கவிஞர் பாரத் தமிழ், வேலூர் மாவட்டம், கெம்மங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். குழந்தை நேயச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலராக களத்தில் செயல்படுவர்.
புத்தகத்தின் தலைப்பு தேர்வு செய்தது மிகச் சிறப்பாக இருக்கிறது. #நிலமற்றவனை நனைக்கும் மழை". இந்த தலைப்பு ஒட்டி கவிதை எழுதி, அதை புத்தகத்தின் தலைப்பாக வைத்ததற்கே கவிஞர் பாரத் தமிழுக்கு என் அன்பு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
#நிலமற்றவனை நனைக்கும் மழை"
மழை
எல்லார்க்கும்
பொதுவாய்ப் பெய்வதாகப்
பொய் சொல்கிறார்கள்
அது,
அதிக நிலம் உள்ளவனுக்கு
அதிகமாகவும்
குறைந்த நிலம் உள்ளவனுக்கு
குறைவாகவும்
நிலமற்றவனை
நனைத்து விட்டும் கிளம்புகிறது.
இந்த ஒரு கவிதை போதும், நிலமில்லாதவர்களின் வலியுணர்வையும், விவசாயிக் கூலி வேலை செய்தே காலம் தள்ளும் தினக்கூலி தொழிலாளர்களின் வலியையும், சிற்பம் செய்யும் சிற்பி போல் கவிதையில் கவனமாய் கருத்தை செதுக்கியுள்ளார்.
சமூகத்தில் நடைப்பெறும் சாதிய பாகுப்பாடுகள், வன்கொடுமைகள், அடக்குமுறைகள், ஆண் பெண் பேதமைகள், இயற்கை நேசித்தல், சமத்துவ முன்னெடுப்பு நடவடிக்கைகள் என சமூக கவிதைத் தொகுப்பாக இது அமைந்திருக்கிறது. கருத்தியல் வாதிகள், கொள்கைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எழுத்துகள் கவிதை வடிவில் வந்தாலும் அவர்கள் அதிலும் சமூகத்தில் நடைப்பெறும் ஏற்றத் தாழ்வுகளை கவிதை வடிவில் தந்து புரட்சி செய்வார்கள். இதற்கு கவிஞர் பாரத் தமிழும் ஒரு உதாரணம்.
சில கவிதைகள் :
#தேசத்தின் எல்லையில்
எவ்வளவு துருப்புகள்
எத்தனை கோடிகள்
சேரியின் எல்லையில்தான்
செலவே இல்லாத சாதி.
#ஜாக்கிரதை
இருக்கும் போது
என் மீது
நீ காட்டும் தீண்டாமையை
இறந்த பிறகு
உன் மீது
நான் காட்டத் துணிந்தால்
வீட்டுக்கொரு
வெட்டியான் தேவை.
#சேரிகளை வைத்துக் கொண்டு - என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் நீள் கவிதையில்...
நாம் தூங்கி விடுவதாலேயே
அதை இரவென்று சொல்லி விடுகிறோம்
சேரிகளை வைத்துக் கொண்டு
சுதந்திர தினம் கொண்டாடுவது போல்.
#நிலத் தாகம் என்னும் தலைப்பில் சமநீதி கோருகிறார்,
#வானத்தைக் கீழேயும்
பூமியை மேலேயும்
திரும்பிப் போட வேண்டும்
நிலம் எல்லார்க்கும் சமமாய்ப் பெய்ய.
#காதல் செய்து என்னும் தலைப்பிட்ட கவிதையில்.
பள்ளிக்கூடம் ஊரில் இருக்கிறது
முதல் மதிப்பெண் பெறுகிறார்கள்
சேரிக் குழந்தைகள்
நூலகம் ஊரில் இருக்கிறது
வாசிக்கப் போகிறார்கள்
சேரி மக்கள்
பஞ்சாயத்து அலுவலகம்
ஊரில் இருக்கிறது
தலைவராகிறார் சேரிக்காரர்
மருத்துவமணை ஊரில் இருக்கிறது
ஊசிப்போடுகிறார் சேரிச் செவிலி
சாதியும் ஊரில்தான் இருக்கிறது
அழிக்கப் புறப்படுகிறார்கள்
அவ்வண்ணமே காதல் செய்து.
இது போல எண்ணற்ற கவிதைகளை சிற்பம் போல கருத்தியல் கவிதைகளை செதுக்கியுள்ளார்.
#மரமழை
பெய்து முடித்த அடை மழையைக்
கொய்து வைத்திருக்கும் கிளைகள்
தாய்ப்பாலாய்ப் புகட்டுகின்றன
தன்னிழல்வாழ்த் தாவரங்களுக்கு.
#அறையைச் சுத்தம் செய்ய
ஒட்டடையடித்தேன்
வீடுகளை இழந்தன
சிலந்திகள்.
#தட்டான் பூச்சி
முதலிரண்டு கைகளால்
மாறி மாறி அடித்துக் கொள்கிறது தலையில்
விட்டு விடு என்று
இரண்டாம் இரு கைகளால் மாரடித்து அழுகிறது
பறக்க விடு என்று
மூன்றாம் இரு கைகளால்
வயிற்றைத் தடவிக் காண்பிக்கிறது
பசிக்கிறது என்று
இப்படிச் சொல்லிச் சொல்லியே
இரக்கம் மேலிடச் செய்து
பறக்க விட வைப்பாள் இந்துமதி.
இது போல மனதிற்கு நெருக்கமான கவிதைகள் நிறைய இத்தொகுப்பில் கவிஞர் பாரத் தமிழ் எழுதியுள்ளார். சில நீள் கவிதைகளை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். #அம்மாவின் பாதி முத்தம், #இரு திண்ணைகள், #அந்த அமைதிப் பூங்கா எது?,#ஒருதலைக் காமம், #உடலெங்கும் வயிறு, #எழுந்து வா அம்மா. இது போன்று நிறைய கவிதைகளை சிறப்பாக எழுதியுள்ளார்.
மொத்தத்தில் சமூகச் செயற்பாட்டாளர்களின் கவிதை தொகுப்பு, கருத்தியல் தொகுப்பாக, சமூக அறம் சார்ந்த அறவுரை தொகுப்பாகவும், புரட்சி உரைகளாகவும் இருக்கும் என்பதற்கு #கவிஞர் பாரத் தமிழ் அவர்களின் #நிலமற்றவனை நனைக்கும் மழை கவிதை தொகுப்பை உதாரணம் காட்ட விரும்புகிறேன். கவிஞர் பாரத் தமிழுக்கு என் அன்பு வாழ்த்துகள்.
- கவிஞர் மு.பிரபு, வேலூர்