சென்னையில் நடைபெற்ற பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் இசை விழாவில் தந்தை பெரியார் தமிழிசை மன்ற தலைவர் நா.அருணாசலம் அவர்களின் இசைப்பணியைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு.

Ramdossஇந்த விழாவில் மருத்துவர் ச.இராமதாசு தமது பேச்சின் இடையே தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சில கேள்விகளை எழுப்பினார்.

தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் குழுமியுள்ள இந்த விழாவில் சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன்.

1. தமிழ் நிலத்தில் சமூகநீதி இயக்கமும் அடுத்து தன்மான இயக்கமும் மகத்தான வெற்றியைப் பெற்று விட்டன. அதே அளவுக்குத் தமிழிசை இயக்கம் ஏன் சாதிக்க முடியவில்லை?

2. தமிழ் இசை இயக்கம் தோன்றி 60 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியிருந்தும், தமிழர் வாழ்வில் பல முனைகளிலும் தமிழிசை இன்னும் ஏன் முழங்கவில்லை?

3. தேவாரப் பண்களும், பிரபந்தப் பாசுரங்களும் பழம்பெரும் சைவ, வைணவ திருத்தலங்களில் பாடப் பெற்றவை. அப்படியிருந்தும் கோயில்களில் இந்தத் தமிழ் இசைக்கு ஏன் இன்னும் உரிமையான இடம் கிடைக்கவில்லை?

4. கோயில்களுக்குச் செல்லும் தமிழர்கள் கோயில் வழிபாட்டை இனிய தெய்வீக தமிழ் இசையில்தான் நடத்தவேண்டும் என்ற உரிமை முழக்கத்தை ஏன் எழுப்பவில்லை?

5. சென்னையில் மட்டும் வேற்றுமொழி இசைப் பாடல், சங்கீத கச்சேரிகளுக்கு முதன்மையான இடம் தரும் சங்கீத சபாக்கள் சுமார் 120 வரை இருந்து வருகின்றன. அதில் 10இல் ஒரு பகுதி அளவுக்குக் கூடத் தமிழசைக்கென இசையமைப்புகள் ஏன் இல்லை?

6. கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த இசை வாணர்களுக்கு ஓயாத விளம்பரங்கள் - பல்வேறு ஊடகங்களிலும் திட்டமிட்டு தரப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல - கர்நாடக இசையே இந்தியாவின் தொன்மையான இசை போன்ற ஒரு மாயை சித்திரத்தை தீட்டிக் காட்டுவதில் இந்த ஊடகங்கள் முழு மூச்சுடன் முனைந்திருக்கின்றன. ஆனால் தமிழிசையும், தமிழிசைவாணர்களும் இருட்டடிப்புக்கு உள்ளாகி வருவது ஏன்?

7. இசைக்கலையில் சாதனைகளுக்கான மத்திய அரசின் பல்வேறு வகையான விருதுகளும் வேற்றுமொழி சங்கீத வித்வான்களுக்கு அளிக்கப்பட்டு வருவது ஏன்? உதாரணமாக, சென்ற ஆண்டில் அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற விருதுகள் முழுக்க, முழுக்க கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு தாரை வார்க்கப் பட்டிருக்கின்றன. தமிழிசைவாணர் ஒருவருக்குக் கூட அத்தகைய விருது கிடைக்காததற்கு என்ன காரணம்?

8. வேற்றுமொழி சங்கீதக் கலை - பலமான அமைப்புகள் மூலமும், பாரம்பரியமான குரு - சிஷ்ய முறையிலும் கட்டுக்கோப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாணியில் தமிழிசையின் முறையான வளர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லாதது ஏன்?

9. தமிழர்களின் பலத்தையும், ஆதரவையும் கொண்டு வேற்றுமொழி சங்கீதம் புதர் போல மண்டிவரும்போது, தமிழிசை மட்டும் ஏன் அனாதையாக, சவலைப்பிள்ளையாக நிற்கிறது?

10. தமிழ்ச் சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் தமிழ் அதற்கு உரிமையான இடத்தைப் பெறுவது எப்போது? நிர்வாகத்தில், நீதி மன்றத்தில், உயர்கல்விக் கூடங்களில், கோயில்களில், தமிழ் தனக்குரிய இடத்தைப் பெறுவது எப்போது?

11. வீட்டிலும், வீதியிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலும், சமூக விழாக்களிலும், தமிழே கோலோச்சும் நிலை எப்பொழுது வரும்?

12. தமிழ் நிலம் இருக்கிறது, தமிழர்கள் இருக்கிறார்கள் ஆனால் தமிழ் தான் இல்லை! அது ஏன்?

இதற்கு விடையளிக்கும் பொறுப்பைத் தமிழர்களின் மனசாட்சியிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.

-டாக்டர் ராமதாசு

Pin It