கிளிநொச்சி நகரத்தில் டிப்போ சந்தியில் இராணுவத்தினர் சில கற்களை நட்டிருந்தனர். அந்தக் கற்களின் மீது பேருந்திற்காக நிற்கும் மக்கள் பலரும் குந்தியிருப்பார்கள். என்னுடைய நண்பன் ஒருவன் பேருந்தில் வந்திறங்குவான் என்பதற்காகக் காத்திருந்த பொழுது அந்தக் கல்லில் நானும் சற்றுக் குந்தியிருந்தேன். அங்கு வந்த காவல்துறை உறுப்பினன் ஒருவன் அது வணக்கத்திற்குரிய கல் என்றும் என்னை அதில் உட்கார வேண்டாம் என்றும் அது இராணுவத்தினருக்குச் சினமூட்டும் செயல் என்றும் சொன்னான். பின்னர் அங்கு ஒரு இராணுவச் சிப்பாயும் வந்தான். அந்தச் சிப்பாய் இந்தக் கற்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவை என்றும் இவை போருக்கு முன்பே இங்கு இருந்தன என்றும் சொன்னான்.

eelam_285எனக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. இது நான் பிறந்த நகரம். சிங்கள இராணுவத்தினருக்கு வெற்றி நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில் இருந்த பூங்காவில் நான் சிறுவனாக விளையாடியிருக்கிறேன். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பு வேறு வாழ்க்கை இருந்த இடத்தில் இப்பொழுது சிங்களத்தையும் பௌத்தத்தையும் புதைக்கிறீர்களா என்று கேட்டேன். பதிலளிக்க முடியாமல் எல்லாம் மேலிடத்துக் கதை என்றார்கள், அந்த இராணுவச் சிப்பாயும் காவல் துறையினனும்.

கிளிநொச்சி நகரம் ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகரமாக நிர்வாக அலுவலகங்கள் செயற்பட்ட இடம். நேற்று எங்கள் நிலத்தில் இருந்த வாழ்க்கை அழிக்கப்பட்டு இன்று வேறு கதைகள் எழுதப்படுகின்றன. இதனை மிகத் திட்டமிட்டு சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. கண்ணுக்கு முன்னால் இப்படித்தான் எங்கள் தேசத்தை நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய நிலம் இன்று சிங்களவர் நிலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவே எங்களுடைய நகரம் இன்று பௌத்தர்கள் நகரமாக்கப்படுகிறது. நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவே இன்று எங்களுடையதாக இருக்கும் வீடு நாளை சிங்களவரால் பறிக்கப்படுகிறது. இப்படியான மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரை இன்று ஈழ மக்கள் எதிர் கொள்கிறார்கள்.

இன்றைய ஈழத்து மக்கள் தாங்கள் வாழும் நிலத்திற்கான போராட்டத்தை உக்கிரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தீவில் தனித்துவமான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஈழத் தமிழினம் தன்னுடைய பூர்வீகத் தாயக இருப்பிற்கான போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கிறது. அறுபது வருடமாக இலங்கையில் மறுக்கப்பட்ட உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழினம், முப்பதாண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய ஈழத் தமிழினம் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் என்கிற மிகப்பெரிய இனப் படுகொலையை நிகழ்த்தி ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தைச் சிதைக்க இலங்கை அரசு கொடும் போரை நிகழ்த்தியது. இந்தப் போரின் பின்னரும் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் சுயத்திற்காகவும் தனித்துவத்திற்காவும் தொடர்ந்து போராடும் நடவடிக்கைதான் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு பெற்ற வெற்றியையே தோல்விக்கு உள்ளாக்குகிறது. தமிழர்களைக் கொன்று குவித்து பிணங்களின் மீது பாடிய அதன் வெற்றிப் பெருமிதத்தை எதிர்த்து ஈழத் தமிழர்கள் நடத்தும் உக்கிர வாழ்க்கை, போராட்டமாக எதிரொலிக்கிறது.

போரின் மூலம் ஈழத் தமிழர்களின் நிலம் முழுவதும் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய இராணுவப்படைகளை எந்த அழுத்தத்திற்குப் பணிந்தும் அகற்றமாட்டேன் என்று யுத்தவெற்றி விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே சொல்லியிருக்கிறார். இராணுவத்தினர் தொடர்ந்து வடக்கு கிழக்கில் தங்களுடைய நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் உலகின் மிகச்சிறந்த படைகள் இலங்கைப் படைகள் என்றும் ராஜபக்சேவின் தம்பி கோத்தாபாய ராஜபக்சே சொல்லுகிறார். விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய நிலத்தை எதுவும் செய்வோம் என்று ராஜபக்சேவின் போர்வெறிப் படைகள் மிரட்டுகின்றன.

முழு இலங்கைத் தீவிலும் தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் தெளிவாக உள்ள நிலையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு என்கிற தாயகத்தைக் கோரி விடுதலைப் போராட்டத்தில் ஈழமக்கள் ஈடுபட்டனர். உலகின் வல்லாதிக்கங்களைத் திரட்டிய சிங்கள அரசு ஈழப்பேராட்டத்தை சிதைத்ததுடன் இப்பொழுது எஞ்சிய ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் அழித்துக் கொண்டுவருகிறது. முழு நிலத்தையும் கைப்பற்றிய அரசு ஈழ நிலத்தை ஒவ்வொரு அங்குலமாக கொள்ளையடித்துக் கொண்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும்; ஈழத் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பு நடவடிக்கை முடிந்துவிடவில்லை.

ராஜபக்சே அரசு தமிழர்களின் நிலத்தை அபகரிக்கும் நடவடிக்கையை மிகவும் துல்லியமாகவும் திட்டமிட்டும் நிகழ்த்தி வருகிறது. வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பகுதிகளை இராணுவம் அபகரித்துள்ளது. இராணுவ நடவடிக்கை என்கிற பெயரிலும் நாட்டின் பாதுகாப்பு என்கிற பெயரிலும் மக்களின் குடிநிலங்களை அபகரித்துச் சிங்களக் குடியேற்றங்களையும் சிங்கள இராணுவக் குடியேற்றங்களையும் செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பாகக் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றுவரை மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் அகதிகளாக உலகம் எங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

eelam_woman_380போருக்குப் பிந்தைய ஈழத்தில் நடந்த நிலப் போராட்டங்கள் இலங்கை அரசுக்குப் பெரும் பாடத்தைக் கற்பித்திருக்கின்றன. தமிழ் மக்களின் காணி நிலங்களை அபகரிக்கும் பொழுது அவர்கள் அடங்கிச் செல்வார்கள் என்று சிங்கள அரசு எதிர்பார்த்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாமும் முகாமிட்டுக் கொள்வோம் என்று சொல்லும் இலங்கை இராணுவத்தினர், தாம் முகாமிடும் பகுதியைச் சுற்றி மக்கள் குடியிருக்க முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த முறிகண்டி மக்கள் நாங்கள் வாழ வேண்டிய எங்கள் கிராமங்களை விட்டுமட்டுமல்ல எங்கள் ஒட்டுமொத்தத் தாயகத்தை விட்டே இராணுவம் வெளியேறினால்தான் நாங்கள் குடிவாழலாம் என்றால் அதற்காகவும் போராடுவோம் என்று தெரிவித்தனர்.

ஈழத்தில் மிகவும் உக்கிரமான நிலப்போராட்டம் முறிகண்டி மக்கள் அண்மையில் நடத்திய நிலப் போராட்டமே ஆகும். இந்த மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலம் பறிக்கப்பட்டுத் தடுப்பு முகாமிலும் உறவினர் வீடுகளிலும் அலைந்தார்கள். இந்தப் பகுதியில் இராணுவத்தினர் பாரிய முகாம்களை விஸ்தரித்தினர். அத்துடன் போர் வீட்டுத் திட்டம் என்கிற பெயரில் சிங்களக் குடியேற்றத்தை நடத்தவும் திட்டமிட்டனர். அத்துடன் இராணுவத்தினர் வாழ்க்கை இந்த மக்களின் கிராமத்தில் மிகவும் உல்லாசமாக நடந்தது. இந்த மக்களின் காணிநிலங்களில் இராணுவத்தினர் விவசாயம் செய்தனர். மக்களின் மரங்களைத் தறித்து முகாம் அமைத்தார்கள். பயன்தரு மரங்களில் காய் கனிகளைப் பிடுங்கினார்கள். இந்த மக்கள் நிலமும் வாழ்க்கையுமற்று தவித்தலைந்த பொழுது இராணுவத்தினர் இந்த மக்களின் நிலத்தை ஆண்டனு பவித்தனர்.

தமது நிலத்திற்காக இந்த மக்கள் போராடத் தொடங்கினார்கள். நீண்ட போராட்டம். பல்வேறு சந்திப்புகளையும் மறுப்புக்களையும் பாராமுகங் களையும் தொடர்ந்து விடாமல் போராடினார்கள். உள்ளூரில் அரசியல் செய்து வந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே முதல் ராஜபக்சே வரையும் இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளர் நிருபாமா என்றும் இந்த மக்கள் தங்கள் நிலத்தை விடுவிக்கும்படி அணுகி கேட்காதவர்களில்லை. யுத்தத்தை நடத்தவும் இன அழிப்புச் செய்யவும் போர்க்குற்றம இழைக்கவும் அனுமதியும் ஆலோசனையும் வழங்கியவர்கள் ஈழ மக்கள் நிலமிழந்து தவிக்கும் பொழுது என்ன செய்கிறார்கள்? இந்த மக்கள் தங்களையும் தங்கள் நிலம் மீதான உணர்வினையும் மட்டுமே நம்பினார்கள். நிலத்தை மீட்க முடியும் என்று நம்பினார்கள். இந்த நிலம் எங்களுடைய நிலம். இந்த நிலத்தில் எங்களை வாழ விடு என்று குரல் எழுப்பினார்கள். ஈழத்து மக்களின் இன்றைய குரலாய் ராஜபக்சே அரசை அடி பணிய வைத்தனர் இந்த மக்கள்.

இப்படி இன்று ஈழநிலம் எங்கும் போராட்டக் குரல்கள் ஒலிக்கின்றன. எங்களுடைய மக்கள் எங்கள் நிலத்தை எங்களிடம் தா என்பதுடன் இன்னொரு குரலையும் உக்கிரமாக எழுப்புகிறார்கள். எங்கள் நிலத்தை விட்டு இராணுவமே வெளியேறு என்றும் சொல்லுகிறார்கள். எங்கள் நிலத்தை ஆளவும் வாழவும் எங்கள் உரிமையைத் தா என்று சிங்கள அரசை நோக்கியும் உலகச் சமூகத்தை நோக்கியும் குரல் எழுப்புகிறார்கள்.

இப்பெரும் இனப்படுகொலையின் பின்னரும் இப்பெரும் அநீதிகளின் பின்னரும் எங்கள் மக்கள் வாழ்வுக்கான பசியோடு குரல் எழுப்புகிறார்கள். அடங்காமல் குரல் எழுப்புகிறார்கள். அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளாக உள்ளவரை எங்கள் மக்கள் அதனை எதிர்த்துப் போராடுவார்கள். இறைமை, சுயம், தனித்துவம், வரலாறு, பூர்வீகம் கொண்ட எங்கள் இனம் தன்னை அழிப்பவர்களுக்கு எதிராகவும் தனது தாயகத்தைப் பறிப்பவர்களுக்கு எதிராகவுமே போராடுகிறது. இப்பெரும் போரின் பின்னரும் இப்பெரும் படுகொலையின் பின்னரும் இந்த இனம் அடங்கிப் போகாமல் ஏன் குரல் கொடுக்கிறது என்றும் தன் நிலத்தில் வாழ முடியாத நிலையில் ஏன் தவிக்கிறது என்றும் இந்த உலகம் சிந்திக்க வேண்டும்.

Pin It