மொழியின் வளத்தை உணர்ந்து கொள்ள இலக்கியங்கள் வாய்ப்பு தருகின்றன. இலக்கியங்கள் வெவ்வேறு துறையினரால் படைக்கப்படுவது மொழிக்குக் கூடுதல் சிறப்பு தருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் அதிகாரம் பெற்ற அரசர்களின் பாடல்களும் உண்டு. சாதாரண குடிமக்களின் கவிதைகளும் உண்டு. இலக்கியப் பரப்பின் பரந்த வெளிகளில் மாற்றுத் திறனாளிகளின் படைப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதே போல் மண்பானை செய்தவர்களும், நெசவுத்தொழில் மேற்கொண்டவர்களும், உழுது வேளாண்மை செய்தவர்களும், வியாபாரிகளும் செய்யுள் படைத்திருக்கின்றனர். நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் காலத்திற்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்பட்டன.

கவிதையின் நீட்சியாக உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. கதைகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தற்காலத்தில் உரைநடையைத் தேர்வு செய்து கொண்டன. அவற்றை – சிறுகதை, புதினம், குறும்புதினம் என்று வகைப்படுத்துகிறோம். சமீபகாலமாக மனிதனுக்கு உணவைக் காட்டிலும் ஆதிக்க உணர்வே அதிகம் தேவைப்படுகிறது. அதிகாரத்திற்கு வருவதற்கு யாரையும், எதையும் பலி கொடுக்கத் தயாராகும் மோசமான போக்கை நெடிய கதையாகச் சொல்லி அங்கலாய்க்கிறது ‘ஆகோள்’ என்ற நாவல். கவிதைத் துறையில் முத்திரை பதித்த கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இந்தப் படைப்பின் தலைப்பே கவனத்திற்குரியது.

kabilan vairamuthu novelஒரு நாட்டை அடிமைப்படுத்த அங்கே இருக்கும் செல்வத்தை, மண் வளத்தை, மனிதர்களைக் களவாடும் நிலை வரலாறு முழுக்க நிரம்பி வழிகிறது. அந்தக் காலத்தில் ‘ஆக்கள்’ என்று சொல்லக்கூடிய பசுக்கூட்டங்கள் மிகப் பெரிய செல்வகளாகக் கருதப்பட்டதால் அவற்றை எதிரி நாட்டு வீரர்கள் கவர்ந்து செல்லும் நடைமுறை இருந்திருக்கிறது. இதன்மூலம் மாடு களவாடப்பட்ட நாட்டில் பொருளாதார நிலை அடிபடும் என்பதால் திருடிச் செல்லும் வழக்கம் இருந்தது. இதையே மாட்டைக் கவர்ந்து போதல் என்ற பொருளில் ‘ஆகோள்’ என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.

எத்தனை வல்லமை பெற்றவராக இருந்தாலும் இழந்து போன ஒரு நொடியைக்கூட மீட்க முடியாது என்பது உண்மை. ஆனால் இழந்து போன வாய்ப்பை மீண்டும் மீட்டுக் கொடுத்தல் என்பதை, கதை வழி சாத்தியப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. நாற்பத்தியொன்று அத்தியாயங்கள் மூலமாக இறந்த காலத்தின் எச்சத்தையும், எதிர்காலத்தின் உச்சத்தையும் நிகழ்காலக் கதையாக்கிக் தந்திருக்கிறார். அதிலும் முழுமை பெறாமல் ‘தொடரும்’ என்று முடித்திருப்பது வாசகர்களை இனி வெளிவர இருக்கும் அடுத்த தொகுதியை வாசிப்பதற்குத் தயார்படுத்துகிறது.

சமீபத்தில் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை அரசு வெளியிட்டது. ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் மின் கட்டணத்தைக் கட்டமுடியாத சூழலும் ஏற்பட்டது. பின்னர் சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்பது வேறு கதை. இது போன்ற திடீர் அறிவிப்பு, பல நேரங்களில் பொதுமக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அதே போல் ஒரு தனிநபரின் அலைபேசி எண்கள் தாராளமாக முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் பகிரப்பட்டு விளம்பர அழைப்புகள் அதிகமாகத் தொல்லை செய்யக்கூடிய சூழலில் இந்த ஆகோள் கதை என்ன அதிர்வலையை உண்டாக்கும்!

கணினி தொழில்நுட்பம் வழியாக இந்தியக் குடிமக்களுக்கு ‘அடையாள்’ என்ற குடிமை எண் வழங்கும் தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. அதற்காக உதவி புரியும் சிரியன் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறான் நித்திலன். சுருக்கமாகச் சொன்னால் இந்தியப் பெருந்தரவு மையத்தின் நவீனக் காவல்காரன் என்று சொல்லிவிடலாம். பெற்றோர் சொந்த ஊரில் விவசாயம் பார்க்க சென்னையை விட்டு நத்தம் சென்றுவிட்டனர். அவர்களை வாரத்திற்கு ஒருமுறை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவான்.

சிரியஸ் நிறுவனத்தின் தலைவர் மோகன் ஜனார்த்தனன் கற்பனை மெய்நிகர் உலகம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்த உலகத்தில் பல மனிதனைப் போன்ற பொம்மை உருவங்கள் இருந்தன. தன்னைப் போலவும், தன் நண்பர்கள் போலவும் பொம்மைகளை உருவாக்கி எல்லோருக்கும் கறுப்புக் கண்ணாடி அணிவித்திருந்தார். அங்கே இருநூற்றுக்கும் மேற்பட்ட மெய்நிகர் பணியாளர்கள் வியர்வை சிந்தி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு துளி வியர்வைக்கும் அந்தக் குறிப்பிட்ட பணியாளருக்கு மதிப்பெண் கூடும். ஆனால் ஒரு பணியை முழுமை செய்யும் போதுதான் ஒரு துளி வியர்வை சிந்தும். அந்த உலகில் தொழிலாளிகளின் வியர்வையையும் முதலாளிகளே நிர்ணயிக்கிறார்கள். முதலாளிகளால் ஆன உலகத்தில் தொழிலாளி படும் வேதனையை மௌனமாகச் சொல்கிறது நாவல். அவர்களுக்குப் புத்துணர்ச்சி வழங்க தூரத்து மலையருவி அவ்வப்போது நீர்ச் சால்வைகளை அனுப்பிக் குளிர்விக்குமாம்.

நவீன யுகத்தில் தொழில்நுட்ப ரீதியில் எழும் குற்றங்கள் தவிர்க்க முடிவதில்லை. திடீரென்று அடையாள் தகவல் ஐந்நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட செய்தி மோகனுக்குள் இடியாக இறங்குகிறது. இந்தியக் குடிமகன் எந்த மாநிலத்துக்குப் போனாலும் அடையாள் எண்ணை வைத்துக் கொண்டால் அவரை நம்பிக்கைக்குரிய நபராக மதிப்பிடலாம். மேலும் அரசு கொடுக்கும் சலுகைகளை அனுபவிக்கவும் இது போதுமானது. அடையாள் எண்ணுடன் பான் கார்டு, ஓட்டுர் உரிமம் ஆகிய எல்லாமும் இணைக்கப்பட்டிருந்தன. இத்தனை மதிப்பு வாய்ந்த தரவுகள் விற்கப்பட்டன என்பது எத்தனை பெரிய ஆபத்து!

இணையத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவரை நித்திலன் எப்படியோ தடுத்து நிறுத்தியதுடன் அந்தக் குற்றவாளியையும் கண்டுபிடித்துக் கொடுக்கிறான். பதற்றம் மிகுந்த வேலைக்கு நடுவில் தனக்கான இளைப்பாறுதலுக்குச் சில வழிமுறைகளைப் பின்பற்றி வந்தான். வேப்ப மரத்தடியில் இருந்தபடி தேநீர் குடிப்பதும், மாயாபஜார் படத்தில் வரும் ‘‘தங்கமே உன் போலத் தங்கப்பதுமை எங்கெங்குத் தேடியும் யாருமில்லே’’ - பாடலைக் கேட்டுக் கொண்டே பார்ப்பதும், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு சமைத்துக் கட்டிக் கொடுக்கும் வேலையிலும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். கருவிகளிலிருந்து தன்னை மீட்டெடுக்க மரங்கள் மீதும் பச்சை நிறத்தின் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினான். காலையில் பறவைகளின் ஒலியைக் கேட்டு மனத்தை ஒருநிலைப்படுத்திக் கொள்வான்.

இவனுடைய காதலி செங்காந்தள் சமூக வலைதளத்தில் பணியாற்றுபவள். ‘சிறுபுள்ளத்தனம்’ என்ற யூட்யூப் தளத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறாள். அடையாள் தரவுகள் வெளியுலகில் விற்கப்பட்டது குறித்த செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டதால், சமூக விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று காரணம் சொல்லி அவள் காணொளி நீக்கப்பட்டது. மேலும் ஒளிபரப்புத் துறையின் மாநில அலுவலகம் அவளை எச்சரித்தும் இருக்கிறது. ஒரு தனிநபருக்கும் அரசாங்கத்துக்குமான டிஜிட்டல் தொப்புள் கொடியாக இருக்கும் அடையாள் சமூக விரோதிகளின் கையில் சிக்கினால் என்னவாகும் என்று அவள் ஆதங்கப்படுகிறாள்.

இந்தியக் குடிமக்கள் எல்லோரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதற்காகவே அரசாங்கம் இப்படி அடையாள் என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறாள். செயற்கை நுண்ணறிவு வழி பல தரவுகளைத் திரட்ட நினைப்பதற்கு முன்னர் திரட்டப்படும் தகவல்களுக்கு மிகுந்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று காதலனிடம் வாதிடுகிறாள். அவளுக்குப் பதில் சொல்ல நினைக்கும் நித்திலன் அரசாங்கத்தைத் தாமரை மலரின் இதழுக்கு நிகராக வர்ணிக்கிறான். இதன் இதழ்களில் சில நிகழ்காலத்தைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கும். சில இதழ்கள் பழங்காலத்து மரபைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும். இன்னும் சில இதழ்கள் எதிர்காலத்தைத் தாங்கி நிற்கும் என்றான். எப்படித் தாமரை மலர் தன்னை வளர்த்துவிட்ட தண்ணீரைத் தொடாமல் இருக்குமோ அதுபோல இந்த அரசாங்கம் தன்னை வளர்த்துவிட்ட மக்களைத் திரும்பியும் பார்ப்பது இல்லை என்று குமுறுகிறாள். ஒரு புனைவு இலக்கியத்துக்குள் தெளிவான அரசியலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.

பழங்காலத்தில் எத்தனை நாடுகளைப் பிடிக்கிறார்களோ அந்த அளவுக்குப் பேரரசர்களாக மதிக்கப்பட்டனர். இன்று அந்த இடத்தை இணையதளமும், தரவுகளும் பிடித்துக் கொண்டன. இந்தச் சூழலில் கணினி வைரஸால் பாதிகப்பட்டால் எல்லாம் கெட்டுவிடும். இதிலிருந்து மீட்டெடுக்க அரிய வகை மூலிகை வேர்களைக் கண்டறிந்தது அறிவியல் உலகம். அவற்றை சின்னச் சின்னப் பந்துகளாக மாற்றி ஒரு மினி கண்டெய்னர் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் நிபுணர்களை ஈடுபடுத்தியிருந்தது அரசு. மூலிகைப் பந்து பெட்டிக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு தரப்படவேண்டும் என்ற கட்டளையும் போடப்பட்டிருந்தது.

பிரதமரின் கைரேகைகளைப் பதித்த பின்னர் வீரசிவாஜி படம் திரையில் தோன்ற வேண்டும் என்றும் அதனுடன் ‘ஜெய்ஹிந்த்’ ஒலி எழவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இவை, நாட்டுப்பற்று என்ற பெயரில் நடக்கும் தற்கால நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது கதைப்பின்னல். அதன்படி எந்தப் பாதிப்பையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராகிக் கொண்டிருந்தது பெட்டிகள். வயிற்றுப் பிரச்சினையைத் தாண்டி, ஒரு தகவல் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்குப் போகும் கால அளவைக் குறைப்பதற்குப் பெருநிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன என்ற உண்மைகள் மனத்தை உலுக்குகின்றன.

இதற்கிடையில் அந்தமான் பகுதியில் சீனத் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்ற செய்தி திடுக்கிட வைக்கிறது. அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த சாதனையை நிஷா பைலட் நிகழ்த்தி இருந்தார். தீவிரவாதிகளிடமிருந்து விநோதமான ரசாயனங்கள் கைப்பற்றப்பட்டன என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்து நித்திலன் அதிர்ந்தான். நிஷா பைலட்டை வேலை நிமித்தமாகத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு பயங்கரமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அந்தத் தீவிரவாதிகளைப் பார்க்கும் போது சீனர்களைப் போலில்லாமல் வடகிழக்கு மாநிலத்தவர்களைப் போல இருக்கிறார்களே என்ற சந்தேகத்தை எழுப்பினாள் செங்காந்தள். அப்படி மாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று நித்திலன் கேட்கும் போது, அந்த மக்கள் என்ன போராட்டம் செய்கிறார்கள் என்ற காரணத்தைச் சொல்ல முடியாமல் அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கு நீடிக்கிறது என்றாள். அவள் சொன்னது போலவே அவர்கள் நாகலாந்து மக்கள் என்பதும் அங்கே வளரும் அரிய வகை மூலிகை வேர்களை அழிக்க வந்திருக்கின்றனர் என்பதும் ரகசியச் செய்தியாக நித்திலனுக்குக் கிடைக்கிறது.

மின்னணு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கனிமங்களைக் காட்டிலும் நூறு மடங்கு பயனுள்ள கேட்டலியம் என்ற கனிமம் அந்தமானில் வளரக்கூடிய மூலிகைகளில் இருக்கிறது. அதை நிலத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் நாகலாந்து மக்கள் அந்த வேர்களை அழிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் இந்த இந்தியாவைத் தங்கள் தாயகமாகக் கருதவில்லை என்ற காரணம், அதற்குப் பின் இருக்கும் உண்மை எதுவோ என்று வாசிப்பவரை அதிரவைக்கிறது.

வயதானவர்கள் பெருவிரலில் ரேகைகளே இல்லாமல் போகும் நிலையில் அடையாள் எண்ணை எப்படிப் பெற முடியும். கையே இல்லாதவர்கள் இன்னொரு புறம்; கருவிழித் தகவலை எடுத்துக் கொள்ளலாம் என்றால் விபத்தில் கைகளையும் கண்களையும் இழந்த ஓட்டுநர்களுக்கு என்ன தீர்வு என்று அந்த மென்பொருளைக் கண்டுபிடிப்பவர்களின் விழி பிதுங்குகிறது. அப்படியென்றால் இந்தத் திட்டம் மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறதா அல்லது இன்றைய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விபரீதத்தை விளைவிக்குமா என்ற ஐயம் வாசகனை ஆட்கொள்கிறது.

தில்லி சஞ்சய் வனத்தின் சுரங்கப் பாசறையில் கேட்டலியத்தைப் பாதுக்காப்பதற்காக ‘வீர் ஜடாயு’ என்ற காலத்தால் பின்னோக்கிச் செல்லக்கூடிய ரயில் தயாராகி இருந்தது. இந்த ரயிலில் கேட்டலியத்தைக் கொண்டு போய் பழங்காலத்தில் வைத்து விட்டுத் தேவையான போது மீண்டும் தற்காலத்திற்குக் கொண்டு வந்துவிடலாம். பழைய காலத்திற்குச் செல்ல யோகிகள் தங்கள் மன அலைகளையும் பிரபஞ்ச நிகழ்வோடைகளையும் ஒருங்கிணைத்து இயக்குவர். மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவதற்கு அறிவியல் தொழில்நுட்பம் துணை செய்யும்.

அந்த ரயில் நிற்க வேண்டிய 1935-ஆம் ஆண்டில் நிற்காமல் இன்னும் பதினைந்து ஆண்டுகள் பின்னால் உசிலம்பட்டிச் சுடுகாட்டில் சென்று இறக்கிவிட்டது. நித்திலன், பிரமிள் மற்றும் நிஷா பைலட் ஆகியோர் என்ன செய்வது என்று திகைத்து நிற்க, இராணுவ அதிகாரி கோவர்த்தன் அங்கேயே கொண்டு வந்த பெட்டிகளைப் பள்ளம் தோண்டிப் பத்திரமாகப் புதைக்கச் சொல்கிறார். பின்னர் எல்லோரும் அந்த உசிலம்பட்டி கிராமத்தில் ஒரு சத்திரத்தில் தங்கிக் கொண்டனர். புதைத்த இடத்தில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சென்றுவிட்டனர். புதிய இந்தியாவிலிருந்து அழைப்பு வரும்வரை அங்கேயே இருக்கத் தீர்மானித்தனர்.

உசிலம்பட்டியில் கைரேகைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி ஆங்கிலேயே அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதற்குக் கிராமவாசிகள் ஒப்புக்கொள்ளவில்லை. 1860-இல் கள்ள நாணயம் தயாரித்த போது அதைக் கட்டுப்படுத்த இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மாதிரி உருவானது. அது 1871-ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது. இதில் மொத்தம் முப்பத்தியொன்று பிரிவு இருக்கின்றன. யாரெல்லாம் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் சார்ந்த குழுவை அல்லது சாதியைக் குற்றப்பரம்பரையாக அறிவிக்கவேண்டும் என்று அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும். வெளியிட்ட தகவல் சரியென்று கருதினால் கவர்னர் ஜெனரல் அப்படியே அறிவித்துவிடுவார்.

அவர்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துக் கண்காணிப்பதற்கு முன்னால் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் அரசு. பின்னர் அறிவிப்பு வரும். அறிவிக்கப்பட்ட சாதியில் இருக்கும் அத்தனை நபர்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும், அப்படிச் செய்யாமல் போனால் அது குற்றம். ஆனால் நாளடைவில் இது திருத்தப்பட்டது. உள்ளூர் அரசான ஜில்லா கலெக்டர் கருதினால் ஒரு பழங்குடி இனத்தவரை அல்லது சாதியைக் குற்றப்பரம்பரையாக அறிவித்துவிடலாம். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் குற்றப்பரம்பரையாக அறிவிக்கப்பட்ட சமூகத்தவர் அத்தனை ஆட்களும் தங்களின் பெயர்கள், அங்க அடையாளங்கள், முகவரி, இரண்டு கை பத்து விரல் ரேகைகள் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். சாகும் வரையிலும் அந்த மனிதர்கள் இரவு 11.00 மணிமுதல் அதிகாலை 3.00 மணிவரை அரசு ஒதுக்கியிருக்கும் பஞ்சாயத்து வீட்டுத் திண்ணையிலோ அல்லது ஊர் பொது இடத்திலோ படுக்கவேண்டும். எல்லோரையும் பொதுப் படுக்கைக்கு வரவழைக்க பொது மணி அடிப்பார்கள். அதற்கு மணிப்படுக்கை என்று பெயர். மனிதர்களை எப்படியெல்லாம் அலைகழித்திருக்கிறது இந்த அதிகார வர்க்கம். அதிகாரத்திற்கு எதிராகத் தன் குரலை உயர்த்துவதுதானே கலைப்படைப்பு!

இதற்கிடையில் ஊரில் ஒரு கொலை விழ அதை விசாரிப்பதற்கு எல்லோரின் கைரேகைகளும் வேண்டும் என்று நிர்பந்திக்கிறது காவல்துறை. இல்லையென்றால் இறந்த நபரை அரசாங்க ஊழியர் என்று சொல்லி ஊரையே சலித்து எடுத்துவிடலாம் என்ற யோசனையும் அங்கே முன்மொழியப்படுகிறது. இராணுவப் போர்வையில் இருந்த கோவர்த்தன் அவ்வூரில் வசிக்கும் போதும்பொண்ணு மீது ஆசைப்பட்டு அவளை அடையும் முயற்சியில் அவளைக் காதலித்த கந்தனைக் கொன்றுவிட்டான். கைரேகை பதிய வைக்கும் போராட்டத்தில் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெருங்கலவரம் நடந்தது. அவர்களைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று நித்திலன் பெரு முயற்சி எடுத்தான். அவனால் சின்னமாயனை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

நடந்து முடிந்த அநீதிக்கு பரிகாரம் செய்ய முயற்சித்திருக்கிறது நாவல். பிறந்த மண்ணிலேயே எதிரியாகச் சித்தரிக்கப்படும் நிலையைக் காலங்காலமாகக் குரலற்ற மக்கள் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இறந்துபோன அப்பாவின் காவல் கம்பை வைத்து விளக்கேற்றிக் கும்பிடும் எளிய மக்கள் மீது ஓயாமல் வன்முறையை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது அதிகார வர்க்கம். தாய்ப்பசுவை இழந்த கன்றை வேறு ஒரு தாய்ப்பசுவிடம் கொண்டு சேர்க்க அந்த மக்கள் மேற்கொண்ட நடைமுறை சிலிர்க்க வைக்கிறது. கதை முழுக்க மண்வாசமும், அறிவியல் தொழில்நுட்பமும் பின்னிப் பிணைந்து வாசகரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

- முனைவர் மஞ்சுளா

Pin It