கவிஞர். சுகிர்தராணி அவர்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் (இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்). இலாலாப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் கவியுலகின் பெருமையான அடையாளமாக திகழ்பவர். தமிழ்நாட்டில் மிக முக்கியமான கவிஞர்கள் பட்டியலில் இருப்பவர். இந்தியளவில் கவியுலகில் அறியப்படுவர்.
கவிஞர். சுகிர்தராணி அவர்களின் முந்தைய படைப்புகள்:
"கைப்பற்றி என் கனவுகேள்
"இரவு மிருகம்
அவளை மொழிபெயர்த்தல்
"தீண்டப்படாத முத்தம்
"காமத்தீப்பூ
"இப்படிக்கு ஏவாள்
"சுகிர்தராணி கவிதைகள் (1996-016)
நீர் வளர் ஆம்பல் கவிதை தொகுப்பில் சமூகத்தில் நடந்தேறும் அவலங்களை அறுபத்தி ஏழு தலைப்புகளில் கவிதைகளாக எழுதியுள்ளார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர்கள் மீது நடத்தும் வன்முறைகளையும் அதன் கட்டமைப்பையும் கேள்வி கேட்கிறார். நாட்டில் நடைப்பெறும் முக்கியமான பிரச்சனைகளை கவிதை தலைப்பிட்டு சிறப்பாக எழுதியுள்ளார்.
"கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்" எனும் தலைப்பிட்ட கவிதை மூன்று பக்க அளவிலான நீள் கவிதையாக எழுதியுள்ளார். கவிஞர். சுகிர்தராணி அவர்கள் மேடையில் இந்த கவிதையை வாசிப்பதை அனைவரும் பார்த்திருப்பர். முகநூல்களிலும், யூடிப் வழியாகவும் அதிகமாக பகிரப்பட்ட, பெரும் வரவேற்பை பெற்ற கவிதையாகும்.
கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன் எனும் தலைப்பிட்ட கவிதை....
இனி நான்
மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன்
நீட்டுக்காகப் போராட மாட்டேன்
பசுவைக் கொல்ல மாட்டேன்
குசுவையும் விட மாட்டேன் .....
இப்படி தொடங்கி,
மக்களுக்கெதிராக நடைப்பெற்ற திட்டங்கள், சட்டங்கள் மூலம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்குவது, சமூக நீதிக்காக பேசுபவர்களை ஒடுக்குவது, உரிமைக்குரல் கொடுக்க வருவோரின் குரல் நசுக்கப்படுவது போன்றவற்றை எழுதி
கவிதையின் இறுதியில்...
கொஞ்சம் பொறுங்கள்
அவசரமாய் வருகிறது
உங்கள் ஜனநாயகத்தின் மீது
கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்.
- என்று எழுதி ஜனநாயகத்தை கேள்வி கேட்கிறார். இந்த கவிதை மிக சிறப்பான ஆவணக் கவிதையாக பார்க்கிறேன். கவிஞரின் கருத்தோட்டத்தினை கண்டு வியப்படைகிறேன்.
மொத்தத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர்கள் மீது நிகழ்த்தபடும் வன்முறைகளையும், பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் பற்றியும் சமூகத்தில் சமூக அறம் நிலைநாட்ட வேண்டிய அவசித்தை பற்றியும் மிக தெளிவாக விவரிக்கிறது "நீர் வளர் ஆம்பல்" கவிதை தொகுப்பு. மேலும், சிறந்த கவிதை தொகுப்பை எழுதியிருக்கும் "சமூகக்கவி கவிஞர். சுகிர்தராணி அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி மகிழ்கிறேன்.
நூல்: நீர் வளர் ஆம்பல்
ஆசிரியர்: கவிஞர். சுகிர்தராணி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்.
விலை: 130
பக்கங்கள்: 95.
- மு.பிரபு, வேலூர்