நற்றிணை பதிப்பகத்தின் வெளியீட்டில் வி.ஜீவகுமாரன் எழுதியிருக்கும் “கடவுச்சீட்டு” என்ற நாவல் ‘ப.சிங்காரம் விருது’ பெற்றிருக்கிறது. அழகியல் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதினம் வர்ணனைப் புயலில் சிக்காமல், வாழ்க்கைப் பயணத்தின் பரவசத்தையும், பரிதவிப்பையும் ஒருசேரப் பதிவு செய்திருக்கிறது. பயம்தான் ஒரு மனிதனின் அடி நாதம் என்ற எதார்த்தத்தையும், தன் சுதந்திரத்தில் தலையிட யாருக்கு உரிமையுண்டு என அடிக்கொருமுறை எகத்தாளமாய்க் கேட்கும் இருமாப்பையும் மிக இயல்பாகவும், கட்டுக் கோப்புடனும் கட்டமைத்துள்ளார் இந்நூல் ஆசிரியர் வீ. ஜீவகுமாரன்.

     kadavu seettu ’கடவுச்சீட்டு’ – கதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் பெயர்களும், அவர்களின் இயங்கு தன்மையும் தனக்கென தனி முத்திரையை பளிச்சென்று மின்னி இந்நாவலுக்கு மெருகேற்றுகிறது. மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் தாய் மண்ணையும், தன் சுயத்தையும் மறக்க முடியாமல் தவிப்பதையும், தன் சகமனிதனுக்குள் தேடும் மனிதத்தையும், அதற்காக அவர்கள் படும் துடிப்பையும், ஒரு திட்டமிடப்படாத பயணத்தில் சந்திக்கும், பல மேடுபள்ளங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும், சொல்லியிருப்பது இந்நாவலின் சிறப்பு.

      கடவுச்சீட்டு(passport) – வெளிநாடுகளில் குடியிருக்கும் ஒரு மனிதனின் அடையாளம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே கடவுச்சீட்டு ஒரு மனிதனின் அடையாளத்தையும், முகவரியையும், சிதைப்பது எவ்வளவு பெரிய கொடுமை என எண்ணும்போது அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைத்துவிடுகிறது இக்கதை.

      தன் சுயத்தை இழந்து, தன் தாய் மண்ணை துறந்து, சொந்த பந்தங்களை விட்டு விலகி உயிர் ஒன்றே உன்னதம் என்ற பேராசையுடன்(?) ஏஜெண்டுகளை நம்பி பிறநாட்டுக்குள் கள்ளத்தனமாய் நுழைந்து அகதி, எதிலி, புலம் பெயர்ந்தவர்கள் என்ற முகவரியோடு, அந்நாட்டு மக்களால் அவமானப்பட்டு கூனிக் குறுகி, இனத்துவேசத்தின் உச்சத்தையும் உணர்ந்து, எதைச் சாதிக்க வேண்டும் என நினைத்தார்களோ அதுவே அவர்களுக்கு எதிராய் நின்று நினைவுகளின் எச்சமாகிவிடுவதை இக்கதை உயிரோட்டமாய் ஆவணப்படுத்தியிருகிறது.

      சில நேரங்களில், உடல் வலியைக்கூட ஓரளவுக்கு வார்த்தைகளால் உணர்த்திவிடலாம். ஆனால் மனதிற்குள் குமைந்துகொண்டே இருக்கும் வேதனையை அவ்வளவு எளிதாய் சொல்லிவிட முடியுமா? என்பது கேள்விக்குறியே. இப்புதினத்தில் உயிருடன் நடமாடும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவ்வப்போது ஏற்படும் முரண்பட்ட திருப்பங்களுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கை உயிரினம் போல், அவர்கள் இயல்பாய் உதிர்த்துச் செல்லும் வார்த்தைகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு இக்கதையை நகர்த்திச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறது.

      வளர்ந்த நாடுகளின் வனப்பையும், நேர்த்தியையும் மெச்சிச்செல்லும் கதாபாத்திரங்கள், அந்தந்த நாடுகளின் புதிய கலாச்சாரத்தை கையிலெடுக்கவும் முடியாமல், கையிலெடுத்ததை சட்டென்று விட்டு விலகவும் முடியாமல் கையறு நிலையில் தவிப்பது தமிழர்களுக்கே உரித்தான ஒன்று என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் காட்டியிருப்பதில் இந்நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.

      எந்த கலாச்சாரமாய் இருந்தால் என்ன, ”பாம்பு தின்னும் ஊரில் நடுக்கண்டம் நமக்காய் இருக்க வேண்டும்” என யாருக்கு முந்திக்கொள்ளத் தெரியவில்லையோ, அவர்கள் நாகரீகம் என்ற பெயரால் நடுத்தெருவில் நிற்பது உறுதி என்பதை கதையோட்டத்தின் ஊடே ஆங்காங்கே வாழ்வியல் தத்துவங்களை உதிர்த்துச் செல்கிறார் ஜீவகுமாரன்.

      மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இப்புதினம், முதல் பகுதியிலேயே ’அகதிகள்’ என்ற பெயரில் டென்மார்க் நகருக்குள் நுழையும் மனிதர்களையும், மனிதத்தையும் சொல்லும்போதே, வளர்ந்த நாடுகளுக்கே உரித்தான பன்முகத் தன்மையையும், பரந்து விரிந்து கிடக்கும் கலாச்சாரத்தையும் சட்டெனப் புரிய வைத்துவிடுகிறது. இக்கதையின் நாயக-நாயகியான தமிழ் மற்றும் சுபாவின் இழையோடும் காதலையும் அதற்காக அவர்கள் புதிய மண்ணில் பெற்றதையும், இழந்ததையும் ஒருசேரக் கண்ணீரின் உப்புச் சுவையோடு தந்துவிடுகிறது. ‘மனித நேயமும் வெள்ளேந்தி மனிதர்களின் சுவாசமும்தான் இந்தப் பூமிப்பந்தை இயக்கிக்கொண்டிருக்கின்றன’. என்று தன் முன்னுரையில் சுட்டிக்காட்டியிருப்பதுபோல் கதையின் நீரோட்டம் ஆங்காங்கே வாசிப்பாளர்களின் மனதில் தேங்கியும் சற்றே தங்கியும் நினைவுகளாய் வழிந்தோடுகிறது.

      இரண்டாம் பகுதி ஒவ்வொருவரின் மனநிலையையும், அவர்களின் பயண இலக்கையும், மையப்புள்ளிகளைச் சுற்றி வரும் சிக்கல் கோலம் போல் ஆங்காங்கே நின்று நிதானித்து தன்னைச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு நினைவு கூர்வது சிறப்பு. கொண்டாட்டம் என வரும்போது நிமிட நேரமாவது நிம்மதிப் பெருமூச்சு விடமுடிகிறது. வாசகர்களுக்கு சில கணங்கள் நிறுத்தி நிதானமாய் நினைவுகூற நேரம் கிடைத்தாலும் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் படபடப்பை அதிகரித்துவிடுகிறது.

      பகுதி மூன்று, திடீரென கொண்டை ஊசி வளைவுத் திருப்பத்தில் திரும்பி உச்சக் கட்டக் காட்சிக்கும், விறுவிறுப்பிற்கும் குறை வைக்காமல் நகர்கிறது. பிறந்த மற்றும் வளர்ந்த சூழல் ஒரு சிறுமியை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும், இது வரை அதற்குப் பழக்கப்படாத அல்லது தன் மகள் இவ்வாறெல்லாம் மாறுவாள் என்று சற்றும் சிந்தித்திராத பெற்றோர்களின் பரிதவிப்பை “சாவி தொலைந்த பூட்டாய் அவர்களின் மகிழ்ச்சிகள் அனைத்தும் திறக்கப்படாமலேயே இருந்தன” என்ற ஒற்றை வரி மிகைப்படுதப்படாமல் மின்னிச் செல்கிறது.

      வேற்று மண்ணில் நடப்படும் செடி அந்த மண்ணின் தன்மைக்கேற்பவும் அந்த தட்பவெப்ப நிலைக்கேற்பவும் எப்படி தன்னைத் தானே தக்கவைத்துக் கொள்கிறதோ அது போல வளர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகள் தங்களைத் தாங்களே தயார் படுத்திக்கொள்வதை ஏனோ பெற்றோர்களால் புரிந்து கொள்ளப்படாமலேயே கடந்து போகிறது. இதுதான் பரிதாபத்தின் உச்சம்.

      புதிய கலாச்சாரத்திற்குள் வாழ்ந்தாலும் தாமரை இலை மேல் ஒட்டாத தண்ணீராய், வாழ்ந்து பழகிவிட்ட பத்தாம் பசலித் தலைமுறையினருக்கு(?), இன்றைய தலைமுறையினரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் பற்றற்ற நிலையில் வாழத்தெரியாமலும் முழிப்பதும்தான் புலம்பெயர்ந்த வெளிநாடுவாழ் மக்களின் சிக்கலே என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது இப்புதினம். இந்த இடத்தில்தான், கலாச்சாரம் என்றால் என்ன? அதற்கான வரைமுறை என்ன என்பதை சிந்திக்க வைத்து விடுகிறது.

      ஜீவகுமாரனனின் புதினத்தை நற்றிணை பதிப்பகம் விருதுக்குத் தேர்ந்தெடுத்ததில் வியப்பேதுமில்லை. இலங்கைத் தமிழுக்கே உரித்தான சொல்லாடலும், நிகழ்ந்த கலவரத்தையும், இழந்த நிலவரத்தையும் சற்றே புனைவுச் சுவை கூட்டி கதைத்திருப்பது இக்கதைக்கு கிடைத்த பக்க பலம்.

      இந்நூலை வாசிக்கும் போதே இலங்கைத் தமிழர்கள் பட்ட பாடு நம் கண் முன்னே வந்து போகிறது. இப் புதினத்தில் கையாளப்பட்ட (இலங்கைத்தமிழ்) மொழி நடை அருமை என்றாலும் அவர்கள் பேசும் போது இடையிடையே உபயோகிக்கும் சில வார்த்தைகளுக்கு பொருள் புரியாமல் தடுமாற வைக்கிறது. உதாரணமாக சில உச்சரிப்புகள் “ட” சத்தங்களுக்குப் பதிலாக “ர“ சத்தம் (டாய்லெட் என்பதற்குப் பதிலாக ரொய்லெட், ஆன்டி என்பதற்குப் பதிலாக ஆன்ரி போன்ற வார்த்தைகள்) அதிக இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது. அதற்காக புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் அறிஞ்சொற்பொருள் கொடுத்திருக்கலாம். ஒருவேளை அதுவே வாசிப்பிற்கு இடையூராய் அமைந்துவிடும் என்பதற்காகவோ அல்லது புதினத்தின் உண்மைத் தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டோ அதை இந்நூல் ஆசிரியர் அவ்வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.

      முன் கதைச் சுருக்கத்தை ஒற்றை வரியிலோ அல்லது ஓரிரு பக்கத்திலோ கொடுத்துவிட்டால், இப்புதினத்தின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால், அதைத் தொடாமல் சற்றே விலகி நின்று அதன் சாராம்சத்தை மட்டும் சாறுபிழிந்து விமர்சனம் என்ற பெயரால் சுட்டிக்காட்ட முயன்ற அளவு முனைந்திருக்கிறேன்.

நூல் விமர்சனம், அல்லது ஒரு நூல் பற்றிய புரிதல் வாசகர்கள் மத்தியில் என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது என்பதை நூலாசிரியர் அறிந்து கொள்ள இது போன்ற விமர்சனங்கள் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். இந்த விமர்சனம் முழுக்க முழுக்க என் பார்வையிருந்து சொல்லப்பட்டதே தவிர இதுவே இறுதியான செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஒரு போதும் இல்லை. கடவுச்சீட்டு ஒரு அடையாளம் புலம் பெயர்ந்தவர்களுக்கு.

- வே.சங்கர்

Pin It