் தூய்மை பாதிக்கப்படுகிறது. இதில் கவனம் செலுத்தினால் பேச்சு வழக்கிலும் கூடுமானவரை தூய்மையைக் காப்பாற்ற முடியும்.

மொழியைப் பயன்படுத்துபவர் தம் மொழியின் இயல்பை அறிந்து பல துறைகளிலும் கவனத் துடன் இயல்பு கெடாது பயன்படுத்தினால் ஓரளவு அதன் தூய்மையைக் காக்கலாம். அதற்கு ஓரளவு விதிவிலக்கும் உண்டு.

Pin It