“யாழ்ப்பாண தலித் மக்களின் வாழ்வியல் அனுபவங்களை வெளிப்படுத்துகின்ற பண்பு டானியலில் மிக நுண்ணயத்துடன் வெளிப்பட்டுள்ளது எனலாம். அச்சமுதாய அமைப்பிலுள்ள பல வர்க்கங்களின் புறவியல்புகளையும், மனவியல்புகளையும் கணக்கிலெடுக்கும் பொழுது உள்ளார்த்தமான இயல்பின் வெளிப்பாடான கலகத்தையும், எதிர்ப்புணர்வுகளையும் அவரது நாவல்கள் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளன? அவற்றின் பலமான அம்சம் என்ன பலவீனமான அம்சம் என்ன என்பவை குறித்து ஆராய வேண்டியது காலத்தின் தேவையாகும்.”

இயந்திர சாதனங்களினாலும் கைத்தொழில் நாகரீகத்தின் வளர்ச்சியினாலும் பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் தளங்களை உடைத்துக் கொண்டு வளர்ச்சியடைந்த முதலாளித் துவம் அன்றைய நியதி வழுவா வாழ்க்கை முறையைத் தகர்த்தது. ஆனால் ஸ்திரமான சமயத் தத்துவக் கோட்பாடுகளும் தகர்ந்தன. இன்னது இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் வலுவிழந்தன. ஆகவே இதை இவ்வாறு கூறவேண்டும் என்ற பழைய இலக்கிய மரபில் இருந்து, எதையும் எவ்வாறும் கூறலாம் என்ற புதிய கட்டுப்பாடற்ற இலக்கிய மரபு உதயமாகியது. இவ்வகையில் புதிய வாழ்க்கை முறையில் புதிய சமூதாய உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் பெரிய இலக்கிய வடிவமான நாவல் தோன்றி யது. தெய்வாம்சம் பெற்ற காவிய நாய கர்களும், கற்பனை வாழ்வும் மறைந்து அன்றாட நடைமுறைவாழ்வும் அதில் நின்று உழலும் சாதாரண மனிதரும் இலக்கிய அரங்கில் இடம் பெற்றனர். சுருக்கமாக சொன்னால் கற்பனை உல கிற்கு பதிலாக யதார்த்த உலகு இலக்கி யத்தில் இடம்பெற்றது. யதார்த்தம் நாவ லில் ஓர் அடிப்படை அம்சமாகியது. காவியத்தையும் நாவலையும் வேறு படுத்தும் பொருள் வேறுபாடு என்பது இதையே.(எம்.ஏ.நுஃமான், மார்க்சிய மும் இலக்கியத் திறனாய்வும், அன்னம் ( பி ) லிமிட், சிவகங்கை, பக். 177, 178)

நிலமானிய சமூகவமைப்பின் சிதைவு டன் தோற்றம் பெற்ற முதலாளித்துவ சமூகவமைப்பும் அதனடியாக எழுந்த சமூகத்திற்கும் தனிமனிதனுக்குமிடை யிலான புடைப்பெயர்ப்பும் நாவல் இலக்கியம் தோன்றுவதற்கு சாதகமான சூழலைத் தோற்றுவித்தது. அவ்வடிவம் மேனாட்டார் தொடர்பில் தமிழுக்கு வந்ததெனினும் பண்பாட்டுச் சூழலில் காணப்பட்ட அகவுலகத் தொடர்பும் சமுதாயச் சூழலில் உருவாகி வந்த சில சமூக சக்திகளும் சிந்தனைகளும் தமி ழில் நாவல் தோன்றி வளர்வதற்குரிய உந்துதலாக அமைந்தன. தமிழ் நாவல் வரலாறானது தமிழர் சமுதாயத்தின் தனித்துவங்களையும் சிறப்புகளையும் உள்வாங்கி தமிழ் நாவல் துறையாகவே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அந்த வகையில் ஈழத்தில் தோன்றிய தலித் நாவல் இலக்கியம் தனித்துவத்துடன் விளங்குகிறது.இலங்கையின் வடபகுதி யில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை களையும் அதற்கு எதிரான போராட்டங் களையும் நாவ லாக்கியதில் அமரர் கே. டானியலுக்கு பெரும் பங்குண்டு.

சொத்துடமையை தமதாக்கிக் கொண்டு ஆதிக்கம் மிகுந்தவர்களாகக் காணப் பட்ட வேளாளர் சாதியினர் தமக்குத் தேவையான அடிமைகளைத் தென் னாட்டிலிருந்து விலைக்கு வாங்கி தமது நிலங்களில் சிறுசிறு குடிசைகள் அமைத்துக் குடியற்றினர். அவர்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தமதாக்கிக் கொண்ட னர். பெண்ணைத் மணம் செய்து கொடுக்கிறபோது சீதனப் பொருட்களுடன் சேர்த்துத் தம் அடிமை களையும் தாரை வார்ப்பு செய்தனர். வேலைகளைச் செய்யத் தவறுமிடத்து பகிரங்கமாகக் கட்டிவைத்துத் தண்டிக்கவும் தமக்கெதிராக மக்கள் எழுகின்றபோது நிலங் களிலிருந்து வெளியேற்றவும் குடிசைகளுக்கு தீ மூட்டவும் செய்தனர். (ஓலையினால் அமைத்திருந்ததால் இலகுவாக தீ மூட்ட முடிந்தது. இதன் காரணமாகத் தான் தலித்துகள் கல் வீடு கட்டுவதற்கு வேளாளர் எதிராக இருந்தனர்)

நிலவுடமையாளனுக்கும், உழைப்பை விற்பவர்களான தலித்களுக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தியுறவே, யாழ்ப்பாணச் சமூகத்து மனிதவூடாட்டத்தின் அடிப்படை யாகும். இஃது பகை முரண்பாடுடைய ஓர் உறவாகும். வரலாற்றை பரிணாமமடையச் செய்யும் வர்க்கப் போராட்டம் சாதியத்திற்கு எதிரான போராட்ட வடிவிலே இங்கு காணப்படுவதனை அறியலாம்.

யாழ்ப்பாண சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட் டங்கள் காலத்துக்கு காலம் ஏதோவொரு வகையிலும் அளவி லும் முனைப்படைந்தே வந்துள்ளது. இருப்பினும் ஆரம்ப கால போராட்டங்கள் அமைப்புரீதியாக முன்னெடுக்கப்பட வில்லை. 1910ம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர் சங்கம் இத்துறையில் முதற்கட்ட சாதனையாக அமைந்திருந்தது. இதன் உச்ச வளர்ச்சியை, நாம் 60களில் தோற்றம் பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்ட எழுச்சியில் காண முடிந்தது. இலங்கையின் வடபகுதியில் வீறு கொண்டெழுந்த தீண் டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் மக்களை நோக்கி வேர் கொண்டு கிளை பரப்பி, புத்திஜீவிகள், மாணவர்கள், விவ சாயிகள், தொழிலாளர்கள் என பல ஆளுமைகளை ஆகர்ஷித் திருந்தது. தீண்டாமைக்கு எதிரான போராட்டமானது சொத்து டையவர்களுக்கும் சாதிய வெறியர்கட்கும் எதிரானது என்ப திலும் எதிரி யார்? நண்பன் யார்? என்பதிலும் மிகத் தெளி வான பார்வையை இவ்வியக்கம் முன்வைத்தது. சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற சமூக விஞ்ஞானத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமான அம்சமாகும்.

ஈழத்து தமிழ் நாவல்களில் தலித் உணர்வுகளும் போராட்டங்களும்: இடைக்காட்டார் எழுதிய நீலக்கண்டன் ஒரு சாதி வேளாளன் (1925) என்பதே யாழ்ப்பாண தலித்துகள் பற்றி தோன்றிய முதல் நாவலாகும். ஓர் உயர்சாதி ஆணுக்கும், தாழ்ந்தசாதிப் பெண்ணுக்கும் பிறந்த நீலகண்டன் தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இடறுவதையும், பின்னர் அவ்விடையூறுகளை வென்று சொத்துக்களைப் பெறுவதையும் இந்நாவல் சித்திரிக்கின்றது. இத்தகைய போக்கில் அழகவல்லி (1938), செல்வநாயகத்தின் சரோஜா அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி (1938) முதலிய நாவல் கள் காணப்படுகின்றன. இவற்றில் சாதிய முரண்பாட்டின் கொடுமைகளை நிராகரித்து சில மனிதாய கருத்துக்கள் கூறப் படுகிறபோதினும் முனைவர்.கோ.கேசவன் குறிப்பிடுவது போல இவை சாதிய முரண்பாட்டின் வெளிப் பரிணாமத் தையே சுட்டிக் காட்டின எனக் கூறுவதே பொருந்தும்.

டானியலின் சமகாலத்தில் தலித்துகள் பற்றிய நாவல்களில் முன்குறிப்பிட்ட பிரிவில் அடக்கக்கூடியதென செங்கையாழி யானின் பிரளயம் (1975), சொக்கனின் சீதா (1963), தி.ஞான சேகரனின் புதிய சுவடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கலப்புத் திருமணம், சமபந்தி போசனம், தேநீர் அருந்துதல் முதலிய மனிதாபிமான நடத்தைகள் மூலம் சாதிய முரண் பாட்டை தீர்த்துவிடலாம் என நம்பினர்.சாதியமைப்பு முறையினையும் அதனுடன் தொடர்புபட்டுள்ள உற்பத்தி ய மைப்பினதும் தாற்பரியங்களை ஆராய்ந்து பார்க்கும் திராணி யற்று காணப்பட்டமையால், வெறுமனே முரண்பாட்டின் வெளித் தோற்றத்தினைக் கண்டு, அதனை மனமாற்றத்தி னால் தீர்த்துவிடலாம் எனக் கனவு கண்டனர். பண்டைக் காலம் தொட்டு சாதியம் தொடர்பாக ஆங்காங்கே கூறப் பட்ட மனிதாயக் கருத்துக்களை வைத்துச் சாந்தியும் சமாதான மும் பேசிய இவர்கள் தீண்டாமையை எதிர்த்துப் போரா டாதே என்று போதிப்பவர்களாக இருந்தனர். மந்திரத்தால் மாங்காயே விழாது என்றிருக்க மனமாற்றத்தினால் சாதிய மைப்பினை மாற்றிவிடலாம் எனக் கனவு காண்பது வக்கற்ற புலம்பல்களுக்கே இட்டுச் செல்வதாக அமைந்திருந்தது.

கலை இலக்கியத்தை சமுதாய விஞ்ஞானக் கண்ணோட்டத் துடன் பார்க்கத் தலைப்பட்ட புதிய போக்கு சுபைர் இளங்கீர னின் தென்றலும் புயலும் என்ற நாவலுடன் தொடங்குகி றது. செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965), சடங்கு (1966), போர்க்கோலம் (1969), செ.யோகநாதனின் காவியத் தின் மறுபக்கம் (1976) முதலியவையும் இப்பண்பிலா னவை. இவற்றினிடையே அரசியல் வேகம், தெளிவு, கலை நயம் என்பவற்றில் வேறுபாடுகள் உண்டடெனினும், சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டு சுரண்டல், வறுமைக்கு ஆட்பட்ட வர்களை- மனிதப் பிறவிகள் என்ற வகையில் போர்க்குணம் வாய்ந்த பாத்திரங்களாக அணி திரண்டு உரிமைக்குரல் எழுப்ப முனைவதை இப்பிரிவினர் நன்கு சித்தரித்துள்ளனர். டானியலின் நாவல்களும் இத்தகைய மானுட அணியிலேயே கால் பதித்து நிற்கின்றன. டானியலின் நாவல்களில் - சமூக அரசியல் உணர்நிலைகளும் போராட்டங்களும்:

டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்களில் பஞ்சமர், கோவிந்தன், அடிமைகள், கானல், தண்ணீர் ஆகியவை குறிப் பிடத்தக்கவை. முருங்கையிலைக் கஞ்சி, மையக்குறி, இரு ளின் கதிர்கள் ஆகிய குறுநாவல்களும் குறிப்பிடத்தக்கவை. போராளிகள் காத்திருக்கின்றார்கள் என்ற அவரது பிறிதொரு நாவல் மீனவ மக்களின் வாழ்க்கை முறைகளையும், சம்மாட்டியாரின் ஆதிக்கத் தன்மைகளையும் விபரிக்கிறது. அன்பை போதிக்க வந்த மதங்கள் பின் மக்களை ஒடுக்குவ தற்கு அதிகார வெறியர்களின் கைத்தடியாக எவ்வாறு பயன் படுகிறது என்பதையும் விளக்குகிறது. இந்நாவல் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. இனமுரண்பாடுகள் குறித்து எழுதப்பட்ட இந்நாவலின் போராளிகள் காத்திருக்கின் றார்கள் ( போராளிகள் காத்திருப்பதில்லை) என்ற தலைப்பு பிழையானது என்ற விமர்சனம் ஏற்புடையதொன்றே.

டானியலின் நாவல்களில் கடதாசி விளையாட்டு, வான விளையாட்டு, உயர்சாதி இளைஞர்களின் மேன்மையும் திமி ரையும் காட்டும் இளந்தாரி திருவிழா, பஞ்சமர்க்கு தனியி டம் ஒதுக்கியிருத்தல், தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகையை மாட்டல், (பஞ்ச மர்) பந்தயம் என்ற பெயரில் தேங்காய் உடைத்தல், கோழி கொக்கரி சண்டை, (அடிமைகள்) நாய் வளர்க்கும் முறை, வேட்டை, ஏராக்கள் குடித்து தாய்மை எய்தும் சந்தர்ப்பம் (கோவிந்தன்) பிள்ளை வயிற்றுடன் ஒருவர் இறந்தால் அவரை பிள்ளையுடன் புதைக்க முனைவது தந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற நம்பிக்கை ( உயர்சாதியினர் மட்டுமே சுமை இறக்கும் வழக்கத்தினையும் உரிமையினை யும் பெற்றிருந்தனர்) தலித்துகளின் திருமண நடைமுறைகள் (தண்ணீர்) ஒருவரை ஒதுக்கிவிட அல்லது இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதற்கு முருங்கை இலைக் கஞ்சி வைத்துக் கொடுத்தல் (முருங்கையிலைக் கஞ்சி) சைவ, கிறிஸ்தவ மதப் பண்பாடுகளிலான சடங்குமுறைகள், தலித்துகள் தாவணி அணியக்கூடாது (கானல்) தலித்துகள் இறந்தால் பிணத்தை எரிக்க முடியாது, பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளல் கூடாது. உயர்சாதியினரின் கோயில்களுக்கு செல்ல முடியாது. உணவு வேறுபாடுகள், உணவுப் பரிமாறல் என்பது சாதிக்குரிய பாத்திரங்களை கொண்டே கொடுத்தல், தலித்துகள் உயர் சாதியினருடன் உரையாடும்போது ஓமாக்கும் வந்தாக்கும் முதலிய சொற்களை பயன்படுத்துதல் (பொதுவாக எல்லா நாவல்களிலும்) போன்ற விடயங்கள் யதார்த்த உணர்வுடன் படைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில் டானியல் சமூக ஒடுக்குமுறையை மட்டுமன்றி பண்பாட்டு ஒடுக்குமுறையையும் நாவல்களில் வெளிக்கொணர்ந்தார்.

தலித்துகளின் உணர்வுகளையும் கலாச்சாரத் தளத்தினையும் அவை எவ்வாறு சாதியாதிக்கத்திற்குட்பட்டு செயல்படுகின் றன என்பதையும் முரண்பாடுகளையும் அதற்கு எதிரான கலகக்குரல்களையும் வெளிக்கொணர்ந்துள்ளமை டானிய லின் யதார்த்த நோக்கிற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும். உதார ணமாக கானல் நாவலில் வரும் சின்னி தாவணி அணிந்தி ருந்தமையால், உயர்சாதி பெண்களின் தாக்குதலுக்கு உட்படு வதையும், அதற்கெதிராக தலித்துகள் ஒன்றிணைந்து கலகம் செய்வதையும் ஆர்ப்பாட்டமாக சின்னிக்கு தாவணி அணிந்து உயர்சாதியினருக்கென ஒதுக்கப்பட்ட வீதியி லேயே ஊர்வலமாக சென்றமையும், அடிமைகள் நாவலில் தலித்துகள் கோயிலுக்குள் செல்லவிடாது கயிறு கட்டி வைத் தல், அந்த சூழலுடன் ஒத்துப்போகும் கந்தன் முதலிய பாத்தி ரங்களும் அதற்கு எதிராக கிளர்ந்து போராட முனையும் சின்னப்பன் முதலானோரையும், பஞ்சமரில் சித்தரிக்கப் படும் கோயில் பிரவேசம், போராட்டம், ஒரு பிரேதத்தை எரிக்க முனைதல் முதலிய விடயங்களையும் குறிப்பிடலாம்.

ஒடுக்குமுறையாளர்களான வேலுப்பிள்ளை(பஞ்சமர்) தம்பா பிள்ளையார் (கானல்) இளையதம்பி நாயினார் (பஞ்ச கோணங்கள்) முதலிய காமக்காரர்களுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறுவதையும் இயக்கமாக இணைந்து போராட முனைவதையும் டானியலின் நாவல்களில் காண முடிகிறது. இப்போராட்டத்தை தனிநபர் அல்லது சிறுகுழுவினருடைய தாக சித்தரிக்காமல், பரந்துபட்ட வெகு மக்களின் போராட் டங்களாக சித்தரித்தமை டானியலின் பலமான அம்சமாகும்.

இக்காலச்சூழலில் சாதியடக்குமுறையினதும், தீண்டாமையினதும் பிரதான மையங்களாக ஆலயங்களும், தேனீர்க் கடைகளும் திகழ்ந்தன. எனவே அத்தகைய ஒடுக்குமுறை களுக்கு எதிரானப் போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் முன்வைத்தது. இதன் செல்வாக்கினை நாம் டானியலின் நாவல்களில் காணமுடியும்.

இவ்வாறாக வெளிப்பட்ட போராட்டமானது பரந்துபட்ட உழைக்கும் மக்களைக் களமாகக் கொண்டிருந்ததுடன், இவற்றுடன் இணையக்கூடிய தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் தன்னுள் உள்ளடக்கியே முன்னெடுக்கப்பட் டது. சாதி விடுதலைப் போராட்டத்துடன் இணையக்கூடிய நல்லெண்ணங் கொண்ட உயர்சாதியினரையும் இப்போராட் டங்கள் தன்னகத்தே வரித்திருந்தன எனலாம். டானியலின் நாவல்களில் ஐயாண்ணர், சுப்பையாவாத்தியார் முதலிய பாத்திரங்களை இவற்றுக்கு உதாரணங்கள். அவரது கோவிந் தன் நாவல்களில் வரும் பின்வரும் பந்தி முக்கியமானது.

"நானும் ஒரு விஷயம் சொல்லப் போறன். உள்ளதுகளை நாங்கள் மறைக்கப்படாது. எங்கடை ஆக்களுக்குள்ளேயும் சில பொடியள் அவங்கடை பக்கத்துக்கு நிக்குறாங்கள் எண்டு கேள்வி. தனித்தனியே ஆக்களின்ரை பேர்களை சொல் நான் விரும்பேல்ல. அதையும் நாங்கள் கணக்கெடுத்துக் கொள்ள வேணும்" என்ற சண்முகம்பிள்ளையின் உணர்வுகளும், என்னடா கணவூதியன் உங்கடை பகுதியிக்கை ஏதும் புதி னமே? அப்படி ஒண்டுமில்லையாக்கும், எங்கட பொடிய ளும் ஐயா அவையின்ர நயின்னாப் பொடியளும் சேர்ந்து ஒரு சங்கம் வெச்சவை. என்னடாப்பா சங்கமோ? காரியம் ஆரடாப்பா தலைவர்?. எங்கடை சங்கக்கடை மனேச் சற்றை நடுவிலுத்தம்பி தான் தலைவர். என்ரை அண்ண மோன்தான் காரியதரிசி. என்னடா அவன்தான் ஊருப் பட்ட புத்தகமெல்லாம் படிச்சிக்கொண்டு திரிறான் ஏனென்று கேட்டா ஏதோ எல்லாம் சொல்லுறான் எங்களுக்கு விளங்காமைக் கிடக்கு- என சண்முகம்பிள்ளைக்கும், பரியாரி கணவதிக்குமிடையில் நடைபெறுகிற உரையாடல் மூலமாக, காலமாற்றத்தினையும், புதிய சிந்தனைகளின் வளர்ச்சியினையும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங் களில் அதன் நேசச்சக்திகளும் இணைந்து செயல்படுவதனை யும் காணக் கூடியதாக உள்ளன.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் போக்கிலிருந்து டானியலின் நாவல்கள் விலகி நிற்பதனையும் இங்கு அவதா னிக்க முடிகின்றது. சாதிய ஒடுக்குமுறைகளை வெளிப்படுத் தியிருந்த அதேசமயம் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கி வைத்திருந்த பாலியல் தொழிலாளர், அரவாணிகள், பாலியல் தரகர் போன்ற உதிரிகள் பற்றிய டானியலின் பார்வை பதிவாகியுள்ளது. இருளின் கதிர்கள் என்ற குறு நாவல் இதை நுட்பமாக எடுத்துக்காட்டுகின் றது. பாலியல் தொழிலாளரின் கொடூரமான வாழ்வியல்களை யும், சமூகம் அவர்கட்கு வழங்கியுள்ள ஸ்தாபனங்களையும், சுற்றி வாழ்வோரின் போலித்தனங்கள், இரக்கமின்மை, அவர்களைச் சுரண்டி வாழத் தூண்டும் உணர்வுகள், மனித உறவுகளிலும் சிந்தனைப் போக்குகளிலும் பணத்தின் ஆதிக்கம் எவ்வளவு தூரம் புரையோடிப் போயிருக்கின்றது என்பதையும் காட்டுகிறது இக்குறுநாவல்.

பெரும்பாலான கதையாசிரியர்களினால் இவ்வகையான பாத்திரங்கள் படைக்கப்பட்டாலும், அவை நடுத்தர வர்க்கத் திற்குரிய பார்வையில்- பெரும்பாலும் அம்மனிதர்கள் குறித்த நையாண்டி பான்மையில் படைக்கப்படுகின்றன. டானியல் அத்தன்மையிலிருந்து விலகி, அப்பெண்ணின் உணர்வுநிலை நின்றே நாவலை எழுதியிருந்தார். பொன்னம் மாளுக் காக அனுதாபப்படும் நோஞ்சி மாமா (மாமா வேலை செய்பவர்) வர்க்க, குணாதிசயத்தை உணர்ந்து சித்தரிக்கப் பட்ட பாத்திரமாகும். இவ்வகையில் டானியலின் இக்கதை பொன்னீலனின் இடம் மாறி வந்த வேர்கள் (1978) என்ற கதையுடன் ஒப்பிட்டுக் கூறத்தக்கதொன்றாகும்.

டானியலின் நாவல்களில் கானல் நாவல் முக்கியமானதா கும். அவரது ஏனைய நாவல்கள் யாவும் கானல் எழுதுவதற் கான பயிற்சிகளமாகவே அமைந்திருந்தது எனக் கூறலாம்.

சமயப் போர்வையிலே இதுவரைகால சாதியப்பிரச்சனை கள் நோக்கப்பட்டு வந்தமையால் மிகச் சமீபகாலம் வரை அதாவது நவீன காலப்பகுதிகளிலும் பலர் சமய அடிப்படை யில் இப்பிரச்சனைக்கு விடிவு காண எண்ணினார். கிறிஸ் தவம், பௌத்தம் முதலிய சமயங்களை சேருவதால் சாதியப் பிரச்சனைக்கு (தம்மளவிலே) தீர்வுக் காண்பதாக பலர் கருதி யிருக்கின்றனர். பிரச்சனை என்பது ஒரு முரண்பாட்டின் உருத்தோற்றமாகும். அம்முரண்பாட்டை இயக்கத்தினால் அதாவது செயலினால் போராட்டத்தினால் தீர்க்கலாமே யன்றி, அதிலிருந்து நழுவுவதனால் தீர்க்கவியலாது. அவ் வாறு வேறு மதங்களை சார்ந்த பின்னரும் வேறுவகையான ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும் தோன்றக் காண்கின் றோம். எனவே நிவாரணம் தவறாக இருக்கின்றது என்பதனை உணர்கின்றோம். (க.கைலாசபதி - 1969) கானல் நாவல் இப்போக்கினை மிகச் சிறப்பாக கையாள்கி றது. உலக சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்ட கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதன் மூலம் தங்கள் அவல நிலையை போக்கிக் கொள்ளலாம் என பல ஒடுக்கப்பட்ட மக்கள் கருதினர். நாவலில் வரும் ஞானமுத்து பாதிரியாரும் அப்படியே நம்பி செயற்பட்டார். இறுதியில் பசி என்ற நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் மனிதர்களிடம் அவர் தோற்றுப்போகிறார் என்று சித்தரித்துள்ளார் டானியல்.

ஞானமுத்து பாதிரியார் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து பணிபுரிந்த சுவாமி ஞானப்பிரகாசரை நினைவுபடுத்துவதாக உள்ளது. பாட்டாளி வர்க்க அடையாளத்துக்குள் சாதியம் கரைவதால் இழிவு நீங்காது என்ற வாதத்தை முன்வைக்கும் இராஜ்கௌதமன் போன்றோ ருக்கு, கானல் உயர்சாதி சார்பு கொண்ட நாவலாக தென்படுவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. எது எவ்வாறாயினும் டானியலின் நாவல்கள் இயன்றவரை நடப்பியலை புரிந்துகொண்டு நியாயத்தின்பக்கம் நிற்பவை. யாழ்ப்பாண சமூகப் பின்புலத்தினையும், அவற்றினடியாக எழும் கருத்தோட்டங்களையும் வார்த்தை ஜாலமின்றிப் பொருளுக்கேற்ற மொழிநடையில் உருவச்செறிவுடன் டானியல் தந்துள்ளார். உணர்ச்சிகள், உறவுகளை கோட்பா டாக அல்லாது மனிதவுறவுகளினடிப்படையில் விபரிக்கும் பாங்கு டானியலின் நாவல்களுக்கு உள்ளடக்கத்துக்கேற்ற கலைத்துவத்தை வழங்கி வளப்படுத்தியுள்ளது. டானியல் நாவல்களின் பலவீனங்கள்

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டம் இடம் பெற்ற வேளையில் தலித்துகள் மத்தியில் உத்தியோக பொரு ளாதார வசதி படைத்த சிலர் ஒதுங்கி நின்று இவையெல் லாம் தேவையில்லாத வேலைகள் என்று பிரச்சாரம் செய்தார் கள். ஏன் அவர்களுடைய கோவிலுக்குத்தான் போக வேண்டுமா?, கடையில் ஏன் தேநீர் குடிக்க வேண்டும், வீட்டில் குடிக்கலாம்தானே? என்றெல்லாம் இழிவுபடுத்தி போராட் டத்தில் இருந்து தூர விலகிக் கொண்டார்கள். ஆனால் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்பு மாவிட்ட புரத்தில் கடவுளுக்கருகில் நின்று அருள் பெற முன்நின்றவர் களும், தேநீர் கடைகளில் மிக ஆறுதலாக இருந்து களைப் பாறியவர் களும் அதே மனிதர்கள்தான் என்பதை இப்போது பார்க்கக் கூடியதாயுள்ளது (வெகுஜனன் - இராவணா89). தலித் என்ற பிரகடனத்தினூடாக வயிற்றுப்பிழைப்பிற்கு வழிதேடிக் கொண்ட பாராளுமன்றக் கனவானான திரு இராஜலிங்கம் போன்றோரும் இப்போராட்டத்திற்கு எதிராக நின்றனர். இம்மனிதர்கள் பற்றி டானியல் தமது பஞ்சமர் நாவலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

சாதியமுறைக்கு எதிரான அடிக்கருவையும், இழிசார் வழக்கு மொழிவழியையும் விட்டுவிட்டால் இவர்களுக்கு வேறு கதியில்லை என்று என்னையும், என் போன்றோரை யும் நையாண்டி செய்பவர்கள் நமது இலங்கைத் திருநாட்டில் நிறையவே இருக்கின்றார்கள். கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்காகவும், இவர்களொடுவொத்த பிரச்சினைகள் உள்ள வேறு மக்களுக் காகவும், பிறப்பின் அடிப்படையில் பேனை பிடித்து எழுத வேண்டிய கடமைப்பாடுடைய எழுத்தாளர் சிலரும் இந்த நையாண்டிக்காரர்களுடன் சேர்ந்துக் கொண்டிருப்பதனை என்னால் இன்று உணரக்கூடியதாக உள்ளது.

டானியல் கானல் நாவலின் முன்னுரையில் வர்க்கபேத மற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான மனித இன யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங் களும் இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றனர்.

டானியல் 50களில் எழுதிய சிறுகதைகள் யாவும், சாதியம் கடந்த வர்க்க ஐக்கியத்தையும், ஒடுக்குமுறைக்கு எதிரான தலித்துகளின் போர் குணாதிசயங்களையும் சித்தரித்தன. அவரது நாவல்களின் முன்னுரையில் வெளிப்பட்ட சமூக யாதார்த்தம் அவரது சிறுகதைகளில் வெளிப்பட்டதனைப் போன்று நாவல்களில் வெளிப்படவில்லை என்பது டானியல் பொறுத்த முக்கிய விமர்சனங்களில் ஒன்றாகும்.

இவ்விடத்தில் டானியல் தன் சொந்தச் சாதியாகிய துரும்பர் பற்றி அதிகம் எழுதவில்லை என்ற விமர்சனம் நினைவுக்கு வருவது தவிர்க்கவியலாததாகும். அதுவும்கூட, இந்தத் தீண் டாமையொழிப்புப் போராட்ட அனுபவத்தின் வெளிப்பாடு தான். டானியல் தன்னை ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட அனைத்து மக்களின் பிரதிநிதியாக உணர முடிந்தமை யாழ் சமூகம் வழங்கியிருந்த அந்தச் சாதக அம்சத்தினாலேயே. இன் னொரு விடயமும் இங்கு முக்கியம். டானியல் தானே ஒரு சிறுமுதலாளியாக வளர்ந்து சாத்தியமான சுரண் டல் எல்லாம் செய்த ஒருவர்தான். ஆயினும் அவரது படைப்புகளில் தலித் துகள் பெற்ற இத்தகைய வர்க்கத்தள மாற்றம் பற்றி எங்கும் பேசவில்லை. ஒரேயொரு சந்தர்ப்பத் தில் விதானையாக ஒரு தலித் காட்டப்பட்ட போதிலும் அவரும் வஞ்சிக்கப்பட்டதே பேசப்பட்டிருக்கும். திரிபுவாத நிலையெடுத்த தலித் காட்டப் பட்டாராயினும் வர்க்க உயர்வினால் சமூக மாற்றத்துக்கு எதி ராகச் செயற்படும் தலித் சமூகத்தளம் ஒன்று உருவாகிவிட் டமை காட்டப்படவில்லை.

70களில் வர்க்கக் கண்ணோட் டத்தை விடவும் சாதியப்பார்வை வலுப்பெறுவதற்கு அவரது வாழ்முறை சிறு முதலாளிக்குரியதாக மாறியதும், தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுக்களுக்கான உணர்வைப் பேணிக் கொள்ளாதமையும் அடிப்படைக் காரணமாகும் என்பதை விளங்கிக்கொள்ளச் சிரமம் இராது. தீண்டாமையொழிப்புப் போராட்டம் உச்சநிலையிலிருந்த 60களின் இறுதிக் கூறில் அவர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். கட்சியுடன் தொடர்ந்து முரண்பட்டுக் கடிதப்போர் செய்துள்ளார். ஆயி னும், கட்சியின் நட்பு சக்தியாக இருந்துள்ளார். சண் தலைமை 1978ல் பிளவடைந்து அவரது செயற்பாடு முடங்கிக் கிடந்த போது உதிரிகளாக இருந்த சிலருடன் தன்னையும் கட்சி யாளராகக் காட்டும் கடிதங்களை அவர் அ.மார்க்சுக்கு எழுதி யிருப்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்க ஒன்று. இது அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்ற ஒரு அம்சம் அதற் காக நேர்மையீனர் எனக் கருதவேண்டியதில்லை, பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்படும் அரசியல் பலத்தை இழந்துவிட்டதன் ஒரு அம்சமாக இது அமைந்தது எனக் கருதலாம். இந்த அரசியல் பலவீனமே உயர்சாதிப் பெண் மீது பழிதீர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாகியுள் ளது. பெண் தொடர்பாக டானியல் மட்டுமே தவறாக எழுதி னார் என்பதற்கு இல்லை. வெறி என்னும் என்.கே. ரகு நாதனின் சிறுகதை பெண்மீதான ஒடுக்குமுறையை விடவும் சாதிய இழிவு எவ்வளவு வலுவானது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதனையும் இவ்விடத்தில் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.( ந. இரவீந்திரன் மே.கு.நூ. பக். 87)

சாதியமும் வர்க்கமும் ஒன்று எனக் கருதியதன் குளறுபடி யினாலேயே அவரது நாவல்கள் இத்தகைய பலவீனங்களை வெளிப்படுத்தியது எனலாம். தலித் முதலாளியை அல்லது தலித் ஒருவர் முதலாளியானால் அவரை எந்த வர்க்கத்தினுள் சேர்ப்பார் என்பது போன்ற தெளிவீனங்கள் அவரது நாவல் களில் காணப்படுகின்றன. பஞ்சக்கோணங்கள் நாவலின் ஓர் இடத்தில் செல்லி என்ற தலித் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகின்ற சுப்பையா வாத்தியார் நானும் செல்லி யும் ஒரு வர்க்கம் தானே எனக் கூறுவது வர்க்கம் பற்றிய அவரது குழப்பகரமான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். டானியல் சாதி மீறிய பாலுணர்வை சமூக யதார்த்தமாக வெளிப்படுத்துகிற போது அதனை ஆணாதிக்க சிந்தனையுட னேயெ எழுதுகின்றார். எடுத்துக்காட்டாக பஞ்சமரில் வரும் கமலாம்பிகை, விதானையார் மனைவி, கோவிந்தனின் அழகப்பை வாத்தி யார், தண்ணீரில் வரும் அன்னப்பிள்ளை நாச்சியார் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். அடிமையில் வரும் கன்னம்மா பாத்திரத்தை விதிவிலக்காக கொண்டால் அவரது நாவல்களில் வரும் உயர்சாதிப் பெண் பாத்திரங்கள் யாவும் சோரம் போவதாகவே சித்தரிக்கப் படுகின்றது. இவ்வாறான விடயங்கள் அவரது நாவல் களைப் பலவீனப்படுத்தியுள்ளன எனலாம்.

ஈழத்தில் 60களில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் போன்று 70 களில் தமிழ்த்தேசிய இனவிடுதலைப் போராட்டம் முனைப் புற்றது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இன வாதத்தினுள் அழுத்திச் சென்றதன் காரணமாக தமிழ் ஜன நாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டியிருந்தது. இடதுசாரிகள் சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தப் பக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சக்திகளின் ஒருபகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.

டானியலிலும் இந்த தவறு வெளிப்பட்டது. அவரது பஞ்ச கோணங்கள் நாவலில் இந்த வாலிபர்கள் தாங்கள் தூக்கிய இந்த ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு புரட்சியை நோக்கிச் செல்லும் வர்க்கங்களின் பின்னால் அணிவகுத்துச் செல்லும் காட்சியும், இலங்கைத்தீவின் இனங்கள் யாவும் கை கோர்த்துக் கொண்டு குதூகலித்துக் கொண்டாடும் காட்சியும் .. என்ற வரிகளும் போராளிகள் காத்திருக்கின்றார்கள் நாவ லில் இனவன்முறைகளால் காதறுக்கப்பட்ட சம்மாட்டியா ரின் மகன் அதற்கு பழிவாங்க சிங்களத்தாயின் பிள்ளையான அலெக்ஸின் காதினை அறுத்துவிடுவதையும், அவரைக் கொல்ல முனைவதனையும் நாவல் சித்திரிக்கிறது. இதற்கு எதிராக அவனுடன் தொழில் புரியும் மீனவர்கள் கிளர்ந் தெழுவதையும் காணலாம். சிங்களவர்களுடன் ஐக்கியப்படு தலை படம் பிடித்த டானியலின் எழுத்துக்கள் அதன் மறு பக்கமான தமிழ் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரா டுதல் என்ற பார்வையை முன்வைக்கத் தவறி விடுகின்றது.

இதுதொடர்பாக மற்றொரு டானியல் ஆய்வாளரான செ.திரு நாவுக்கரசு கூறுவது கவனத்தை ஈர்க்கிறது: சிலவேளைக ளில் இன்னும் சிலஆண்டுகள் டானியல் உயிருடன் இருந்தி ருப்பின் அவரது யதார்த்தரீதியிலான அனுபவங்கள் அவரின் தமிழீழப் போராளிகள் பற்றிய அவநம்பிக்கையிலான கருத்துக்களை மாற்றமுறச் செய்திருக்கவும் கூடும். ஏனெ னில் அதுவரை காலமும் இலங்கைத் தேசியத்தில் மிக வும் நம்பிக்கை வைத்து எழுதியும் பேசியும் வந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றவர்கள் கூட, 1983ல் தமிழ் மக்களின் இருத்தல் நிலை இலங்கையில் கேள்விக்குரியதாக மாற்றங் கண்டபடியால், தமிழ்த்தேசியவாதத்தின் பாலான அனுதா பம் அதிகரிக்கச் செய்துள்ளது எனக் கருத்துத் தெரிவித்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும் (செ.திருநாவுக்கரசர் சு.ப.181)

சிவத்தம்பி பாராளுமன்றத்தினூடாகச் சோஷலிஸத்தை வென்றெடுப்பதில் நம்பிக்கை கொண்டிருந்த அணியில் இருந்தவர். ஆயுதத்தால் ஒடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஆயதமேந்திப் போராடும் புரட்சிகர மார்க்கத்தை வரித்துக் கொண்டவர் டானியல். ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் வீறுடன் முன்னேறிய வேளையில் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் அதற்கெதிராகச் செயற்பட்டனர். ஆயுதமேந்திய தமிழ்த்தேசிய இயக்கத்தவர்களிடமிருந்து தலித் விடுதலை விரும்பிகள் அச்சுறுத்தப்பட்டதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர். சிவத்தம்பியை விடவும் டானியலின் இலங்கைத் தேசியம் போர்க்குணம்மிக்க தலித் உணர்வு சார்ந்ததாக இருந்தது. அது தலித் தேசியமாக வடிவம் கொள் வது பண்ணையடிமைத்தனத்தைத் தகர்ப்பதாகிய தலித் தேசியம் .( ந.இரவீந்திரன் மே.கு.நூ. பக்.90, 91). டானியலின் இந்நிலைப்பாடு அக்காலச்சூழலில் வைத்து ஆராயத் தக்கவொன்றாகும்.

டானியலின் முக்கியத்துவமும், சாதனையும்

மனிதர்களை மாபெரும் சமுதாயப் பிரச்சினைகள் எதிர் கொள்கின்றன. மற்றவர்களைவிட யார் இந்தப் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு உதவியாக அதிகம் பணிபுரிகின்றார் களோ அவர்களைத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக்கின் றோம்(பிளெக்னோவ்). அவ்வகையில் சாதிய ஒடுக்கு முறையை எதிர்த்த வெகுசனப் போராட்டங்களை படைப் பாக்கிய டானியல் ஈழத்து தலித் இலக்கிய முன்னோடியா கவே தென்படுகின்றார். அதேசமயம், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப்பார்வையுடன் ஒப்பிடுகின்ற போது, சிற்சில இடங்களில் பலவீனராகவும், காட்சியளிக்கின்றார். டானியலின் நாவல்களை மக்கள் இலக்கியக் கோட்பாட்டின் படி மூன்றுவகையாக்க முடியும். பாட்டாளி வர்க்க நோக்கில் புதிய சமூக அமைப்பை உருவாக்கும் வகையில் வரலாற்றை முன்னெடுத்துச் செல்ல உதவும் படைப்புகள் புதிய பண் பாட்டு வகைப்பட்டன. பாட்டாளி வர்க்கக் கண்ணோட் டத்தை முழுமையாகப் பெறாமல் சிறு உடைமையாளர் நிலைப்பாட்டின் அடிப்படையில் அதிகாரத்துவ எதிர்ப்பை மட்டும் கொண்டிருப்பன எதிர்ப்பண்பாட்டிய வகைக்குரி யன. மரபுப் பண்பாட்டின் அக்கறையுடன் அல்லது சென்ற காலத்துக்காக ஏங்கும் பண்பாட்டியப் படைப்புகள்.. . (ந.இரவீந்திரன் மே. கு. நூ. பக்.92, 93)

அண்மையில் அன்பர் ஒருவர் துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன. மரித்து விடவில்லை என்ற கருத் தினை முன்வைத்துள்ளார். பல்லவர் காலத்தில் நிலவுடமை வர்க்கம், வணிக வர்க்கத்திற்கு எதிராக அடிநிலை மக்களை தம்பக்கம் ஈர்க்கும் பொருட்டு சாதிய எதிர்ப்பை வெளிப் படுத்தினர். நிலவுடமை வர்க்கம் வெற்றி பெற்று சோழ சாம் ராஜ்யத்தை அமைத்தப்பின்னர் மீண்டும் சாதியம் மிகப் பலம் வாய்ந்த ஒடுக்குமுறைக் கருவியாக மாற்றமடைந்து. இந்த வரலாற்று நிகழ்வு மேற்குறித்தக் கூற்றின் வலிமையை எமக்கு உணர்த்துகின்றது. எனவே சாதிய விடுதலைப் போராட்டத்தினை உழைக்கும் மக்கள் நலம் சார்ந்த போராட்டத்துடன் இணைத்து முன்னெடுப்பதற்கு டானியல் பற்றிய ஆய்வுகள் அவசியமானவையாகும். டானியலை தனிமனித காழ்ப்புணர்வுகளால் நிராகரிக்க முற்படுவதும், அவரது பலவீனங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வர்க்கப்பாதையை சிதைப்பதான சாதிய தீவிரவாதத்தில் அடையாளப்படுத்த முனைவதும், அடிப்படையில் தலித் மக்களின் விடுதலைக்கு எதிரான குரலாகும்.

***

பெட்டிச்செய்திகள் 

அ. 

1.சாதியமைப்பின் வெளிப்பரிமாணத்தை எடுத்துக்காட்டி, அதனை மனமாற்றத்தினூடாக தீர்த்துவிடலாம். 2.சாதியத்தின் அக,புற பரிமாணங்களைக் கண்டு, அதன் மூலவேரான பொருளாதார மாற்றத்திற்கான சமூக மாற்ற போராட்டத்தை முன் நிறுத்துதல்- ஆகிய இரு நிலைப்பாடுகளில் ஈழத்து தலித் நாவல்கள் இலக்கியமாக்கப்பட்டுள்ளன.

ஆ. 

கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப்புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன. அத்துடன் 20 வயதளவில் நான் ஏற்றுக்கொண்ட அரசியல் வேலைகள் என்னை கிராமப்புறத்திற்கு இழுத்துச் சென்று எனது பெரும்பகுதி கவனத்தையெல்லாம் அதில் வைத்தி ருக்கச் செய்தன. இது கிராமப்புறங்களில் நான் பல நண்பர்களைப் பெறத் துணைபுரிந்தது.

கிராமப்புற மக்களிடம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருந்தன. இன்று இருப்பதுபோல் அல்லாமல் அன்று அரசியலை மக்களிடமிருந்தே கற்றுக் கொள்ளவும் அவர்களிடமே அவைகளை பரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்றுத் தவறானவைகளை நிராகரித்துத்தான் அரசியல் அனுபவங்களை பெறவேண்டும்...

- என்னைப் பற்றி நான் என்ற தலைப்பில் டானியல் 

இ. 

உயர்சாதி ஆடவர்கள் கீழ்ச்சாதி பெண்களைப் போகப்பொருளாக நினைக்கும் யதார்த்தப் போக்கிற்கு இலக்கிய பழிவாங்கல்களாக உருமாறி ஒரு போலி மனநிறைவைத் தர முயல்கிறது. இத்தகைய போலி மனநிறைவுகள் புரட்சிகர இயக்கத்திற்கு பலம் சேர்க்காது. புதினத்தைக் கொண்டு செல்வதற்குரிய சுவாரசியமான கலையுத்தி என்ற அளவில்கூட இதை பயன்படுத்துவதில் தவறு உண்டு. - (டானியலின் அடிமைகள் நாவலின் முன்னுரையில் கோ.கேசவன் )

Pin It