தமிழ்த்தேசியக் களம் வேகமாக வளர்ந்து வருகின்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. புதிய, புதிய பெயர்களில் பல்வேறு பகுதிகளில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன. தோழர் மோகன்ராசு அனைத்து வகையான முற்போக்கு செயல்பாட்டாளர்களோடும் இணைந்து இயங்கி வந்தார்.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் நெருக்கடியில் சிக்கியவுடன் அதனை மீட்டெடுக்கும் தன்னம்பிக்கையும் தன்முனைப்பும் அவரிடமிருந்தன. அதனால், அனைத்துத் தோழர்களின் ஆதரவுடன் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்த்தேசிய அரசியலானது 1990களின் முற்பகுதியில் தமிழக அரசியல் களத்தில் முன்னணிக்கு வந்தது. ஈரோட்டுப் பகுதியில் தோழர் மோகன்ராசு ஒரு முகாமிலும் நாங்கள் ஒரு முகாமிலும் இருந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்கொண்டு சென்று கொண்டிருந்தோம். அரசியல் நாகரிகத்தோடும், தோழமை உணர்வோடும் அன்று முதல் தோழர் மோகன்ராசு மாற்று அமைப்புத் தோழர்களிடம் உறவு பாராட்டி வந்தார்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தமிழ்த்தேசிய அமைப்புகளின் வளர்ச்சிப் போக்கில் கடும் நெருக்கடி; தமிழீழ விடுதலைப் போரின் பெரும் பின்னடைவு; உலகமயம் உருவாக்கியுள்ள நுகர்விய நச்சுச்சூழல்; ஆதிக்கசாதி அமைப்புகளின் பாசிச சாதிவெறிச் செயல்பாடுகள்; தொழிலாளர் அமைப்புகளின் வீழ்ச்சி என்றவாறு தமிழ்ச் சமூக வளர்ச்சிப் போக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள காலமாக இன்றைய நிலைமை உள்ளது.

இவ்வாறு தமிழ்ச்சமூகம் ஒரு கடுமையான சிக்கலை எதிர் கொண்டிருந்த சூழலில் அதனை உடைத்தெறியும் அரசியல் அமைப்புச் செயல்பாடுகளை ஊக்கமுடன் மேற்கொண்டிருந்தவர்தான் தோழர் மோகன்ராசு. தமிழ்த்தேசிய விடுதலை, சாதியழிப்பு ஆகிய இவ்விரண்டையும் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமே அடைய முடியும் என்ற சரியான திசையில் அவரது அரசியல் அமைப்பு வேலைகள் மையம் கொண்டிருந்தன.

நீண்ட விவாதங்கள், அழகுநடைப் பேச்சு என்பது அவருக்கு வராமலிருக்கலாம். ஆனால் மக்களை அணிதிரட்டுவது என்ற தாரக மந்திரத்தை மிகச்சரியாகப் பற்றி நின்று செயல்படுத்தி வந்தவர் தோழர் மோகன்ராசு.

கருங்கல்பாளையம் என்பது ஈரோட்டுப்பகுதியில் ‘உதிரிக் கலாச்சார அரசியலின்’ புகலிடமாக இருந்தது. அரம்பர்(ரௌடிகள்) பலரின் செயல்பாட்டுக் களமாகவும் இருந்தது. அப்படிப்பட்ட பின்தங்கிய பகுதியில் தோழர் மோகன்ராசு அவர்கள் தமது இருபதாண்டுக் காலச் செயல்பாட்டில் முற்போக்குக் கருத்துகளின் கீழ் இளைஞர்களை வென்றெடுத்து அமைப்புகளை உருவாக்கி வளர்த்து வந்தார். உழைக்கும் மக்களுக்கான பல்வேறு துறை சார்ந்த தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கி அவற்றை தமிழகத் தொழிலாளர் முன்னணியாகக் கட்டமைத்து வருவதில் தோழர் பங்கு முதன்மையானது,  

“தமிழகத் தொழிலாளர்களாய் அணிதிரள்வோம்! உலகத் தொழிலாளர்களாய் ஒன்றிணைவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் தொழிலாளர் அமைப்புகள் கட்டப்பட்டன. தொழிலாளிவர்க்கம் சர்வதேசியத்தன்மை கொண்டதாக மட்டுமின்றி தேசியத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற மார்க்சிய அடிப்படையைப் பற்றி நின்று தொழிலாளர்கள் அமைப்பைத் சக தோழர்களோடு இணைந்து தோழர் மோகன்ராசு கட்டியமைத்து வந்தார்.

வெட்டி வேதாந்தம் பேசும் குறுங்குழுவாதியாக முடங்கிக் கொள்ளாமல் ஒத்த கருத்துகளின் அடிப்படையில் அனைத்து அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு செயல்படும் சிறந்த ஒருங்கிணைப்பாளராக இயங்கி வந்தார். போர்க்குணமிக்க இயக்கங்களைக் கட்டமைப்பதில் முன்னோடித் தோழர் மோகன்ராசு.

ஈழப்போரின் இறுதிக் கட்டம் நெருங்கியபோது தமிழகமெங்கும் பல்வேறு வீரியமிக்க போரட்டங்கள் வெடித்துக் கிளம்பின. ஈரோட்டில் பல்வேறு வகையான போரட்டங்களைத் தோழர் மோகன்ராசு தலைமையேற்று வழி நடத்தினார். ஈழப்போரை முன்னின்று இயக்கிய இந்தியாவின் கொடியை எரிக்கும் போராட்டம் குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள் மீது அரசு கொடிய அடக்குமுறையை ஏவியது. அரசின் அடக்குமுறையைக் கண்டு தோழர் மோகன்ராசு சிறிதும் பின்வாங்கவில்லை இந்திய அமைச்சராக இருந்த ஆணவக்கார ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக உறுதிமிக்க போராட்டங்களை அவர் வீட்டு வாசலிலேயே நடத்திக் காட்டினார்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்தது. 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்விற்குப் பின் மாபெரும் வீரவணக்க நிகழ்வு நிகழ்ச்சியை ஈரோட்டில் மக்கள் பங்கேற்புடன் தோழர் தலைமையேற்று நடத்தியதை என்றும் மறக்க முடியாது. தமிழகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 2012 மாவீரர் நாள் நிகழ்வை, தொழிலாளர் குடும்பங்களின் பங்கேற்புடன் நடத்தி ஈரோட்டில் புதிய வரலாறு படைக்கச் செய்தார்.

மக்கள் திரள் அரசியல் இயக்கங்களைக் கட்டமைக்கும் போதும் அரசிடமிருந்தும் உள்ளூர் எதிரிகளிடமிருந்தும் வரும் அடக்குமுறைகளை எதிர்கொள்வதில் தோழர் மோகன்ராசு காட்டிய உறுதியும், உத்வேகமும் தனிச்சிறப்புக் கொண்டதாக இருக்கும். தோழர் மோகன்ராசு தலைமையேற்றுக் கட்டமைக்கும் ஒவ்வொரு நிகழ்வும் கலைநயத்துடனும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்ட நடைப்பயணங்கள், வாகனப்பரப்புரைப் பயணங்கள், இன்னும் பல்வேறு மக்கள் பங்கேற்பு அரசியல் நிகழ்வுகளை புதிய புதிய கோணங்களில் அமைத்து மக்களை அரசியல்படுத்துவதில் ஈரோடு மாவட்டத்தில் முன்னணிப் பாத்திரம் ஆற்றி வந்தவர் தோழர் மோகன்ராசு. போர்க்குணமிக்க மக்கள் இயக்கங்களைக் கட்டமைத்ததில் தோழர் மோகன்ராசு முன்னோடியாகச் செயல்பட்டு வழிகாட்டி உள்ளார்.

தத்துவமாக, அரசியலாகச் செயல்பட்டவர் தோழர் மோகன்ராசு. எந்தவொரு விடுதலைப் போராளியின் செயல்பாட்டிற்கும் தத்துவமும், அரசியலும் அடிப்படையானதாகும். தோழர் மோகன்ராசு பாட்டாளிவர்க்கத் தலைமையில் சாதியழிப்பு, தமிழ்த்தேசிய விடுதலை என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டிருந்தார். தனது களப்பணிகளின் வளர்ச்சிக்காகத் தத்துவ அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மிக்கவராக இருந்தார்.

தோழர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார். அமைப்பாகத் தோழர்கள் செயல்படுவதற்கான தேவைகளை உணர்ந்து அதனை நிறைவு செய்து வந்தார். ஓர் அமைப்பாளருக்கான சீரிய பண்புகளைக் கொண்டிருந்தார்.

பொதுமுழக்கத்தின் கீழ் ஒத்த கருத்துள்ள இயக்கங்களைத் திறமையாக ஒன்றிணைத்து கூட்டு இயக்க நடவடிக்கைகளைக் கட்டமைத்து மாற்று அமைப்புகளுடன் உறுதிமிக்க நட்புறவைப் பேணி வளர்த்து வந்தார். தோழமை அமைப்புகள் அடக்குமுறைகளுக்கு ஆளாகும் போது முன்னின்று உதவி செய்பவராக இருந்தார். மொத்தத்தில் ஒரு சிறந்த களப்போராளியாகச் செயல்பட்டு வந்தார். தோழர் மோகன்ராசுவின் படுகொலையினால் தமிழ்த்தேசியப் போர்க்களம் ஒப்பற்ற தளபதி ஒருவரை இழந்துவிட்டது.

செங்குருதி சிந்தித் தனது இறுதி மூச்சை நிறுத்துகிற போதும் “மக்களுக்காக நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன, எனவே வாழவேண்டும்” என்ற செய்தியைப் பதிவு செய்து விட்டே தன் மூச்சை நிறுத்தியுள்ளார். தமிழ்த் தேசிய விடுதலை இலக்கை நோக்கிய நமது செயல்பாடுகள் மூலம் தோழர் மோகன்ராசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!. 

Pin It