கவிஞர் செ.ராஜி அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். சமூக ஆர்வலராக களத்தில் தொடர்ந்து செயல்படுவர். கோன்ச்சா கவிதை தொகுப்பு கவிஞர் செ.ராஜி அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். அவரின் முதல் கவிதைத் தொகுப்பு "முனிசி" அனைவராலும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
கவிதைத் தொகுப்பில் சமூக பார்வை, நகரமயமாதலினால் குடிசை குடியுருப்பின் வாழ்வில் சிக்கல்கள், சாலை விரிவாக்கத்தினால், அதனை ஒட்டி வாழ்கின்ற குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்களின் துயரங்கள், உழைக்கும் மக்களின் வலிகள் சமூகத்தில் நடைபெற்று வரும் பாகுபாடுகள் பற்றி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
"குடிசைகளை விழுங்கும்
கருநாகப் பாம்பு
நெடுஞ்சாலைகள்".
என்னும் கவிதை படித்ததும் ஒரு நிமிடம் மனம் அமைதியாகி விடுகிறது. சாலை விரிவாக்கத்தினால் ஏற்படும் குடிசை குடியிருப்பு மக்களின் துயரத்தை மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கிறார்.
மக்களிடையே காட்டப்படும் நிறத்தின் பாகுப்பாட்டினை..
"யார் சொன்னது
இந்த மண்ணில்
நிறவெறி இல்லையென்று
டேய் கருப்பா". என்றும்
கடவுள்களில் காட்டப்படும் சனாதான பாகுப்பாட்டினை..
"சனாதானம் என்பது
மாரியம்மன் கையில் ஆயுதங்கள்
சரஸ்வதி கையில் புத்தகம்". என்றும்
கவிஞர்.செ. ராஜி அவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
"எனக்கும் மின் மினி பூச்சிக்கும்
ஓர் ஒற்றுமை
இருண்ட பாதையில்
நாங்களே ஒளி".
விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்கள் குறித்து சிறப்பாக எழுதியிருக்கிறார்.
"கீழ்த்தெரு பையனை
மணந்த மகளை
வெட்ட அருவாவுடன் வரும்
மேல் தெரு அப்பாக்களே
கொஞ்சம் என்னுடன்
வாருங்கள்
குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு
அங்கு
கலிங்கப் போரில்
அசோகனின் இரத்தவெறி மாண்டது போல்
பச்சிளங்களின் அழுகைச் சத்தத்தில்
மாண்டு போகும் உங்களது சாதிவெறி."
இந்த கவிதையின் மூலம் சாதி உணர்வாலர்களுக்கு சம்மட்டி அடி தருகிறார்.
பொதுவுடமை பற்றி "எங்க ஆயா" என்கிற கவிதையில்
"எங்க ஆயா
சாப்பிடுவது ஒரு கலை
பழைய கஞ்சி
மணக்கும் பிரியாணி
எதுவாக இருந்தாலும்
ரசித்து ருசித்து சாப்பிடுவாள்.
அவள் வயிறு
கால் அரையாக
இருந்தாலும் சரி
கடைசி கைப்பிடியை
நாய்களுக்கும் காக்கைக்கும்
பகிர்வதை
நிறுத்தியதேயில்லை
நான் கண்ட முதல்
பொதுவுடமைக்காரி". என்கிறார்.
"இரண்டாம் உலகப்போர்
நடைப்பெற்றே
இருந்திருக்காது
ஹிட்லர்
அசோகனாயிருந்தால்."
இரண்டாம் உலகப்போர் பற்றி மிக அருமையாக எழுதியிருக்கிறார்.
புத்தகத்தின் தலைப்பிற்கான கவிதை.
"கோன்ச்சா மாமா மட்டும் விடாமல்
ஏறிக் கொண்டெ இருப்பார்
இறுதியில்
பத்தாவது வாய்ப்பில்
வெற்றியைப் பறிக்க விசில்கள்
பூக்களாய்ப் பொழியும்
இப்பொழுது கூட யாராவது
கஜினி படையெடுப்பைப் பற்றி கூறினால்
நினைவிற்குள் சட்டென்று வந்து விட்டு போகிறார்
கோன்ச்சான் மாமா". என்று எழுதியிருக்கிறார்.
கவிதைத் தொகுப்பில் சமூகத்தில் நடைபெறும் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளையும், நடைமுறை சிக்கல்களையும் எழுதியிருக்கிறார். உழைக்கும் மக்களின் வலிகளை அதிகம் எழுதியிருக்கிறார். மொத்தத்தில் கவிதைத் தொகுப்பு முழுவதும் சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் வாழ்வில் வலிகள் மிகத் தெளிவாக படம் பிடித்த கவிதைத் தொகுப்பாக "கோன்ச்சா". இருக்கிறது. சமூக செயற்பாட்டாளர் கவிஞர். செ. ராஜி அவர்களுக்கும் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட நீர்க்கண்ணாடி பதிப்பகம் கவிஞர். யாழன் ஆதி அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
- கவிஞர் மு. பிரபு, வேலூர்