கவிஞர் ரகசியன் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுப்பு இது. இயற்கை காதலன் கவிஞர் ரகசியன் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
இயற்கை குறித்து கவி பாடுவதில் ரகசியன் ரசனை என்பது இமயமலை போன்று உயர்வான பார்வையாக இருக்கும். இவரது பலமே சொற்களை குறைவாக எளிமையாக எழுதுவதுதான். இயற்கை, காதல், சமூகம், கடவுளை பகடி செய்தல், சனாதனத்திற்கு சம்மட்டி அடிகொடுதல், ஜாதியம் குறித்து மிக நுட்பமான கவிதை தொகுப்பாக இது அமைந்துள்ளது. இயற்கை குறித்த இவர் எழுதியுள்ள கவிதைகள் வாசித்த இதயங்களை ஒரு கணம் அமைதிப்படுத்தும் மற்றும் நீங்காத நினைவுக் கவிதைகளாக மாறிவிடும்.
"மரம்"
சிறு மழைக்குக்
குடை
பெரு மழைக்குப்
பொத்தல் கூரை.
..............
"கிள்ளக் கிள்ள
துளிர்த்துக் கொண்டே
இருந்த செடிதான்
திசையெங்கும்
நீண்டிருக்கும்
இப் பெருமரம்.
................
இந்த கவிதை போராட்ட குணத்தையும் முயற்சியை எந்த சூழ்நிலையிலும் கைவிடாது முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஊக்கமான வார்த்தைகள்.
................
உனக்கு இருப்பவை
சிறகுகள்
கால்கள் என்று
நின்று விடாதே! -
இது சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்.
.....................
"மூன்று கண்களால் அமுதாக்கி
வைத்திருக்கும்
பனையும்
போதிமரம் தான்". மிகச் சிறப்பு.
..............
"மார்கழி வருகிறது போகிறது
ஊரில்
பூசணிப் பூக்கள் தான்
இல்லை.
...........
'கொள்கை
விருந்தை மறுதலித்து விட்டு
பட்டியினில் கிடக்கும்".
............
கவிஞரின் வாழ்வில் அவருக்கு நிகழ்ந்திருக்க வேண்டிய மரணங்கள் பற்றி உயிர்த்தெழும் ஊழ் எனும் தலைப்பில் எழுதியிருக்கும் வரிகள்...
"என்னுடைய சில மரணங்கள்
சிறுவயதிலேயே
நிகழ்ந்திருக்க வேண்டியவை...
இத்தனைத் தவணைகள்
மீறிவந்து
சொற்சிலுவையில் அறையுண்டு
இக் கவிதையில்
நான்
உயிர்த்தெழ வேண்டும்
என்பது
அம்மா நம்பிய ஊழ்போலும்.
……………
"ஒரே வரிசையில்
நின்று
பின்னென்னை முந்திப்போய்
என்னைவிட அதிகம்
பங்கைப் பெரும் நீ
பெரிய ஜாதி
என நிரூபிக்கப் போடும்
குட்டிக் கரணத்தையும்
கேலிக் கூத்தையும்
பரிகசிக்கிறேன்".
சனாதனத்திற்கு வரிந்து பேசுபவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கிறார்.
………………
திருமண அழைப்பிதழ் புரிகிறது
காளியம்மன் துணைக் கொண்டு - சரி
அது என்ன - ஸ்ரீ?
ஐப்பசி மாதமௌ ஓகே!
அது என்ன விளம்பி வருடம்?
சுப தினம் பழகியாச்சி!
அது என்ன சதுர்த்தி? திதி?
துலா லக்கினம்?
கருத்தியலில்
பிறழ்ந்துவிட்டாய்
பகுத்தறிவை
தொலைத்துவிட்டாய்
பின் உன் திருமணத்துக்கு
அன்பும் அறனும்
திருவள்ளுவரும் ஏன்?.
………………………
"உலகமயம்"
வண்ணாரின் கழுதைகளை விரட்டிவிட்டது
குயவரின் பனைகளை உடைத்துவிட்டது
நெசவாளரின் தறிகளை அறுவிட்டது
உழவரின் நிலங்களை
அரித்துக் கொண்டு வருகிறது
ஆனால்
பார்ப்பனரின் மந்திரத்தை
மட்டும்
அவரிடமே விட்டு வைத்திருக்கிறது.
..................
அந்த நீர்த்தேக்கத் தொட்டியை
தாங்கிக் கொண்டிருக்கும்
நான்கு தூண்கள்
சதுர் வர்ணங்கள்
எல்லா ஊரின்
நீர்த் தொட்டி அடியிலும்
உப்பு துகள்கள் படிந்திருக்கின்றன
இந்த ஊரின்
நீர்த் தொட்டியில் தான்
மநுவின் மூளை
படிந்திருக்கிறது".
....................
மரணம் வரை காவிய வாழ்வு
மூன்றாம் நாளில்
உயிர்தெழுந்தது தான்
கசப்பான செய்தி...
மேலும் இத்தொகுப்பில்....
அம்மாவின் நிலவு, இன்ச் டேப், கவிதையை இழக்கிறது மொழி, வெயில், வீங்கிய குளம், மாமா வேலை பார்க்கும் பரம்பொருள், டி. ராஜேந்திருக்காக காத்திருந்த இரவு, நண்பன் வானவமாமலைக்கு, மநு ஓட்டரசியலுக்கு வந்து வெகு காலமாகி விட்டது, ஆமேன், கடலன்ன காமம் மற்றும் கவிதை தொகுப்பு தலைப்பான "மீட்பர் கொடுத்த விசா (செத்துப் போன கடவுளுக்குப் பறை இசைக்கும் கவிதை தலைப்பில் எழுதியிருக்கும் கவிதைகள்) கவிதைகளை மிக நுட்பமாக எழுதியிருக்கிறார். கவிஞர் ரகசியன் அவர்களுக்கு வாழ்த்துகள். கவிதை நூலை வெளியிட்ட எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களின் "சொற்பறவை பதிப்பகத்திற்கும் சிறப்பான தொரு அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் யாழன் ஆதி அவர்களுக்கும் வாழ்த்துகள்.
- கவிஞர் மு.பிரபு, வேலூர்