மனித கண்டுபிடிப்புகளை எண்ணிப் பார்க்கும் போது எத்தனை பெரிய பெருமிதம் ஏற்படுகிறது! ஓரிடத்திலிருந்து நகர்வதற்குக் கால்கள் தவிர வேறு வழியில்லை என்று வாழ்ந்த காலத்தில் வானத்தில் பறக்கும் சாதனையை நிகழ்த்தினான். உணவுப் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில் பயிர் உற்பத்தியில் புரட்சி செய்தான். பகலை இரவாக்கியும், இரவைப் பகலாக்கியும் தன் ஆளுமையை நிலைநாட்டினான். குகைகளை இருப்பிடமாகக் கொண்ட நிலையிலிருந்து வானுயர கட்டடங்களைச் சாத்தியப்படுத்தினான். நோய்கள் தாக்கி அற்ப ஆயுளில் இறந்த போது கடவுளின் கோபம், பேய்களின் சேட்டை என்று நடுங்கியவனுக்கு உயிர் காக்கும் மருத்துவம் வசப்பட்டது.

காடு நாடானது; ஆற்றுநீர் வீட்டுக்குள் குடியமர்த்தப்பட்டது; தழையாடை மலையேறிப் போனது; உலகம் உள்ளங்கையில் அடங்கிப் போனது. இந்தச் சாதனைகளால் புளகாங்கிதம் அடையும் அதே வேளையில் மனிதம் சுருங்கிப் போனதையும் மறுப்பதற்கில்லை. இயற்கையை வென்றுவிட்ட மனிதன் செயற்கை வாழ்வின் சங்கடங்களை எதிர்கொள்ள திராணியற்று மனப்பிறழ்வுக்கு ஆளாகி இருக்கிறான். எப்படியாவது இயற்கையின் மடி சாய்ந்து கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ள ஒவ்வொரு நொடியும் ஏங்கிக் கொண்டிருக்கும் மனத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.

leela bookஎல்லாவற்றையும் வென்றுவிட்டேன் என்று ஆணவம் கொண்டவன் இன்று இயற்கையின் முன் மண்டியிட்டுக் கிடக்கிறான். பருவமழை பொய்த்துப் போனது, பருவநிலை சீர் கெட்டது, நுண் கிருமியின் தாக்குதல், மலட்டுத் தன்மை, வாழ்வியல் மாற்றம், மனநல பாதிப்பு என்று அல்லல்படும் சூழலில் இயற்கையின் அவசியத்தைப் பேசும் ‘வரையாட்டின் குளம்படிகள்’ என்ற எழுத்தாளர் கோ. லீலாவின் கட்டுரைத் தொகுப்பு வரமாக வந்திருக்கிறது. எழுத்தாளர் பிரச்சினைகளை மட்டும் பேசாமல் தீர்வை நோக்கி மனித சமுதாயத்தை அழைத்துச் செல்கிறார்.

எல்லா உயிர்களையும் பாரபட்சமின்றிச் சமமாக நடத்தி, உணவு வழங்கிப் பாதுகாக்கும் இயற்கை அன்னை பல ரகசியங்களையும், அதிசயங்களையும் தன்னுள் கொண்டிருக்கிறாள். இயற்கை அன்னைக்கு ‘ரகசியா’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் எழுத்தாளர். ‘‘மரத்தின் மலரில் அமரும் வண்ணத்துப்பூச்சியால் ஒரு வனம் உருவாகிறது. கனிகளைச் சுவைக்கும் பறவைகளால் ஒரு காடு உருவாகிறது… வௌவால், மயில், புலி, யானை, எறும்பு, இருவாய்ச்சி என எண்ணிலடங்காக் கானுயிர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, சக மனிதர்களிடம் இதைக் கொண்டு சேர்த்துவிட வேண்டுமென்ற கடமையுணர்வின் பதைபதைப்பில் எழுந்த நூல்தான் ‘வரையாட்டின் குளம்படிகள்’’, என்று ஆசிரியர் நூலில் குறிப்பிடும் போது மனிதர்கள் இயற்கை மீது கவனம் செலுத்த வேண்டும் என்ற அன்பு வேண்டுகோள் புரிகிறது. ஒரு விலங்கின் கழிவு வேறு உயிரின் உணவாக மாறுவதையும், பனிக் காலத்தில் யானை வெளியேற்றும் கழிவின் கதகதப்பில் குளிர்காயும் சிற்றுயிர்கள் வாழ்வதையும் பார்க்கும் போது இயற்கையின் ஆற்றல் வியக்க வைக்கிறது.

நூலில் இடம்பெற்றுள்ள பதினாறு தலைப்புகளில் பூச்சியினம், பறவையினம், விலங்கினம் என்று அத்தனை இயற்கையைப் பரவலாகப் பேசி வாசகருக்கு அவற்றின் மீது அன்பு ஏற்பட ஒரு பாலமாக அமைந்திருக்கிறது நூல். மனிதன் அல்லாத மற்ற உயிர்களை அஃறிணையாகச் சொல்லும் போது இந்த நூல் அவர்களை ‘ஆர்’ விகுதியிட்டு உயர்திணையாகப் போற்றுவது தனிச்சிறப்பு. வண்டுகள், தேனீக்கள், யானைகள் போன்ற உயிர்களால் காடு வளர்க்கப்படுகிறது. வீடுகளிலும், வயல்களிலும் எதிரியாகப் பார்க்கப்படும் எலிகளின் பயனுள்ள பக்கத்தையும் அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கோ. லீலா.

பறவைகள், விலங்குகளின் வேறு பெயர்களைக் குறிப்பிடுவதுடன், அவை இலக்கியங்களில் இடம்பெற்ற செய்திகளையும் தொகுத்துத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்த நூற்றாண்டிலும் பல உயிர்கள் கருக்கலில் எழுந்து உழைக்கத் தயாராகும் அழகியலை நமக்குக் காட்டித் தருகிறது கட்டுரைகள். கரிச்சான் குருவி என்ற வீரம் நிறைந்த பறவை பருந்து, கழுகு, வெட்டுக்கிளி ஆகியவற்றிற்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறது. பயிர்களைத் தாக்கும் வெட்டுக்கிளியைக் குறிவைத்து வேட்டையாடும் இடத்தில் இயற்கைப் பூச்சிக் கொல்லியாகிறது இப்பறவை. எனவே இந்த இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு வாசகரிடம் இயல்பாகவே தொற்றிக் கொள்கிறது.

மாடுகளின் முதுகில், கழுத்தில் ஏற்படும் புண்களைக் கொத்திக் காயப்படுத்திக் கொண்டிருக்கும் காகங்களை விரட்டிவிடுவதால் இது ‘ஆநிரை’ என்று வழங்கப்படும் மாடுகளைக் காத்தான் அதாவது ‘ஆநிரை காத்தான்’ என்று சொல்லப்பட்டு வந்தது. அப்பெயர் மருவி ஆனைச்சாத்தன் ஆகியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதும் வரலாறு சுவாரசியம் தருகிறது. காலை நேரத்தில் உணவு தேடுவதற்காக ஆண் பறவையும் பெண் பறவையும் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் விடியற்காலையில் அவை இரண்டும் காதலோடு பேசிக் கொள்ளும் என்ற நடைமுறையை ஆண்டாள் நாச்சியார் கூறும் திருப்பாவை, இக்கட்டுரை வாசிக்கும் போது நினைவு அடுக்குகளில் தங்கிவிடுகிறது. ‘‘கீசு கீசு என்றெங்கும் ஆனைசாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ’’ என்ற வரிகளில் அவற்றின் காதல் வாழ்க்கை விளங்கும்.

பெருமிருகம் என்று இலக்கியம் குறிப்பிடும் யானைகளைப் பார்க்கும் போது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. யானை மீது அமரும் விருப்பம் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் உண்டாகும். அதன் தும்பிக்கையை நம் தலைமீது வைத்து வாழ்த்தும் போது அதற்குத் தேவையான பழங்களையோ, தேங்காயையோ தருவது உலக வழக்கம். அப்படிப்பட்ட யானையின் பங்களிப்பை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. யானைகளில் பெண் யானைகளும், கரையான்களில் ராணி கரையான்களும் குடும்பத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் என்று அறிந்து கொள்ளும் போது மகிழ்ச்சி பிறக்கிறது. ஆதியில் ஏற்பட்ட தாய்வழிச் சமூகத்தை விலங்குகள் தோற்கடிக்காமல் பாதுகாத்து வாழ்கின்றன. ஆனால், மனிதனோ தேவையான மரபார்ந்த சமூக அமைப்பைக் குழி தோண்டிப் புதைத்து விட்டான்.

யானையின் சிறப்பம்சமே சுவையான மூங்கிலைத் தேடி உண்பதுதான். அப்படி உண்ணும் யானைகள் போதும் என்ற உணர்வு ஏற்படும் போது சாப்பிடும் மூங்கிலைப் பாதியிலேயே விட்டுச் செல்லும். அந்த மூங்கில் புல்லாங்குழல் தயாரிப்புக்கு உகந்தது. அதனால் இசையின் இனிமை கூடுகிறது. அதிகமான எடை கொண்ட யானைகளின் காலடி மண்ணில் பதிந்தாலும் செடிகள் நசுங்கிப் போகாமல் அவை காலை எடுத்தவுடன் மீண்டும் தன் நிலைக்கு நிமிர்ந்து விடும் என்ற தகவலை அறியும் போது இயற்கையை வியக்காமல் இருப்பதற்கில்லை.

சங்க காலத்தில் முல்லை நில மக்கள் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் வழியாகப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டது போல, பெண் வீட்டில் இருக்கும் எல்லா ஆண் யானைகளையும் சண்டையிட்டு வெற்றி பெற்ற பின்னரே பெண் யானையை அடைய முடியுமாம். இல்லையென்றால் பெண் யானையை அடைய முடியாமல் மதநீர் ஒழுக அலைய வேண்டியதுதான். மேலும், தண்ணீர் குடிக்கத் தெரியாத குட்டிகளுக்குப் பெரிய யானை தண்ணீர் உறிஞ்சி குட்டியின் வாயில் ஊற்றும் பிள்ளைப் பாசத்தை நினைத்துப் பார்க்கும் போது மனித இனம் சாதாரணமாகத் தோன்றுகிறது!

மற்றொரு இடத்தில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழும் ‘மைனா’வைப் பற்றிச் சொல்லும் வேளையில் அதன் தமிழ்ப் பெயர்களையும் விவரிக்கிறார். நாகணவாய்ப்புள், சிறுபூவாய் ஆகியவை தமிழ்ப் பெயர்கள் என்றும் மைனா என்பது வடமொழி என்றும் கூறுகிறார். பாடுவது, குரல் மாற்றிப் பேசுவது என்று பல திறமைகள் கொண்ட இப்பறவை பயிர்களைக் கத்தரிக்கும் வெட்டுக்கிளியை அழிப்பதில் திறமையாகச் செயல்படுகிறது.

ஆந்தையைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இருக்கும் இந்நாளில் ஆந்தையின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காக்கையைப் போல உணவை உண்ணும் போது தன் இனத்தை அழைத்துப் பகிர்ந்து உண்ணும் எண்ணம் கொண்டது ஆந்தை. பெண் ஆந்தைகள் இரவு முழுவதும் பேசிக் கொண்டு இருக்கும் உண்மையை அமைதியாகச் சொல்கிறது நூல். ஆந்தை என்பது மிகவும் அறிவுள்ள பறவையாக அக்காலத் தமிழர்கள் கருதினர். எனவே சிறைக்குடி ஆந்தையார், கொட்டியூர் நல்லாந்தையார், பிசிராந்தையார், ஒதலாந்தையார் என்று மனிதர்களுக்கும் பெயர் சூட்டினர். தற்காலத்தில் இவை அபசகுனமாகப் பார்க்கப்படுவது கொடுமை!

காதல் என்பது உயிர்களின் இயற்கைப் பண்பு. மனிதர்களுக்கு மட்டும் உரியதாகக் கருதுவது பிழை. இயற்கை உருவாக்கிய எல்லா உயிர்களுக்குள்ளும் காதல் நிறைந்திருப்பது தனிச்சிறப்பு. இணைப்பிரியமால், வேறு இணையைத் தேடாமல் வாழும் இருவாய்ச்சிகள் இறுதிவரை ஒரே இணையுடன் வாழும் காதல் பறவைகள். ஒருவேளை உணவு தேடச் சென்ற ஆண் பறவை வேடர்களால் வீழ்த்தப்பட்டாலோ அல்லது வேறு காரணத்தினால் உயிர் இழந்தாலோ பெண் பறவை உயிரை மாய்த்துக் கொள்ளும். ‘‘காதலனுக்காக உயிரை விடும் காதலியும், காதலிக்காகப் பார்த்து, பார்த்து ஒவ்வொன்றையும் செய்து உயிரைத் துச்சமாக மதித்து உணவு தேடும் ஆண் பறவையும் காவியம் தானே!’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

மேலும் மழைக்காடுகள் உருவாவதற்கு இருவாய்ச்சிகளே காரணம். இவற்றின் எச்சத்தில் இருக்கும் தாவர விதைகள் உயிர்ப்புத் தன்மை மிக்கதாக இருப்பதால் மழைக்காடுகள் செழித்து வளர்கின்றன. இவை மழைக்காடுகளைத் தவிர வேறு பகுதியில் இனப்பெருக்கும் செய்வதில்லை. ஆனால் பாவம் அவை மனித பேராசை காரணமாக – தேயிலை, அணை, சாலை போன்ற காரணங்களுக்காக அழிக்கப்படுவதால் இவற்றின் இனப்பெருக்கும் தடைபட்டு வருகிறது.

கரையான்களில் சிப்பாய் மற்றும் வேலைக்காரக் கரையான்கள் உண்டு என்று சொந்த பந்தங்களை அறிமுகப்படுத்துவது போல அறிமுகப்படுத்துகிறது நூல். ஒரு கரையான் புற்றுக்கு ஒரு ராணிதான் இருக்கும். இரண்டு ராணி இருந்துவிட்டால் இரண்டையும் அழித்துவிட்டு வேறு ஒரு புது ராணியை ராஜா கரையான் கொண்டு வந்துவிடும். வேறு புதுக் கோட்டையை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ராணிக் கரையான்கள் புற்றை விட்டு வெளியில் வந்து இறக்கையை உதிர்க்கும். அதைப் பார்த்துவிட்டு ஈசலுக்கு ஒருநாள் வாழ்க்கை என்று தவறாக எண்ணுகிறது மனிதஇனம். ஈசல் தன் இறக்கையை உதிர்த்த பின் குளிர்ச்சி நிறைந்த மண்ணுக்குள் சென்று புது காலனியைத் தொடங்கும். மொத்தத்தில் மண்ணுக்குத் தோழனாகவும், மருத்துவராகவும் இருந்து விவசாயிகளின் நண்பனாகவும் செயல்படுகிறது.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று பழமொழி பேசும் நம்மிடம் ஒரு சில ஆசிய நாடுகளில் புலி காட்டுக்கு அரசன் என்று கற்றுத் தருகிறது நூல். புலிக்கு வயதாகும் போது வேட்டையாடச் சிரமப்படும். பொதுவாகத் தனியாக வாழும் இயல்புடைய புலிகள் வயதான காலத்தில் மனிதர்களை வேட்டையாடுமாம். இனப்பெருக்கும் செய்த பின் இறந்துவிடும் இனங்கள் ஆண் வண்ணத்துப்பூச்சி மற்றும் ஆண் தேனீக்கள் என்று இயற்கையின் ரகசியங்களை அவிழ்த்து விடுகிறார் எழுத்தாளர். பட்டாம்பூச்சி அயல் மகரந்த சேர்க்கைக்குப் பெரிதும் துணை செய்வதால் பலவிதமான புதிய தாவர வகைகள் பெருகியுள்ளன என்று பயன் தரும் செய்திகளையும் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே வருகிறார்.

நீர்நிலகளின் அருகில்தான் மனித நாகரிகம் தோன்றியது. ஆனால் நாகரிக மனிதன் முதலில் அழிக்கத் தொடங்கியது நீர்நிலைகளை என்பது எத்தனை பெரிய முரண். தண்ணீர் இல்லாமல் உயிர்கள் கிடையாது என்று உணர்த்துவதற்காகவோ என்னவோ முதல் உயிரினம் நீரில் உண்டானது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து வரும் மனிதன் வரும் தலைமுறைக்கு ஆபத்தைத் தேடி வைத்துள்ளான். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கேரளாவின் ஒரு சில பகுதிகளில் மட்டும் வாழும் நீலகிரி வரையாடு இலையில் உள்ள நீரையும், புல் நுனி மீது படியும் பனித்துளியையும் தாகத்திற்காகக் குடித்து உயிர் வாழ்கிறது, மற்றபடி தண்ணீர் குடிப்பதில்லையாம். தமிழ்நாட்டின் மாநில விலங்கான இது சோலைப் புல்வெளி சீரான வளர்ச்சியோடும், செழிப்போடும் இருக்க முக்கியப் பங்காற்றுகிறது என்பது எத்தனை நபர்களுக்குத் தெரியும்!

பறவைகளில் அதிக அறிவுத் திறன் பெற்ற பறவையான காகங்களின் எச்சத்தில் எல்லா உரத்திற்கும் மேலான வீரியம் உள்ளது. இவை போடும் எச்சத்தில் இருக்கும் விதைகள் கோயில் கோபுரங்களாக இருந்தாலும், கான்கிரீட் கட்டடங்களாக இருந்தாலும் கட்டடங்களையே தகர்க்கும் அளவுக்கு வேர் விட்டு வளரக்கூடியவை. எனவே காகங்கள் வளர்க்கும் காட்டை அழிக்க மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியை மரம் வெட்டும் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

புத்தகம் முழுக்க அறிவியலையும் விலங்கின் வாழ்வியலையும் பேசும் இந்நூல் நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்ட முறையில் சிகரம் தொட்டு நிற்கிறது. நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நுண்ணுணர்வு கொண்ட எறும்புகள், ஆண் வௌவால்களின் மார்பகங்களில் பால் சுரக்கும் தகவல், மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து தன் நாட்டுக்கு மயில்களைக் கொண்டு சென்ற வரலாறு, தேனீக்களின் வாழ்க்கை முறை என்று தகவல் களஞ்சியமாக விளங்குகிறது நூல். மிகுந்த சிரத்தையுடன் படைக்கப்பட்ட இந்நூல் மனித குலம் முழுமையும் வாசித்துப் பயன் பெற வேண்டும்!

- முனைவர் மஞ்சுளா

Pin It