அண்ணாவின் அரசியல்

திராவிட விடுதலையும் தேர்தல் வழிமுறையும் 

         திராவிட நாட்டு விடுதலையைத் தன் இலக்காகவும், தேர்தல் அரசியலையே தன் வழிமுறையாகவும் அறிவித்துக் கொண்ட அண்ணா, இவ்விரண்டையும் சேர்த்து ஒரு முடிச்சுப் போட்டார். இவற்றுள் எந்த ஒன்றைப் பற்றிப் பேசினாலும் மற்றொன்றையும் இணைத்தே பேசினார். அண்ணா தமது இலக்கையும் வழிமுறையையும் எப்படி அனைவரும் ஏற்கும்படி இணைத்துக் காட்டினார் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. அண்ணாவின் தேர்தல் வெற்றிகள் அனைத்தும் அவர் ஊட்டிய இன உணர்வுக்கும் திராவிட நாட்டு விடுதலை உணர்வுக்கும் கிடைத்த வெற்றிகள்தாம்.

      தேர்தல்முனையில் வெற்றிகளைக் குவித்த அதே வேளையில் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றங்களும் சமரசங்களும் செய்து கொள்ளப்பட்டன. தேர்தல் வெற்றிகளை உறுதி செய்ய அண்ணாவுக்கு அவை தேவைப்பட்டன.

      அண்ணாவின் தேர்தல் அரசியல் முன்னெடுப்பில், ‘முதலில் திராவிடநாட்டு விடுதலையே குறிக்கோள்’, தேர்தலே வழிமுறை என வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் வெற்றிகளைக் குவிப்பதே தம்பிமார்களின் திராவிட விடுதலைப் பணியின் அளவு கோலாக அறிவுறுத்தப்பட்டது. அடுத்த நிலையில் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அனைத்துப் பிரிவினரின் வாக்குகளையும் திரட்டிக் கொள்வதற்குத் தடையாக இருந்த அடிப்படைக் கொள்கைகள் களைந்தெறியப்பட்டன. 1949 முதல் 1967 வரையிலான தி.மு.க.வின் வரலாறு புதிதாகத் தோற்றம் கொண்ட ஒரு கட்சி ஆட்சி பீடம் ஏறிய ஒரு வெற்றி வரலாறு மட்டுமல்ல, 1938இலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட தமிழின விடுதலை அரசியலின் பரிணாமத் தேய்மானம் குறித்த துயர வரலாறும் ஆகும்.

தேர்தல் களமும் திராவிடநாடு விடுதலையும்:

அண்ணா போட்ட முடிச்சு

      தேர்தல் முறையைக் கைக் கொண்டதாலேயே திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட மாட்டோம்; அதைப் பெறுவதற்காகத்தான் சட்டமன்றமே போகிறோம் - என்பதே அண்ணாவின் பேச்சு மற்றும் எழுத்துக்களின் சாரமாக இருந்தது. 1961இல் அண்ணா இப்படி எழுதினார்:

      “தம்பி சட்டமன்றம் செல்வது பொறுப்புணர்ந்து தான் கொண்ட கொள்கைக்கு வலுவூட்டும் நோக்குடனேதான்.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்-5, கடிதம் -147, 2.7.61, தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை, 2005, பக்.330)

      “தேர்தலில் ஈடுபட்டாலும் கழகம் விடுதலை இயக்கம் என்னும் மாண்பினை இழந்து விடாது; விடுதலைக் கிளர்ச்சியின் ஒரு கட்டமாகவே கழகம் தேர்தலில் ஈடுபடுவதைக் கொள்கிறது”

      “திராவிட நாடும் வேண்டாம் - வடநாட்டுப் பிடி பற்றிய கண்டனமும் எதிர்ப்பும் தேவையில்லை - காங்கிரசாட்சியின் கேடுபாடுகளையும் எதிர்க்கத் தேவையில்லை என்றால், தனிக் கொடியும், படையும், நடையும் எதற்கு!”     (மேலது பக்.343)

      திமுக விடுதலை இயக்கம்தான் என்றும், தேர்தலில் ஈடுபடுவது விடுதலைக் கிளர்ச்சியின் ஒரு கட்டம்தான் என்றும் திராவிடநாடு வேண்டாம் என்றால் தனிக்கொடியும் கட்சியும் தேவையில்லை  என்றும், அண்ணா இங்கு முழங்குவது கருத்துக்குரியது.

      1962இல் மூன்றாவது பொதுத் தேர்தலைச் சந்திக்குமுன் அண்ணா, தேர்தலில் இறங்கினாலும் திமுக ஒரு விடுதலை இயக்கம்தான் என்று உறுதிபடப் பேசினார்.

      “திராவிட முன்னேற்றக் கழகம் சட்டசபைக்குப் போக வேண்டியதன் அவசியம் என்ன?” - என்ற கேள்வியை எழுப்பி அதற்கு அண்ணா கூறிய பதில் அவருடைய பின்னாளையப் போக்கைப் பற்றி ஆய்வு செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

      கோவையில் சிறப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்து அண்ணா ஆற்றிய உரை இது:

      “திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டு விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சியே தவிர, திராவிட நாட்டை விடுவிப்பதற்காக ஏற்பட்ட கழகமே தவிர, அது சட்டசபையைக் கைப்பற்றி மந்திரிசபை அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வெறும் அரசியல் கட்சி அல்ல.” (நம் நாடு, 1-2.1.1962)

      “ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்தியத் தலைவர்கள் எப்படி ஆங்கில ஆட்சியில் சட்டசபைக்குச் சென்றார்க¼ளா அதைப் போலவே வடநாட்டு ஏகாதிபத்தியம் என்று நம்மால் கருதப்படுகின்ற இந்தியப் பேரரசு இருக்கின்ற நேரத்திலே நாம் சட்டமன்றங்களிலே அமர வேண்டும். சட்ட மன்றங்களில் அமருவதன் மூலம் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு நம்மாலான உற்சாகத்தைப் பெற முடியும் என்ற எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் நாமும் சட்டமன்றங்களுக்குச் செல்கிறோம்.”

       (மேலது: பேரரறிஞர் அண்ணா பேசுகிறார் - தொகுதி 1, பக்.413 -14)

      சட்டமன்றப் பதவியா அல்லது திராவிட நாடு விடுதலையா? - என்று வந்தால் திராவிடநாடு விடுதலைதான் முக்கியமேயயாழிய பதவிகள் அல்ல என்று அண்ணா அடித்துப் பேசினார்:

      “திராவிட நாடு இலட்சியத்தை விட்டுச் சட்ட சபைக்குச் செல்வது கண்ணை விற்றுவிட்டு, இரவிவர்மாவின் படத்தை வாங்குவதற்குச் சமமாகும். எனவே, தேர்தல் வெற்றி, தேர்தல் விளைவுகள் எப்படி ஆவதானாலும் சரி - திராவிட நாட்டுப் பிரிவினை என்பதிலே திராவிட முன்னேற்றக் கழகம் - ஒரு துளித் தயக்கமும் காட்டாது - தளர்ச்சியடையாது - விட்டுக் கொடுக்காது - விடாப் பிடியாக ஈடுபடும்...” (மேலது.)

      திமுக தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்ததை விமர்சித்தவர்களுக்கும் பதில் கூறி, தேர்தலில் பங்கெடுப்பதை அண்ணா நியாயப்படுத்தினார். குற்றச்சாட்டைச் சிலர் இப்படி வைப்பதாக அண்ணாவே குறிப்பிட்டார்.

      “திராவிட நாடு சட்டசபையில் இல்லை! சட்டசபை என்பது இந்தியப் பேரரசுக்கு உட்பட்டது. அதில் இருந்து கொண்டே திராவிடநாடு கேட்டுப் பெற முடியும் என்பது வெறும் சூது. பதவிப் பித்து கொண்டதனா லேயே, சட்டசபை நுழைய விழைகிறார்கள். பொதுமக்களை ஏய்த்திட, நமது பித்தை மறைத்திட திராவிடநாடு பெறப்போகிறோம் என்று பசப்புகிறார்கள்! நாட்டினரே நம்பாதீர்கள்! நல்லோரே நம்பாதீர்கள்! - என்று பேசுகின்றனர்.”

      (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 5, கடிதம் - 147, 6.8.1961, பக். 326)

      இத்தகைய குற்றச்சாட்டை மறுத்து, சட்டசபை நுழைவு என்பதே திராவிடநாடு கோரிக்கையை வலுப்படுத்தத்தான் என்ற கருத்தை அண்ணா முன் வைத்தார்.

      “திராவிட நாடு எனும் கொள்கையிலே பற்றுக் கொண்ட நிலையிலே அதற்கு ஆக்கம் தேடிட அரியதோர் வாய்ப்பாகச் சட்டசபை நுழைவினை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இது கண்டு மனம் பொறாதார், சட்டசபையிலா திராவிடநாடு என்று கடாவினர். கடுங்கோபம் பிறந்தது! பதவிப் பித்துக் கொண்டுதான், கழகத்தவர் சட்டசபை செல்லத் துடிக்கின்றனர் என்று கூறினர் - கூறினோர் சிறுமதியாளர்! என்று சினந்தெழத் தோன்றிற்று.”

      “இப்போதும் அந்தத் திராவிட நாடு கொள்கையிலே நம்பிக்கை இருக்கிறது... தம்பி! சட்டசபை நுழைவு குறித்துப் பொச்சரிப்புக் காரணமாகவோ பொறுப்பற்ற தன்மையாலோ, எவர் என்ன கூறிடினும், இதோ, இஃதன்றி வேறோர் விளக்கம் நாம் அளிக்க வேண்டுவதில்லை.

(மேலது, பக்.327)

      தேர்தல் அரசியலும். சட்டசபை நுழைவும்தாம் இந்தியாவுக்கு விடுதலையையும், முஸ்லீம்களுக்குப் பாகிஸ்தானையும் பெற வழி செய்ததாக அண்ணா வாதிட்டார்.

      “1939க்குப் பிறகுதான் இந்தியாவின் விடுதலைப் பிரச்சினை - ஒரு பிரச்சினை என்பதாக உலகத்தாரின் கண்களுக்குப் புலப்பட்டது. 1939ஆம் ஆண்டில், இந்தக் காங்கிரசார் எல்லாம் சட்டசபைகளில் நுழைந்து, இந்தியாவின் விடுதலை குறித்துப் பேசினார்கள்.”

      “ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கை, நமது திராவிடநாடு கோரிக்கையை விட மாற்றுக் குறைந்தது; முஸ்லீம்கள் - அவர்கள் பல இனத்தவராயிருந்தாலும் ஒரே மதத்தவர்கள் என்று கூறி, அவர்களுக்காக பாகிஸ்தான் கோரப்பட்டது.”

      “அந்த கோரிக்கை எப்படி ஈடேறிற்று? தேர்தல்கள் நடைபெற்ற போது, முஸ்லீம் லீக் அதில் கலந்து கொண்டது. பஞ்சாபில் முஸ்லீம் லீக் மந்திரி சபை ; சிந்து மாகாணத்திலும் லீக் மந்திரி சபை. மேலும் பல மாநிலங்களிலும் முஸ்லிம் லீகர்கள் சட்டசபை உறுப்பினராயிருந்து குரல் எழுப்பிக் கொண்டி ருந்தனர். இப்படிச் சட்ட மன்றங்களில் முழங்கப்பட்டபோது, பாகிஸ்தானின் கோரிக்கை மேலும் வலுப்பெற்று வெற்றி பெறும் வாய்ப்பைப் பெற்றது. இன்று உலகத்தில் வளர்ந்துள்ள சூழ்நிலை - இது போன்றே பிரச்சினைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தாலன்றி வெற்றி பெறுவது கடினம் என்பதுதான்.”

      “தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்கள் எப்படி இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிக்காமல் பதவிப் பிரமாணம் செய்ய முடியும்? அப்படிச் செய்தால் அதை எப்படி ஏற்பது? என்று சிலர் கேட்கின்றனர்.”

      “1939ஆம் ஆண்டிலும், 1946ஆம் ஆண்டிலும் ஆச்சாரியாரும், நேருவும், இன்ன பிற காங்கிரசாரும் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது மாட்சிமை தாங்கிய மன்னர்பிரானுக்கு விசுவாசம் தெரிவித்து விட்டுத்தான் பதவி ஏற்றனர். அதனாலேயே, மன்னரை இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று எவரும் கூறவில்லை. மன்னருக்கே கூடத் தெரியும் - இவர்கள் நமக்கு உள்ளன்போடு விசுவாசம் தெரிவிக்கவில்லை என்று.”

      “அதுபோல நாம் இப்போது இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிப்பது என்பது எந்த வகையானது என்பதை நாடு நன்கறிய முடியும்.”

      “தம்பி! சட்ட மன்றம் செல்வது பொறுப்புணர்ந்து தான் கொண்ட கொள்கைக்கு வலுவூட்டும் நோக்குடனேதான் என்பதைக் கொள்கைப் பற்றுள்ள எவரும் மறுக்க இயலாது...” (மேலது, பக்.328-330)

      1956 தேர்தலில் பங்கேற்பது என்ற முடிவை எடுத்த திருச்சி மாநாட்டை மாபெரும் வெற்றி என்றும், ஆற்றல் மிக்கதோர் அணிவகுப்பு நம் தாயக விடுதலைக்காகத் தயாராகி விட்டதை அறிந்தவன் என்பதால் தாம் அவ்வெற்றியை எதிர்பார்த்ததாகவும் அண்ணா எழுதினார்:

      “... இலட்சியப் பாதையிலே நாம் எத்துனை நெடுந்தூரம் முன்னேறி இருக்கிறோம் என்பதனை மட்டுமல்ல, குறிக்கோள் வெற்றி பெற, இன்பத் திராவிடம் காண, நாம் மேலால் செல்ல வேண்டிய பாதை அதிகமில்லை என்பதனையும் திருச்சி மாநில மாநாடு காட்டிற்று.”

      (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்: தொகுப்பு -2, கடிதம் - 51, 27.5.1956, பக்.137)

      1957ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரவர அண்ணா தேர்தல் பங்கேற்பு பற்றி மேலும் தொடர்ந்து எழுதினார். 1956ஜுன் மாதம் அண்ணா இவ்வாறு எழுதினார்:

      “நாட்டு விடுதலை எனும் நற்காரியத்துக்கு நம்மை நாம் ஒப்படைத்து விட்டோம். அதன் பயனாக நாமே தூய்மைப்படுத்தப்பட்டு விட்டோம் - அற்ப ஆசைகளைச் சுட்டெரித்து விட்டோம் - எனவே அதே நோக்குடனேயே, தேர்தலில் ஈடுபடுவோம்!”

      “தம்பி! எதைச் செய்தேனும், எவ்விதமாக உருமாறியேனும், உள்ளதை மறைத்தல், இல்லது புனைதல், இளித்துக் கிடத்தல் எனும் எதைச் செய்தேனும், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இழிதன்மையை நாம் கொள்ள மாட்டோம்! தேர்தலில் வெற்றி பெற்றே தீரவேண்டுமே என்ற அரிப்புக் கொண்டு எதையும் செய்திடும் கீழ்நிலைக்கு நம்மைக் கெடுத்துக் கொள்ள மாட்டோம்.”

      (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்: தொகுதி 2, கடிதம் - 53, 10.6.1956, பக்.165)

      “நாம் அதற்காக அல்ல அரும்பணியாற்றி வருவது; தந்தையர் நாடு தனிஅரசு பெற வேண்டும் என்பதற்காகப் பணியாற்றி வருகிறோம். ” ( மேலது, பக்.170)

      1961இலும் கூட, திராவிட நாடு சாத்தியம் இல்லை என்று ஈ.வெ.கி. சம்பத் பேசி வந்த நிலையிலும், அண்ணா திராவிட நாடு விடுதலையைத் தமது நிரந்தரக் குறிக்கோளாக அறிவித்தார்:

      “இப்போது ஒருவர் நான் போகுமிடமெல்லாம் பேசுகிறார் - ‘அண்ணா திராவிட நாட்டுப் பிரச்சினையைக் கைவிட்டு விட்டார்’ என்று! நான் அவருக்குத் தெரிவிப்பதெல்லாம், புறா - ‘கூக்கூ’ என்று கத்தும்வரையில், கிளி ‘அக்கா, அக்கா’என்று அழைக்கின்ற வரையில், குயில் ‘கூகூ,                  கூகூ’என்று கூவுகின்ற வரையில், குழந்தை அம்மா, அம்மா என்று சொல்லுகின்றவரையில், நாங்களும் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று சொல்லிக் கொண்டேதான் இருப்போம்! இயற்கையில் ஒருவேளை மாற்றம் ஏற்பட்டாலுங்கூட, எங்கள் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பதனைத் தெளிவாக அவர்கள் அறிதல் வேண்டும்.” (மேலது, கடிதம் - 147, 6.8.1961, பக்.333)

தேர்தல் அறிக்கைகளில் திராவிடநாடு:

      திராவிட நாடு விடுதலைக்கும் தேர்தலுக்கும் அண்ணா போட்ட முடிச்சு தேர்தல் அறிக்கைகளிலும் பதியப் பெற்றது.

      1952ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “ திராவிடரின் கருத்தை அறியாமலும் திராவிடரின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும், தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக அந்தச் சட்டப்படி நடைபெறும் முதல் பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை நிறுத்தி நேரடியாகக் கலந்து கொள்வதில்லை”  என்று அறிவித்த தி.மு.க. ‘திராவிடநாடு கொள்கையை ஆதரிக்கிறேன்’  என்ற உறுதி மொழி ஒப்பந்தத்தில் கையயாப்பமிடும் வேட்பாளர்களை கட்சி ஆதரிக்கும் என்று அறிவித்தது.

      1957ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கை, ‘திராவிடத்தின் விடுதலை வேண்டி நிற்கும் கழகம் தேர்தலில் ஈடுபட்டு முழுப்பலன் காணமுடியாது என்ற கருத்தில் கடந்த தேர்தல்கள் அனைத்திலும்

நேரிடைப்பங்கு கொள்ளாமலே இருந்து வந்தது’ என்று கூறியது. இத் தேர்தல் அறிக்கை ‘அரசியல் அமைப்பில் செய்யப்பட வேண்டிய முதல் மாற்றம், எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையைத் தானே பெற்றிருக்க வழி செய்வதுதான்’ என்று கூறி ‘சுயநிர்ணய உரிமை’ என்ற சொல்லையும் பயன்படுத்தி உரிமைக் கோரிக்கையை முன் வைத்தது.

      1962ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 1957ஆம் அண்டு தேர்தலில் பங்கேற்றமைக்கு மேலும் விளக்கம் தரப்பட்டது.

      “விடுதலை உணர்வை அழிக்கக் காங்கிரசுக் கட்சி ஆட்சிமன்ற முனையிலே மும்முரமாக இருப்பதால், விடுதலை உணர்வுக்கு வெற்றிகாண அதே முனையில் திராவிட முன்னேற்றக் கழகம் பணியாற்றி ஆக வேண்டும் என்ற அவசியத்தாலும் தேர்தல் களம் புக முடிவு செய்து 1957ஆம் ஆண்டுத் தேர்தலில் கழகம் நேரிடையாக ஈடுபட்டது.”

      1962ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையிலும் திராவிடநாடு விடுதலை வலியுறுத்தப்பட்டது:

      “இனம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகிய அடிப்படை இலக்கணங்களாலும், உள்ளுணர் வாலும் தனிநாடாகத் திகழ வேண்டிய தன்மை வாய்ந்த திராவிடம், இந்தியப் பேரரசு எனும் அரசியல் அமைப்பிலே இணைக்கப்பட்டு, முழு உரிமை கொண்ட அரசியல் வாழ்வு இழந்து, மொழிவழி அரசுகள் என்ற முறையில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம் எனும் தனித்தனி மாநில அமைப்புகளாகவும், அதேபோது தனி அரசுத் தன்மை இழந்த நிலைக்குத் தாழ்த்தப்பட்டும் இருப்பது, திராவிட மக்களின் நல்வாழ்வுக்கும், தன்மான உணர்வுக்கும், இன இயல்புக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் ஊறு செய்வதாகும் என்பதால் ... நான்கும் இனவழி திராவிடக் கூட்டாட்சி நடத்துவதே இயற்கையானது என்ற உறுதிமிக்க எண்ணத்துடன், இந்நான்கு மாநிலங்களும் இந்தியப் பேரரசுக்கு உட்பட்ட நிர்வாக அமைப்பாக இருக்கும் தாழ்நிலையைப் போக்கிக் கொண்டு, தனியாட்சி உரிமை பெற்றுத் தமக்குள் ஒரு சமதர்மக் குடியரசுக் கூட்டாட்சி அமைத்துக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும்.”

      1963இலேயே திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்ட நிலையில் 1967 தேர்தல் அறிக்கை தமிழ்மொழி காப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சிகாணல் ஆகியவற்றைப் பற்றி பேசியது. தி.மு.க.வின் தனித்தன்மை வாய்ந்த நோக்கங்களாக தேர்தல் அறிக்கை இப்படிக் குறிப்பிட்டது:

      “மொழி, வரலாறு ஆகியவற்றில் தொடர்புடைய தமிழகம் - ஆந்திரம் - கேரளம் - கருநாடகம் ஆகிய நான்கு மாநிலங்களும் மேலும் அதிகமான நேசத் தொடர்பு கொண்டு விளங்கிடக் கழகம் பணியாற்ற விரும்புகிறது.

      இந்தியாவுக்குள் திராவிடம் என்ற இந்தத் திட்டம், திராவிடமொழி, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளைப் பாதுகாத்திடவும், அவற்றின் சிறப்பியல்புகளை இந்தியாவின் பிற பகுதி மக்கள் போற்றி வரவேற்று ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் தேவைப்படுகிறது என்பதனைக் கழகம் வலியுறுத்துகிறது.”

      தி.மு.க.வின் விடுதலை அரசியல் 1967இல் எப்படிச் சுருங்கிப் போயிற்று பாருங்கள். இந்தியாவுக்குள் இருப்பது, தங்கள் இனத் தனித்தன்மையைப் பாதுகாப்பது, மாநிலங்களுக்கு அதிக உரிமை கோருவது என்று அது சுருங்கி விட்டது.    

தேர்தல் வெற்றிக¼ள திராவிட விடுதலைப் பணி:

      1957 தேர்தலில் நேரடியாகத் தி.மு.க. பங்கேற்க முடிவெடுத்தது முதல் 1962 தேர்தல் வரையிலான காலகட்டத்தில், அண்ணா தம்பிகளுக்கு இட்ட கட்டளை பெரிய அளவில் தேர்தல் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதுதான். அதுவே திராவிட நாடு விடுதலை பெறுவதற்கான வழி என்று கற்பித்தார்.

      1961இல் ஈழத்தமிழர் தாக்குதலுக்கு உள்ளான போதும், தேர்தல் வெற்றிகளைத் தி.மு.க. குவித்தால் ஈழத் தமிழர் துயர் தீரும் என்றார் அண்ணா.

      “திராவிடர் வாழப் பாடுபடும் தி.மு. கழகக் கரம் வலுத்தால், தீரும் துயரம் இலங்கையினில்! எவரெவர் எந்த எந்தத் தொகுதி என்பதும் அறிவிக்கப்பட வில்லையே என்பது குறித்துக் கவலைப்படாதே. உன் கடமை உதயசூரியன் வெற்றிக்காகப் பாடுபடுவது.”

      “ இன அரசு விரும்புவோர்க்கு உதய சூரியன், திருவிடத்தின் விடுதலைக்காம் உதயசூரியன்.”

      (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 6, கடிதம் - 152, 29.10.61, பக்.54)

      1962 சனவரி மாதம் பொங்கல் விழா குறித்தத் தனது கடிதத்தில் அண்ணா தம்பிகளைத் தேர்தல் பணிக்கு உசுப்பினார்.

      “திருநாளில் திருவிடத்துக்கு விடுதலை பெற்றளிக்கும் ஆர்வம் உன் உள்ளத்தில் பொங்கட்டும்! திருவிட விடுதலைக்கு நாடு பக்குவப்பட்டு இருக்கிறது என்பதனை உலகறியச் செய்யும் முறைகளிலே மிக முக்கியமான ஒன்று, மக்களின் ஆதரவு நமக்கு உண்டு என்பதனை எடுத்துக்Vட்டும் வாய்ப்பான பொதுத் தேர்தலில், நாம் நல்ல வெற்றி ஈட்டிக் காட்டுவது.” (மேலது, கடிதம் - 159, 14.1.62, பக்.199)

      1962 தேர்தலுக்கு முன்னாலேயே, வளர்ந்து கொண்டிருந்த தனிநாடு கோரிக்கைகள் பற்றிப் பேசுவதற்காக முதலமைச்சர்கள் மாநாடு (1961) டில்லியில் கூட்டப்பட்டது. அந்நிலையிலும் அண்ணா திராவிடநாடு விடுதலைக் கோரிக்கையை வலியுறுத்தினார்; அடக்குமுறைகள் துச்சம் என்றார்; தேர்தல் வெற்றிக¼ள தேவை என்றார்.

      “முதலமைச்சர்கள் மாநாட்டைத் தொடர்ந்து நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவார்களானால் தம்பி! என்னென்ன நடைபெறக் கூடும் என்று எண்ணிப் பார்த்தனையா? பொலிவு மிக்க முகத்தினராய், வலிவு மிக்க குரலில், திராவிட நாடு திராவிடருக்கே என்று முழக்கம் எழுப்புகிறார்க¼ள நமது தோழர்கள், பட்டிதொட்டிகளிலும், மும்மூன்றாண்டும் உள்¼ள தள்ளலாம், அதற்கே!

      “திராவிட நாடு திராவிடருக்கே என்று கேட்பது பிரிவினைப் போக்கு. அது சட்டப்படிக் குற்றம் - மூன்றாண்டு உள்¼ள! - என்று நிலைமை ஏற்பட்டால், நாட்டிலே அந்த முழக்கமே எழாது, இயக்கமே இருக்காது என்று, ‘வந்தே மாதரம்’ கூறுவது குற்றம் என்று கூறப்பட்டதை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட காங்கிரசார் நம்புகின்றனர். ஏன், தம்பி? நம்மைக் கோழைகள், கொள்கையிலே வலுவற்றவர்கள்! குடும்பம் பெரிது குவலயம் சிறிது என்று கொண்டவர்கள் என்று எண்ணுகிறார்கள். விடுதலைக் கிளர்ச்சியில் எதிர்பார்க்க வேண்டிய அடக்குமுறை அவிழ்த்து விடப்படும் வேளை, நெருங்கிக் கொண்டிருக்கிறது. தம்பி! என்ன சொல்கிறாய்? முதல் பந்தியா! பிறகா! வேண்டவே வேண்டாமா! பதில் சொல்லிடு! மணி அடித்து விட்டார்கள்!!...”

      (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 5, கடிதம் - 148, 20.8.61, பக். 410-411)

      “தம்பி, தேர்தலின் முடிவு பார்த்து இலட்சியத்தைப் பற்றிய கருத்தினைக் கொண்டவர்களல்ல, நாம்! தேர்தல், நமக்கு ஏற்பட்டு விடும் பல வேலைகளிலே ஒன்று!! அது, முடியட்டும் என்கிறார் காமராஜர் - என்னைப் பொறுத்த வரையில், தேர்தலுக்கு இரண்டாவது இடம்தான் - முதல் இடம் இலட்சியம் என்ன ஆவது என்பதுதான்! அதனைக் காத்திட, கொடிய அடக்குமுறையையும் தாங்கி நிற்கும் தோழரின் தொகை எவ்வளவு என்பதுதான் எனக்குத் தேவை! மன்னித்துவிடு, தம்பி! எனக்கு என்று எக்களிப்பில் கூறி விட்டேன் - நாட்டுக்குத் தேவை.

            விடுதலை கேட்கும் எம்மைச் சிறைக்கு இழுத்துச் செல்லும் போது, அந்தச் சிறையில் - எத்தனை MPக்கள், எத்தனை MLA க்கள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தேர்தலிலே வெற்றி தேடிக் கொடுங்கள். பொட்டிட்டு ஆரத்தி எடுத்து, போய் வருவாய் களம் நோக்கி! என்று வழி அனுப்பி வைப்பது போல, நாட்டு மக்களே! நல்லோர்கர்ள! நீண்டகாலச் சிறை அழைக்கிறது! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் இழுத்தேகலாம்! உங்கள் ஆதரவைத் தந்து, வழியனுப்பி வையுங்கள்; தேர்தலிலே நீங்கள் தேடித் தரும் வெற்றி, களம் செல்லும் வீரருக்குத் திலகம் இட்டு அனுப்புவது போன்றது என்பதைத் தம்பி! இன்றே கூறிவிடு, எதற்கும் தயாராகி விடு!!”

       (மேலது, பக்.411-412)

      தேர்தல் என்பது தன்னைப் பொறுத்தவரை இரண்டாம் இடம்தான் என்று கூறிக்கொண்டே, தம்பிகளின் இன விடுதலை உணர்வைக் கிளறி அதைத் தேர்தல் வெற்றியாக வடித்துக் கொள்ளும் அண்ணாவின் ‘சாமர்த்தியம்’ அவரது சொற்களில் வெளிப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்ட மன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சிறைச்சாலைக்கும் தூக்கு மேடைக்கும் செல்லப் போவதுபோல, அல்லது தூக்கு மேடை செல்ல அவர்கள் தயாராக இருப்பது போலப் பேசி தம்பிமார்களைத் தேர்தல் பணிக்கு உசுப்பிவிடுவது அண்ணாவின் ஒரு தேர்தல் அரசியல் உத்தியாக இருந்தது. ஆனால் தம்பிமார்கள் திராவிட விடுதலைக் கனவுகளில் திளைத்தார்கள்; தன் துயர் மறந்து தேர்தல் பணிகளில், அதாவது திராவிட நாட்டின் விடுதலைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

      அண்ணாவின் தம்பிகள் தேர்தல் வெற்றிகளைக் குவித்தார்கள். தோற்றம் கண்டு 17 ஆண்டுகளில், ஆட்சி பீடத்தையும் தி.மு.க கைப்பற்றியது. ஆனால் அண்ணாவின் தேர்தல் வழி திராவிட விடுதலை என்னும் கனவு தேசத்துக்கு இட்டுச் செல்லவில்லை ; கழகத்தவரைச் சட்டமன்றத்துக்கு இட்டுச் சென்றது. இவ்வுலக ஏடன் தோட்டத்திற்குள் நுழைந்த தம்பிமார்கள் பதவி மரமேறிப் பழம் பறித்துத் தின்றார்கள். விவிலியம் பேசும் ஆண்டவன் உருவாக்கிய ஏடன் தோட்டத்தில், ஆண்டவன் விதித்திருந்த தடையை மீறி ஏவாளும் ஆதாமும் பறித்து உண்ட அறிவுக் கனியை விட (Fruit of knowledge), அண்ணா அன்புடன் கொண்டு செலுத்திய அரசியல் தோட்டத்துப் பதவிக் கனி அதிகம் ருசித்தது ; உலகின் அனைத்து இன்பங்களையும் வாழ்வின் வசந்தங்களையும் வளங்களையும் வாரி இறைத்தது. தம்பிமார்களுக்கு ஒன்று புரிந்தது ; ஏடன் தோட்டத்து அறிவுக் கனியைத் தின்ன ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தடைவிதித்திருந்த ஆண்டவனைவிட அண்ணா எவ்வளவு உயர்ந்தவர் என்பது புரிந்தது. இவ்வுலகிலேயே ஓர் ஏடன் தோட்டத்தை அண்ணா தம்பிமார்களுக்குப் படைத்துக் கொடுத்தார். அண்ணா படைத்துக் கொடுத்த தோட்டத்தில் பழ மரங்களை இரவு பகலாக ஓய்வின்றி உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள் தம்பிமார்கள்; அண்ணாவுக்கு ஆண்டுக்கு ஒருமுறை நன்றி கூறத் தம்பிகள் மறப்பதில்லை.

(வரும்)

-த.செயராமன்

Pin It