நமது தேசம் உலகப்பெரு வல்லரசுகளின் வேட்டைக் காடாகிவிட்ட சூழலில், நம் மண்ணும் மலையும் காடுகளும் நீர் நிலைகளும் பன்னாட்டுப் பெருங்குழுமங்களிடம் அடகுபோய்க் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், நம் இயற்கை வளங்களெல்லாம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு வரும் அவலப்பொழுதில், சொந்த மக்களின் வேர்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்படும் நெருக்கடியில், சொந்த மொழிகள், அம்மொழிக்குரிய மக்களின் மனங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வரும் துன்பவேளையில், நம் நலத்தை நாசமாக்கி, நம் செல்வங்களைக் களவாட முனையும் பன்னாட்டுக் கொள்ளையர்களின் உள்ளூர் முகவர்களே நமக்குக் கல்வியாளராகவும் அலுவலர்களாகவும் ஆட்சியாளராகவும் வாய்த்திருக்கின்ற இக்கட்டு நிலையில், நம் கண்கள் விழிப்புறுவதற்கும், வளைந்த நம் முதுகுகள் நிமிர்வுறுவதற்கும் சில மருந்துகள் தேவையாகின்றன.

kamaal_399அத்தகைய மாமருந்துகளைத் தேடிக் கண்டறிந்து, சேர்ப்பன சேர்த்துப் புடமிட்டு, நம் நோய் அறிந்து நமக்கு மருந்தளித்த மாமருத்துவர் பேராசான் சாமிநாத சர்மா அவர்கள்.

தமிழ்ச் சமூகத்தின், இந்தியச் சமூகங்களின் நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்பட்ட சமூக மருத்துவர் அவர்.

வரலாற்றை வெறும் வரலாறாகக் கூறாமல், நமக்கு ஒரு படிப்பினையாக, அந்த வரலாற்றினூடாக நாம், கற்றுணர்ந்து தெளிவு பெறுவதற்கான மெய்ப் புலனாக, நமது சமூக எதிர்கால வரலாற்றுச் செலவுக்கான ஒரு பெருவெளிச்சமாக அதனைப் படைத்தளிப்பது பேராசான் சாமிநாத சர்மாவின் தனிச்சிறப்பு.

உலகின் மாபெரும் சிந்தனையாளர்களை, தேசங்களின், சமூகங்களின் விடுதலைப் போராளிகளைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தி, அவர்களைத் தமிழ் மக்கள் முன்னே தமிழ்மொழியிற் பேச வைத்தவர் பேராசான் அவர்கள்.

அவர்தம் உயரிய வரலாற்றிலக்கியங்களில் குறிப்பிடத்தக்க படைப்பு “கமால் அத்தாதுர்க்”

“துருக்கியின் அத்தன் (தந்தை) கமால்” என்பது இதன் பொருள். அவலங்களின் பேரிருள் கவ்விக் கிடக்கும் நம் தாய்மண்ணுக்கு ஒரு பெருவெளிச்சத்தைப் பாய்ச்சவல்ல ஒரு வரலாற்றுப் பேரிலக்கியம் என்று இதனைக் குறிப்பிடலாம்.

இது முஸ்தபா கமால் பாட்சா என்கின்ற தனி மனிதனின் வரலாறில்லை. கமாலின் அறிவுநுட்பச் செயல்பாட்டால் துருக்கி என்கின்ற தேசம் தளர்ச்சியை உதறித் தலைநிமிர்ந்து எழுந்து நின்ற ஓர் எழுச்சியின் வரலாறு. தன் நலத்தைப் பின்தள்ளி மண் நலமே பேணிய மாபெரும் தலைவனின் வீர வரலாறு.

மாபெரும் மனிதர்களை வரலாறு உருவாக்குகிறது அந்த மாபெரும் மனிதர்கள் மக்களுக்காக வினையாற்றி ஒரு புகழ் வரலாற்றைக் கட்டி எழுப்புகிறார்கள்.

இதற்கான சான்றாவணம் இந்நூல்!

ஜியார்ஜியா, ஆர்மீனியா, ஈரான், ஈராக், சிரியா, நிலநடுக்கடல், கருங்கடல் சூழ, ஐரோப்பாவையும ஆசியாவையும் தழுவிக்கொண்டு நிற்கும் ஒரு நாடுதான் துருக்கி. உயர்ந்த தோற்றமும் கம்பீரமும் துணிச்சலும் மிகுந்த துருக்கியர்கள் தங்கள் தேசத்தை அல்பேனியாவிலிருந்து பாரசீகம் வரையிலும், எகிப்திலிருந்து காக்கசஸ் மலை வரையிலும் விரிவு செய்திருந்தார்கள். செர்பியா, கிரீஸ், பல்கேரியா முதலிய நாடுகள் பலவும் துருக்கிக்குக் கீழடங்கியிருந்தன.இது பதினாறாம் நூற்றாண்டின் நிலைமை. பின்னர் வந்த சுல்தான்கள் ஆடம்பர நேயர்களாய் இருந்தார்கள். அந்தப்புரத்தின் அரசாட்சியில் ஆர்வம் காட்டினார்கள். துருக்கியின் முற்றாளுமை இறங்கு முகத்திற்கு வந்தது.

ஐரோப்பிய நாடுகள் துருக்கியப் பரப்பைக் கூறுபோட்டுக் கொள்ள ஆவலோடு காத்திருந்தன.துருக்கிய மக்களோ பழமையிலும் மடமை எண்ணங்களிலும் ஆழ்ந்திருந்தார்கள். அரசு அலுவலர்களோ, குறைந்த வேலை அதிக ஊதியம் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். கண்களை மூடிக்கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி, வாங்கி வாங்கி சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பொறுப்பையும் மனச்சான்றையும் தொலைத்து விட்டிருந்தார்கள். சட்டங்களும் நீதியும் அவற்றை மீறுவதற்காகவே எழுதி வைக்கப்பட்டிருந்தன. மக்களோ கடவுளின் ஆணைப்படி எல்லாம் நடக்கின்றன என்று நம்பினார்கள். தேசியச் செல்வமெல்லாம் ஆடம்பரங்களிலும் பயனற்ற நடவடிக்கைகளிலும் வீணாகிக் கொண்டிருந்தன. எனவே 19ஆம் நூற்றாண்டில் துருக்கியை “ஐரோப்பாவின் நோயாளி” என்று உலகம் இகழ்ந்துரைத்தது.

இந்நிலையில்தான் 1880ஆம் ஆண்டில் முஸ்தபா கமால் பிறந்தான். நேர்மையும் வாழ்க்கை ஒழுங்கும் முற்போக்கு எண்ணங்களும் நிறைந்த தந்தை அலிரிஜா. தன் மகனை அறிவாளியாக, நாகரிக மனிதனாக, நேர்மையாளனாக, நிமிர்ந்த பார்வை கொண்டவனாக, பண்பட்ட நடத்தையுடையவனாக வளர்ப்பதிலே பெருங்கவனம் எடுத்துக் கொண்டார்.

தாய் ஜுபேதா ஹனூம் மதப்பற்றும் பழைமையில் நாட்டமும் நிறைந்தவர். தன் குழந்தைகள் மீது பாசத்தைப் பொழிந்தாள். குழந்தைகளுக்காக எண்ணற்ற துன்பங்களைத் தாங்கிக்கொண்டு உழைத்தாள். அறநெறி எண்ணங்களை நீதிக்கதைகள் மூலம் தன் குழந்தைகளின் நெஞ்சங்களில் விதைத்தவள் இந்தத் தாய். இவளுடைய ஆசை தன் மகன் ஒரு மௌல்வியாக வேண்டும் என்பது.

ஆனால் தனது பன்னிரண்டாம் அகவையில், எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஒரு படைத்துறைப் பள்ளியில் சேர்ந்துவிட்டான் கமால். நுழைவுத் தேர்விலே கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கமால் கூறிய விடைகள் வெடிக்குழலிலிருந்து கிளம்பிய குண்டுகள் போலிருந்தனவாம். படைத்துறைப் பள்ளியில் ஒழுங்கு பேணுதலிலும் சுறுசுறுப்பிலும் முதல்வனாயிருந்தான். மாணவர்கள் அன்புடனும் மதிப்புடனும் முஸ்தபாவிடம் நடந்து கொண்டனர். மூன்றாம் ஆண்டிலேயே ஒரு மாணவ ஆசிரியனாகப் பணி அமர்த்தப் பெற்றான் முஸ்தபா. படிப்பிலும் தனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் இம்மியும் இவன் பிசகியது இல்லை.

படைத்துறைப் பயிற்சி நிறைவடையும் காலத்திலேயே துருக்கியின் அரசியல் மீதும் பொதுமக்கள் அடையும் இன்னல்கள் மீதும் பெரும்நாட்டம் கொண்டான். சமூக அவலங்கள் இவன் பார்வையில் பட்டன. துருக்கிய மக்களைத் தட்டி எழுப்பும் நூல்கள் பல வெளிவந்த வண்ணம் இருந்தன. “துருக்கியனே எழுந்திரு” என்று பாவலர்கள் பாமுழக்கம் எழுப்பினர்.

“நாமிக் கெமால்” என்ற துருக்கியப் பெரும்பாவலன் தன் உணர்வு தெறிக்கும் பாக்களால் துருக்கிய சமுதாயத்தைத் தட்டி எழுப்பினான். ஆனால் இவனுடைய பாடல்களை அரசு தடுத்தது. மக்கள் எல்லோரும் இப்பாவலனின் பாடல்களை எல்லா இடத்திலும் பாடினார்கள்.

ஏன் தேசிய விழிப்புணர்வு நூல்களைப் படிக்கக்கூடாது? நாமிக் கெமாலின் பாடல்களை ஏன் பாடக்கூடாது? முஸ்தபா கமாலின் உள்ளத்தில் வினாக் கணைகள் எழுந்தன. புரட்சி மனப்பான்மை கொண்ட பலரையும் ஒன்று சேர்க்க வேண்டும்; ஓர் அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தான். இதன்படி உருவானதுதான் “வாதன் சங்கம்”. “தந்தையர் தேசச் சங்கம்” என்பது இதன் பொருள்.

சங்கத்தின் செயல்பாடுகளை உளவுத்துறை ஒற்றறிந்தது. தன் தோழர்களுடன் சிறைப்படுத்தப்பட்டுக் கான்சுடாண்டி நோபிள் சிறையில் அடைக்கப்பட்டான் கமால்.

தான் பெற்ற படைப் பயிற்சியின் மூலம் படைத் தலைவனாகி இருந்தவன் இப்போது சிறையாளி ஆனான். தோழர்கள் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டனர். சிறையில் பூச்சிக்கடியும் எலிக் கடியும் நல்ல உணவு இல்லாமையும் நிலவின. இருந்தும் கமால் மனந் தளரவில்லை.

இந்நிலையில் புறச்சூழல்கள் கமாலின் சிறைவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. துருக்கிப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சிரியாவில், திரியூசெஸ் இனத்தார் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். இந்தக் கலகத்தை அடக்கும்படி சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகருக்கு அனுப்பப்பட்டான் கமால்.

இங்கிருந்துதான் இவனுடைய மறைமுகச் செயல்பாடுகள் தொடங்கின. வாதன் சங்கத்திற்குப் பணியாற்றத் தொடங்கினான். படைத்துறையிலிருந்த பலருக்கும் தீவிர எண்ணங்கள் இருந்தன. எனவே அவர்களின் ஒத்துழைப்பைத் திரட்டினான். மேனாடுகளில் கல்வி பயின்ற இளைஞர் பலர் துருக்கியின் சீரழிவைக் கண்டு கொதித்துக் கொண்டிருந்தனர். தேசத்திற்குப் பயன்படாத கல்விமுறையைத் தூக்கி எறிய அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் முஸ்தபாவின் தலைமையில் செயல்படத் தொடங்கினர்.

சிரியாவில் அரேபியரின் ஒத்துழைப்பைப் பெற முடியாததால் மாறுவேடத்தில் சலோனிகாவுக்குச் சென்று புரட்சிக்கான வேலைகளைச் செய்தான்.

அரசிருக்கையில் வீற்றிருந்த சுல்தான் மேனாட்டு எண்ணங்கள் துருக்கிய சமுதாயத்தின் மீது படியக்கூடாது என எண்ணினான். தேசிய உணர்வைத் தூண்டுபவர்கள் தேசத்துக்கும் சுல்தானுக்கும் பகைவர்களாகக் கருதப்பட்டார்கள். வாதன் (தந்தையர் நாடு) என்ற சொல்லை யாரும் பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டான்.

பிற்போக்கு ஆட்சியை அகற்றுவதற்குப் பல்வேறு குழுக்கள் உருவாயின. துருக்கிய இளைஞர் குழு, துருக்கிய இளைஞர் இயக்கம், ஒன்றிப்பு முன்னேற்றக் குழு, பெர்லின் குழு, பாரிஸ் குழு எனப் பல்வேறு குழுக்கள் தோன்றின. சுல்தானின் அரசு தேச மக்களின் விடுதலை எழுச்சியை அடக்குவதில் முனைந்து நின்றது. ஆனால் அயலாருடைய ஆசைகளுக்கு இணக்கம் காட்டுவதில், அயலாருக்குத் துருக்கியின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில், அது தயக்கம் காட்டவில்லை.

புரட்சி மெல்ல மெல்லத் தலை எடுக்கத் தொடங்கியது. கமால் மிகவும் எண்ணிப் பார்த்து அடிகளை எடுத்து வைத்தான். புரட்சியை உண்டாக்கி விடுவது எளிது. அதனை வெற்றிப் போக்குடன் கொண்டு நடத்துவது மிகவும் கடினம் என்பது கமாலின் எண்ணம்.

இளைஞர் குழுவினர் புரட்சி என்ற பெயரில் சில ஆரவாரங்களிலும் ஆடம்பரங்களிலும் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இவை முறைகேடாகத் தோன்றத் தொடங்கின. மக்களின் மனநிலையை முதலீடாக்கிப் பிற்போக்காளர்கள் எதிர்ப்புரட்சியைத் தூண்டிவிட்டனர. 1909ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ஆம் நாள் கான்ஸ்டாண்டி நோபிளில் இந்தக் கலகம் தொடங்கியது.

உடனே சலோனிகாவிலிருந்த இளைஞர் குழு ஒரு பெரும்படையைத் திரட்டிக் கொண்டு 1909 ஏப்ரல் 24ஆம் நாள் கான்ஸ்டாண்டி நோபிளில் நுழைந்தது. படைத் தலைவர்களில் முஸ்தபா கமாலும் ஒருவன். எதிர்ப்புரட்சிப் படைகள் ஒடுக்கப் பட்டன. பாராளு மன்றத்தின் தீர்மானப்படி சுல்தான் சிறை வைக்கப் பட்டான்.

புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவ்வப்போதைய நிலைமைக்கு ஏற்ற அணுகுமுறையைக் கமால் மேற்கொண்டான். தேசிய எழுச்சியில் மதவாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அயலாரின் மேலாண்மை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரப்பப்பட்டது.

ஒரு குழப்பமான சூழ்நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட என்வர் பாஷா, ஜெர்மானிய உதவியுடன் துருக்கியப் படையை வலுப்படுத்த வேண்டும் என எண்ணினான். ஜெர்மன் படைத் தளபதியிடம் துருக்கியின் படைகளைச் சீர் திருத்தியமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். இந்த ஏற்பாடு துருக்கியின் வருங்கால வாழ்வைச் சீரழித்துவிடும் என்று கமால் கூறினான். ஒரு தேசத்தின் படைத்துறையைச் சீரமைக்கும் பொறுப்பை அயலாரிடம் விடுவது தற்கொலைக்குச் சமமானது என்று கூறி என்வரின் முடிவை உறுதியாக எதிர்த்தான் கமால். கமாலின் கருத்து தன்னுரிமை உள்ள ஒவ்வொரு தேசமும் நெஞ்சில் நிறுத்த வேண்டியதாகும்.

1915ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் நாள் நேசக் கட்சியின் போர்க்கப்பல்களை எதிர்த்துத் தாக்கி மூழ்கடித்தது துருக்கி. இந்நிலையில் பிரிட்டன் துருக்கியைத் தாக்க நூறாயிரம் வீரர் கொண்ட படையுடன் வந்தது. மூன்று மாதக்காலம் போர் நீடித்தது. 1915 டிசம்பர் 19ஆம் நாள் பிரிட்டீசு படைகள் விரட்டியடிக்கப்பட்டன. இதைச் செய்தவர் லெப்டினண்டு கர்னல் முஸ்தபா கமால் பாட்சா.

இதன் பின் பல்வேறு நிகழ்வுகள்.

கமால படைத்துறையின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டான்.

துருக்கி அவமானப்படுத்தப்படுவதும், இகழப்படுவதும கமாலை வேதனைப்படுத்தின. அனட்டோலியா மாநிலம் முழுவதும் சென்று கருத்துரை ஆற்றினான்.

“தொல்பெருமை வாய்ந்த நம் துருக்கியப் பேரரசை அயலார் பங்கு போட்டுக்கொள்ளப் போகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பொறுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? கை கட்டிக் கண் மூடிக் கடவுளைத் தொழுது கொண்டிருந்தால் மட்டும் விடிவு கிடைத்துவிடாது. அல்லது அயலார் யாரேனும் வந்து நம்மைக் காப்பாற்றிக் கரையேற்றி விடுவார்கள் என்ற எண்ணமும் உங்களுக்கு வேண்டாம்” என்று கமால் முழக்கம் செய்தான். துருக்கியின் விடிவுக்காக நாடு முழுதும் சென்று கருத்துரை ஆற்றினான். ஆட்களையும் அமைப்புகளையும் ஒன்று திரட்டினான். சிவாஸ் என்ற ஊரில் பொது மாநாட்டைக் கூட்டினான். ஒவ்வொரு மாவட்டமும் மூன்று பேராளர்களை அனுப்ப வேண்டும் என்று படைத்தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கட்டளை அனுப்பினான். இது சட்ட முறையிலான அரசு மீது தொகுக்கப்பட்ட போராகத் தோன்றியது. உடனே உள்துறை அமைச்சர், கமாலுடன் எவரும் எத்தகைய தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாதென்றும், அப்படி வைத்துக்கொள்வது தேசப்பகை குற்றமென்றும் கட்டளை பிறப்பித்தான். கமால் அரச வஞ்சகனாக அறிவிக்கப்பட்டான்.

1919 ஜுலை 23இல் எர்செரூம் நகரில் ஒரு மாநாட்டைக் கூட்டினான் கமால். இதில் படைத் தளபதிகள், படைத்துறை அலுவலர்கள், பொதுத்துறை அலுவலர்கள், சமயத் துறையினர், மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் கமால் பேசினான் :

“நமது தாய்நாட்டுக்கு முழு விடுதலை வேண்டும் என்பதே நம் நோக்கம். தன்னுடைய மானத்தையும் வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ளத் தீர்மானித்துவிட்ட ஒரு மக்கட் சமுதாயத்தை எந்த ஆற்றலும் அடக்கி வைக்க முடியாது. ஒரு தேசம் அதிகாரத்தைத்தானே வலிய விட்டுக் கொடுத்து விடுமானால், அஃது அடிமை நாடாகவே கருதப்படும். மானந்துறந்து வாழ்வதை விட மானத்தோடு மரிப்பது மேலானது. துருக்கி மண்ணிலிருந்து ஒரு விரற்கடை அளவுகூட நாம் எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. துருக்கிய சமுதாயத்தைப் பிளவுபடுத்தவும் நாம் அனுமதிக்க மாட்டோம். அதேசமயம் துருக்கிக்குச் சொந்தமல்லாத நிலப்பரப்புகள் எவையேனும் இருக்குமானால், அவற்றை உரியவரிடத்தில் ஒப்புவித்துவிட ஆயத்தமாய் உள்ளோம்” என்று பேசிப் போராட்ட இலக்கைத் தெளிவுபடுத்தினான். மாநாடு முஸ்தபா கமாலை புரட்சிக் குழுவின் தலைவனாகத் தேர்வு செய்தது.

துருக்கியின் உரிமையையும், ஒருமையையும் காக்கவும், அயலக வல்லாட்சிகளுக்கு அடங்கிக் கிடக்கும் போலி அரசாட்சியை அகற்றவும், முழுத் தன்னுரிமை மக்களாட்சியை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானஙகள் சுல்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. மாநாட்டில் கலந்து கொண்டவர்களைச் சிறைப்படுத்தி இழுத்து வருமாறு அலி கலீபுக்கு சுல்தான் உத்தரவிட்டான். ஆனால் பெரும்படையுடன் வந்த அலி கலீபை, முஸ்தபா கமால் விரட்டியடித்தான். அத்தோடு தொலைவரித் துறையை (தந்தித் துறையை) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். தேசிய இயக்கத்தின் தலைமையகத்தை அங்கோரா நகருக்கு மாற்றிக் கொண்டான். பாராளுமன்றத் தேர்தலில் கமாலின் தேசியக் கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்றது. துருக்கி உயிர்த்தெழுவதைக் கண்டு வல்லரசுகள் சினம் கொண்டன.

1920 மார்ச் 15ஆம் நாள் பிரிட்டீசு படை சுல்தானுக்கு ஆதரவாகக் கான்ஸ்டாண்டி நோபிளுக்குள் நுழைந்தது. தேசியக் கட்சியின் ஆதரவாளர்களைத் தளைப்படுத்திச் சிறையிலடைத்தது. படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் பிரிட்டீசார் வசமாயின.

16-3-1920இல் கமால் ஒரு சுற்றறிக்கை விடுத்தான். துருக்கிய மக்கட் சமுதாயத்தின் பேராளனாக இருந்து தெரிவிப்பதாக இந்த அறிக்கையை அனுப்பினான். தலைநகர் கான்ஸ்டாணடி நோபிளிலிருந்து பிறக்கும் எந்த உத்தரவுக்கும் யாரும் கீழ்ப்படியக்கூடாது. அங்குள்ள அமைச்சரவை அயலவர்களின் பொம்மைக் கொலு என்று விளக்கினான். அங்கோரா நகரிலிருந்து தேசியப் புரட்சி அரசு ஒன்றை உருவாக்கினான். புரட்சி அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வந்தது. கான்ஸ்டாண்டி நோபிளில் இருந்த சுல்தானின் அரசு அயல்நாடுகளோடு செய்து கொண்டிருந்த உடன்படிக்கைகள் யாவும் செல்லாதவை என்று புரட்சி அரசு சட்டம் செய்தது. பழைய அரசுக்குக் கிடைத்து வந்த வரிப்பணங்கள், சுல்தானின் சொந்த நிலங்களிலிருந்து பெறப்பட்ட வருமானங்கள், மத நிறுவனங்களிலிருந்து கிடைத்து வந்த வருமானம் அனைத்தும் அங்கோரா நகரிலிருந்த புரட்சி அரசுக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கோரா அரசின் எதிரிகள் தேசத்தின் பகைவர்கள் என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஐரோப்பிய வல்லரசுகளால் மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் வந்துகொண்டே இருந்தன. இந்நிலையில் உருசிய நாடு துருக்கிக்குப் பணமும படைக்கலமும் கொடுத்து உதவியது. தொடர்ந்து பல்வேறு போர்களும், மோதல்களும். இறுதியில் தன்மானத்தோடும் தன்னுரிமையோடும் துருக்கி எழுந்து நின்றது. 1923இல் கூடிய லாசேன் மாநாட்டு முடிவின்படி, அயலார் கைப்பற்றியிருந்த துருக்கிய நிலப்பரப்புகள் மீண்டும் துருக்கிக்கே வந்தன. துருக்கியின் மேலாளுமையிலிருந்த அயல் நிலங்கள் உரியவர்களுக்கு விட்டுத் தரப்பட்டன. அயலார் துருக்கியில் பெற்றிருந்த சிறப்பு உரிமைகள் நீக்கம் செய்யப்பட்டன. லாசேன் உடன்படிக்கையின்படி, துருக்கியில் அயலார் ஆளுமை ஒழிந்தது. துருக்கியின் மீதான பகைமை உணர்வுகளும் மறைந்தன. துருக்கியின தலை நகரானது அங்கோரா.

தேசத்தின் அதிகாரம் முழுவதும் தேச மக்களின் கையில் வந்துவிட்டபடியால் இனி சுல்தான் தேவையில்லை என அறிவித்தான் கமால். ஏழு நூற்றாண்டுகளாக வாழையடி வாழை என வளர்ந்து வந்த உதுமானிய அரச பரம்பரை 1-11-1922இல் உலர்ந்து உதிர்ந்தது.

1924 மார்ச் முதல் நாளில் பாராளுமன்றத்தில் மதம் வேறு, அரசு வேறு எனப் பிரித்துக் காட்டினான் கமால். மார்ச் 4ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, கலீபாவும் கலீபாவின் பரம்பரை யினரும் துருக்கியில் வாழக்கூடாதென்றும் பத்து நாட்களுக்குள் வெளியேறிவிட வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. 4-3-1924இல் கலீபா அப்துல் மஜீத், உதுமானிய அரச பரம்பரையைச் சேர்ந்த முப்பது பேருடன் நாட்டை விட்டு வெளியேறினான். இது இசுலாமிய வரலாற்றிலேயே முக்கிய நிகழ்வாகும். மேலும் நிலவருமானத்தில் பத்தில் ஒரு பாகம் மத நிறுவனங்களுக்கு அளித்து வந்த நடைமுறையும் நீக்கம் செய்யப்பட்டது.                                                                                  

தொடரும்...

Pin It