இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப் போர், 2009 மே 18 அன்று முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த ஒரு வாரத்திற்குள் 2009 மே 23 அன்று, அய். நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குச் சென்றார். இலங்கை அரசு விமானத்தில் போர்ப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் இலங்கை அரசு அழைத்துச் சென்ற ஒரு 'மாதிரி முகாமை’ எட்டிப் பார்த்தார். கொழும்பு திரும்பி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்.

அவ்வறிக்கையில், இலங்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளைப் பான் கி மூன் வலியுறுத்தினார். இலங்கை அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தது.

இந்த அறிக்கை வெளியிட்டு ஏறத்தாழ ஓராண்டிற்குப் பிறகு, 2010 ஜுன் 22 அன்று, இந்த அறிக்கையின் உறுதிப்பாட்டைச் செயல்படுத்துவதற்கு தனக்கு ஆலோசனை வழங்க அய். நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.

இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போரின் இறுதி கட்டங்களில் உலகளாவிய மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதன் தன்மைகளையும் அதன் வீச்சையும் கணக்கில் கொண்டு, பொறுப்பேற்கும் நடைமுறைகள் குறித்த சாத்தியக் கூறுகள், பொருந்தக் கூடிய உலகளாவிய நடைமுறைகள் மற்றும் ஒப்பிடக் கூடிய அனுபவங்கள் குறித்து அய். நா. பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதே குழுவிற்கு இடப்பட்ட பணியாகும். இக்குழுவின் தலைவராக, மர்சூகி தருஸ்மன் (இந்தோனேசியா), உறுப்பினர்களாக ஸ்டீவன் ரட்னர் (வட அமெரிக்கா), யாஸ்மின் சூகா (தென்னாப்பிரிக்கா) ஆகியோரைப் பொதுச் செயலாளர் நியமித்தார். 16 செப்டம்பர் 2010 அன்று குழு அதிகாரப் பூர்வமாகச் செயற்படத் தொடங்கியது.

இதற்கிடையே, 'நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த வெளிப்படையான மக்கள் விசாரணையைக் கடந்த 2010 ஜனவரி 14, 15, 16 தேதிகளில் நடத்தி, 2010, ஜனவரி 16 அன்று தனது அறிக்கையை வெளியிட்டது.

இதுவே இலங்கை அரசு போர்க் குற்றங்கள் செய்திருப்பதை ஏற்றுக் கொண்ட முதலாவது பன்னாட்டு அமைப்பாகும்.

அதோடு, பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான சானல் 4, போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து இலங்கை அரசின் வன் செயல்களை, போர்க் குற்றங்களை நிரூபிப்பதற்கான சாட்சியங்களைச் சேகரித்து வெளியிட்டது.

குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் சிலர், உடைகள் களையப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளை அது வெளியிட்டது. இது இலங்கையில் நடைபெற்றக் கொடூரங்கள் குறித்து உலகெங்கும் முதன் முதலாக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இவற்றிற்கு பிறகே அய். நா. பொதுச் செயலாளரின் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அது தன் பணிகளைத் தொடங்கியது.

வல்லுநர் குழுவின் பணிகள்

அய். நா. வின் வல்லுநர் குழு தன் பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒத்துழைப்பை அளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. வல்லுநர் குழு பல முறை கோரியும் அவர்கள் இலங்கைக்குப் பயணம் செய்து நிலவரங்களை நேரடியாக அறிந்து கொள்ள அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இந்த இடர்களுக்கு இடையிலேயே, வல்லுநர் குழு, வெளிப்படையான அறிக்கைகள் மூலம், இலங்கையில் போரின் இறுதிக் கட்டங்களில் நிகழ்ந்தவை குறித்த சாட்சியங்களை அளிக்க முன் வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. அதற்கு பதிலாகக் கிடைத்த ஆயிரக்கணக்கான வாக்குமூலங்களையும், பிற சான்றுகளையும் பகுத்து ஆராய்ந்தே இவ்வறிக்கையை வல்லுநர் குழு வெளியிட்டுள்ளது. இவற்றைத் தவிரவும், அய். நா. விடமே போரின் இறுதிக் கட்டங்கள் குறித்து பெருமளவு ஆவணப் பதிவுகள் இருந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது. அய். நா. வின் ஆவணங்களுக்கு வலு சேர்க்கவே சாட்சியங்கள் பயன்பட்டன என வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 5 மாதங்கள் தனது ஆய்வினை மேற்கொண்ட வல்லுநர் குழு, 2011, மார்ச் 31 அன்று தனது அறிக்கையை வெளியிட்டது.

அறிக்கையின் சாரம்

அறிக்கையின் முதல் பகுதியிலேயே, குழு தான் கண்டறிந்தவற்றின் தீவிரத்தை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.

'நம்பத்தகுந்தவை என குழு அறிந்துணர்ந்த குற்றச்சாட்டுக்கள், போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தவைகள் பற்றி இலங்கை அரசு இதுநாள் வரை கூறி வந்த நிலைக்கு மாறான ஒரு நிலையை வெளிக் கொண்டு வந்துள்ளது. ‘பொது மக்களில் எவருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது’ என்ற கொள்கையுடன் தான் ஒரு மனிதநேய மீட்பு நடவடிக்கைளை மேற்கொண்டதாக அரசு கூறியது. ஆனால் நேர் எதிராக, குழு நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களைக் கண்டறிந்துள்ளது.’

தான் கண்டறிந்தவற்றின் அடிப்படையில் கீழ்காணும் குற்றச்சாட்டுக்களைக் குழு முன் வைக்கிறது.

இலங்கை அரசு ஐந்து முக்கிய வகைகளில் மோசமான அத்துமீறல்களை மேற்கொண்டதற்கான தகுதி வாய்ந்த குற்றச் சாட்டுக்களைக் குழு கண்டறிந்துள்ளது.

- பரவலான குண்டு வீச்சின் மூலம் பொது மக்களைக் கொன்றது.

- மருத்துவமனைகள் மற்றும் பிற மனித நேய அமைப்புகள் மீது குண்டு வீச்சு நடத்தியது.

- மனித நேய உதவிகளை மறுத்தது.

- இடம் பெயர்ந்த மக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளிட்ட, போரில் தாக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் ஆகியோர் அனுபவித்த மனித உரிமை மீறல்கள்.

- ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சித்த பிறர் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்.

போரின் இறுதிக் கட்டங்களில் விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய குற்றச்சாட்டுக்களை ஆறு முக்கிய வகைகளிலான மோசமான மீறல்களாகக் குழு நிர்ணயிக்கிறது.

- பொதுமக்களை மனித அரணாகப் பயன்படுத்தியது.

- விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து தப்ப முற்பட்ட பொது மக்களைக் கொன்றது.

- பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு அருகே ஆயுதங்களைப் பயன்படுத்தியது.

- வலுக்கட்டாயமாகக் குழந்தைகளைப் படையில் இணைத்தது.

- வலுக்கட்டாயமாக வேலை வாங்கியது.

- தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைக் கொன்றது.

இவற்றோடு, போரின் கொடூரத்தையும் நடந்த அத்துமீறல்களையும் அறிக்கையின் முன் பகுதி சுருக்கமாக விவரிக்கிறது.

செப்டம்பர் 2008 முதல் 19 மே 2009 வரையிலான காலக்கட்டத்தில், இலங்கை இராணுவம், வன்னிக்குள் தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள, மிகப் பாரிய மற்றும் மிகப் பரவலான குண்டு வீச்சுக்களைப் பயன்படுத்தியது. இதில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை வன்னியின் மக்களைத் தனிமைப்படுத்தியது.

இந்த நடவடிக்கையானது வன்னி மக்கள் தொகையைப் பெருமளவு அழித்தது. ஏறத்தாழ 3,30,000 பேர் பொதுமக்கள், தொடர்ந்து சுருங்கிக் கொண்டு வந்த நிலப் பரப்பிற்குள் சிக்கியிருந்தனர். குண்டு வீச்சுகளுக்குத் தப்பி ஓட முயன்றபோதும் இயலாமல், விடுதலைப் புலிகளால் பணயமாக வைக்கப்பட்டிருந்தனர்.

ஊடகங்கள் மற்றும் பிற விமர்சகர்களை மிரட்டவும் அமைதிப்படுத்தவும் அரசு பல வகையான அச்சுறுத்தல்களை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் வெள்ளை வேன்கள் ஆட்களைக் கடத்தி காணாமல் போகச் செய்வதும் ஒரு வழிமுறை ஆகும்.

பொது மக்களை, பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு திரளச் செய்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியையும் அளித்து பாதுகாப்பு வளையத்தில் திரண்ட மக்கள் மீது மூன்று முறை தொடர்ச்சியாகப் பாரிய குண்டு வீச்சுக்களை அரசு மேற்கொண்டது. அய். நா. அமைப்பினர் தங்கியிருந்த குடில், உணவு வழங்கு வரிசைகள் மற்றும் காயம்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களைக் கடற்கரையில் இருந்து அழைத்துக்கொண்டு செல்ல வந்திருந்த உலகளாவிய செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்களுக்கு அருகே என பொது மக்கள் கூடிய இடங்களில் அரசு குண்டு வீசியது. அய். நா., செஞ்சிலுவைச் சங்கம் போன்றவர்கள் எச்சரித்ததை மீறியும் தனது சொந்த உளவுத்துறை, அதன் விளைவுகளை விளக்கியதை மீறியும் அது குண்டு வீச்சை மேற்கொண்டது. போரின் இறுதிக் கட்டங்களில் பெருமளவிலான மக்கள் இறந்தது அரசின் குண்டு வீச்சினால்தான்.

வேவு விமானங்கள் மூலம் துல்லியமாகத் தெரிந்திருந்தும், அரசு திட்டமிட்டே மருத்துவமனைகள் மீது நேரடியாக குண்டுகளை வீசியது. வன்னியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் குண்டு வீச்சினால் தாக்கப்பட்டுள்ளன. அதில் சில தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஆளாகின. இந்த இடங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த போதுமே அரசு இதனைச் செய்தது. மேலும் போர் நடந்த பகுதியில் இருந்த மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் போன்ற மனித நேய அடிப்படையிலான உதவிகளை மறுத்ததன் மூலம் அவர்களின் துன்பத்தைக் கூட்டியது. இந்த நிலையில் போர்ப் பகுதியில் இருந்த மக்களின் எண்ணிக்கையை அது வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டது. சனவரி முதல் மே 2009 திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதில் பெரும்பான்மையானவர்கள் அடையாளம் தெரியாதபடி போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த கொடூரத் தாக்குதல்களிலேயே உயிரிழந்தனர்.

போரில் பாதிக்கப்பட்டவர்களும் பிழைத்தவர்களும் போர் நடைபெற்ற பகுதியில் இருந்து வெளியேறிய பிறகு அரசு அவர்களுக்கு மேலும் துன்பத்தையே அளித்தது. விடுதலைப் புலிகள் என சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காண்பதற்கான சோதனை. எந்த வெளிப்படைத் தன்மையோ அல்லது பொது நபர்களின் முன்போ நடைபெறவில்லை. தனிமைப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். சில பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம். எஞ்சியிருந்தவர்கள் காணாமல் போயினர். இது அரசு அமைத்த குழுவின் முன் சாட்சியமளித்த அவர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்களின் ஊடாகத் தெரிய வருகிறது. இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வெளி உலகத் தொடர்பற்ற முகாம்களிலேயே வைக்கப்பட்டிருந்தனர். முகாமின் கொள்ளவுக்கு மீறிய மக்கள் கூட்டம் காரணமாக மிக மோசமான சூழலும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மீதான அடிப்படை சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டதும், இதன் காரணமாக தேவையின்றி பல உயிர்கள் இறந்ததும் நடந்தது. முகாம்களில் இருந்த சிலர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டனர். விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் எவ்வித வெளியுலகத் தொடர்புமற்ற இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதனால் மேலும் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அறிக்கையின் உள்ளே, நிகழ்வுகளை விவரித்துள்ள வல்லுநர் குழு, ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கான மரபுகளைக் கடந்து, மிக வெளிப்படையான சொற்களைப் பயன்படுத்தியுள்ளது.

'குழந்தைகளின் உடல் பகுதிகள் வெடித்து மேலுயர்ந்து மரங்களில் ஒட்டிக்கிடந்தன.’ - (பத்தி 85)

'கருப்பு புகையும் இறந்த உடல்களின் நெடியும் காற்றை நிரப்பியது. பட்டினி கிடக்கும் தங்களின் குழந்தைகளுக்கான உணவுக்காகவும் காயம்பட்ட அல்லது செத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவவும் சில மக்கள் பிச்சை எடுத்தனர். இந்தக் காட்சியானது நரகத்தைக் கண் முன் கொண்டு வருவதைப் போன்று இருந்ததாக விவரிக்கப்பட்டது.’ - (பத்தி 118)

'வன்னியில் நடைபெற்ற ஆயுதப் போரின் இறுதியைக் குறிக்கும் நாளாக மே 18 2009 இருந்தது. செஞ்சிலுவை சங்கத்தின் சொற்களில் ’இறுதிநாட்கள் கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை ஏற்படுத்தின’. (- பத்தி 123)

சாரமாக, உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டதையும், போர்க் குற்றங்கள் நடைபெற்றதையும் அறிக்கை தக்க சான்றுகளோடு நிறுவுகிறது.

இலங்கை அரசு மீதான குற்றச்சாட்டுக்கள்

இலங்கை அரசு மீது 5 குற்றச்சாட்டுகளைக் குழு வைக்கிறது. ஒவ்வொன்றிற்கும் தக்க சான்றுகளை அளித்து உறுதிப்படுத்துகிறது.

குறிப்பாக, மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தேதி வாரியாக அறிக்கை பட்டியலிடுகிறது. அய். நா. வின் பிரதிநிதிகள் போர்ப் பகுதிகளில் இருந்த போதே அவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

'29 ஜனவரி முதல் 4 பிப்ரவரி வரையான ஒரு வார காலத்தில் புதுக்குடியிருப்பு மருத்தவமனை தினமும் எம்.பி.ஆர்.எல்கள் மற்றும் பிற ஆர்டிலறிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டது. குறைந்தது ஒன்பது குண்டுவீச்சுக்கள் நேரடியாக மருத்துவமனையைத் தாக்கின.. இதனால் ஏற்கனவே காயம்பட்டிருந்த பல நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் கொல்லப்பட்டனர். அறுவைச் சிகிச்சை அரங்கும் கூட தாக்கப்பட்டது. பிப்ரவரி 4 2009 அன்று மருத்துவமனை தாக்கப்பட்ட போது 2 செஞ்சிலுவை சங்க பன்னாட்டு ஊழியர்கள் இறந்தனர். குண்டு வீச்சுக்கள் இலங்கை ராணுவத்தின் நிலைகளில் இருந்தே வந்திருந்தன.’ - (பத்தி 91)

அதிலும் குறிப்பாக, ஆளற்ற வேவு விமானங்களிலிருந்து அடையாளம் காணக்கூடிய அளவில், மருத்துவமனை அடையாளங்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த போதும், மருத்துவமனையின் புவியியல் குறியீடுகள் இலங்கை இராணுவத்திற்கும் அரசுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த போதும், நன்றாக அறிந்தே, மருத்துவமனைகள் மீது இலங்கை இராணுவம் திட்டமிட்டத் தாக்குதல்களை நடத்தியது.

'புதுக்குடியிருப்பு மருத்துவமனை அமைந்திருந்த இடத்தின் சரியான புவியியல் குறியீடுகள் இலங்கை ராணுவத்திற்கு தெரிந்தே இருந்தது. ஆளற்ற விமானங்களின் பார்வையில் எளிதில் படும்படியாக மருத்துவமனை முத்திரைகள் பெரிய அளவில் தெளிவாகப் பதிக்கப்பட்டிருந்தன.’ - (பத்தி 92)

மக்களின் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டிருந்த இந்த நிலையில், மனித நேய உதவிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதற்கான முயற்சிகளையும் இலங்கை அரசு தடை செய்தது. போர்ப் பகுதிகளிலிருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லியதன் மூலம், போதுமான அளவிற்கு உதவிகள் கிடைப்பதைத் தடுத்தது.

'ஏப்ரல் இறுதியில் 1,27,117 பொது மக்கள் இன்னமும் சிக்கிக் கொண்டிருப்பதாக ஐ.நா மதிப்பிட்டது. ஆனால் அரசோ 10,000 பேர் மட்டுமே எஞ்சியிருந்ததாகக் கூறியது. அந்த இடத்தில் இருந்து வெளியேறி பின்னர், மாணிக் பண்ணை மற்றும் பிற முகாம்களில் வைக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 2,90,000 ஆகும். இந்த எண்ணிக்கைகளில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அரசு தேவையான விளக்கத்தை அளிக்கவில்லை.’ - (பத்தி 127)

'அரசின் குறைந்த மதிப்பீட்டின் காரணமாக உலக உணவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவு, உண்மையான தேவையுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறைந்த அளவாகவே உள்ளது. இதன் காரணமாகப் பரவலான சத்துக் குறைவு, பட்டினி நிலவியது. அதே போன்று வன்னிக்குள் அனுமதிக்கப்பட்ட மருத்துவப் பொருட்களின் அளவானது குண்டு வீச்சினால் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. இரண்டாவது பாதுகாப்பு வளையத்தில் ஏற்பட்ட காயங்களின் வகைகளைக் கவனத்தில் கொண்டு மயக்க மருந்துகள், இரத்தம் ஏற்றுவதற்கான இரத்தப் பைகள், பூச்சிக் கொல்லிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், கையுறைகள் போன்ற மருத்துவப் பொருட்களை மருத்துவர்கள் கோரியிருந்தனர். ஆனால் இந்தப் பொருட்கள் மிகச்சிறிய அளவில் மட்டுமே வன்னிக்குள் அனுமதிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக பனடால், ஒவ்வாமை மருந்துகள் மற்றும் ஊட்டச் சத்து மருந்துகள் போன்றவையே அவர்களுக்கு வழங்கப்பட்டன.

மார்ச் 2010 இல் பொது மக்களின் பாதிப்பு அதிகமான நிலையில் தேவையான மருத்துவப் பொருட்கள் இல்லாததால் பெரும் துன்பமும் இதனால் நிறைய உயிரிழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பொருட்களின் போதாமை குறித்துக் கடிதங்கள் மற்றும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல்கள் ஊடாக மருத்துவ சேவைக்கான மண்டல இயக்குநரகத்தின் மருத்துவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். காயம்பட்ட மற்றும் இறந்து போனவர்கள் பெயர்ப் பட்டியல் மற்றும் நிழற்படங்களை அவர்கள் தொகுத்து அனுப்பினர். மருத்துவ அமைச்சகம் ஊடகங்களிடம் பேசுவதை நிறுத்துமாறும் புகார் அளிப்பதை நிறுத்துமாறும் இவர்களை எச்சரித்தது. நிறுத்தாவிடில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியது. மார்ச் 16 அன்று மருத்துவர்கள் சத்தியமூர்த்தி மற்றும் வரதராஜா ஆகியோர் ’முல்லைத் தீவில் தேவையான மருந்துகள் இல்லாததால் ஏற்பட்ட தேவையற்ற சாவுகள் என்று ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அதில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் தேவையான மருந்துகளும் கிடைத்திருந்தால் மருத்துவமனை சாவுகள் பலவற்றைத் தடுத்திருக்கலாம். எங்களுக்கு கிருமி நாசினிகள், மயக்க மருந்துகள் மற்றும் ஒரு பாட்டில் குளுக்கோஸ்கூட வழங்கப்படவில்லை. உயிர்காக்கக்கூடிய அவசர அறுவை சிகிச்சையைக்கூட வழங்க இயலாத மோசமான நிலையில் நாங்கள் விடப்பட்டோம் என்று குறிப்பிட்டனர்.’ - (பத்தி 128)

'மார்ச் 19, 2009 அன்று மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து மற்றும் அமைச்சகத்தின் செயலாளர் இதற்கு அளித்த பதிலில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் இல்லையென்பதால் வீரியமிக்க வலி நிவாரணிகளும் நரம்புகளில் செலுத்தத்தக்க மருந்துகளும் மட்டுமே அனுப்பி வைக்க இயலும் என்று கூறியது.’ - (பத்தி 129)

போர்ப் பகுதிகளை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகும் மக்களின் துன்பம் தீரவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்தது. முகாம்களில் நிரம்பி வழிந்த கூட்டத்தின் காரணமாக நிலவிய சுகாதாரமற்றச் சூழல், போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக முகாம்களிலும் உயிரிழப்புகள் தொடர்ந்தன.

அதோடு விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் தனியே பிரித்தெடுக்கப்பட்டு தனியான விசாரணை மய்யங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை எவ்வித வெளிப்படைத் தன்மையுமற்று நடைபெற்றது. அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலையைப் பற்றி அறியாமல் அவர்களின் உறவினர்கள் அவதியுற்றனர். பலரைப் பற்றியத் தகவல்கள் இன்று வரை அறியப்படாத ஒன்றாகவே உள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள்

விடுதலைப் புலிகள் மீது 6 குற்றச்சாட்டுக்களைக் குழு வைக்கிறது. அவற்றில் முதன்மையானதும் முக்கியமானதும் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித அரணாகப் பயன்படுத்தினார்கள் என்பதாகும். ஆனால் அதே குற்றச்சாட்டை விவரிக்கும் இடத்தில், குழு இவ்வாறு கூறுகிறது:

போர் குற்றம் குறித்த வழமையான விளக்கம் குறிப்பது போன்று தங்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, பொதுமக்களைத் திட்டமிட்டு இராணுவத் தாக்குதல்களின் இலக்குகளை நோக்கி விடுதலைப்புலிகள் நகர்த்திச் சென்றனர் என்பதற்கு தகுதிவாய்ந்த சான்றுகள் எதையும் காண இயலாததால், விடுதலைப்புலிகள் பொதுமக்களைப் போர்ப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்க மறுத்தது குறித்த தகுதிவாய்ந்த குற்றச்சாட்டுக்கள்,சட்டப்படி மனித அரணாக அவர்களைப் பயன்படுத்தியதாக எடுத்துக்கொள்ள முடியாது என குழு நம்புகிறது - (பத்தி 237).

மேலும், இரண்டாவது முக்கிய குற்றச்சாட்டு, தப்பி ஓட முற்பட்ட மக்களை விடுதலைப் புலிகள் சுட்டனர் என்பதாகும். போர் நடைபெற்ற காலத்திலேயே இதற்குச் சான்றாகச் செயற்கைக்கோள் படங்களை இலங்கை அரசு அளித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே அய். நா. வல்லுநர் குழுவும் இக்குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால், இச்செயற்கைக்கோள் படத்தை ஆராய்ந்து விவரித்துள்ள சானல் 4, விடுதலைப் புலிகள் தரையை நோக்கியே சுட்டனர் என்பதைத் தெளிவாக காட்டியுள்ளமையும் கருதிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இலங்கை அரசின் மறுசீரமைப்பு முயற்சிகள்

இலங்கை அரசு, போருக்குப் பிந்தைய மறு சீரமைப்பு முயற்சியாக, 'கற்றப் பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்’ ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் போர் நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்தது. பாதுகாப்பற்ற அச்சுறுத்தலான சூழல் நிலவிய போதும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு வந்து போரினால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆணையத்திடம் எடுத்துரைத்தனர். ஆனால், இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்த அய். நா. வல்லுநர் குழு ஆணையம் குறித்த தனது மதிப்பீட்டினை இவ்வாறு முன் வைக்கிறது

மொத்தத்தில் க.பா.இ.ஆ. ஆழமான தவறுகளைக் கொண்டதாகவும் பொறுப்பேற்கும் நடைமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான உலகளாவிய வரையறைகளைப் பூர்த்தி செய்யாததாகவும் அதனால் இலங்கை அதிபரும் செயலாளர் நாயகமும் பொறுப்பேற்கும் நடைமுறைகள் குறித்து அளித்த கூட்டு கடப்பாடுகளை நிறைவேற்ற முடியாததாகவும் உள்ளது.’ - (பத்திகள் 344, 345)

ஆக, இலங்கை அரசின் உள்நாட்டு முயற்சி எவ்விதத்திலும் நேர்மையானதாகவோ, பயனளிக்கக்கூடியதாகவோ இல்லை என்பதை அறிக்கை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

பரிந்துரைகள்

இந்நிலையில், அறிக்கை இலங்கை அரசுக்கும் அய். நா. விற்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

தனது பரிந்துரைகளில் முதன்மையாக,

தான் நம்பத்தகுந்தது என கண்டறிந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசு தான் ஏற்றுக்கொண்ட உலகளாவிய சட்டங்களுக்கு ஏற்பவும் உள்நாட்டில் பொறுப்பேற்பதற்கான ஒரு சிறந்த நடைமுறையை உருவாக்கும் பொருட்டும் ஆயுதப் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் உலகளாவிய மனித நேய மற்றும் மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் புரிந்துள்ள அத்துமீறல்கள் குறித்து உடனடியாக நேர்மையான விசாரணைகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரியுள்ளது. - பரிந்துரை 1A

குற்றவாளிகளிடமே விசாரித்துத் தண்டிக்கும் பொறுப்பை வழங்குவது போல, இலங்கை அரசே தனது உள்நாட்டுக் கட்டமைப்பின் மூலம் நடந்த போர்க் குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவது, ஒட்டுமொத்த முயற்சிகளையும் வீணடிப்பதாகவே அமையும். - பரிந்துரை 1B

ஆ. இலங்கையில் போர் நடைபெற்றப் போதும் அதற்குப் பின்னாலான காலகட்டங்களிலும் அய். நா.வின் மனிதநேய மற்றும் பாதுகாப்புத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட செயல்கள் குறித்து பொதுச் செயலாளர் மறு ஆய்வு நடத்த வேண்டும். என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியப் பரிந்துரையாகும்.

முன்பே குறிப்பிட்டிருந்தபடி, அய். நா. வின் வல்லுநர் குழு நேரடியான கள ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கைக்குப் பயணம் செய்ய விரும்பிய போதும் அதனை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில், இவ்வறிக்கை நேரடியான சாட்சியங்களையும், அய். நா. வின் ஆவணங்களையுமே சார்ந்து இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, இன்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மீறல்கள் குறித்து அய். நா. முன்பே அறிந்திருந்தது என்பது புலனாகிறது. இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவு நடைபெறுவதை அறிந்திருந்த போதும் அதனைத் தடுக்க அய். நா. முயற்சிகளை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அண்மையில் கடந்த மே 2011-இல் பெலாரஸ் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை நடத்திய தடியடியில் ஏறத்தாழ 500 பேர் காயம்பட்டனர். இதனை ஒரு முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு, ஜீன் 2011-இல் நடந்த அய். நா. வின் மனித உரிமைக் குழுக் கூட்டம் இதைப் பற்றி விவாதித்து, கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. 500 பேர் காயம்பட்டதை அக்கறையுடன் விவாதித்த அய். நா. மனித உரிமைகள் குழு, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதைக் குறித்து அக்கறையின்றி இருந்தது ஏன் என்ற கேள்வி மிக முக்கியமானது.

இந்தச் சூழலில்தான் இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில், இலங்கையிலும் அதற்கு வெளியிலும் அய். நா. உறுப்பு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வல்லுநர் குழு நியாயமான பரிந்துரையை முன் வைத்துள்ளது. அய். நா. வல்லுநர் குழு, தனது அறிக்கையில், அய். நா. விற்கு மற்றொரு பரிந்துரையை அளித்துள்ளது. - பரிந்துரை 4B

அய். நா. வின் மனித உரிமைக் குழு கடந்த மே 2009இல் இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றிய சிறப்புத் தீர்மானத்தை (-A/HRC/S-11/C-1/Rev2) இந்த அறிக்கையின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2009 மே 18 அன்று போர் முடிவுற்றதாக இலங்கை அரசு அறிவித்த சில நாட்களில், 2009 மே 27 அன்று அய். நா. வின் மனித உரிமைக் குழு 11-ஆவது சிறப்புக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்து அரசு ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.

'இலங்கையின் இறுதிப் போரின் போது இரு தரப்பினராலும் பன்னாட்டுப் போர் விதிகள் மீறப்பட்டுள்ளன. இலங்கை அரசே ஒரு விசாரணைக் குழுவை நியமித்து விசாரித்து குற்றமிழைத்தோரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்’ வலுவற்ற இத்தீர்மானம் கூட பன்னாட்டு சமூகத்தால் புறந்தள்ளப்பட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து அதனைத் தோற்கடித்தன.

ஆனால் இதே கூட்டத்தில், இலங்கை அரசுக்கு சாதகமாக, இந்தியா முன்னின்று, சீனா, ரஷ்யா மற்றும் கியூபா போன்ற தென் அமெரிக்க நாடுகளின் ஆதரவோடு இலங்கை அரசைப் பாராட்டியும் அதற்கு உலக நாடுகள் உதவக் கோரியும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அதில் குறிப்பிட்டுள்ளபடியான எந்த நல்லெண்ண முயற்சிகளும் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.

இத்தீர்மானத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அய். நா. வல்லுநர் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

பேசப்படாத இனப்படுகொலை

இலங்கை அரசுக்கு எதிராகத் தங்களின் ஒற்றைக் குரலை மட்டுமே உயர்த்தி நின்ற தமிழ் மக்களுக்கு அய். நா. வல்லுநர் குழுவின் அறிக்கை மிகப் பெரும் பலமே என்ற போதும், நடந்து முடிந்த போரின் பின்னணி மற்றும் தாக்கம் ஆகியவை குறித்த அறிக்கை முக்கியமான இரண்டு கருதுகோள்களைத் திட்டமிட்டோ திட்டமிடாமலோ ஒதுக்கியுள்ளது.

- கடந்த 60 ஆண்டு காலமாகத் தங்களின் தேசிய சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக இவ்வறிக்கை அங்கீகரிக்கவில்லை. மாறாக இனக்குழு தேசியம் என்ற குறை மதிப்பீட்டுச் சொல்லையே பயன்படுத்தியுள்ளது.

- 'நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ 2010 ஜனவரியில் அளித்த தனது அறிக்கையில், இனப் படுகொலையின் சுவடுகள் தென்படுவதாகவும் அவை ஆழ்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் நடத்தியுள்ளது எனக் கூறும் அய். நா. அறிக்கை, நடந்தது இனப் படுகொலை என்பதை முற்றிலுமாக ஒதுக்கியுள்ளது.

உலக சமூகத்திடம் தமிழர்களின் எதிர்பார்ப்பு

போரில் உயிர்களைப் பலி கொடுத்து நடந்த இன அழிப்பிற்குப் பின், தற்போது, சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு இன்றியும் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறி கொடுத்தும் தங்கள் பண்பாட்டைப் பேணவோ வெளிப்படுத்தவோ அச்சுறுத்தல் நிலவும் சூழலில், ஈழத் தமிழினம் தனது அடையாளங்களைச் சிறிது சிறிதாக இழந்து இன அழிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது.

அண்மைக் காலங்களில் இனப் படுகொலை நடந்தேறிய கிழக்கு தைமூர், மாண்டிநீக்ரோ, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் அய். நா. வே முன்னின்று பொதுவாக்கெடுப்பு நடத்தி நாடமைத்துக் கொடுத்துள்ளது.

அதே போன்ற ஒரு சூழல் நிலவும் ஈழத்திலும், இப்படியான வாக்கெடுப்பு மூலம் தமிழ் மக்களின் தாயகத்தை மீட்டுத் தர வேண்டிய பொறுப்பும் கடமையும் பன்னாட்டுச் சமூகத்திற்கு உள்ளது.

இரண்டாவதாகவும், மிக முக்கியமானதாகவும் ஈழத் தமிழ்ச் சமூகம் எதிர்பார்ப்பது என்னவெனில், உலகில் இனப் படுகொலை வரலாறு என்பது இதோடு முற்றுப் பெற வேண்டுமென்பதே.

உலக நாடுகள் பலவற்றையும் தனக்குத் துணையாக வைத்துக் கொண்டு, சாட்சிகளற்ற போரின் மூலம் ஓர் இனப் படுகொலையை எவ்வாறு வெற்றிகரமாக நிகழ்த்துவது என்பதை இராஜபக்சே அரசு உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.

மனித உரிமைகள் குறித்தும் தேசிய இனங்களின் உரிமைகள் குறித்தும் அரச பயங்கரவாதம் குறித்தும் அதிகம் விவாதிக்கப்படும் இன்றைய சூழலில், இராஜபக்சே காட்டியுள்ள இந்தத் தவறான வழிமுறையானது, உலகெங்கிலும் சிறுபான்மையினராக வாழும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் அச்சுறுத்தல் அளிப்பதாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள், இன அழிப்புகள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும் தடுக்கவும், எழுந்துள்ள முழக்கமான 'பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (-Responsibility to protect – R to P) என்பது இன்றைய முக்கிய தேவையாக உருவாகியுள்ளது. 2005-இல் நடந்த அய். நா. வின் உலக மாநாட்டில் உலக நாடுகள் 'பாதுகாப்பதற்கான பொறுப்பு’ என்ற அடிப்படையில் அரசுகளுக்கு சில கடப்பாடுகளை அளித்தன.

'பாதுகாப்பதற்கான பொறுப்பு’ குறித்து விளக்கும் போது பேரா. கரெத் இவான்ஸ் சொல்வது போல, 'இறையாண்மை என்பது கொல்வதற்கான அனுமதிச் சீட்டாக உள்ளது’. இதனை உடைத்து, இறையாண்மை என்ற பெயரால் அரசே தலைமையேற்று நடத்தும் படுகொலைகள், நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே 'பாதுகாப்பதற்கான பொறுப்பு’ என்ற இந்த கோட்பாட்டின் அடிப்படையாகும்.

இதன் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மீது இனப் படுகொலை புரிந்த இலங்கை அரசு மீதும் அதற்கு உதவியாக இருந்த அனைத்து நாடுகள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் பன்னாட்டுச் சமூகம் முன் வர வேண்டும்.

குடிமை சமூகத்தின் கடமை

பன்னாட்டுச் சமூகத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்பது அத்தனை எளிதல்ல. அதனைச் சாத்தியமாக்குவது, மனித உரிமைகளை மீட்டெடுப்பதில் உறுதி கொண்டுள்ள குடிமை சமூகத்தின் கைகளிலேயே உள்ளது.

ஈழத் தமிழர்கள் மற்றும் உலகெங்கும் பரவியுள்ள தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது, யாரெல்லாம் மனித உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரோ அவர்கள் அனைவரையும் அணி திரட்டிப் பன்னாட்டுச் சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வைப்பதே இன்று நம் முன் இருக்கும் பெரும் கடமை.