singaram 450

புயலிலே ஒரு தோணி

ப.சிங்காரம் / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., சென்னை / விலை: ரூ.250/-

உலக வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டு உலகினைத் தொழில்நுட்பம் சார்ந்த நவீனகளத்திற்கு இட்டுச்சென்றது. அதிகமான முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்நூற்றாண்டு கண்டது. மின்சாரம், நீராவி இயந்திரம், ரயில்பாதையும் தொடர்வண்டியும், தொலைபேசி, தந்தி, இரும்பு மற்றும் உருக்கு இரும்பின் தொழில்நுட்பம் போன்றவையும் வளர்ச்சி பெற்றன. நீராவிக் கப்பல்களும். தொடர்வண்டிகளும் பயண நேரத்தினை மிகவும் குறைத்தன. தொடர்வண்டியில் ஒருவாரத்தில் பாரிசிலிருந்து விலாடிவாஸ்டாக் ரயில் நிலையத்திற்கு செல்லமுடிந்தது. கப்பல்களும், தொடர்வண்டிகளும் புலப்பெயர்ச்சியினை துரிதப்படுத்தின, அதிகமாக்கின.

இது ஒருபுறமிருக்க போர்க்கருவிகள் அதுதொடர்பான உபகரணக்கருவிகள் போன்றவையும் தொழில்நுட்ப ரீதியாக வேகமாக வளர்ந்தன. உலகநாடுகள் தொழில்நுட்பரீதியாக மூன்றாகப் பிரிக்கப்பட்டன: வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளரப்போகும் நாடுகள். இந்தியா இப்பட்டியலில் இல்லை. வளரா நாடுகள் வரிசையில் இருந்தது. 1875 இல் இருந்தே உலக அரசியலரங்கில் முதன்மை பெற்ற நாடுகளாக Britain, France, Germany, Russia, Austria, Italy, Hungery, USA, Japan, China  போன்ற நாடுகளே முக்கிய இடம் பெற்றிருந்தன. ஆனால், தொடர்போர் காரணமாகவும், வறட்சி, பஞ்சம் காரணமாகவும் ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் பொருளியல் ரீதியாக பெரும் பின்னடைவினைச் சந்தித்தனர். பெருமளவிலான புலப்பெயர்ச்சி ஐரோப்பாவிற்குள்ளேயே நிகழ்ந்தது. எவர் எந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தாலும் அவர் ஒரு கூலியாகத்தான் தம் வாழ்வினை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், முதலாளித்துவம் ஓர் இறுக்கமான சமூகக் கட்டமைப்பினை உருவாக்க நினைத்தது. அதன் விளைவுதான் போர்கள். போர்களின் மூலம் நாடுகளைக் கைப்பற்றி இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிடுவதே நாடுகளின் பேராசையாக இருந்தது. இதற்கு பலியானவர்கள் வறுமையில் உழன்ற மக்களே.

இக்காலக்கட்டத்தில் முதலாளியத்தாலும் நிலமானியத்தின் கொடூரத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்க்குரலாக சில சிந்தனையாளர்கள் தோன்றினர். இதில் அரசியல் சிந்தனையாளர், ஆன்மீகச் சிந்தனையாளர், தத்துவ சிந்தனையாளர் என்றும் கலாபூர்வச் சிந்தனையாளர்கள் சிலரும் தோன்றினர். ஜெர்மனியில் கார்ல்மார்க்சும் (1818-1883), பிரடரிக் எங்கல்சும்(1820-1895), தொழிலாளர்களின் குரலாக ஒலித்தனர். ரஷ்யாவில் டால்ஸ்டாய் (1828-1910) பிரபுகுலத்தில் தோன்றினாலும் அவரும் தஸ்தயெவ்ஸ்கியும் (1821-1881) ரஷ்யாவின் மாற்று அடையாளங்களாக இயங்கினர். தமிழகத்தில் ‘வாடியபயிரினைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று இராமலிங்கர் (1823-1874) பசித்தோரின் குரலாக இருந்தார். கருணையில்லா ஆட்சி கடிதுஒழிக என்று எதிர்க்குரல் எழுப்பினார். வர்ணாஸ்ரமத்தினை உடைத்து சமத்துவத்தினை உருவாக்க அயோத்திதாஸரும் (1845-1914), அய்யன்காளியும் (1863-1941), நாராயணகுருவும் (1856-1928), அய்யா வைகுண்டசாமியும் எழுந்தனர். இந்தியத் தேசியத்தினைக் கட்டமைக்க மோகன்தாஸ் கரம்சந்த்காந்தி (1869-1948) தோன்றினார். இந்தியக் கலையினை உலகிற்கு விளக்க இரவீந்தரநாத் தாகூர் (1861-1941) தோன்றினார். உலகில் ஆண்டைகளின் அன்றாட அரசியலை விமர்சிக்க ஜார்ஜ் பெர்னாட்ஷா (1856-1950) தோன்றினார். அய்ரோப்பாவில் அனார்கிஸ்ட்கள், நிஹிலிஸ்ட்கள் போன்ற சமூக இயக்கங்கள் தோன்றின.

ஆனால், இவையனைத்தையும் மீறி அக்காலத்து இளைஞர்கள் மனத்தில் வல்லாதிக்கத் தன்மையும், மேலாதிக்கப் பண்பும் புதைந்திருந்தன. இனவெழுச்சியும், மொழிவழித் தேசியமும், நிறவெறியும், மனத்தினில் ஆயுதங்களாக இருந்தன. அவை அவர்களைப் போரில் கொலைக்கருவிகளை ஏந்தவைத்தன. அவ்விளைஞர்களை வழிநடத்தியவர்கள் நடுவயதினைக் கடந்த கிழவர்களே. அத்தலைவர்களின் பேராசையே முதல், இரண்டாம் உலகப்போர்களுக்கு உளவியல் காரணிகளாக அமைந்தன. போரினைத்தூண்டிய ஹிட்லரும் (1889-1945), முசோலினியும்(1883-1945), அட்மிரல் டோஜோவும் (1884-1948) 50 வயதினைக் கடந்திருந்தனர். சுபாஷ் சந்திரபோஸக்கு (1897-1945) 1945 இல் 48 வயதுதான் ஆகியிருந்தது.

அய்ரோப்பாவின் காலனிய வெற்றி ஆயுதத்தால் மட்டுமன்று. கொடூரத்தன்மை, ஆக்கிரமிப்புவெறி, பயிற்சிபெற்ற படையணியினர். அவர்களுடன் ஜப்பான் கூட்டணிகண்டதற்குக் காரணம் அது 1858 லிருந்து தொழில்நுட்பரீதியாக நன்கு வளர்ந்திருந்தது. அவர்களிடம் போர்த்தன்மை 1880 முதல் 1930 வரை திட்டமாக இருந்தது. அய்ரோப்பியர்கள் ஆக்கிரமித்த நிலங்களில் பயிர்செய்வதற்காக கூலிகளாக இந்தியாவிலிருந்து அதிகமான மக்கள் புலம்பெயர்ந்தனர். அவர்களில் அதிகமானோர் தமிழர்களே. இவர்கள் தமிழகத்தில் நிகழ்ந்த பஞ்சம் காரணமாகவும் கூலிகளாகப் புலம் பெயர்ந்தனர். 1860 களில் ஸ்பெயினிலும், 1890-1891களில் ரஷ்யாவிலும் கடும்பஞ்சம் தோன்றியது. 1880 களில் எப்போதும் இல்லாத அளவிற்கு புலப்பெயர்ச்சி நிகழ்ந்தது.

1841-1911 காலகட்டத்தில் நிகழ்ந்த பஞ்சம், பொருளாதார மந்தம் போன்றவற்றால் அயர்லாந்து பாதியளவு மக்கள்தொகையினை இழந்தது. 1895-1902 காலகட்டத்தில் ஆஸ்திரேலியா வறட்சி காரணமாக பாதியளவு ஆடுகளை இழந்தது. 1892 இல் பூச்சியினால் அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் பெருமளவு பாதித்தது. உணவுப் பொருளுக்காகவும், உழைப்பிற்காகவும், மூலப்பொருள்களுக்காகவும் ஐரோப்பாவும், அமெரிக்காவும் காலனியநாடுகளைச் சார்ந்து இருக்கவேண்டியிருந்தது. 1871 முதல் தொழில்வளம் மிகுந்த அய்ரோப்பிய நாடுகள் ஒன்றையன்று சண்டையிட்டதில்லை. ஆனால், சண்டைகளில் பிறநாட்டு மக்களைக் கொன்றன. பாதிக்கப்பட்ட இனக்குழுக்கள் எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், போயர்கள் பிரிட்டிஷாருக்கு கடுமையான ஆயுத எதிர்ப்பைக் காட்டினர். 1905 இல் சிறுநாடான ஜப்பான் பரந்துவிரிந்த ரஷ்யாவினைப் போரில் தோற்கடித்தது. ஒட்டோமான் பேரரசு சிதைந்தது. பால்கன் பிரச்சினைதான் 1914 இல் போர் வெடிப்பிற்கு மருந்தாக அமைந்தது. 1880 களிலேயே பிரடரிக் எங்கல்ஸ் உலகப்போர் வெடிக்கும் என்று கணித்தார். நீட்ஷே (1844-1900) அய்ரோப்பிய இராணுவமயம் மனிதனை விலங்காக்கும் என்றார். இப்பின்னணியில் இந்நாவலைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

I

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் சிறந்த நடப்பியல் நாவல்களில் ஒன்றாக அளவிடப்படும் ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ 1962 இல் எழுதப்பட்டு 1972 இல் வெளியிடப்பட்டது. கடல்தாண்டிய தமிழர்களின் புலப்பெயர்ச்சியினை வரைகாட்டும் இந்நாவல் தமிழரின் பண்பாட்டினை பின்னோக்கிப் பார்க்கும் விமர்சனக்கூறுதலையும் கொண்டுள்ளது. 1930-1945 காலகட்டத்தில் கதைநிகழ்வு அமைவதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்நாவலிற்கு களமாக சின்னமங்கலம், சிங்கம்புணரி, மதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை போன்ற தமிழகத்தின் வறண்ட நிலப்பகுதியும் தென்கிழக்காசிய நிலப்பரப்பான பர்மா, பினாங்கு, சிங்கப்பூர், மலேசியா, பாங்காக் போன்றவையும் அமைகின்றன. இவை அடர்ந்த காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு.

உலகின் பொருளியல் பெருமந்தத்தினையும் (great economic depression)  தொழில்நுட்பத்திலும் படைபலத்திலும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிடையே உருவான போர் போட்டிகள் காலனிய நாடுகளை அலைக்கழித்ததனையும் இந்நாவல் விளக்கும். இடையிடையே, மேற்சொல்லப்பட்ட தென்கிழக்காசியப் பகுதிகளில் வட்டித்தொழில் பயனாகப்பெற்ற செல்வத்தினை கேளிக்கைகளில் செலவிட்டு இழிநிலை அடைந்த தமிழரையும் அதற்கான சமூகப் பண்பாட்டுப் பின்னணியும் பேசப்படுகிறது. தாழ்ந்த தமிழகத்தினை சீராக்கும் உபாயங்கள் கதைமாந்தர்கள் வழியே பரிந்துரைக்கப்படுகிறது. பழமையினைப் போற்றும், தூற்றும் போக்கும் சமூகம் பற்றிய கவலையும் வெளிப்படுத்தப்படுகிறது.

நாற்பது அத்தியாயங்களில் எழுதப்பட்ட இந்நாவலில் கதைமாந்தர்களாக தமிழர், மலையாளிகள், சீனர், மலேயர், பர்மியர், வங்காளியர், ஜெர்மானியர், இஸ்லாமியர், கிறித்தவர் என்று பல இனத்தினரும் வந்து போகின்றனர். இந்நாவலின் முக்கிய கூறுகளை சில தலைப்புகளில் அடக்கலாம். அவை: வரலாற்றின் தொடர்ச்சி, வணிகமும் வரலாறும், பாண்டியனும் புல்லட்டும், நாவலாசிரியரின் பெண்கள்மீதான பார்வை, தமிழ்ச்சமூகத்தின் மீதான விமர்சனம், அரசியல் போன்றன. ஆனால், இத்தனைத் தலைப்புகளும் இங்கு விவாதிக்கப்படப் போவதில்லை. ஏனெனில், கதை தமிழ்ப் பாட்டினைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. இதனை ஒரு Nostalgic நாவல் வகைக்குள் சேர்க்கலாம்.

நூறாண்டுகளுக்குமுன் தமிழகத்தின் ஓர் இடைநிலை ஊரின் சமூகப் பொருளியல் அமைப்புநிலையினை இந்நாவலின் சின்னமங்கலம் என்ற ஊர் பற்றிய விவரணைமூலம் அறியலாம். ஊருக்குப் புறத்தே அமைந்திருக்கும் ஓர் உயர்நிலைப்பள்ளி. புதிதாக வந்த தபால்நிலையம். வாரத்திற்கு ஒருமுறை மருத்துவர் வந்துபோகும் கிளினிக். பிறர்முன் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளும் ஒரேயரு கிறித்தவ குடும்பம். பெண்களுக்கு ஜாக்கெட் தைக்கும் காஜா பெண்ணையே மணந்த ஒற்றைமெஷின் தையல்காரர். படிப்பகத்தில் எப்போதும் இருக்கும் ஒரேயரு தமிழ்ப்புலவர். தீபாவளியைப் புறக்கணிக்கும் தி.க குடும்பம். எவருடனும் சண்டைபோடாத குருக்கள் குடும்பம். குடித்தாலும் நிலைகுலையாத ஊர் பயில்வான். எல்லையில் தனித்திருக்கும் ஊர்க்கோயில். அதன் நந்தவனத்தின் குளப்படிக்கட்டில் மாலைமங்கிய நேரத்தில் மறைவாக அமர்ந்து கதைபேசும் காதலர்கள். அவர்களை நோட்டம்விடும் விடலைகள். பாழ்மண்டபத்தில் பீடிகுடிக்கும் இளவட்டங்கள். சீட்டாடும் பிழைப்பற்றவர்கள். கோயிலுக்கு நேந்துவிடப்பட்ட ஊர்மாடு. அனாசின்கூட கிடைக்கும் ஒரு மளிகைக்கடை. இதுதான் 1960 களில் தமிழகத்தின் இடைநிலைப்பட்ட ஓர் ஊரின் அமைப்பு.

இதுபோன்ற விவரணையில் கதைக்களத்தின் ஒன்றான சின்னமங்கலத்தினைக் கண்ணுறலாம். அவ்வூரின் சந்தையினை திண்டுக்கல் ராவுத்தர் குத்தகை எடுத்துள்ளார். அதில் பலவித வியாபாரிகள் பொருள்களைச் சந்தைப்படுத்தினர். அவர்கள் பலவாறாக சுட்டப்படுகின்றனர். மின்விளக்கு வசதியற்ற அச்சந்தையில் கடைகள் பெட்ரோமாக்ஸ், சிம்னி விளக்குகள் வெளிச்சத்தில் இரவிலும் பொருள்கள் விற்கப்பட்டதனை நாவலாசிரியர் பதிவுசெய்துள்ளார். கிழங்கு வியாபாரிகள், பலசரக்கு வியாபாரிகள், கசாப்புகடைபோடும் உதினிப்பட்டி ராவுத்தர், நாடார்களின் உப்புக்கண்ட கறிவியாபாரம், கோபால்செட்டியாரின் பட்டணம்பொடி கடை என்று கடைகளின் வரிசை வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாலையோரத்து புடவை கடைகளில் விற்கப்படும் நெரிஞ்சிப்பூசேலை, அமுசு பப்பாளி சேலை, ஊசி வர்ணசேலை, சேலம் குண்டஞ்சு வேட்டி, அருப்புக்கோட்டை துண்டு, பரமக்குடி சிற்றாடை என்று துணிவகைகள் பற்றிய குறிப்பு உண்டு. உணவுப் பண்டங்கள் தொடர்பாக கோமதிவிலாஸ் அசல் திருநெல்வேலி சைவாள் மண்பானை சமையல்கடை, அபுபக்கர் தகர கடை, பாலக்காட்டு அய்யர் காபி கிளப்பு, வாழவந்தான் பொரிகடலை கடை, திருநெல்வேலி சைவாச்சியம்மா இட்லிகடை போன்றன. 1970 களில் இதுபோன்ற சிற்றூர்களில் இளமைக் காலத்தினை செலவிட்டவர்களுக்கு இவ்விவரணையில் கற்பனையில்லை என்று தெரியும். இதுபோன்ற உள்ளூர் வியாபாரச் சூழலை இன்றும் மணப்பாறை, திண்டுக்கல் வார, மாதச் சந்தைகள் கூடுமிடங்களில் காணலாம்.

அவ்வூரின் அமைப்புமுறை பற்றிய விவரணை இவ்வாறாக அமைகிறது. கோமுட்டி கிணறு, லாடசாமியார் மடம், வலையர்தெரு, கடலைக்காடு, கள்ளுக்கடை, ஆவாரங்காடு, கரடிமேய்ந்த தோப்பு, எல்லையம்மன்கோயில், வேதக்காரர்பள்ளிக்கூடம், பழநியாண்டவர் பாடசாலை, வாத்தியார் அருமை நாயகம்வீடு, சங்கரன் ஆசாரி கொல்லுப்பட்டறை, மராட்டியர் மிலிடரி கிளப், எருமைக்கார நாய்க்கரம்மா வீடு, குண்டுராவுத்தர் லாடக்கொட்டகை, முன்குடுமிமலையாளி வேலாயுதத்தின் ரம்பக்கிடங்கு, கடற்கரைநாடார் சந்தனக்கடை. இவ்விவரிப்பில் தமிழரோடு பிறமொழி பேசும் இனத்தினரும் கலந்து வாழ்ந்தனர் என்று அறியலாம். தமிழகத்தில் தெலுங்குமொழி பேசும் மக்கள் இல்லாத ஊர்கள் என்றால் அவை மீனவர் கிராமங்களாகத்தான் இருக்கும். தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தொழில் செய்யும் தெலுங்கு மொழி பேசும் கிராமங்கள் இல்லை எனலாம். உள்நிலப்பகுதிகளிலும் மீன்பிடிதொழில் செய்யும் தெலுங்குமொழிபேசும் கிராமங்கள் இல்லை.

அவ்வூரில் வாழ்ந்த மக்கள் அணிந்திருந்த கிலாஸ்கோமல்லுவேட்டி, பியூஜி பட்டுசட்டை, புலித்தோல் இடைவார், வெஸ்டர்ன் கடிகாரம், முட்டைமார்க் பனியன், டைமண்ட் துண்டு போன்றவையும் வருணனையில் இடம் பெற்றுள்ளது. இவ்விவரணைகள் நவீனகாலத்திற்கு முந்தைய கிராமங்கள்/ஊர்கள் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக்கொண்டன என்ற தோற்றத்தினைத் தருகின்றன. அது, ஓரளவு உண்மையும்கூட. ஆனால், சந்தையில் கூடும் இவ்வியாபாரிகள் அடுத்தடுத்த ஊர்களின் சந்தைகளிலும் திட்டமிட்ட காலப்படி கடைபோடுவர். சிலகடைகள் நிரந்தரமாக இருக்கும். இரவில் காண்டா விளக்கொளியில் ஊருக்கு ஊர் புடவைக்கடை போடும் வியாபாரிகளும் உண்டு.

II

சிங்காரத்தின் வரலாற்றறிவு

நாற்பது உள்தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நாவல் ஆசிரியரின் புலமைத்துவத்தினை பரக்க விவரிக்கிறது. சங்க இலக்கியப்பாடல்கள், வழக்கில் இருந்த சொலவடைகள், சில நாட்டுப் புறப்பாடல்கள், தேசிங்குராஜனின் கதைப்பாடல்கள், பைபிள் வசனங்கள், திருக்குறள் போன்றவை பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பாபிலோனிய, எகிப்திய நாகரிகங்கள் மறைவிற்கு ஆட்சியாளர்களின் போகவெறியே காரணம் என்பார் ஆசிரியர். மேலும், ஆட்சியாளரின் போகத்தின்மீதான ஆசையும், செல்வத்தின்மீதான ஆசையும் நாகரிகங்களின் வீழ்ச்சிக்குக் காரணம். இவ்விடத்தில் சி.என்.அண்ணாதுரை(1909-1969) எழுதிய ரோமாபுரி ராணிகள் என்ற நூலினை நினைவுகூரவேண்டும். தமிழரின் போகவாழ்வே மாலிக்காபூரும், கம்பண உடையாரும், லட்சுமண நாய்க்கனும், ஷாஹாஜியும், வெங்கோஜியும், டுயூப்ளேயும் (1697-1763), கிளைவும்(1725-1774) விருப்பம்போல் தமிழகத்தினை சூறையாட அனுமதித்தது. தமிழர்களிடையேயான ஒற்றுமையின்மையே இதற்குக் காரணம் என்று வரலாற்றுச் சம்பவங்களை ஆண்டுமுறைப்படி / காலநிரல்படி வரிசைப்படுத்துகிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1760-1799) இளவல் புதுக்கோட்டை தொண்டைமான் அரசு அலுவலர்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டது, பாளையக்காரர்கள் ஒன்றுகூடி குடியானவர்களிடம் அநியாயமாக வரிவசூலித்தது போன்ற வரலாற்று நிகழ்வுகளைப் பதிவிடுகிறார். தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சி பற்றிய பெருத்த கவலையாக இப்பதிவு அமைகிறது. வெளியிலிருந்து வந்து சூறையாடியவர்களையும் சாடுகிறார். மிகைவரியினை குடியானவர்களிடம் வசூலித்த பாளையக்காரர்களையும் சாடுகிறார். இதனை நாவலாசிரியரின் சமூகப்பொறுப்பாகப் பார்க்கலாம். சின்னமங்கலம் என்ற ஊர் காலனிய காலத்திலிருந்து நவீனகாலத்திற்கு மாறிவரும் போக்கும் பதியப்பட்டுள்ளது. ஆங்கிலம் கற்பிக்கும் அவ்வூரின் டானியல் வாத்தியார் அவ்வூரின் சில பெண்களை பாலியலாக அபகரித்ததனை ஒரு குறிப்பாகத் தருகிறார். ஆங்கிலம் கற்ற ஆண்களின் மீதான பெண்களின் மோகத்தினை இக்கூற்று வெளிப்படுத்துவதாயுள்ளது. 16 வயதினிலே (1977), ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) போன்ற தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்ற கதைமாந்தர்கள் படைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏன்? இப்படி சித்தரிக்கப்படுகின்றனர். தமிழாசிரியர்கள் பற்றிய குறிப்புகள் நாவலில் இல்லை. அதாவது நாவல்களும் அமைந்த ஊர்களில் அதுபோன்ற தமிழாசிரியர்கள் இல்லை.

போர் பற்றிய விவரணைகளில் ஆசிரியரின் உலக அறிவு பளிச்சிடுகிறது. இரண்டாம் உலகப்போரின் படை நகர்வுகள், படையணியினைத் தலைமையேற்ற தளபதிகள் பற்றிய குறிப்புகள் அவர்களின் தனித்தன்மை போன்றன முக்கியத்துவம் வாய்ந்தவை. போரிலும், கடல்சார் வரலாற்றிலும் இனக்கலப்பு முக்கியமான உடனிகழ்வு. ஒரு ஜப்பானிய கமாண்டர் யாழ்ப்பாணத் தந்தைக்கும் ஜப்பானியத் தாய்க்கும் பிறந்தவர் என்ற குறிப்பினைத் தருகிறார். இங்கு யாழ்ப்பாணத்துத் தந்தைக்கும் ஐரிஷ் பெண்ணுக்கும் பிறந்த ஆனந்த கென்டிஸ் குமாரசாமியினை (1877-1947) நினைவுகூர வேண்டும்.

III

தமிழ்ச்சமூகத்தின் மீதான விமர்சனம்

singaram 2 450

கடலுக்கு அப்பால்

ப.சிங்காரம் / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., சென்னை / விலை: ரூ.120/-

சென்ற நூற்றாண்டின் முதல்கூற்றில் தமிழ் செவ்விலக்கியங்கள் பலவும் அச்சுக்கு வந்தன. அவற்றின் மீதான ஆய்வும் உந்தப்பெற்றது. பல ஆய்வுநூல்கள், கட்டுரைகள் வெளிவந்தன. சில செம்மொழி பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஜி.யூ.போப்பும்(1820-1908), வ.வே.சு.அய்யரும் (1881-1925) திருக்குறளினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனை உலக நிலைக்குக் கொண்டு சென்றனர். சிலப்பதிகாரமும் மணிமேகலையும்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சிலப்பதிகாரம் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக விதந்து பேசப்பட்டது.

1942 இல் சிலப்பதிகாரம் முழுநீளத் திரைப்படமாக தமிழில் வெளியிடப்பட்டது. தமிழரின் கற்பு, ஒழுக்கம் பற்றிப் பேசுவதற்கு ஒருவருக்கு ஒரு வாழ்நாள் போதாது என்ற அளவிற்கு அதனைப் படிப்போர் உணர்ந்தனர். தமிழில் அதிகமுறை அதிகமான அறிஞர்களால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட இலக்கியம் சிலப்பதிகாரமாகத்தான் இருக்கும். ஆனால், அதில் பரிந்துரைக்கப்பட்ட கற்பு, ஒழுக்கக் கோட்பாடுகளை தமிழர் பின்பற்றினரா என்பதில் ஒவ்வொரு தமிழர் மனத்திலும் கேள்வியுண்டு என்பதுபோல் நாவலாசிரியர் மனத்திலும் எழுந்துள்ளது. இதனைச் சில கதாமாந்தர்கள்மூலம் கேள்வியாக முன்வைக்கிறார். தமிழ்ப் பெருமை பேசிவந்த அக்காலக்கட்டத்தின் அறிஞரின் கருத்துகளை கதைமாந்தர் உரையாடல்களின் மூலம் விமர்சிக்கிறார். அதேநேரத்தில், உலகில் தோன்றிய பல நாகரிகங்கள் அழிந்திட தமிழ் நாகரிகத்தினையும், பண்பாட்டினையும் மொழியே கால ஓட்டத்தில் அழியாமல் காத்தது என்றுகூறும் ப.சிங்காரம் படைத்த பாத்திரங்கள் தமிழ் மொழியின் மேன்மையினைப் போற்றுதல் உண்மையின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்றும் பேசும்.

தமிழரைப் பிடித்துள்ள சனியன்களில் தலையானது ஜாதி என்றும், அதனை ஒழிக்கவேண்டும் என்றும் மற்றொரு கதாமாந்தர்மூலம் ப.சிங்காரம் அறிவுறுத்துகிறார். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்றுரைத்து ஜாதிய கட்டுமானத்தினை மட்டும் ஏன்? கழித்தொழிக்காமல் கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்வி அப்பாத்திரத்தின் உரையாடலில் பொதிந்துள்ளது. தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாய் உள்ளனர் என்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இழிநிலையில் உள்ளனர் என்றும் வேதனைப்படுகிறார். நாவலில் ஒரு பாத்திரம் தமிழர்களுக்குப் பரந்த மனப்பான்மை வேண்டுமென்று ஒலிக்கிறது. இங்குத் தென்கிழக்காசிய நாடுக  ளின் தேயிலை, காப்பி, ரப்பர்த் தோட்டங்களில் இழிநிலையில் கூலிகளாகச் சென்ற தமிழரின் புலப்பெயர்ச்சி பற்றிக் குறிப்பிடப்பட வேண்டும்.

தாமஸ் மன்றோ புதிய நிலவுடைமையினை அறிமுகப்படுத்தியதில் பெரும்பாலான புறம்போக்கு நிலங்களை ஆங்கில அதிகாரிகளும் வாங்கினர். காவிரி-டெல்டா மற்றும் வறண்ட இராமநாதபுரம் வட்டாரங்களில் நிலவுடைமையமைப்பு மாற்றியமைக்கப்பட்டதால் மரபுவழியிலான நிலவுடைமையாளரும் புதிதாகத் தோன்றிய பட்டாதார், மிட்டாதார், சமீன் போன்ற புதுவகை நிலவுடைமையாளர்களும் குடியானவர்களை கடுமையாகவும், கொடூரமாகவும் இழிவாக நடத்தியதால் அவர்கள் அடிமைத்தளையினை அறுத்தெறிவதற்கு கடல்தாண்டி புலம்பெயர்ந்தனர். ஆனால், அவர்கள் நிலை சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்தது போன்று புலம்பெயர்ந்த நிலத்திலிருந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு. அடிமைகளாயினர். அடிமை விற்பனையில் பிரிட்டிஷ் அரசும், டச்சுக்கம்பெனி, போர்ச்சுகீஸ் கம்பெனி, பிரஞ்சு கம்பெனிகளும், கிறித்தவ பாதிரியார்களும் கூட்டணிகொண்டதுதான் a kind of crucifixon. மிசினரிகள் தமிழ் அடிமைகளுக்கு சமயத்தினைத் தந்தனர்; விடுதலையினை அன்று. கீழைத்தஞ்சை மாவட்டத்தின் பண்ணையார்கள் அய்ரோப்பிய நிலவுடைமை பாணியில் கையில் சவுக்குடன் குதிரையில் சவாரிசெய்து குடியானவரை உழைக்க வைத்தனர். அய்ரோப்பியரைப்போல் உடுத்தினர், குடித்தனர், புகைத்தனர். சமூகத்தில் பெரியமனிதராய் நடித்தனர். இதுவே கீழைத்தஞ்சை மாவட்டத்திலிருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கூலிகளாகவும் அடிமைகளாகவும் தமிழர் புலம்பெயரக் காரணமாய் அமைந்தது. சிலர், பர்மா, பினாங்கு போன்ற இடங்களுக்கு வட்டித்தொழில் செல்வந்தர்களாகச் சென்றனர்.

IV

பெண்கள் மீதான பார்வை

அய்ரோப்பியர்களால் காலனியாக்கப்பட்ட தென்கிழக்காசிய நகரங்கள் அய்ரோப்பியபாணி வாழ்முறையினை பூசிக்கொண்டதனை இந்நாவல் விவரிக்கிறது. பினாங்கு, மலேயா போன்ற நகரங்களில் அமைத்த களியாட்ட அரங்குகள், தங்கும்விடுதிகள் போன்றன பொழுதுபோக்கு அம்சங்களோடு ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் இயங்கின என்றும், அதில் தமிழரும் இழிந்தனர் என்றும் நாவல் விளக்கும். நான்யாங் ஹோட்டல் என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் ஈப்போமரியம் என்ற பெண்பாத்திரத்தினை அம்மாடியோவ்... அந்த எருமையா! நம்மாள முடியாது சாமி. அவளுக்கு தாடிக்காரந்தான் லாயக்கு என்று கெக்கெளிக்கிறது ஒரு பாத்திரம். அப்பெண் ஒரு நடன மாதுவாகக் காட்டப்படுகிறார். இவ்விடத்தில் நூறுக்குமேற்பட்ட இந்திபடங்களில் நடனப் பெண்ணாக அசத்திய ஹெலன்பற்றி (Helen Stenborg,1938-2008)  குறிப்பிடவேண்டும். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், பர்மாவில் பர்மியப் பெண்ணிற்கும் பிரிட்டிஷ்படையின் இந்தோ-ஆங்கிலேயருக்கும் பிறந்தவர். இவரின் தந்தை இரண்டாம் உலகப்போரில் இறந்துபட்டதால் இவர் குடும்பம் இந்தியாவில் தஞ்சம் அடைந்தது. இவர் மூன்று தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் (உத்தம புத்திரன்: 1958; சங்கே முழங்கு: 1972; பில்லா:1980).

போரில் சிங்கப்பூர் ஜப்பானுக்கு கைமாறியபின் அதன்பெயர் மாற்றப்பட்டது. அங்கு, தெருக்களில் வேசியர் திரிந்தனர் என்று கவலைக்குரலில் பேசுகிறார் நாவலாசிரியர். விபசாரம் போரின் உடனிகழ்வில் ஒன்று. முதல் உலகப்போரின் விளைவாக அய்ரோப்பாவில் ஆடல்மகளிர் விலைமகளிராக மாறினர் என்ற மையக்கருத்துடன் Waterloo Bridge  என்ற நாடகம் 1930 இல் நிகழ்த்தப்பட்டது. இந்நாடகம் 1942இல் சினிமாவாக வெளியிடப்பட்டது. Vivien Leigh (1913-1967), Robert Tylor (1911-1969) இருவரும் நடித்த மனக்கவலைதரும் அற்புதமான காதல்படம். இதேபோன்ற விளைவுகள் USSR  இல் கம்யூனிஸ்ட் அரசு முதலாளிகளால் தகர்க்கப்பட்ட போதும் நாடுகள் பிரிந்தபோதும் உருவாயின. இப்படி முதலாளித்துவத்தினை ஆதரித்தவர்கள் பெண்களை விபசாரிகளாக்கினர். விலாசினி என்ற பெண்பாத்திரத்திற்கு என்று தனியே ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது முழுக்க அவரை வசைமழை மொழிவதற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. விலாசினி தட்டுவாணி என்று வசைபெறுகிறார். அப்பெண்ணின்மேல் ஒரு திருட்டுக் குற்றமும் சாட்டப்படுகிறது. மோசமாக சித்தரிக்கப்படுகிறார். அவருடைய அண்ணன் நேதாஜியின் பள்ளி தோழர் என்றும் ஒரு மலையாளி என்றும் காட்டப்படுகிறார். “ஒரு வேசை பாரிஸ்டர் சங்குண்ணிமேனனின் தங்கை” என்ற தொடர் கவனத்திற்குரியது. சுந்தரம் என்ற தலைப்பிட்ட அத்தியாயத்தில் மேனன் கிளினிக்கில் பணிபுரியும் நர்ஸ் பாத்திரம் “போறா போ நாத்தச் சிறிக்கி” என்று தூற்றப்படுகின்றார். பொம்பளை செலவு என்ற தொடர் விபசாரக் கூலியாகக் காட்டப்படுகிறது.

V

கேளிக்கையும் செட்டியாரும்

கேளிக்கை என்ற அத்தியாயத்தில் வட்டித்தொழில் செட்டியார்களின் தவறொழுக்கம் பற்றி விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. பிரான்மலையில் இருந்து வந்த கல்யாணி என்ற தாசி பற்றி பேச்சு வருகிறது. ராவன்னாமானா என்ற செட்டியார் தாசிகளுக்கு பவுன்காசுகளாகக் கொடுப்பவர் என்று குறிக்கப்படுகிறார். ஆவன்னா என்று தலைப்பிட்ட 10 ஆம் அத்தியாயத்தில் விடாக்கண்டன்செட்டியார் ஒரு பெரியசமீன்தாரோட போட்டியிட்டு விராலிமலை முத்துமீனாட்சியை ஒரு லெட்சம்வரை செலவு செய்து புதுக்கோட்டையில் பளிங்குமாளிகை கட்டி வச்சிருந்தாரு. அவள் இறந்ததும் அடுத்து காக்கி நாடாவிலிருந்து ஒரு ஆந்திராகாரியை புடிச்சாந்து வச்சிருந்தார். அடுத்து மலையாளத்திலிருந்து ஒருத்தியைக் கொண்டு வந்தார். அதனை முடிச்சுவிட்ட லாயருக்கு கமிஷன் பதினாராயிரம் ரூபாய். செட்டியார் பொம்பளை விஷயத்தில் பெரிய கவிச்சி. சூனாபானா என்பவர் ஒரு பார்சிலேடியை வைத்திருந்தார். கானாரூனா இப்போது சோழநாட்டில்தான், திருக்குடந்தையோ, மயிலாடுதுறையோ நினைவில்லை-ஒரு நாடக கணிகைவீட்டில் காலம்தள்ளுவதாகக் கேள்வி. இங்கு, மயிலாடுதுறை, கும்பகோணம் தாசிகள் பற்றிய ஒரு பழமொழி கவனத்திற்குரியது. செட்டிகள் மட்டுமன்று, முத்துக்கருப்பப்பிள்ளை மகன் திருநாவுக்கரசர், விருதுநகர் குங்குமப்பொட்டு உலகளந்த நாடார்மகன் ராஜரத்தினம், சாமித்தோப்பு உண்டியல்கடை ராமையாமகன் கந்தாச்சு எல்லாம் கோடம்பாக்கம் குட்டிகளோடு திரிபவர்கள் என்று நாவலாசிரியர் அடையாளம் காட்டுகிறார். இது, ஒழுக்கத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்பதனைக் காட்டும். செட்டியாருக்குப் பிறகு மைனர்கள் ராஜ்யம். தண்ணி போடுறது, ரங்கு விளையாடுறது, எடுபட்ட சிறுக்கிகளை பிளசர்ல தூக்கிவச்சுக்கினு ஊர் சுத்துறதும்தாம் தெரியும்.

விடாக்கண்டன் செட்டியாரின் தமையனார் ஒருவர் பற்றிய குறிப்பு: சட்டைக்காரி ஒருத்தியை எடுத்து வச்சிருந்தாராம். இதனால், காலனியகாலம், அனைத்து இனத்து சமூகத்தினையும் அலைக்கழித்தது என்று அறிய வரலாம். இந்த அலைக்கழிப்பிற்கு அனைத்து இனத்து ஆண்களும் பொறுப்பேற்க வேண்டும். காலப்போக்கு மாறிக் கொண்டேயிருந்தாலும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை சுரண்டல் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதை அறிவோம்.

நாவலில் ஒரு கதாபாத்திரம் பெண்களை இப்படிப் பட்டியலிடும். வெண்கலக்கடைச் சந்து நாகமணி, மஞ்சணக்காரத்தெரு சொர்ணம், குயவர் பாளையம் கோகிலராணி என்ற குப்பம்மாள், பணம் குறஞ்சுபோனால் ஒன்னாம்நம்பர் சந்து மலையாள பகவதிகள், ஓமனா, பாருக்குட்டி, சரோஜாம்மா. திண்ணைகளில் தூணைப்பிடித்துக் கொண்டு வெள்ளை, சிவப்பு, கறுப்பு சேலைப்பெண்டிர் நிற்பார்கள். இது ப.சிங்காரத்தின் குரலன்று; மதுரையில் சுற்றித்திரிந்த மைனர்களின் குரலாகப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.

குன்றக்குடி வள்ளிக்கண்ணு, மேலமாசிவீதியில் முத்துநாயகி-தாசிமகள் தாசி, வடக்கு ஆவணி மூலவீதியில் ரங்கூன் ராஜசுந்தரி, இரட்டைவீடு முத்துலட்சுமி. கோயில் நகரங்கள் தேவதாசி நடைமுறைக்கு தீம்புகழ் பெற்றது போற்றத்தக்கது அன்று. அதற்கு மதுரையும் விதிவிலக்கன்று.

VI

பண்பாட்டுப் பார்வை

நாவலில் மதுரையின் அன்றாடவாழ்க்கை பதிவுசெய்யப்படுகிறது. பண்பாட்டு மாறுதலும் பதிவுசெய்யப்படுகிறது. “மதுரை டவுன்ஹால் தெரு பீமவிலாஸ் மதுரையில் முதன்முதலாக மேசையில் வைத்துப் பலகாரம் தின்னும் பழக்கத்தினை புகுத்திய கடை. மார்வாடியின் வியாபார முழக்கம், ஹல்வா விற்பவர்கள், பொம்பளைசீக்கு மாத்திரை விற்பவர்கள், தாயத்து விற்பவர்கள், கொக்கோக சாஸ்திரம் விற்பவர்கள், தேள்கடி மருந்து விற்பவர்கள், ஏக்பனியன் தோஅனா”இது மதுரை கடைத்தெருவின் வருணனை. மதுரை தென்னோலைக்காரத்தெரு, நொண்டிவைத்தியரின் மன்மதபானலேகியம், மன்மத சஞ்சீவி மாத்திரை போன்றவையும் விற்கப்பட்டன. இன்றைக்கும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் உள்ள பேருந்துநிலையங்களின் மறைவான இடங்களில் ஆண்மைக் குறை பற்றி பிங்க் கலர் பின்னணியில் கருப்பு பெரிய எழுத்து விளம்பரநோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதனைக் காணலாம். மதுரையில் சித்திரைத்திருவிழா, பிட்டுத் திருவிழா, தெப்பத் திருவிழா, மாரியம்மன் தெப்பத்திருவிழா போன்றவை பிரமாதமாகப் பேசப்படுகின்றன. கொன்னையூர் மாரியம்மன் கோயில், திருவேள்பூர் மாரியம்மன் கோயில், நார்த்தாமலை மாரியம்மன் கோயில் போன்றவை இவ்வரிசையில் மிகவும் பிரசித்தி பெற்றவை.

பண்பாட்டின் பிறகூறுகளாக நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் திருவிழா, கொன்னையூரில் மாரியாத்தாள் திருவிழா, காரைக்குடியில் கொப்பாத்தாள் திருவிழா, சின்னமங்கலம் திருவிழா போன்றவையும் நினைவூட்டப்படுகின்றன. அவ்விழாக்களில் நிகழும் பிற கலைநிகழ்ச்சிகளும் வரிசையாக நினைக்கப்படுகிறது. இசையரசி சுந்தராம்பாள், தேசபக்தர் விஸ்வநாததாஸ், ராஜலட்சுமி, வேலாம்பாள், ருக்மணிபாய், ஹார்மோனிய சக்கரவர்த்தி காதர்பாட்சா, ஸ்த்ரீபார்ட் அனந்தநாராயண அய்யர், ஹிந்துஸ்தான் கவாய் நடராஜபிள்ளை போன்ற இசைவாணர்களும், பபூன்சண்முகம், காமிக் சாமண்ணா, ஜோக்கர்ராமுடு போன்ற கலைவாணர்களையும் பட்டியலிடுகிறார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ்கம்பெனி நடத்திய சவுக்கடி சந்திரகாந்தா, பம்பாய்மெயில், ராஜபக்தி போன்ற நாடகங்கள் பட்டியலிடப்படுகின்றன. இவை மூன்றும் பின்னாட்களில் சினிமாவாக எடுக்கப்பட்டன.

இவ்வட்டாரத்தில் பெரும்பாலும் பெண்தெய்வக் கோயில்களுக்கு பிரசித்தியாக ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாக்கள் எடுக்கப்படும். பல ஊர்களில் இருந்தும் மக்கள் வழிபாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்து வழிபடுவர். மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் இவ்விழாவினையட்டி கோயில்களின் அருகே சந்தைகள் நடத்தப்பெறும். இவ்வூர் வட்டாரத்தின் புராண கடவுளர் கோயில்களான திருமெய்யம், திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், அழகர்கோயில் பூசைவழிபாடுகள் விழாக்கள் பற்றிய பதிவுகள் இல்லை. மதுரை நகரின் வரலாற்றினை ஒரு மானிடவியல் பார்வையில் அணுகுவதற்கு இந்நாவல் ஒரு திறவுகோலாக அமையும்.

VII

ப.சிங்காரத்தின் அரசியல் பார்வை

உலகத்தமிழர்களே ஒன்றுபடுங்கள்! தமிழினம் முன்னேறத் திட்டம் தீட்டுங்கள்! இக்கோஷம் கார்ல்மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் எழுதிய மூலதனம் நூலின் இறுதி வாசகமான உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், போராடுங்கள், உரிமை பெறுங்கள் என்பதன் மாற்று வடிவமே. சில ஆயிரம் தோழர்களின் துணையோடு பலகோடி மக்களின் ரஷியாவை லெனின்பிரபு கைக்கொள்ள முடிந்தது ஏன்? நம்பிக்கை, நன்னம்பிக்கை, தன்னம்பிக்கை, தளராத நம்பிக்கை. இக்கூற்று ரஷ்யப்புரட்சி பற்றிய நாவலாசிரியரின் மதிப்பீடு எனலாம். அதேபோன்று தமிழரும் இயங்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். தமிழ் இனம் ஒன்றே மான வீரத்திற்கு உறைவிடம். “தமிழ்நாட்டை தமிழினத்தை மேம்படுத்துவது தமிழரின் கடமை. குஜராத்தியரும், வங்காளியரும் எப்படியோ போகட்டும்” இப்படி ஒரு குரலில் கதாபாத்திரம் ஒலிக்கிறது. இது பொருத்தமற்ற வாசகமாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்றையத் தாழ்ந்த தமிழகத்திற்குக் காரணம் கடந்தகாலத்தில் மன்னர்களின் திறமற்ற செயல் என்றும் பதிவிடப்படுகிறது. மன்னர்களை இயக்கியவர்களை ஏன் மறந்தார் என்று தெரியவில்லை.

ப.சிங்காரம் எழுதிய இரு நாவல்களிலும் அணுகுமுறை வேறுபடுகிறது. முதல் நாவலான கடலுக்கு அப்பால் அக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்முறையின் பொதுப்போக்கிலிருந்து பெரிதும் மாறவில்லை. அதில் பணமும் காதலும் மையஇழை. பணத்தினை இழக்காமல் காதலை தியாகம் செய்யும் பாத்திரங்கள் இயக்கப்படுகின்றன. புயலிலே ஒரு தோணியின் கதைகட்டு போரும் பொறுக்கித்தனமும் என்று அமைகிறது. பாசிசப் போரே பொறுக்கித்தனத்தில் இருந்ததுதான் என்பதனை ஜப்பானியப் போர் வீரர்களின் இழிசெயல்களில் இருந்து அறிய முடிகிறது. பாண்டியன் எனும் கதாபாத்திரம்போல் ஒரு INA  வீரர் இருந்திருப்பாரா? என்பது சந்தேகமே. விலாசினி என்ற கதாபாத்திரத்தினை உருவாக்கி அவரை இழிவான நடத்தையுள்ளவராகக் காட்டுவது தேவையற்றதாக அமைகிறது. நேதாஜியின் இறப்பு நாவலில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாவல் நெடுக பண்பாட்டுக் கவலையும், மனப்புழுக்கமும், விரக்தியும் புடைப்பாகத் தெரிகிறது. கடைசியாக அமைந்த சில அத்தியாயங்கள் வலிந்து சேர்க்கப்பட்டதோ என்ற நினைப்பினை ஏற்படுத்துகிறது. பலமுறை திருத்தி எழுதப்பட்டுள்ளதனை அறியமுடிகிறது. அச்சாவதற்கு முன் சிலரின் கருத்துகளைக் கேட்டு இந்நாவல் பொலிவூட்டப்பட்டிருக்கலாம். புயலிலே ஒரு தோணி கரைசேரவில்லை.

VIII

இந்நாவலை கடல்சார் இலக்கியவகைக்குள் (maritime fiction)  வைக்கலாம். இந்திய இலக்கியத்தில் மணிமேகலையும், இராமாயணமும் இவ்வகைக்குள் ஓரளவு வரும். 12 ஆம் நூற்றாண்டில் பட்டினத்தார் புலம்பலை இவ்வகைக்குள் வைப்பதற்கு எத்தனிக்கலாம். அப்பரின் கோணேஸ்வரர் மீதான பாடலையும் சேர்க்கலாம். மீனவர் தோழர்களின் அம்பா பாடல்களையும், ஏலேலோ சிங்கன் பாடல்களையும், ஐலேசா பாடல்களையும் இவ்வகைக்குள் வைக்கலாம். ஆங்கிலத்தில் கடந்த இருநூறு ஆண்டுகளாக கடல்சார் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. இம்மாதிரியான நாவல்களை nautical fiction, maritime fiction  என்று சுட்டுகின்றனர். 1770 இல் முதன்முதலில் அரேபிய இரவுகள் எனும் கதைத்தொகுப்பில் ஒன்றான சிந்துபாத்தின் ஏழாவது கடற்பயணம் சுவாரசியமான கதையமைப்பு கொண்டது. 1882 இல் Robert Louis Stevension என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட புதையல் தீவு (Treasure Island)  என்ற நாவல் இந்நாவல் வரிசையில் மிக முக்கியமானது. 1903 இல் வெளியிடப்பட்ட Riddle of the Sands என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. 1951இல் Ernest Hemingway (1899-1961) எழுதிய The Old Man and the Sea  என்ற நாவல் குறிப்பிடத்தக்க Maritime fiction  இதுபோன்று பல நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நாவல்களின் விவரணைகளில் வரும் கடல்பரப்பு பற்றிய கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மிக முக்கியமானவை. ஆனால், அது போன்ற வருணனைகள் புயலிலே ஒரு தோணியில் இல்லை.

1962 இல் நிகழ்ந்த இந்தோ-சீனப்போரும் அதன் விளைவுகளும் இந்நாவலை எழுதுவதற்கு உந்துதல் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில்தான் பார்த்தால் பசிதீரும் (1962) என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதைக்கரு இரண்டாம் உலகப்போர். கண்ணதாசன் (1927-1981) இரத்தத்திலகம் (1963)என்ற திரைப்படத்தினைத் தயாரித்து வெளியிட்டார். இதன் கதைக்கரு இந்திய-சீனப்போர். இதில் சில போர்க்காட்சிகள் காட்டப்படும். அதற்குமுன்பு அந்தநாள் (1954) என்றொரு படம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் கதைக்கரு இரண்டாம் உலகப்போர். இருபடங்களிலும் கதாநாயகன் சுட்டுக்கொல்லப்பட்டான். இரத்தத்திலகத்தில் தியாகியாகக் காட்டப்பட்டான். அவ்விரு படங்களிலுமே கதாநாயகனாக நடித்தவர் சிவாஜிகணேசன் (1928-2001). பார்த்தால் பசிதீரும் (1962) படத்திலும் அவரே முதன்மைக் கதாநாயகன். அப்படத்தில் சிறுவனாக கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்திருப்பார்.

ஆங்கிலத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் போர்பற்றி எழுதப்பட்டுள்ளன. அவற்றை போர் பற்றிய நாவல்கள், போர் தொடர்பான கடிதப்போக்குவரத்து நாவல்கள், கடற்போர் நாவல்கள் என்று வரையறுக்கலாம். போரினை அடிப்படையாக வைத்து மிகச்சிறப்பான படம் ஒன்றினை ஜப்பானின் அகிராகுரோசோவா (1910-1998) சமூகப்பொருளியல் பின்னணியில் வெளியிட்டார். பின்னாட்களில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு அதுவே காட்சியமைப்பிற்கும் வண்ணக்காட்சிகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் முன்மாதிரியாக அமைந்தது.

IX

ஒரு சொல்

ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி சென்ற நூற்றாண்டின் தமிழ்நாவல் இலக்கியப்பரப்பில் புதுவகையான ஒரு வரவு. போர், பொருள், போகம் மூன்றினையும் கண்டிக்கிற விதமாக அமையும் இந்நாவல் சாதி கடந்த தமிழர் ஒற்றுமையினைப் பரிந்துரைக்கிறது. தாய் நிலத்திலும் புலம்பெயர் நிலத்திலும் தமிழரின் அழுக்கான நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. தற்பெருமை பேசும் மனோபாவத்தினைத் தவிர்த்து தமிழர் நற்பண்பாட்டினைப் பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. தேசியவாதமும், அதற்குள் அடங்கிய தமிழ்த் தேசியவாதமும் உள்ளீட்டுக் கருத்தாக வைக்கப்படுகிறது. விலாசினி, சங்குண்ணிமேனன், கிளினிக் நர்ஸ் போன்ற பாத்திரங்கள் வலிந்து சேர்க்கப்பட்டு நெருடலை உண்டாக்குகிறது. இது நாவலின் தரத்தினை பின்னுக்கு இழுக்கிறது. முதன்மைப் பாத்திரமான பாண்டியனின் நடவடிக்கைகள் தமிழ்வாணன் உருவாக்கிய சங்கர்லாலை நினைவூட்டுகிறது. போரினை காட்சிப்படுத்துதலில் போதிய துலக்கமில்லை.

 ***

- கி.இரா.சங்கரன்

 

Pin It