பொதுவாகவே பறவைகள் மீது இருக்கும் இனம் புரியாத கவர்ச்சி இந்த நூலை படித்து முடிக்கையில் இன்னும் கூடுகிறது.

ஆகாயத்தில் கூடு கட்டும் பெரும் வெளிச்சமென உள்ளார்ந்த ஒரு சிறகடிப்பு. வெளியில் நிகழ்வதெல்லாம் உள்ளே நிழலாக படிவது போன்ற சமிக்ஞை. பறவைகளின்றி வானம் ஏது. அவைகளின் கால்களில் தொற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கவிதையும் விதை என்றே உணர்கிறேன். வீழ வீழ எழும் விருச்சமென வரும் எண்ணத்தில்... வண்ணம் பூசி செல்லும் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு செய்தி.

சொற்களின் வழியே சோலை செய்ய தெரிந்திருக்கிறது. சொக்கிய வானம் பறவைகளாகி வந்திருக்கிறது.

koodal thariq bookகவிதைகளைப் போல ஆழ்ந்து கிடக்க வேறென்ன இருக்கிறது. பறவைகளைப் போல வாழ்ந்து கிடக்க வேர் எங்கே இருக்கிறது. வாக்கியத்தில் சிறகாட்டும் தாரிக் Sir-ம் ஒரு பறவை என்றே நம்புகிறேன். வானம் பார்க்காத இதயத்தில் பறவைகள் வாழ்வதில்லை. இவர்ஞான வண்ணம் நீல வானம் என்கிறேன். ஆகையால் தான் ஆகாயத் திணையில் அத்தனையும் திண்ணை விரித்து காத்திருக்கிறது. ஆசுவாசம் இளைப்பாற ஒவ்வொரு கவிதைக்குள்ளும்... உட்கார்ந்து பேசும் பேரன்பு. ஒய்யாரமாய் வீசும் மாலைத்தென்றல்.

போகும் வழியெல்லாம் விதைகள் தூவி செல்லும் பறவைகள்... வாழும் போதே சிறு தெய்வங்கள். வலசைக்கு வந்தாலும் சரி. வாடைக்கு வந்தாலும் சரி. ஆசீர்வதிக்கும் அதன் வருகை என்கிறது இந்த நூலின் வரிக்கு வரி. நூல் முழுக்க மன நிம்மதி. வன நிம்மதியும். வானம் பார்த்து கிட. வாழ்க்கை புரியும். பறவை உற்று நோக்கு. வாழுதல் புரியும். சொல்லும் செய்திகள் கவிதைகளாகின. சொல்லாத செய்திகள் விதைகளாகின. பார்த்து பார்த்து விதைத்திருக்கிறார். படித்து படித்து சிலாகிப்போம்.

இவ்வாழ்வில் மானுடம் கண்டடைந்திருப்பது பேரன்பு. கூடவே விடுதலை. அதன் குறியீடு பறவைகள். அவைகளின் வழியே ஆசிரியர் செய்திருக்கும் திணை... ஆகாயத்தை அருகில் கொண்டு வந்திருக்கிறது. அதன் வழியே ஆனந்தம் தலை முட்டும் தூரத்தில் தான் என்கிறது. சிரி. சிறகடி... என்பது தான் இவர் வரைந்த சித்திரம். கைதட்டி ஆரவாரிப்பது சின்னஞ்சிறு பறவைகள். அவை சொல்லும் கானத்தின் வழியே இவர் காட்டும் வானம் நமக்கு ஞானம்.

ஒவ்வொரு கவிதையிலும் சிறுகு பொருத்தி இருக்கிறார். ஒவ்வொரு அசைவிலும் நாம் பறக்கிறோம். நூல் முழுக்க இறகுகள் என்றால் தகும். அதன் வழியே பிரபஞ்ச உறவுகள் என்றால் விரியட்டும் அகம். இவர் காணும் பறவைக்கெல்லாம் வனதேவதையின் சாயல். இவரைக் காணும் பறவைக்கெல்லாம் அழகு கவிதையின் சாயல். காடும் கவிதையும் வானமும் வதனமும் என்று எல்லாமும் பறவைகளின் வழியே இவர் பேனாவில் விதையிட்டிருக்கின்றன.

படிக்க படிக்க பேரானந்தம். சிறு பிள்ளையின் சிற்றூஞ்சல். முதிர் மனதின் முக்தி நிலை. இளம் பிராயத்தின் இசை நடனம். படித்து முடிக்க பறவை வசம்.

"அத்திப்பழம் என நினைத்து
புல்லாங்குழலை
விழுங்கியிருக்கக்கூடும்
ஆதிக் குயில்"

ஐயோவென இருந்தது. அருள் வந்த ஆனந்தம். ஆகச் சிறந்த ஆரம்பம்.

"வானவில்லைக் கொடுத்து
எந்த நிறம் இதில்
அம்மா எனக் கேட்டால்
எதனைக் காட்டுவது"

என்று ஒரு கவிதையை முடித்திருக்கிறார். முடிந்து வைத்த பேரன்பு முந்திக் கொண்டு தன்னை ஈன்றிருக்கிறது.

அவர் கண்ட மென்மை அவர் கவிதையெங்கும் இருக்கிறது. அவர் கொண்ட மேன்மை படிக்க படிக்க உணர்கிறோம். கவிதை ஒரு மனிதனை எத்தனை அழகாக்கி விடுகிறது என்று Sir ஐ காண்கையில் எல்லாம் நான் உணர்ந்திருக்கிறேன். அன்பை தவிர வாழ்வு வேறென்ன கற்றுத் தர போகிறது. அதன் குறியீடாக தான் அவர் பறவையைக் காட்டுகிறார். வானத்தை போதிக்கிறார். அமைதியின் தூரங்கள் நேரமாய் அமைந்து விட்டால் தினமும் போதி தான் நம் வாசல் என உணர்கையில்... உள்ளூர நன்றிகள் தான் ஆகாயத் திணைக்கு.

"பறவைகளின் மீது
எறிய நினைத்திருந்த கற்களை
உள்ளங்கைக்குள்
பத்திரப்படுத்துதல்"

என்பது என்ன தெரியுமா... கடைசி நேர கருணை என்கிறார். கடைசி கவிதையிலும் முதல் விதை செய்ய தெரிந்த ஆசிரியர் கருணையின் வடிவம் என்றால் தகும் தானே.

பறவைகளின் விதங்களை.... வண்ணங்களை..... வாழ்க்கையை பக்கத்துக்கு பக்கம் வரைந்து பார்த்த திருப்தி இருக்கிறது. வரைய வரையவே பறந்து விட்ட பறவைகள் தான் கவிதைகளாகவும் ஆகி இருக்கின்றன.

"எளிதில் பறித்து விடலாம்
இந்தப் பூவை
கனவில் வந்தழும்
மரத்துக்கு
எப்படி ஆறுதல் சொல்வது"

என்று கேட்கிறார். பூ பறித்தலில் இருக்கும் இயல்பு விரல் நடுங்க யோசிக்கிறது. அதன் விதியை முடிவு செய்ய நீ யார் என்றும் கேட்கிறது. பறவை வானம் பூ செடி... மரம் மண் என்று எல்லாவற்றிலும் இருக்கும் உயிரை தனதாக்கி உணரும் நூலின் ஆசிரியர் கண்ணாடி அணிந்த கவிதை பூ என்கிறேன். புன்முறுவல் பூக்கட்டும் அவர் வானம். அதில் புதிதாய் பூக்கட்டும் புது பறவை.

"இருள் சூழ்வதற்கு
சற்று முன்னர் மறையும் அது
தனது கூட்டுக்குத்
திரும்பியிருக்கும் தானே" என்று வருத்தப்படும் இவருக்கு பறவையின் ஞான தடங்கள் புரிந்திருக்கிறது. பின்னிரவு ஒற்றை பறவையின் துயரம் தூரங்களால் ஆனது. அது கூடடைந்த பறவைகளுக்கும் தூக்கமில்லாத இரவு தான். உணர்ந்திருக்கிறார். ஆகவே எழுத்தில் உதிர்த்திருக்கிறார்.

வாழ்வின் எல்லா தருணங்களையும் பறவைகளோடு இணைத்து விடும் கண்ணிகள் இவர் சிந்தை வெளியில் அழகாக பதிந்திருக்கிறது. ஆதலால் தான் பகல் கூட பறவை ஆகி விடுகிறது. வாழ்வின் நம்பிக்கைகள் எல்லாம் சிறகுகள் பொருத்தி இருப்பதால்... வீழ்ந்திட காரணமே இங்கு இல்லை. வாழ்ந்திட தான் வானம் வானமாய் காரணம் என்று இவர் வரி வழியே புரிந்து கொள்ளலாம். துயர்கள் கூட அன்றிலாகும் தருணத்தில் இன்ப துன்ப எல்லா உணர்வுக்கும் பறவையே சாட்சி.

"காற்றோடு கலந்து போயிருக்கும்
மருதநில நாகனாரும்
ஓரம் போகியாரும்
இந்நேரம்
என்ன செய்து கொண்டிருப்பார்கள்"

என்று முடிக்கும் கவிதையின்... ஆரம்பம்

"காற்றின் திசைக்கேற்ப
அசைந்தாடுகிறது செந்நெல்" என்றிருக்கிறது.

நான்காம் பத்தி வரியை போல நாம் அலகில் வைக்கோலை கவ்வியபடி அங்குமிங்கும் பறக்கிறோம் ஊர் குருவியாக. உள்ளூர் குருவியாக இருக்கும் குதூகலம்... சனி ஞாயிறு விடுமுறைக்கு ஏங்கும் பள்ளி சிறுவனாக இருந்தால் புரிந்து விடும்.

"நாற்பது நாளில்
பறவைகளின் பாசை
புத்தகம் கிடைத்தால்
உங்களில் யாரேனும்
வாங்கி அனுப்புங்களேன்" என்று கேட்டிருக்கும் ஆசிரியருக்கு அவர் புத்தகத்தையே அனுப்புவது தான் சரி.

"ஆகாயத் திணை" - பறவைகளின் பாசை.

இப்படி.. இன்னும்... நூல் முழுக்க அசையும் சிறகுகள் அவரைத் தான் காட்டுகின்றன. அவைகளுக்கு நன்றிகள் சொல்லும் அதே நேரம் கூடல் தாரிக் Sir க்கு அன்புகள் சொல்வோம்.

ஏனெனில்...

இந்த நூல் கூட ஒரு பறவை தான். பற்றிக் கொள்வோருக்கு வானம் வசப்படும்.

- கவிஜி

Pin It