படகு

மீனுக்கும்

மீனவனுக்கும்

ஒரே பாடை

- கவிஞர் தாமரை

கவிஞரின் அவலக் கவிதை பொதுவாக மீனவனைச் சுட்டிய போதும், அது குறிப்பாகச் சிங்களக் கடற்படையால் குண்டடிபட்டுச் சாகும் தமிழக மீனவனுக்காக எழுதியது. இப்போதெல்லாம் தமிழ் நாட்டு மீனவன் சிங்களப்படையினரால் மட்டும் சாவதில்லை. இத்தாலி, அமெரிக்கக் கடற்படையினராலும் சுடப்பட்டுச் சாகின்றான். துப்பாக்கிச் சூடும் சாவும் அவனுக்குப் பழக்கப்பட்ட அன்றாட நடைமுறைகளாய் மாறிப் போயின.

கடந்த (2012) பிப்ரவரி மாதம் 15ம் நாள் இத்தாலிச் சரக்குக் கப்பல் ஒன்றின் பாதுகாப்புப் படையினர் இரண்டு மீனவர்களைச் (ஒருவர் தமிழர், ஒருவர் மலையாளி) சுட்டுக் கொன்ற துயரத்திலிருந்து தமிழர்கள் இன்னும் விடுபடவில்லை. அதற்குள், ‘அமெரிக்கக் கடற்படையினர் தமிழ் மீனவர் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர்’ என்ற செய்தி காயம்பட்ட தமிழர் நெஞ்சத்தை மேலும் புண்ணாக்கியுள்ளது. ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்னும் பழமொழி தமிழனுக்கென்றே எழுதப்பட்டதைப் போலத் தோன்றுகிறது.

சூலை 16ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், முத்து முனிராஜ், கண்ணன், முருகன் ஆகிய தமிழ் மீனவர்களோடு அரேபியர் இருவரும் இணைந்துகொள்ள அனைவரும் துபாயில் உள்ள ‘ஜபேல் அலி’ துறைமுகம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் படகுக்குச் சற்றுத் தொலைவில் அமெரிக்காவின் ‘யு.எஸ்.என்.எஸ். ரப்பா ஹன்னோக்’ என்னும் போர்க்கப்பல் நின்று கொண்டிருந்தது. அப்போர்க்கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் மீன்படகொன்று அருகில் வருவதைக் கண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் சேகர் குண்டடிபட்டு, படகிலேயே உயிர் துறக்கிறார். முத்து முனிராஜ், கண்ணன், முருகன் ஆகிய மூவரும் படுகாயமடைகின்றனர்.

இந்த நிகழ்வு குறித்துக் கருத்து வெளியிட்ட துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகம், “ஜபேல் அலி துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படை வீரர்கள் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் யாரும் நடமாட அனுமதியில்லை. படை வீரர்களின் கப்பலுக்கு எரிபொருள் கொண்டு வந்த கப்பலில் இருந்துதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எரிபொருள் கப்பலுக்கு இடையூறு நிகழும்போது துப்பாக்கியால் சுட்டுத் தற்காத்துக் கொள்ள படை வீரர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மீன்பிடிப் படகு விலகிச் செல்லாமல் கப்பலை நோக்கி வந்த காரணத்தால் சுட நேர்ந்தது. இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. நிகழ்வு நடைபெற்ற இடமும் சர்வதேசக் கடற்பகுதி என்பதால் இதில் எவ்விதச் சட்ட விதிகளும் மீறப்படவில்லை” என்று நீண்டதொரு விளக்கம் அளித்திருக்கிறது.

ஆனால், நிகழ்வு நடந்த பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐக்கிய அரபு நாட்டு அதிகாரிகள், “அமெரிக்கக் கடற்படையினர் எந்தவிதமான எச்சரிக்கையையும் விடுக்காமல்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கடற்பகுதி சர்வதேசக் கடற்பகுதியல்ல, துபாய் பகுதியைச் சார்ந்தது” என்று மறுப்பறிக்கை தந்துள்ளனர்.

ஐக்கிய அரபு நாடுகளின் மறுப்பறிக்கைக்குப் ‘பெரியண்ணன்’ அமெரிக்காவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இறந்து போனவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு சரி! விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான் கருத்துச் சொல்ல முடியுமென்று அறிவித்துவிட்டது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கொண்ட மிக நவீனமானவை. பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பாலும் எத்தகையதொரு நடமாட்டத்தையும் துல்லியமாகக் கண்டறியக்கூடிய ஒளிப்படக் கருவிகள், அவற்றில் பொருத்தப்பட்டுள்ளன. நவீன ரக ஆயுதங்களோடு உள்ள ஒரு போர்க்கப்பலை சிறிய படகு மோதி அழித்துவிடும் என்பது நகைப்பிற்குரிய செய்தியாகும். எப்படியோ, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொலை வெறிக்கு உயிர் ஒன்று பலியாகிவிட்டது. அதுவும் தமிழன் உயிர் என்றால் கேட்பதற்கு நாதி இல்லையே! முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலக்கம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கண்பொத்தி விரல் சூப்பி வேடிக்கை பார்த்த நாடுதான் அமெரிக்கா என்பதைத் தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

சிங்களக் கடற்படையினரால் 600க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டபோது இந்திய அரசு எத்தகைய மவுனத்தைக் கடைப்பிடித்ததோ, அத்தகையதொரு மவுனத்தையே அமெரிக்கக் கப்பற் படைத் துப்பாக்கிச் சூடு நிகழ்விலும் கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை எவ்விதத் தயக்கமும் இன்றி ஏற்றுப் பின்பற்றும் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கவில்லை. ஒன்றுமில்லாத தீர்மானத்தை மேலும் ஒன்றுமில்லாமல் செய்வதற்கு பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. அஃது ஒன்றும் இல்லாமல் ஆன பிறகே ஆதரித்தது.

இலங்கை அரசைப் போர்க்குற்றவாளியென்று அமெரிக்கத் தீர்மானம் எந்தவகையிலும் குற்றம் சாட்டாத நிலையிலும் இந்திய அரசு அமெரிக்காவின் பக்கம் நிற்கவில்லை. இலங்கையின் பக்கமே நின்றது. ஆனால் அமெரிக்கக் கப்பற்படைத் துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் தன் சொந்த நாட்டுக் குடிமகன் பக்கம் நிற்க மறுக்கிறது. அமெரிக்காவின் பக்கமே சாய்கிறது. தமிழினப் படுகொலையை அமெரிக்கா செய்தால் என்ன, இலங்கை செய்தால் என்ன, யார் செய்தாலும் இந்திய அரசு மகிழ்ச்சியடையவே செய்யும். கொன்றவர் பக்கமே நிற்கும்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்காவை வெளிப்படையாகக் கண்டிக்க மறுக்கிறார். துரதிருஷ்டம் என்கிற ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு அமைதி காக்கிறார். தமிழர்களையும் அமைதி காக்கும்படி சொல்லாமல் சொல்கிறார். ஆனால் இத்தாலி நாட்டுச் சரக்குக் கப்பல் படைப்பிரிவினர் இரண்டு பேரைச் சுட்டுக்கொன்ற சிக்கலில் இந்தியா காட்டிய அக்கறையை அனைவரும் அறிவர். அதை மீண்டும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டிருந்ததைப் போல் இத்தாலிப் பாதுகாப்புப்படைத் துப்பாக்கிச் சூட்டில் பலியான இரண்டு மீனவர்களில் ஒருவர் தமிழர், மற்றொருவர் மலையாளி. தமிழரின் பெயர் அஜீஸ் பிங்கி; கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறைப் பகுதியைச் சேர்ந்தவர். மலையாளி மீனவரின் பெயர் செலஸ்டின்; கேரளா கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். இறந்து கிடக்கும் உடலை இனம் பார்த்து அழுகின்ற பண்பு தமிழர்களுக்கு எப்போதும் இல்லை. குசராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அந்த மக்களின் கண்ணீரில் பங்கேற்று பெருமளவு நிதி திரட்டித் தந்தவர்கள் தமிழர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்திய அதிகாரப் பீடத்தில் மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதை தெரியப்படுத்தவே இனம் பிரித்துக் காட்டுகிறோம். அவ்வளவே!

துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழர் அஜீஸ் பிங்கி குடும்பத்திற்கு உரு. 5 இலக்கம் இழப்பீடு தந்ததோடு தமிழக அரசு தன் கடமையை முடித்துக் கொண்டது. தமிழக அரசியல் கட்சிகளும் இரங்கல் அறிக்கைக்கு மேல் ஒன்றும் செய்து விடவில்லை. ஆனால் கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டியோ இறந்துபோன குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை அளித்ததோடு இந்தச் சிக்கலை விட்டுவிட விரும்பவில்லை. மலையாளி ஒருவர் இறந்து போயுள்ளார், அது போதாதா அவருக்கு? ‘குற்றவாளிகள் யாரையும் தப்பித்துச் செல்லவிட மாட்டோம். மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலியக் கப்பற்படை வீரர்களைக் கைது செய்வோம்’ என்று சூளுரைத்தார். இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியோ அவர் பங்கிற்கு, ‘இந்திய மீனவர்கள் இந்தியக் கடற்பரப்பில்தான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதனால், இத்தாலிக்கப்பல் காவலர்கள் மீது இந்தியச் சட்டப்படி வழக்குத் தொடர்வோம்’ என்று திருவனந்தபுரத்தில் பேட்டியளித்து தன் இனப் பற்றை உறுதிப்படுத்தினார்.

இத்தாலி வீரர்களை விசாரணைக்கு அனுப்பி வைப்பதற்கு இத்தாலி அரசு ஒத்துழைக்க மறுப்பதை அறிந்துகொண்ட கேரள அரசு அச்செய்தியை மன்மோகன்சிங்குக்குத் தெரிவிக்கிறது. உடனே தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், உள் துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இத்தாலி வீரர்கள் மாசிமிலனோலத் தோர், சல்வடோர் ஜிரான் ஆகிய இருவரையும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவும் விசாரணை நடத்தவும் கேரள அரசிற்கு ஆணை பிறப்பிக்கிறார். கேரள அரசும் உடனடியாக இத்தாலியரைக் கைது செய்து சிறையி லடைக்கிறது.

இதுபோன்றதொரு வியத்தகு நிகழ்வு தமிழக மீனவர்கள் சிங்களவன் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானபோது நடந்ததுண்டா?

தி.மு.க தலைவர் கருணாதியும் அ.தி.மு.க தலைவி செயலலிதாவும் கடிதம் எழுதி எழுதிக் களைத்துப் போனார்களே ஒழிய உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்திய அரசை மிரட்டியோ, அல்லது நயம்படப் பேசியோ சிங்களக் கடற்படையினர் மீது ஒரு வழக்காவது முன்னாள் இந்நாள் முதல்வர்களால் பதிவு செய்ய முடிந்ததா? ஒரு சிங்கள வீரனையாவது கைது செய்ய முடிந்ததா? இராமேசுவரம் தமிழ் மீனவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடாதவர்கள் இப்போது துபாய்த் தமிழ்மீனவர்களுக்கு நீதி கேட்டுப் போராடுவது என்பது வெற்று ஆரவாரமே! கைதேர்ந்த நடிப்பே!

அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டுச் சிக்கலில் சி.பி.எம். போடும் இரட்டை வேடம் இருக்கிறதே அது மற்ற எல்லாக் கட்சிகளையும் மென்று தின்று ஏப்பம் விடுவதாய் உள்ளது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு கைதான காட்சி எல்லோரையும் புல்லரிக்கச் செய்துள்ளது. அக்கட்சித் தலைமைக் குழு ஒரு படி மேலே போய் ‘அமெரிக்காவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கண்டிக்காதது ஏன்?’ வெறும் துருதிருஷ்டவசமானது என்று சொன்னால் போதுமா?’ என்று வினாத் தொடுத்தது அமெரிக்காவோடு உள்ள இராணுவ ஒத்துழைப்புக் காரணமாகத்தான் கோழைத்தமான, மிகவும் குழைவான அணுகுமுறையை இந்திய அரசு மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிங்கள இனவெறிப்படையால் தமிழ் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் இந்திய அரசை சி.பி.எம். தலைமைக்குழு எப்பொழுதாவது இப்படிக் கண்டித்த வரலாறு உண்டா? ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கை அரசிடம் கோழைத்தனமாக நடக்கும் இந்திய அரசென்று ஒரு குற்றத் திறனாய்வு உண்டா? அமெரிக்காவோடு இந்தியக் கடற்படை கூட்டுப் பயிற்சி செய்வதைக் கண்டித்து அறிக்கை விடும் தலைமைக் குழுவிற்கு இந்திய சிங்களக் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கண்ணில் தெரியவே தெரியாதா? அதன் கமுக்கம் என்ன? மார்க்சிய இயங்கியல் என்ன?

துபாயில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக சி.பி.எம். குரல் கொடுப்பதாக யாராவது கருதினால் அவர்கள் ஒன்றுமே தெரியாத ஏமாளிகளாவர். அமெரிக்கா வல்லாதிக்க எதிர்ப்பு அரசியல் என்று அது அரங்கேற்றும் நாடகத்திற்கு இந்தப் படுகொலையைப் பயன்படுத்திக்கொள்கிறது. வளைகுடாப் பகுதிகளில் இராணுவக் குவிப்பை மேற்கொள்வதன் மூலம் ஈரானை அடிபணியவைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறதாம் இந்தப் புரட்சிகரக் கட்சி.

வல்லாதிக்கத்தின் பிறவிப் பண்பே அதன் விரிவாதிக்கக் கொள்கைதான் என்று மார்க்சியம் சொல்கிறது. அமெரிக்க வல்லாதிக்கத்தின் விரிவாக்கக் கொள்கை வெறிக்குச் சற்றும் குறைந்தது அல்ல சீன வல்லாதிக்க அரசின் விரிவாதிக்கக் கொள்கை வெறி. சீன வல்லாதிக்க அரசு இந்திய அரசைச் சுற்றி ஒரு முத்து மாலையைப் போட்டுள்ளது. மியான்மர் சிட்வேயிலும், வங்க தேசம் சிட்டகாங்கிலும், பாகிஸ்தான் குவாடாரிலும், இலங்கை அம்மாந் தோட்டையிலும் சீன அரசு துறைமுகங்களை அமைத்துள்ளது. வணிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டதாகச் சீன அரசு இப்போதைக்குச் சொன்னாலும் எதிர்காலத்தில் அது விரும்பினால் அவற்றைக் கடற்படைத் தளங்களாக மாற்றிக் கொள்ள முடியும். இப்பேராபத்து அதில் அடங்கியே உள்ளது. இந்தியப் பெருங்கடலில் வடக்குப்புறம் சீனா தனது கடல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவே ‘முத்துமாலை’த் திட்டத்தை உருவாக்கியுள்ளது என்பது தெளிவு.

இலங்கையில் சீனா எப்போதுமில்லாத வகையில் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பல்வேறு நிதியுதவிகளை அளித்துத் தன் செல்வாக்கைப் பெருக்கி வருகிறது. தெற்காசியாவின் வல்லரசாகத் துடிக்கும் இந்தியா வல்லாதிக்க அரசும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்புப் போருக்கு உறுதுணையாக நின்றதுடன் இப்பொழுது தன் பக்கம் இலங்கையைத் தக்க வைப்பதற்குப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரளவு நிதியுதவியை வாரி வழங்கி வருகிறது. அந்நிதி தமிழர் நலம் நோக்கி அல்ல என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

வளைகுடாப் பகுதிகளில் முற்றாளுமை செலுத்த விரும்பும் அமெரிக்காவைப் போலவே, தெற்காசியப் பகுதிகளில் முற்றாளுமை செலுத்த இந்தியாவும், சீனாவும் போட்டி போடுவது குறித்து சி.பி.எம்மிற்கு எந்தவொரு புரிதலும் கிடையாது. சீனாவைச் சோசலிச மாதிரியாகவும், இந்தியாவை தேசபக்த நாடாகவும் சி.பி.எம் கருதுவதால் வந்த குழப்பமே இது.அமெரிக்க வல்லாதிக்க எதிர்ப்பும் கூட வெறும் பாவனைதான். அமெரிக்காவோடு உறவு வைக்கும் ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் முட்டுக் கொடுத்துக் காப்பாற்றுவதுதான் இப்புரட்சிக் கட்சியின் முதன்மையான குறிக்கோளாகும். தமிழீழச் சிக்கலிலும், தமிழ் மீனவர் சிக்கலிலும் காங்கிரசு கிழித்த கோட்டைத் தாண்டாத பத்தினிப் பெண்தான் சி.பி.எம். இது அரசியல் தெளிந்தோர் அனைவரும¢ அறிந்த உண்மை.

தமிழ்த் தேசிய இனத்திற்கு இறையாண்மை இல்லை. தமிழ்நாட்டுக்கென்று வெளியுறவுக் கொள்கை இல்லை. அதனால் தமிழ் மீனவனைக் காப்பாற்ற வழியும் இல்லை. தமிழ்நாட்டிற்கு முழு இறையாண்மையுள்ள ஓர் அரசு வேண்டும். அதற்காகக் களம் காண்போம்.அப்போதுதான் இலங்கையோ, இத்தாலியோ, அமெரிக்காவோ, தமிழ்நாட்டு மீனவர்களிடம் வாலாட்ட முடியாது. வாலாட்ட விரும்பவும் விரும்பாது; துணியவும் துணியாது.

Pin It