எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு:

எழுத்தாளர் அகிலன் (1922-1988) காந்திய நெறியில் நின்று படைப்பிலக்கியங்களைப் படைத்தவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், சுய முன்னேற்ற நூல், தன்வரலாறு, திரைப்படம் என்று பல்துறைகளிலும் நூல்களைத் தந்தவர். சமூக மாற்றம், மனித நேயம், பெண் விடுதலை சார்ந்து எழுதியவர்.

இவருடைய எழுத்துக்கள் அதிக அளவில் வெகுவாக மக்களைக் கவர்ந்தன. பல்வேறு இதழ்களில் தொடர்களை எழுதினார். கலைமகளும், கல்கியும் இவரின் களங்களாக அமைந்தன. இனிய, எளிய நடையும், உணர்வோட்டமும் காட்சிப்படுத்தும் இயல்பும் இவருக்கென தனிப்பாணியை உருவாக்கித் தந்தன.

இலட்சிய வாதமும், யதார்த்த வாதமும், விமர்சன யதார்த்த வாதமும் கலந்த ஒருவித ‘பேன்டசி’ முறைமை இவருக்குச் சாத்தியப்பட்டது. மனித உறவுகளை, மனித உணர்வுகளை தான் கைக்கொண்ட காந்திய வழிமுறைகளில் தன் படைப்புகளில் துலக்க முயன்றார். கல்கி, இராஜராஜ சோழன் பற்றி பொன்னியின் செல்வனைப் படைத்தார். அகிலன், இராசேந்திர சோழன் பற்றி வேங்கையின் மைந்தனைப் படைத்தார். கல்கி இதழில் தொடராக வந்த இந்த நாவல் 1963 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. இவரின் ‘சித்திரப்பாவை’ நாவல், 1975 ஆம் ஆண்டில் தமிழுக்கு முதல் ஞானபீடப் பரிசினைப் பெற்றுத் தந்தது.

1957-58இல் இவர் எழுதிய ‘பாவை விளக்கு’ நாவல் இவரின் தன் வரலாற்றை ஒட்டியது. இவ்வகையில் இது முன்னோடி. 1976-இல் எழுதிய ‘பால்மரக் காட்டினிலே’ மலேசியத் தோட்டத் தொழிலாளர் பற்றியது. பின்னர் இராஜம் கிருஷ்ணன் போன்றோர் எழுதிய களப்பணி / ஆவண நாவல்களுக்கு இது ஒரு வகையில் முன்னோடி.

“வாழ்க்கையை அழகாக வாழக் கற்றுக்கொள். முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்து, முடியாவிட்டால் அதை அசிங்கப்படுத்தாமலாவது இரு”

“மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எழுதாமல் மக்களுக்கு எது வேண்டுமோ அதை எழுதுவதுதான் எழுத்து”

tamil writer agilan“மக்களிடம் நெடுங்காலமாகப் படிந்துள்ள பல்வேறு அறியாமைகளைப் போக்கி, அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். அதற்கு தம்முடைய எழுத்து உதவ வேண்டும்” என்றெல்லாம் தன் எழுத்து வாழ்வில் நியாயம் சொன்னவர் அகிலன். அவர் காலத்தில் வீடுகளில் படிக்க இருந்த பெரும்பகுதி பெண்களே அவரின் வாசகர்கள். பொழுது போக்க வாசித்தவர்களை தன் கருத்து வளத்தால் ஈர்க்க முயன்றவர். வெகு ஜன எழுத்துக்கான பலமும் பலவீனமும் சேர்ந்ததாக அவரது எழுத்துக்கள். எந்தவொரு படைப்பையும் காலச்சூழல், தேவை, சமூகப் பின்புலத்தோடு மதிப்பிடுவதே பொருத்தமானது.

இன்றைய காட்சி, சமூக ஊடகங்கள் நிலையில் அன்றைய அச்சு ஊடகங்கள் தொழிற்பட்டத் தருணத்தில், அகிலனின் எழுத்துகள் வெகு மக்களை இலக்காக்கி வெளிவந்தன. வாசிப்புப் பரவலாக்கம் என்ற நிலையில் அவை தம்மில் முழுமை கண்டன எனலாம்.

இடப்பெயர்வு இலக்கியம்

புலம் பெயர்வு, இடப்பெயர்ச்சி இலக்கியங்கள் உலகுகெங்கும் பரவலாகி வருகின்றன. தமிழர்கள் சமூக, பொருளாதார நெருக்கடிகளால் தொடர்ந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து ஆங்கில காலனி முறைமையினூடாகப் புலம்பெயர்வு நிகழ்ந்தது. நிலக்கிழமை முறையின் சாதி ஆதிக்கம், அடக்கு முறை, வேளாண்மை நசிவு, பசி, பஞ்சம் போன்ற காரணங்களால் இது நிகழ்ந்தது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் நிலை தனி.

 இந்த மாதிரி மொரீஷியஸ், ஃபிஜி, ரீயூனியன், டச்சுக்கயானா, தென் ஆப்பிரிக்கா, பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் வெளிவந்தன.

ஃபிஜி கரும்புத் தோட்டத்தில் தமிழர்கள் படும் துயரத்தை பாரதியார் பாடினார். இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நிலையை புதுமைப்பித்தன் ‘துன்பக்கேணி’யில் படைத்தார். அவ்வகையில் ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி, ஆர். சண்முகத்தின் சயாம் மரண ரயில், ரங்கசாமியின் லிங்கா நதிக் கரையில், இளம்வழுதியின் லட்சியப் பாதை, குமரனின் செம்மண்ணில் நீல மலர்கள், மு.சிவலிங்கத்தின் பஞ்சம் பிழைக்க வந்த சீமை ஆகியவை புலம் பெயர் வாழ்வின் வலிகளைப் பதிவு செய்தன.

பால்மரக் காட்டினிலே

எழுத்தாளர் அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வின் சிறுபகுதியை அறிமுகப்படுத்தும் முயற்சி.

               ‘பால்மரக் காட்டினிலே’ 1976 சனவரி முதல் கலைமகள் இதழில் தொடராக வந்த நாவல். 1975 மே- ஜுன் மாதங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் மலேசியா, சிங்கப்பூர் சென்ற அகிலன், மலேசியாவில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் அங்கிருந்தத் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து, தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் சிக்கல்களை உணர்ந்து எழுதிய நாவல் இது.

எஸ்டேட் எனப்படும் இரப்பர் தோட்டங்கள், இரப்பர் மரங்கள்ஞ் பால் எடுத்தல், இரப்பர் தொழில், இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயங்கள், அவர்களின் குடியிருப்புகள், அதிகாலைத் தொடங்கி அந்தி சாயும் வரை அவர்கள் படும் இன்னல்கள், ஆங்கிலேய முதலாளிகளின் நேரடித் தொடர்பில் இருக்கும் வெள்ளைத் துரைகள், கங்காணிகள் மாதிரியான கிராணிகள், மஸ்டர் களம் - காங்கு, திட்டி எனும் விடுப்பு, கூலி முறைகள், குழந்தைகளுக்கு ஆயாக் கொட்டகைகள், பள்ளிக்கூடங்கள், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் பெண்களின் நிலை, பிள்ளைப் பேற்றை மட்டுமே ‘துய்ப்பாக’க் கொண்டு நடக்கும் பிரசவங்கள், கருச்சிதைவுகள், ஆதிக்கம் மற்றும் சுரண்டலுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் விழித்தெழல்ஞ் என இச்சிறு நாவல் மலேயாத் தோட்டத் தொழிலாளர் வாழ்வை ஓவியம் போலத் தீட்டி விடுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து வாழ்வாதாரம் தேடி மலேயா மண்ணுக்கு கனவுகளுடன் சென்ற ஒரு குடும்பம், தோட்டத் தொழிலில் ஈடுபட்டு பல்லாண்டுகள் கழிந்து அடுத்த தலைமுறைகளைக் கண்ட வாழ்வின் சிறு துளியை நாவல் பதிவு செய்கிறது. கூடவே, மலேசிய நாட்டின் விடுதலை, அந்நிய ஆங்கில தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டங்களை உள்ளூர் பணக்காரர்களிடம் விற்க முயல்கின்றனர். கூடுதலான தோட்டப் பரப்பு. அதன் அதிக விலை காரணமாக தனி ஒருவரிடம் விற்க முடியாத நிலைமை. எனவே பலரிடம் தோட்டத்தைப் பிரித்து விற்கத் தயாராகின்றனர். இது ‘தோட்டத் துண்டாடல்’ எனத் தொழிலாளர்களால் அழைக்கப்படுகிறது. இப்படி விற்கப்படும் தோட்டங்களின் தொழிலாளர்கள் ‘நோட்டீஸ்’ தரப்பட்டு வெளியேற்றப் படுகின்றனர். சக தொழிலாளச் சொந்தங்களோடு பிற தோட்டங்களில் தங்க முடியாத நிலையும் உருவாகிறது. இந்நிலையில் ஒரு தலைமுறை வாழ்ந்து பிள்ளை, குட்டிகளைப் பெற்று வாழ்ந்தவர்கள் ‘லயங்கள்’ எனும் குடியிருப்புகளை விட்டும் தோட்டத் தொழிலிலிருந்தும் வெளியேற்றப்படுகின்றனர். மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்புவதா? புதிய தோட்டங்கள் அமைக்கும் இடங்களுக்குச் செல்வதா? இங்கேயே பாரசாரிகளாக, நடைபாதை வாசிகளாகக் கிடப்பதா? சரி. ஆண்கள் கூட எப்படியோ ‘காலம்’ தள்ளலாம். பெண்கள், வயதுக்கு வந்த இளம் பிள்ளைகள் நிலைஞ் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்துஞ் பெற்றோர்கள் அரை நூறாண்டுக்கு முன் வந்த அதே கால வாழ்வுக்குத் திரும்புவதா? எனும் அடிப்படை அதிர்ச்சி தான் நாவலின் மையம் எனலாம்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து வீரப்பன், வேலம்மாள் ஆகியோர் வேலம்மாளின் தம்பி பழனியுடன் மலேசியா வந்து சேர்கிறார்கள். தோட்ட வேலை, வசதி வாய்ப்பாய் வாழலாம், என வந்தோர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. காடழிந்து சமவெளியாக்கி இரப்பர் தோட்டங்கள் உருவாக்குகின்றனர். முருகன், முத்து, பாலன், நடேசன், செல்லம்மாள், கமலம், ராஜா எனப் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கின்றனர். முருகன் படித்து ஆசிரியராகி கோலாலம்பூரில் பணி செய்து, அங்குள்ள வசதி வாய்ப்பான பெண்ணை மணந்து, பெற்றோர் உற்றாரை மறந்து விடுகிறான். நடேசன் படித்து உள்ளுர் தோட்ட மக்களுக்கானப் பள்ளியில் ஆசிரியப் பணியாற்றுகிறான். அண்ணன் முருகன் தன்னைப் போலவே ‘வசதியாய்’ வாழ அழைத்தும் அதை மறுத்து தோட்டத்து வாழ்விலேயே தங்கிவிடுகிறான். இந்நிலையில், பாலனின் மாமா பழனியின் குடும்பம் அருகில் உள்ள தோட்டத்தில் தொழிலாளர்களாக உள்ளனர். அத்தோட்டத்தில் ‘துண்டாடல்’ ‘நோட்டீஸ்’ தரப்படுகிறது. பழனிக்கு காமாட்சி, கண்ணம்மா என்று இரண்டு மகள்கள். சிறுபிராயத்திலேயே காமாட்சிக்கு முருகன் என்றும் கண்ணம்மாவுக்கு பாலன் என்றும் எழுதப்படாத ‘முடிவு’ எட்டப்படுகிறது. முருகன் பணிக்குச் சென்ற இடத்தில் தன்மூலம் மறைத்து, காதலித்து ராதாவை கைப்பிடிக்கிறான். கூடவே ஊரையும் உறவையும் ஒதுக்கி விடுகிறான்.

இந்நிலையில் ‘தோட்டத் துண்டாடலில்’ பழனி குடும்பம் இடம் பெயர வேண்டிய நெருக்கடி. பாலன் முன் முயற்சி செய்து கண்ணம்மாவை தானும், காமாட்சியை தன் மற்றொரு உடன்பிறந்தான் முத்துவும் திருமணம் செய்து கொள்ள உறுதியளிக்கிறார்கள். பழனியின் தோட்டத்தில்தான் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. வீரப்பன் தோட்டத்தில் தற்போதைக்கு இந்நிலை இல்லை. எனவே பாலனுக்கும் முத்துவுக்கும் திருமணம் செய்து விட்டால் காமாட்சி, கண்ணம்மா இருவரும் பாதுகாக்கப்படுவர் என்ற எண்ணத்தில் ஏற்பாடு செய்கின்றனர். இந்நிலையில் யாரும் இது போல திருமணம் செய்யவோ, பிற தோட்ட ஆட்களுக்கு அடைக்கலம் தரவோ கூடாது என்று அறிவிப்பு வருகிறது. செய்வதறியாது திகைக்கின்றனர். பாலன் எப்படியாவது மாமன் மகள்களைக் காத்திட பிற நகரம் செல்ல எண்ணுகிறான். அவ்வேளை பாலனை அழைக்கும் கண்ணம்மா மங்கலத் தோற்றத்தில், மஞ்சள் துண்டைத் தாலியாகத் தந்து கழுத்தில் கட்டச் சொல்லி கணவன் மனைவி வாழ்வை பாலனோடு பகிர்ந்து கொள்கிறாள். தன்னால் தன் குடும்பத்துக்கும், மாமன் குடும்பத்துக்கும் தொல்லை நேரக்கூடாது எனத் திட்டமிட்டு இதனைச் செய்த கண்ணம்மா தூக்கில் தொங்கிவிடுகிறாள்.

இதற்கிடையே ‘துண்டாடல்’ சிக்கலைச் சமாளிக்க தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து சங்கமாகி பங்குப்பணம் தந்தால், அரசாங்கமும் உதவிப்பங்குப் பணம் தந்து தோட்டத்தை தொழிலாளிகளே நிர்வகிக்க வழி சொல்கிறார்கள். பாலனும், பாதிக்கப்பட்டத் தோட்டத்து கணேசன் உள்ளிட்ட இளைஞர்களும் தீவிரமாக இதில் செயல்படுகிறார்கள். தலைக்கு நூறு வெள்ளி வீதம் ஆயிரம் பேரை இலக்கு வைத்து அறுநூறு பேரைச் சேர்க்கிறார்கள். இந்நிலையில் இதை விரும்பாத முதலாளிகள் இதைச் சீர்குலைக்க முயன்று தோட்டத்து ஆட்களையே கருவியாக்குகிறார்கள். பாலன், கணேசன் போன்றோரைக் குற்றம் சொல்லி பலரைத் தூண்டிவிட்டு பணத்தைத் திரும்பக் கேட்கிறார்கள். வேறு வழியின்றி செலவளித்த தொகையினை தான் கொடுத்த நிதி முழுவதற்கும் எடுத்துக் கொள்ளச் சொல்லி, பாலன் தொகையை திரும்பக் கொடுத்து விடுகிறான்.

பழனி குடும்பமும் இன்னும் சிலரும் ‘சாபா’ மாகாணத்தில் புதிதாக உருவாகும் தோட்டத்துக்கு மறுபடியும் தொழிலாளர்களாக இடப்பெயர்ச்சி அடைய முடிவு செய்கிறார்கள். ‘விக்டரி’ தோட்டத்தில் கெடுபிடிகள் அதிகமாகின்றன. பாலன் பள்ளி, ஊர் நடவடிக்கைகளுக்காக வேலை நீக்கம் செய்யப்படுகிறான். கணேசன் விரும்பிய ‘செல்லம்மாள்’ தோட்டத்து ‘டாக்டர்’ ‘டிரெஸ்ஸர் மாதவன்” எனும் காமக்கொடூரனால் பாலியல் வல்லுறவுக்கு வலியுறுத்தப்பட, அதனைக் கண்ட பாலனின் தம்பி முத்து, மாதவனை துவம்சம் செய்கிறான். பொய் வழக்குப் போட்டு செல்லம்மாள், முத்து ஆகியோரை போலீஸ் அழைத்துச் செல்கிறது. இளைஞர்கள், தொழிலாளிகள் பாலன் தலைமையில் எதிர்ப்புப் போராட்டத்தில் அகிம்சை முறையில் ஈடுபடுகிறார்கள். இதனைக் கண்டு ஆத்திரமுறும் தோட்ட வெள்ளைமுதலாளி, மக்கள் ஒற்றுமை, அவர்கள் பக்க நியாயம் உணர்ந்து மாதவனை பணிநீக்கி, காவல்துறையிடம் ஒப்படைத்ததுடன், பொய் வழக்குகளை விலக்கி சலுகைகளும் தர ஒப்புக் கொள்கிறார். அதே வேளை, பாலனின் வேலைப் பறிப்பை மாற்ற மறுத்து விடுகிறார். பாலன் தன் மாமன் பழனி குடும்பத்தை வழியனுப்பி விட்டு, தான் தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தொழிற்சங்கப் பணிக்கு நகரம் செல்வதோடு கதை முடிகிறது.

இந்நாவலில் ஒருவித இலட்சியவாதமும், நடப்பியல் வாதமும் இணையோட்டமாகச் செல்கிறது. நாவல் வழி இரப்பர்த் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்வின் சிறுபகுதி பொதுச் சமூகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது ஒன்றே இதன் சாதனை எனலாம்.

நாவல் தொடர்கதையாக வந்ததால் ஒவ்வொரு பகுதியும் ஒரு தலைப்புடன் இருபத்து நான்கு இயல்களாக அமைந்துள்ளது. கதை மாந்தர்கள், அவர்களின் இயல்பு, கதைப் போக்கு ஆகியன அடிப்படையில் அகிலன் தலைப்புகளை இட்டுள்ளார்.

தோட்ட வாழ்க்கை

நாவல் முழுதும் தோட்டத் தொழிலாளர் வாழ்முறைகள் குறித்தப் பதிவுகள் விரவிக்கிடக்கின்றன. இரப்பர் பால் எடுத்தல், பாலமாக்குதல், அரைத்தல் போன்ற தொழில் கூறுகள் விளக்கப்படுகின்றன. அவரவர் “மரங்களை நாடிச் சென்று, கீறப்பட்ட பகுதிகளின் பட்டைகளைச் சீவிக் கிண்ணங்களில் பால்வடியச் செய்ய வேண்டும். ஒவ்வொரு மரமாக இப்படி முதலில் சீவி விட்டுக் கொண்டே வர வேண்டும். இதற்குள் காலை பத்து பத்தரை மணியாகிவிடும். பிறகு அங்கேயே மரக்காட்டில் காலை ஆகாரம் நடக்கும். சாப்பிட்டவுடன் மீண்டும் பாலைச் சேகரிக்க வேண்டும். கிண்ணத்துப் பால் வாளிக்கு வந்த பின்னர் பெரிய வாளிக்கு மாற்றப்படும். அங்கிருந்து அதைக் கொண்டு போய் நிறுத்துக் கணக்குக் கொடுப்பார்கள். அளவுக்குத் தக்கபடி நாள்தோறும் கூலி பதிவாகும். தினக்கூலிதான். மாதச் சம்பளம் இல்லை”. (ப.15)

தோட்டத் தொழிலாளர்களின் ‘லயங்கள்’ எனப்படும் வீடுகளின் அமைப்பு நாவலில்,

“மரப் பலகைகளில் இணைத்துக் கட்டப்பட்டு, மேலே தகரக் கூரை வேய்ந்த ஒருவகைப் பரண் வீடுகள். கீழே மரக்கம்பங்கள் நட்டு, வீட்டுக்கு வீடு தடுப்பு சுவர்களைப் போன்ற பலகை அடைப்புக்கள். மேலே வரிசை வரிசையான அறைகள். அறைகளுக்கு முன்னே உள்ள நீண்ட வராந்தா, நாலு குடும்பங்களுக்குப் பொதுவானது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மேலே ஓர் அறை; அதற்குக் கீழே உள்ள தரைப்பகுதி. குடும்பத்தில் இரண்டு பேராக இருந்தாலும் சரி, பத்துப் பேராக இருந்தாலும் சரி, அதுதான் வீடு. (ப.10)

தோட்டத் துண்டாடல் அறிவிப்பு நோட்டீஸ் தந்ததும் அந்த மக்கள் பட்டத் துன்பத்தில் அவர்களின் கடந்த காலமும் நிகழ்காலமும் நெஞ்சில் நிழலாகும் படியாக நாவலாசிரியர் பலவற்றைப் பதிவு செய்கிறார்.

“வெள்ளைத் தோட்ட முதலாளிக்கு ஆள் தேவைப்பட்ட காலத்திலே, நம்மவங்களை நாட்டை விட்டு நாட்டுக்கு ஒப்பந்தக் கூலியாகக் கொண்டாந்தான். அரை வயித்துக் கஞ்சிக்கு அல்லும் பகலுமா உழைக்கச் சொன்னான். உறிஞ்ச வேண்டியதையெல்லாம் உறிஞ்சியாச்சு. சக்கையைத் துப்பி எறிஞ்சிட்டு, தோட்டத்தை வித்த பணத்தை மூட்டைக் கட்டிக்கிட்டு, அவன் கப்பலேறப் போறான். நாம இப்ப எங்க போறது? எப்படிப் பிழைக்கிறது?”(ப.26). சரியான விமர்சனம் இது. அதே போல அந்தத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் நிலையை,

“சிலர் ஆறாம் வகுப்பைக் கூட எட்டவில்லை. அந்தத் தோட்டத்து மண்ணிலேயே கருவாகி, உருவாகி, வித்தாகி, பயிராகி இன்று சிறு செடியாய் வேரூன்றி வளரத்துடிப்பவர்கள். தோட்டமாகிய அந்த மரக்காட்டை விட்டால் வேறு வெளி உலகத் தொடர்பே சிறிதும் இல்லாதவர்கள். மேற்படிப்புக்கும் வழியில்லை; வேறு வேலைக்கும் பயிற்சியில்லை. சரியாக அவர்களுக்கு வழி காட்டுவோரும் இல்லை. ஆணிவேர் நறுக்கப்பட்ட இளங்கன்றுகளாக அவர்கள் அங்கே தத்தளித்து தடுமாறிக் கொண்டிருக் கிறார்கள்” (ப. 26) எனப் பதிவு செய்கிறார்.

மலேசிய நாட்டின் உணவு, பழக்கவழக்கங்கள் அங்கொன்றும், இன்கொன்றுமாக பதிவாகி உள்ளன ‘ரம்புத்தான்’ எனும் பழம் பற்றி, “செக்கச் சிவந்த நிறத்தில் கோழி முட்டையை ஒத்த வடிவத்தில் நீண்ட காம்புகளுடன் விளங்கிய அந்தப் பழம் பார்ப்பதற்கும் கண்ணைப் பறித்தது; சுவைப்பதற்கும் இனிமையாக இருந்தது. தோலைக் கீறி அகற்றிவிட்டு, உள்ளே பனம் நுங்கின் சுளை போல் இருந்த பழத்தை எடுத்துச் சாப்பிட்டான்” (ப. 36) எனச் சுட்டுவார்.

முருகன் தோட்டத்திலிருந்து படித்து, வெளியேறி, ஆசிரியர் வேலைக்குப் போய் கோலாலம்பூரில் வசதி வாய்ப்புகள் நிறைந்த பெண் ராதாவை விரும்பித் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களிடம் தான் ‘தொழிலாளி’ குடும்பம் என்பதை மறைத்து, தன் தந்தை ‘கிராணி’ என்கிறான். மேலும், பாலனையும் இத்தகு வாழ்வுக்கு அழைக்கிறான்.

“இதோ பார் பாலா, நான் உனக்கு உதவி செய்யணும்னா நீயும் எனக்கு ஓர் உதவி செய்துக்கணும். எஸ்டேட் வாழ்க்கையை அடியோடு நீ வெறுக்கக் கத்துக்கணும். பிறவியிலேருந்து அது கொடுத்திருக்கிற தாழ்மை உணர்ச்சியை வேரோடு கிள்ளிக் குப்பைத் தொட்டியிலே எறிஞ்சிடணும். அதோட பாசம், பந்தம், ஒட்டு, உறவு எல்லாத்தையும் கத்தரிச்சுக்கிட்டு, நீ அதிலேருந்து தப்பிச்சுக்கணும்; ஆமா, தப்பிச்சுக்கணும்”.(ப. 78)

ஆனால், பாலன் இவற்றுக்கு ஆட்படவில்லை. தன் வேலையே போன பின்னும் தன் மக்களுக்காக நிற்கிறான். மாறாக, முருகனின் ‘பொய்’ அம்பலப்பட்டு முதலிரவே ஏமாற்றத்தில் முடிகிறது. இந்த வகை மாதிரிப் பாத்திரப் படைப்புகள் வழி ‘மேல் நிலையாக்க’ உணர்வுகளின் அடித் தளத்தை நாவலாசிரியர் தொட்டு விவாதிக்கிறார்.

விழிப்புணர்வு

ஊரில் மாந்தோப்பையும், தென்னந்தோப்பையும் மனதில் வரித்து தோட்ட வேலைக்கு வந்தவர்கள் மலை முகடுகளில், வனத்தில், வனவாசிகளைப் போல ‘டெண்ட்’ வீடுகளில் வாழ நேர்ந்தது அவலம் தான். ஆங்காங்கே இளைஞர்கள் வழியாக மாற்றம், முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு தென்படுகிறது.

“ரப்பர் மரம் வெட்றதைத் தவிர வேறே எந்த வேலையுமே செய்யத் தெரியாத ஒரு கூட்டம் இருக்கலாமாங்கறது தான் என் கேள்வி. வேறே எந்த வேலையுமே பழகாமல், வேறே எந்த வேலைக்குமே லாயக்கில்லாமல் இருக்கிறதுனாலேதானே இன்னும் நாலு நாளைக்குப் பிறகு நூத்துக்கணக்கான குடும்பம் அவதிப்படப் போகுது? காலப் போக்கைத் தெரிஞ்சுகிட்டு அதற்குத் தகுந்தாப்பிலே நாம்ப இங்கே வாழ வேண்டாமா?” (ப. 112) தொழிலாளிகள் பிள்ளைப் பெற்றுக் கொள்வது, கடன் வாங்குவது, வட்டியை அடைக்கக் காலம் பூராவும் உழைப்பது, சீட்டுப் போட்டு ஏமாறுவது, ‘சம்சு’ எனும் சாராயத்தண்ணிக் குடிப்பது என்பதாகக் ‘காலம் கழித்தார்கள்’ அடுத்தத் தலைமுறையாவது படிக்க வேண்டும் எனப் பள்ளிக்கூடமும், டியூசனும் பாலன் போன்றவர்களால் முன் எடுக்கப்பட்டன. அதே போல தோட்டத்துக்கும் முதலாளிகளுக்கும் வந்த ‘மின்சாரம்’ லயங்களுக்கும் வரக் கோரிக்கை வைக்கப்பட்டது. பாலியல் அத்து மீறல்களுக்கும் முடிவு காணப் போராட்டங்கள் வெடித்தன.

இந்நாவல் எழுதப்பட்ட பொழுது மலேசியாவில் தமிழ் இலக்கியம் என்று ஒன்று உருவாகியிருக்கவில்லை. தமிழ்நாட்டு இலக்கியங்களே வலம் வந்தன. படித்தவர்கள் மிகக் குறைவு. எழுதுபவர்கள் இல்லை எனும் நிலைதான்.

இந்நாவலைப் படித்து, பார்த்து எழுதத் தொடங்கியவர்கள் பலர். இது தமிழ் நாட்டுத் தமிழர்கள் மலேசியத் தமிழர்களை அறிந்து கொள்ள எழுதியது என்பார் அகிலன். ஆனால், மலேசியா வாழ் தமிழர்களே தங்கள் நாட்டின் தமிழ்க் குடிகளை அறிய இந்நாவல் பெரிதும் உதவியது என்பர்.

“நான் எழுதும் இந்த வாழ்க்கையில் நேரடியான அநுபவம் பெறாதவன்; தோட்டப்புறங்களில் வாழாதவன் ஆனாலும் தமிழ்நாட்டு எழுத்தாளன் ஒருவன் மேற்கொள்ளும் முதல் முயற்சி இது. இதுவரை இங்குள்ள எழுத்தாளர் யாரும் நமக்கு ரப்பர்த் தோட்டங்களில் வாழும் மலேசியத் தமிழர்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்த வகையில் இந்த நாவல் ஒரு முன்னோடியாக இருந்தால் போதும். எதிர் காலத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து வெளிவரப் போகும் தலைசிறந்த - தோட்டப்புற வாழ்க்கை கொண்ட நாவல்களுக்கு காலத்தால் சருகால் உதிரும் இந்த நாவல் சிறிதளவு உரமாகப் பயன்படுமானால் அதையே நான் பெற்றப் பெரும் பேறாகக் கருதுவேன்." என முன்னுரையில் அகிலன் குறிப்பிடுவார். அரை நூற்றாண்டை நெருங்கியும் இது சருகாகாமல் இருப்பதே வெற்றி.

‘ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல’ மனிதர்களுக்கும் தான். நம்பிக்கை, மாற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் என்பது மனித குலத்தின் கனவு மட்டுமல்ல இருப்பும் தான்.

பயன்பட்ட நூல்கள்

1.            அகிலன், எழுத்தும் வாழ்க்கையும், பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1978 (முதற்பதிப்பு).

2.            அகிலன், பால்மரக்காட்டினிலே, தாகம், சென்னை, 2021(இரண்டாம் பதிப்பு).

3.            சு. வேங்கடராமன், இந்திய இலக்கியச் சிற்பிகள் - அகிலன், சாகித்திய அகாதெமி, சென்னை, 2018 (இரண்டாம் பதிப்பு).

- இரா.காமராசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல்துறைத் தலைவர், தஞ்சாவூர்

Pin It