மண்வாசனை கொண்ட எழுத்தாளர் வரிசையில் செங்கை ஆழியானுக்கு இடம் பிடித்துக் கொடுத்த வாடைக் காற்று என்ற நாவல் ஈழத்து நாவல் வரலாற்றில் ஒரு மைல் கல். செங்கை ஆழியானின் காட்டாறு, கடற்கோட்டை, ஒரு மைய வட்டங்கள் முதலிய நாவல்கள் இத்தளத்தில் எழுதப்பட்டவையாகும். மண்ணும் மக்களும், மக்களின் உரிமைக்குரல்கள், உழைப்புச், சுரண்டல், சாதிக்கொடுமை. சீதனக் கொடுமை, இனவெறிப் போராட்டம் என்ற வகையில் செங்கை ஆழியானின் சமூகம் நோக்கிய அகலப் பார்வை, அவரது நாவல்களின் கருப்பொருளாக அமையலாயின.”
“சமுதாயப் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் விமர்சிக்கும் பண்பு ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத் துறையில் ஒரு தனிப் பிரிவாக வளர்ச்சியடையவில்லை. இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்ட பெருமை செங்கை ஆழியானையே சாரும். ‘விவேகி’ மாத இதழில் தொடர்கதையாக வந்து 1969 ஆம் ஆண்டு நூலுருவம் பெற்ற இவரது ‘ஆச்சி பயணம் போகிறாள்’ நாவல் தான் இவ்வகையில் முதல் முயற்சியாகும்.” எனப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் புகழ்ந்துரைத்துள்ளார்.
“ஈழத்து ஆக்க இலக்கியத்துறையில் கடந்த மூன்று சகாப்தங்களாகச் சிறுகதை நாவல் ஆகிய படைப்புகள் மூலம் தமது பெயரை நிலை பெறச் செய்தவர் செங்கை செழியான். அவரது கல்விப் புலமையும் உத்தியோகரீதியான அனுபவங்களும் இயற்கையாகவே அவரிடம் காணப்பட்ட கலை, இலக்கிய ஆர்வமும் இலக்கியத்துறையில் அவர் காட்டும் நிதானமும் அவரைச் சிறந்த இலக்கிய கர்த்தா என்ற வரிசையில் நிலை நிறுத்தியுள்ளன ” என பேராசிரியர் இ. பாலசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
செங்கை ஆழியான் க. குணராசா 25.01.1941 அன்று யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் கந்தையா – அன்னம்மா வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையிலும் , இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்று புவியியல் சிறப்புப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முதுகலைமாணி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.
பேராதனைப் பல்கலைக்கழ பயிற்சியாளராகவும் , கொழும்புக் பல்கலைக் கழக உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை வருகை விரிவுரையாளராகவும், ஆறு ஆண்டுகள் ஆசிரியராகவும், கடமையாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, கிண்ணியா, செட்டிக்குளம் ஆகிய ஊர்களில் காரியாதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் உதவி அரசாங்க அதிபராகவும், மேலதிக அரசாங்க அதிபராகவும், பிரதிக்காணி ஆணையாளராகவும் செயல்பட்டார். கிளிநொச்சி மாவட்டம் உருவாகியபோது, அம்மாவட்டத்தின் நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்திய நிர்வாக சேவை அதிகாரிகளில் ஒருவராகச் செயல்பட்டார். நிர்வாக சேவை அதிகாரியாக வன்னிப் பிரதேசத்தில் நீண்ட காலம் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பிரதேச செயலாளராக பதவி வகித்தார். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இறுதியாக நல்லூர் பிரதேசச் செயலாளராக கடமையாற்றி 2001 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற பின்னரும் சங்கானை, தெல்லிப்பனை ஆகிய பிரதேசங்களின் பிரதேசச் செயலாளராகவும் , வடக்கு கிழக்கு மகாணத்தின் வடபிராந்திய ஆணையாளராகவும் பதவி வகித்தார். பின்னர் ஓராண்டு காலம் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக பணிபுரிந்தார்.
இவரது சிறுகதைகள் ஈழநாடு, வீரகேசரி, தினகரன், புதினம், செய்தி, சஞ்சீவி, சுதந்திரன், சிந்தாமணி, இளங்கதிர், தமிழின்பம், கதம்பம், கலைச்செல்வி, தேனருவி, அமுதம், விவேகி, இலக்கியம் , மலர், அஞ்சலி, மல்லிகை, மாணிக்கம், அமிர்தகங்கை, மாலைமுரசு, வெளிச்சம், நான், ஆதாரம், அறிவுக்களஞ்சியம் , அர்ச்சுனா, ஈழமுரசு, நுண்ணறிவியல், சிரித்திரன், தினக்குரல், ஈழமுரசு, மறுமலர்ச்சி , ஈழநாதம், புதிய உலகம் முதலிய இலங்கை இதழ்களிலும் , உமா, தாமரை , கணையாழி, குமுதம், சுபமங்களா , கலைக்கதிர், கலைமகள், ஆனந்தவிகடன் முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும், ஈழநாடு ( பாரீஸ்) , ஈழகேசரி ( லண்டன்) , கனடாவிலிருந்து வெளிவரும் நம்நாடு, தாயகம், செந்தாமரை, உதயன் முதலிய இதழ்களிலும் வெளிவந்ததுள்ளன.
செங்கை ஆழியான் ‘ புவியியல் ’ என்ற அறிவியல் இதழை நடத்தினார். மேலும், ‘விவேகி’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார். சிங்கள இதழ்களான ராவய, சிலுமின, லங்காதீப முதலியவற்றில் இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
செங்கை ஆழியான் படைத்தளித்துள்ள நூல்கள், நாவல்கள் : நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், இரவின் முடிவு, கொத்தியின் காதல் , பிரளயம், வாடைக்காற்று, கங்கைக்கரையோரம், காட்டாறு, ஒரு மைய வட்டங்கள், யானை, காவோலை, கனவுகள் கற்பனைகள் ஆசைகள், இந்த நாடு உருப்படாது, கிடுகுவேலி, காற்றில் கலக்கும் பெரு மூச்சுகள், கடற்கோட்டை, மழைக்காலம், ஓ அந்த அழகிய பழைய உலகம், தீம்தரிகிடத்தோம், குவேனி, போராடப்பிறந்தவர்கள், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, கந்தவேள் கோட்டம், அக்கினி , ஜன்மபூமி, கொழும்பு லாட்ஜ், போரே நீ போ, மழைக்காலம், மரணங்கள் மலிந்த பூமி, ஈழராஜா எல்லாளன், யாக குண்டம், வானும் கனல் சொறியும், ஆறுகால்மடம் (சிறுவர் நாவல்), பூதத்தீவுப் புதிர்கள் ( அறிவியல் நாவல்) .
குறுநாவல்கள் : அலைகடல் தான் ஓயாதோ , யொகாறா, நிலமகளைத் தேடி, முற்றத்து ஒற்றைப் பனை, நடந்தாய் வாழி வழுக்கியவாறு, அக்கினிக் குஞ்சு, மீண்டும் ஒரு சீதை, சாம்பவி, யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று, பழைய வானத்தின் கீழ்.
புனைகதை சாராத படைப்புக்கள் : இருபத்து நான்கு மணி நேரம், மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, பன்னிரண்டு மணிநேரம், சுனாமி.
ஆய்வு நூல்கள் : நல்லை நகர் நூல், ஈழத்துச் சிறுகதை வரலாறு, ஈழத்தவர் வரலாறு, யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு, சுருட்டுக் கைத்தொழில், யாழ்ப்பாண அரச பரம்பரை, துயககயே னுலயேளவல , மகாவம்சம் கூறும் இலங்கைச் சரித்திரம்.
சிறுகதை தொகுப்புகள் : இதயமே அமைதி கொள், யாழ்ப்பாணத்து இராத்திரிகள், இரவு நேரப் பயணிகள், குந்தியிருக்க ஒரு குடிநிலம், கூடில்லா நத்தைகளும் ஓடில்லா ஆமைகளும்.
தொகுத்து பதிப்பித்த நூல்கள் : கதைப் பூங்கா ( சிறுகதைகள்), விண்ணும் மண்ணும் ( சிறு கதைகள்) , காலத்தின் குரல்கள் ( சிறு கதைகள்) , சம்பந்தன் சிறுகதைள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், சிரித்திரன் சுந்தரின் நானும் எனது கார்ட்டூன்களும், ஈழகேசரிச் சிறுகதைகள், சிங்களச் சிறுகதைகள், முனியப்பதாசன் சிறுகதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள், புதுமைலோலன் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், ஆ.முத்துதம்பிப் பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரம், எஸ்.ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம், ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம் , யாழ்ப்பாண வைபவமாலை - ஒரு மீள் வாசிப்பு.
இவரது இரவு நேரப் பயணிகள் என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘ ராத்திரி நொனசாய்’ எனச் சிங்களத்தில் சாமிநாதன் விமல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ‘காட்டாறு’ என்ற நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘வன மத கங்க’ என்ற பெயரிலும், ‘வாடைக்காற்று’ என்ற நாவலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.
Geography of Cylon , Geography of World, Geography of India, Environmental Geography, Physical Geography, Human Geography, Topography உட்பட 35-க்கும் மேலான புவியியல் சம்பந்தமான நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘பூமியின் கதை’ என்ற புவியியல் நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடநூலாக இடம் பெற்றுள்ளது.
செங்கை ஆழியானின் இலக்கியச் செயற்பாடுகளில் அவரது ஆவணப்படுத்தல் முயற்சி மிக முக்கியமானது ஆகும். மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய 12 மணி நேரம் என்கிற நூலும், 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இனக்கலவரத்தின் முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச வன்முறைகள் பற்றி அவர் எழுதிய 24 மணி நேரம் என்கிற நூலும் முக்கியமான ஆவணங்கள். இந்த இரண்டு நூல்களையும் நீல வண்ணன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்.
இவர் பெற்ற விருதுகள் மற்றும் பரிசுகள் : இலங்கை தேசிய சாகித்திய மண்டலப் பரிசுகள் ( நான்கு) , சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசு, ஈழ நாடு 10 ஆவது ஆண்டு நாவல் பரிசு மற்றும் சிறு கதைப் பரிசு, வடகிழக்கு மாகாண சாகித்திய விருதுகள் (ஆறு) , இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசு (ஐந்து) , கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசுகள் (இரண்டு) , தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசு, கலைமகள் குறுநாவல் போட்டி பரிசு, விஜயகுமாரதுங்க கலாச்சார விருது, அரசகரும மொழித் திணைக்கள கலாச்சார நிகழ்ச்சித் திட்டப் பரிசு, அமுதம் சிறுகதைப் போட்டி பரிசு, இளங்கதிர் குறுநாவல் போட்டி பரிசு, வீரகேசரி அகில இலங்கை நாவல் போட்டி பரிசு முதலிய பரிசுகள் பெற்று உள்ளார்.
இலங்கை இந்து கலாச்சார அமைச்சு, ‘ இலக்கியச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கனடா சி.வை. தாமோதரம்பிள்ளை ஒன்றியம் ‘புனைகதைப் புரவலர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் இலக்கிய விழாவில் ‘ஆளுநர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது .
இலங்கை அரசு இலக்கியத் துறையின் உயர்ந்த விருதான ‘சாகித்திய ரத்னா’ விருதினை 2009 ஆம் ஆண்டு செங்கை ஆழியானுக்கு வழங்கிச் சிறப்பித்தது. மேலும் ‘கலைஞானச் சுடர்’ ‘கலாபூஷணம்’ முதலிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இவரது ‘பாடிப்பறந்த பறவைகள்’ என்ற திரைப்பட எழுத்துக்கு விஜயகுமாரதுங்க நினைவு மன்றம் முதல் பரிசு வழங்கிச் சிறப்பித்தது. ‘கஞ்சித் தொட்டி’ என்ற நாடகம் நாவலர் நூற்றாண்டு விழாப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது.
யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகவும், இலங்கை இலக்கியப் பேரவையின் தலைவராகவும், தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் விளங்கி சிறப்பாகச் செயல்பட்டார். மேலும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையின் நினைவாக வழங்கப்படும் சம்பந்தர் விருதுக் குழுவின் இணைப்பாளராகவும், கனக செந்தி கதா விருது அமைப்பின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
இவரது மனைவி கமலாம்பிகை, அவர் ஒய்வு பெற்ற பாடசாலை அதிபராவார். செங்கை ஆழியானின் மணிவிழா 25.01.2001 அன்று கொண்டாடப்பட்டது.
சீதனம் என்பது யாழ்ப்பாணச் சமூகத்தின் தனித்துவமான அம்சம். ஒரு குடும்பத்தில் மூத்தப்பிள்ளை பெண்பிள்ளையாகப் பிறந்து விட்டால் அக்குடும்பம் குழந்தை கிடைத்த சந்தோசத்தையே இழந்துவிடும். சிறுது காலம் சோகத்தில் ஆழ்ந்திருக்கும். அடுத்தடுத்து இரண்டு, மூன்று பெண் பிள்ளைகள் பிறந்துவிட்டால் அக்குடும்பத்தில் பெற்றோர் தம் வாழ்வின் சந்தோசங்களையே இழந்து விடுவர். பெண்பிள்ளைகளுக்குச் சீதனம் சேர்ப்பதற்காக கடுமையாக உழைப்பார்கள்.
செங்கை ஆழியானின் அக்கினி, கிடுகுவேலி, காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள் ஆகிய நாவல்களில் சீதனம் முக்கிய இடம் பெற்றுள்ளது.
“யாழ்ப்பாண சமூகத்தில் சீதனம் இரண்டு வகையாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. பெண் வீட்டார் தம் பெண்ணுக்காக கொடுக்கும் வீடு, காணி முதலிய அசையா சொத்துக்களும், ஆபரணங்களும் பணமும் சீதனம் என்ற பெயரில் குறிக்கப்படுகின்றன. இவற்றைவிட அன்பளிப்பு என்ற பெயரில் மாப்பிள்ளையின் வீட்டாருக்கும் ஒரு தொகைப் பணமாக வழங்கப்படுகிறது. இது மாப்பிள்ளையின் பெற்றோருக்கோ, மணமாகாத சகோதரிகளுக்கோ வழங்கப்படுகின்றது. இப்பணம் மணமகனின் சகோதரியின் வாழ்வுக்கு அவசியமானது என்பதால் ஆணின் தரப்பிலிருந்து அது நியாயப்படுத்தப்படுகின்றது. இத்தகைய நிலைமையினால் பெண்ணைத் தெரிவு செய்யும் போது ஆண்கள் தமது விருப்புகளைப் புறக்கணித்து சீதனம், நன்கொடை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே பெண்ணைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இது ஒரு வகையில் ஆணைப் பாதித்தாலும், இதனால் வாழ்வை இழந்து நிற்பவர் பெண்ணே. சீதனப் பணமில்லாமல் வாழ்வை இழந்து நிற்கும் பெண்களால் சமூகத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் உருவாகின்றன. இவ்வாறானப் பிரச்சனைகளை செங்கை ஆழியானின் நாவல்களினூடாகவும் காண முடிகிறது.” என ‘செங்கை ஆழியானின் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்’ என்ற ஆய்வுக்கட்டுரையில் கலாநிதி ம. இரகுநாதன் பதிவு செய்துள்ளார்.
“சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூகக் குறைபாட்டைப் பொருளாகக் கொண்டு இவரால் படைக்கப்பட்ட ‘பிரளயம் ’ நாவல் யாழ்ப்பாணக் கிராமமொன்றில் நிகழ்ந்துவரும் சமுதாயத்தின் மாற்றத்தை அதன் இயல்பான நடப்பியல்புகளுடன் காட்டுவது. நீண்ட காலமாக உயர்சாதிக்குக் குடிமை செய்து வந்த சலவைத் தொழிலாளர் குடும்பம் ஒன்று கல்வி, பிற தொழில் முயற்சிகள் என்பவற்றால் அக்குடிமை நிலையினின்று விலகி புதிய வாழ்க்கை முறைக்கு அடியெடுத்து வைக்க முயல்வதே இந்நாவலின் கதைப் பொருள் .”
“சமுதாய வரலாற்று நோக்கில் நாவல் படைக்கும் முயற்சியில் இருவகை அணுகுமுறைகள் காணப்பட்டன. ஒருவகை இப்பிரச்சனையை வர்க்கப் போராட்ட வரலாறாக நோக்குதல், இன்னொரு வகை சமுதாயத்தின் சிந்தனை மாற்றத்தின் வரலாறாக நோக்குதல். இவற்றில் இரண்டாவது வகை அணுகுமுறையை மேற்கொண்டோரில் ஒருவர் செங்கை ஆழியான். அவரது நாவல் இந்த அணுகு முறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தரமான ஆக்கமாகும். தாழ்த்தப்பட்டோர் , உயர்த்தப்பட்டோர் இரு சாரரிடமும் நிகழும் சிந்தனை மாற்றங்கள் இயல்பாகவே சமுதாய மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் ” என்பதை இந்நாவல் உணர்த்தியுள்ளது. என ‘பிரளயம்’ நாவலின் முன்னுரையில் பேராசிரியர் கலாநிதி. நா.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
‘நிலமகளைத் தேடி’, ‘யாழ்ப்பாணக் கிராமம்’ ஒன்று ஆகிய இரண்டிலும் யாழ்ப்பாணத்தின் சாபக்கேடாக அமைந்துள்ள வேளாளச் சாதியினரின் மேலாதிக்க அசிங்கங்கள் மிக நொய்மையான ஊடு பாவாக இழைக்கப்பட்டுள்ளன. சாதிக் கொடுமை, அதன் அவலம், அதன் அசிங்க முகம் ஆகியவற்றை எடுத்துரைப்பதுடன், பாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்டவர்களெனக் கணிக்கப்படும் மக்கள், உழைப்பின் உபாசகர்களாகத் தலை நிமிரும் மாட்சி சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண வாழ்க்கைக் கோலத்திலே இந்த சாதிய ஆதிக்கக் கொடூரம் புரையோடிக்கிடக்கிறது என்கிற உண்மையை உள்வாங்கி இக்கதைகள் அமைந்துள்ளன. பிரச்சாரம் சாராத நேர்த்தி, இவற்றிற்கு யதார்த்தம் என்கிற ஒரு பரிமாணத்தைப் பொருத்துவதில் வெற்றி பெற்றுள்ளது’ என ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.) தமது ஆய்வில் புகழ்ந்துரைத்துள்ளார்.
“விவசாயக் கிராமமாகிய கடலாஞ்சியிலே நிகழும் சமுதாயச் சுரண்டல்களும் அவற்றுக்கெதிராக நிகழும் எழுச்சியுணர்வே ‘காட்டாறு’ நாவலின் கதையம்சம். விளைந்து வரும் பயிருக்கு தண்ணீர் பெறமுடியாமல் விவசாயிகள் வாடி வருந்தி நிற்கும் வேளையிலே சமூகத்தில் பணம் படைத்தவர்களும், அரச பணியாளர்களும் சகல வசதிகளையும் , வாய்ப்புகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய ஊழலும், சுரண்டலும் இளையதலைமுறையினரையும், ஏழைகளையும் வர்க்க ரீதியாகச் சிந்திக்கத் தூண்டி நிற்கின்றன. இந்நிகழ்ச்சிகளே ‘காட்டாறு ’ என்ற நாவலாக விரிவடைகின்றன.”
“‘காட்டாறு’ நாவல் செங்கை ஆழியானுடைய படைப்பு என்ற வகையில் மட்டுமின்றி வன்னிப் பிரதேச நாவல் என்ற வகையிலும், பொதுவாக ஈழத்துத் தமிழ் நாவல் வரிசையிலும், குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு நாவலாகும். இந்த நாவல் வன்னி மக்களின் பிரச்சினைகளுக்கு வடிவம் கொடுத்த தரமான படைப்பு என்ற சிறப்புக்குரியது. கடந்த ஒரு நூற்றாண்டுத் தமிழ் நாவல் வரலாற்றிலே வெளி வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில் விரல் விட்டு எண்ணத்தக்க பத்துத் தரமான படைப்புக்களிலே ஒன்றாக அமையும் சிறப்பு இந்த நாவலுக்கு உள்ளது. ” எனப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் பதிவு செய்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் சாதி அமைப்பில் சாதிப்பெயர்கள் முத்திரைகளாகப் பயன்பட்டது போல் சாதியை அமுல்செய்வதற்குப் பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அகமண முறைமை ( ஒவ்வொரு சாதியினரும் தமது சாதிக்குள்ளேயே திருமணம் செய்தல்), சமய நடைமுறைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் , சமூகச் சடங்குகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள், பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள், உயர் சாதியினரைக் காணும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், விதிக்கப்பட்ட ஆடை, அணிகளைப் பயன்படுத்துதல், பிள்ளைகளுக்குப் பெயரிடுதல் எனப் பலவற்றை இது தொடர்பாகக் காட்டலாம் என ‘ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்’ என்னும் நூலில் கலாநிதி ம. இரகுநாதன் பதிவு செய்துள்ளார்.
விவசாயத் தொழிலாள மக்கள் கூட்டமாக காடுகளை வெட்டிக் கொளுத்தி கழனியாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையில் இன்னோரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன்.. அழகிய விவசாயக் கிராமங்களைப் பெரிய மனிதர் என்ற போர்வையிலே உலாவும் முதலாளித்துவக் கூட்டமும் உத்தியோகக் கூட்டமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றனர் என்பதை நான் என் கண்களால் காணநேர்ந்தது. மண்ணையும் பொன்னையும் மட்டுமா அவர்கள் சுரண்டினார்கள்? பெண்களை விட்டார்களா? கல்வியையும் சுரண்டினார்கள். சுரண்டலின் வகைகள் என்னைப் பதற வைத்தன. கிராமாந்திர வாழ்க்கையில் ஏதுமறியாத அப்பாவி விவசாயிகள் பல முனைகளிலும் தாம் சுரண்டப்படுவதை அறியாது, அறிய வகையற்றுத் தேங்கிய குட்டைகளாக வாழ்ந்து வருவதையும் , அதிகாரத்தின் சண்டித்தனங்களுக்குப் பயந்து ஒதுங்கியிருப்பதையும் , ஆங்காங்கு சிறு தீப்பொறிகளாக, இளைஞர்கள் சிலர் விழிப்புக் குரல் எழுப்புவதையும் நான் கண்டேன்.
கிராமப்புறங்களின் அபிவிருத்திக்காக நல்ல மனத்துடன் ஒதுக்கப்படுகின்ற செல்வம் (நிதி) ஐஸ்கட்டி கைமாறுவதைப் போல் கைமாறி ஒரு துளியாக நிலைப்பதையும் கண்டேன். இந்தத் தேசத்துரோகிகளை , மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டுமென்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானதுதான் காட்டாறு” என நாவலின் முன்னுரையில் செங்கை ஆழியான் நாவல் உருவானதன் பின்னணியைக் குறிப்பிட்டுள்ளார்.
‘தீம்தரிகிடதித்தோம்’ நாவல், இலங்கை அரசாங்கம் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவந்த போது மலர்ந்த கற்பனை காதல் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்கள மொழிச் சட்ட விவாதம் நடந்த போது எடுக்கப்பட்ட குறிப்புகளும், விவாதமும் காட்டப்பட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தமிழ் இளைஞனுக்கும் சிங்களப் பெண்ணுக்குமான காதல் களம் காட்டப்பட்டிருக்கும். நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்து போகும். அத்தோடு ஈழப்பிரச்சனையின் மூல வேர் எது என்பதை அரசியல் பின்னணியோடு தொட்டுக்காட்டுகிறது இந்நாவல். சிங்களம் ஆட்சி மொழியாக்கப்பட்ட போது தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பல்ம், சி. சுந்தரலிங்கம் போன்ற முதுபெரும் தலைவர்கள் சாத்விக முறையில் கிளர்ச்சி நடத்தி, தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அறவழியில் நடந்த போராட்டத்தை ‘சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான போர்’ என்று திசைதிருப்பு, அன்றைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா, காவல்துறையின் துணையோடு சிங்கள சமூக விரோதிகளை ஏவிவிட்டு போராடிய ஈழத்தமிழர்களை அடித்து நொறுக்கினார். பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்கள் வாழக்கூடிய தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடி அமர்த்தினார். பொருளாதார, சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தினார். தமிழ் மக்களின் அனைத்து எதிர்ப்புகளை மீறி சிங்களத்தை மட்டுமே ஆட்சி மொழியாக்கினார். தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தர குடிமக்களாக்கும் பிரிவினை உணர்வை ஏற்படுத்தினார். சிங்கள ஆட்சியின் கொடுமையை இனியும் சகிக்க முடியாது என்ற சூழ்நிலையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதையும் இந்நாவல் சித்தரிக்கிறது.
“மரணங்கள் மலிந்த பூமி ” இன்றைய சமூக பொருளாதாரப் பிரச்சனைகளையும் , இன்று வரை தொடரும் மரணங்கள் குறித்த நிகழ்வுகளையும் சித்தரிக்கும் இந்நாவலின் வாயிலாகக் கூறப்படும் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் நினைத்த உணர்ந்த அனுபவித்த விடயங்கள் மரணங்கள் மலிந்த பூமியாக இலக்கியமாக்கப்பட்டிருக்கிறது. இதில் சமூக இடர்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ” என ‘செங்கை ஆழியானின் சமகாலப் புனைகதைகள்’ என்ற தமது கட்டுரையில் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
“‘கங்கைக் கரையோரம்’ நாவல், பல்கலைக் கழக வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அங்கு கல்வி பயின்று நாட்டின் எதிர்காலச் சிற்பிகளாக வரவிருக்கும் மாணவ சமுதாயத்தின் மனநிலையில் எழும் உணர்ச்சியலையின் ஏற்ற இறக்கங்களைக் காட்டி அதனால் ஏற்படும் வெளியுலகத் தாக்கத்தைச் சித்தரிக்குமொன்றாகக் காணப்படுகிறது”. என கலாநிதி செல்லத்துறை குணசிங்கம் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு மீனவ சமூகத்தின் வாழ்க்கையை மிக அற்புதமாகச் செங்கை ஆழியான் வாடைக்காற்றில் சித்திரித்துள்ளார். இவரால் இதை எப்படி படைக்க முடிந்தது என்று எண்ணும் போது அவரின் திறனை நான் வியக்கிறேன். மீனவ மக்களின் சொற்களையும், மீன்பிடித் தொழில் நுணுக்கங்களையும் கலை அழகோடு சித்தரித்துள்ளார். புதிய களம், புதிய சூழல், நாவலின் படிமம் மிக அற்புதமாக இந்த நவீனத்தில் விழுந்துள்ளது.” என தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி கே. டேனியல் பதிவு செய்துள்ளார்.
‘அக்கினிக் குஞ்சு’ நாவலில் சாதியத்தின் அடையாளங்கள் மாறாத கிராமம் ஒன்று காட்டப்படுகிறது. உயர்த்தப்பட்ட சாதியினர் குடிமை முறையை தக்கவைத்துக் கொள்வதில் மேற்கொள்ளும் முயற்சிகளும் அதற்கெதிராகத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் போராட்டங்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றன.
சுமூக நோக்கோடு இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். வாடைக்காற்று அத்தகைய ஒரு ஆக்கம். எழுத்தாளன் சத்திய வேட்கையை, சமூக நோக்கை இந்த நாவலில் காணலாம். நெடுந்தீவின் பகைப்புலத்தில் அங்கு ஒரு பருவத்திற்கு வந்து தொழில் செய்கின்ற மீனவரின் வாழ்வையும், அப்பருவத்தில் வெகு தூரத்திலிருந்து அத்தீவிற்கு வருகின்ற கூழைக்கடா என்ற பறவைகளையும் இணைத்து சிறப்பாக இந்த நாவலைப் படைத்துள்ளார். பாமர மக்களது தொழிலாள வர்க்கத்தினது பிரச்சனைகளை வாடைக்காற்றில் செங்கை ஆழியான் சித்திரித்துள்ளார். செங்கை ஆழியான் ஒரு மகத்தான சாதனையைப் புரிந்துள்ளார். ‘வாடைக்காற்று’ என்ற நாவலின் அமைப்பையும் வெற்றியையும் கண்ட குடும்பசிட்டி அன்பர்கள் அதைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள்.
“வாழத் துடிப்பவர்கள் அழிக்கப்பட்டனர். தாலிகட்டிய கணவனும் மனைவியும் தாம் மாற்றிக் கொண்ட மணமாலைகள் , மலர் மாலைகள் வாடுவதற்கு முன்னரே ஷெல் விழுந்து துடிதுடித்து இறந்தனர். தாலி கட்டியவன் இரத்த வெள்ளத்தில் மணமாலையோடு மிதந்த காட்சியைக் கண்ட மணப்பெண்கள் , காதலித்தவன் கதைத்து விட்டு வீடு சேருமுன் அழிக்கப்பட்ட கதைகள். தோட்டம் சென்றவர்கள் பிணமாக வீடுவந்த காட்சிகள். கந்தோர் (அலுவலகம்) சென்ற கணவனின் உடம்பு சாக்குப் பையுள் துண்டு துண்டாக வந்த காட்சியை கண்ட மனைவிமார். பாடசாலை சென்ற தம் பிள்ளைகள் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் இறந்த செய்தி சுமந்த பெற்றோர். அப்பாவி மக்கள் அராக்கர்களால் கத்தரிக்காய், வெண்டைக்காய் போல் துண்டந்துண்டமாகத் துடிக்கத் துடிக்கத் துண்டாடப்பட்ட செய்திகள் கேட்ட மக்கள். இவற்றைத் தாங்கி வரும் செய்தித்தாள்கள். இக்கதை நடந்த காலப்பின்னணி. கதாநாயகி காதலித்ததால் கருவுண்டால், ‘பங்கருக்குள்’ ஒடி ஒதுங்கிய காதலன் தன் தாயின் கதி தெரியாது ஓடுகிறான். அங்கே அவனின் முடிவு ? கதாநாயகி கலங்கினால், வைராக்கியம் கொண்டாள்...
“அக்கினியைக் கருவாகக் கொண்டேன். போராளியான தன் சகோதரனுக்கு கடிதமெழுதுகின்றாள். தம்பி என் வயிற்றில் வளர்வது கருவன்று. அக்கினி ஆமாம் . இந்தப் பாவிகளைப் பழிகாரார்களைச் சுட்டெரிப்பதற்கு நான் என் வயிற்றில் வளர்ப்பது அக்கினிதான்”. ‘அக்கினி ’ நாவலின் கதைக்கரு மிகவும் போற்றப்பட வேண்டியது ஆகும்.
‘ கிடுகுவேலி’ “மக்களின் அதிக கவனத்தை பெற்ற நாவலாகும். யாழ் மண்ணின் நிகழ் காலப்படப்பிடிப்பு. திருமண ஒப்பந்த வியாபாரங்களும், சீதன வருமானமும், அந்த வருமானத்தைப் பெருக்க அதனை முதலீடாகக் கொண்டு மத்திய கிழக்குப் பயணமும், அதனால் கட்டியவள் கொள்ளும் ஏக்கமும் சீற்றமும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. நாவலின் உச்சக் கட்டம் சமீப கால கொடூர நிகழ்ச்சி ஒன்றுடன் கலாபூர்வமாக இணைக்கப்பட்டு, சமகால இலக்கியம் என்ற பெயரையும் பெற்றுவிடுகிறது.” என ஈழத்துச் சிறுகதையாசிரியர் செம்பியன் செல்வன் பதிவு செய்துள்ளார்.
கிடுகுவேலி , யாககுண்டம், கொழும்பு லாட்ஜ், மழைக்காலம் ஆகிய நாவல்கள் புலம் பெயர்வு தொடர்பான பிரச்சனைகளை மையக் கருத்தாகக் கொண்டவைகளாக விளங்குகின்றன.
செங்கை ஆழியானின் நாவல்களில் கதைப்பொருளாக அமைந்து விடயங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறியுள்ளார். ‘செங்கை ஆழியான் நாவல்கள் – ஒரு திறனாய்வு நோக்கு ’ என்ற ஆய்வேட்டின் ஆசிரியர் கந்தையா முருகதாசன்.
சாதிய ஒடுக்குமுறைகள் அவற்றின் விளைவுகள் தாக்கங்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல் நடவடிக்கைகள். அரசியல் ஒடுக்கு முறைகள், ஆயுதப் போராட்ட முயற்சிகள். மனித உறவுகளின் விரிசல்கள். நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையில் சிதைவுறும் கிராமம். அழிந்து வரும் பாரம்பரியக் கலை மரபுகள். இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் அவற்றின் விளைவுகள் தாக்கங்கள். ஈழத்தமிழர்களின் தொண்மை.
‘யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று’ இக்குறுநாவல் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியமை, அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் கோட்டைக்குள் நிலை கொண்டமை. கோட்டை விடுதலைப் போராளிகளால் முற்றுகையிடப்பட்டமை, கோட்டைக்குள் இருந்த இராணுவம் பின்னர் தப்பியோடித் தீவுப்பகுதிகளில் நிலை கொண்டமை, அங்கிருந்து யாழ்ப்பாணப் பகுதியை நோக்கி எறிகணைகளையும், விமானக் குண்டுகளையும் வீசியமை முதலிய சம்பவங்களின் சூழ்நிலையில் யாழ்ப்பாணக் கிராமமான கொட்டடிக் கிராமம் பட்ட அவலங்களைச் சித்திரிக்கிறது.
வரலாற்று நூல் எழுதுவதென்பது ஒரு கலை. அதற்கு வரலாற்றுக் குறிப்புகளே முக்கியம். ஆனால், வரலாற்றினை முக்கியமாகக் கொண்ட நவீனம் ஒன்றைப் படைப்பதென்பது முற்றிலும் மாறுபட்டதோரு தனிக்கலை. இதற்கு வரலாற்றுக் குறிப்புகளும் கற்பனைத்திறனும் மட்டுமின்றி, நூற்பயிற்சியும், ஆராய்கின்ற அனுபவமும் அவசியம். இவையனைத்தும் கைவரப் பெற்றவராக இப்புதுமை எழுத்தாளர் விளங்குகிறார். கடல் கோட்டையைப் படைப்பதற்கு அவர் செய்துள்ள ஆய்வுகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் இதனைப் புலப்படுத்துகின்றன.” என ஈழநாடு இதழ் ஆசிரியர் பி. எஸ் . பெருமாள் செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.
“‘கடல் கோட்டை’ யைக் கட்ட நீர் பட்டபாட்டையும், தளரா முயற்சியையும், அதன் போக்கினையும் மற்றைய எழுத்தாளர்களின் சரித்திர நாவல்களைப் போலல்லாது முழுக்க முழுக்கச் சரித்திரச் சான்றுகளை அமைத்து எழுதிய விதத்தையும் நான் மனமார வியந்து பாராட்டுகிறேன். கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சரித்திரச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல தமிழில் இப்படியொரு நவீனம் இதுவரை தமிழ் நாட்டில் வந்ததில்லையென்று தமிழ்த்தாயின் முடியில் சூட்டக் கூடிய ஒரு மலர்!” என எழுத்தாளர் ஈழத்துறைவன் பாராட்டியுள்ளார்.
ஆயிரமாயிரம் இனிய கனவுகளுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுதல் இளமைக்காலம். இவற்றைத் தொலைத்து, ஈழத்தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் தமது மண்ணையும் மானத்தையும் மீட்கும் போரிலே தற்கொடையாளராய் சமர் செய்யும் வீரமும், வைராக்கியமும் அவல வாழ்க்கையிலிருந்து எவ்வாறு பெறப்படுகின்றன என்பதை ‘சாம்பவி’ குறுநாவல் அற்புதமாகச் சித்தரிக்கிறது.
“ஆக்க இலக்கியம் இந்த மண் சார்ந்த பிரச்சனைகளையும் பேசுவதாக அமைதல் வேண்டும். அத்துடன் அப்பிரச்சனைகளின் விடிவிற்கு ஒரு மார்க்கம் காட்டுவதாகவும் அமைதல் வேண்டும். இலக்கியம் என வரும்போது அதற்கென ஒர் அழகும், இலக்கிய ஆக்கம் என்று வரும் போது அதில் ஒர் இலக்கியத் தேடலும் இருக்க வேண்டும்.” என செங்கை ஆழியான் எழுதிய ‘நானும் எனது நாவல்களும்’ என்ற நூலில் ஆக்க இலக்கியம் குறித்த தமது கோட்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.
ஈழத்து நவீன இலக்கிய உலகின் ஈடிணையற்ற இலக்கியவாதியாகத் திகழ்ந்த செங்கை ஆழியான் 08-02-2016 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
“ஈழத்தின் இன்றைய படைப்பாளர்களுள் செங்கை ஆழியான் மிகவும் வெற்றிகரமானவர்” என ஈழத்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார்.
“இலங்கை எழுத்தாளர்களில் டேனியலும் செங்கை ஆழியானும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தம் நாவல்களில் இடம் பெறும் மனிதர்கள் பற்றிய சமூகச் சூழல் , பொருளியல் சூழல், வரலாற்று விபரங்கள் ஆகியவற்றை நிறையத் தருவதில் தமிழ் நாட்டு முற்போக்காளர்களைவிடச் சிறந்து இருக்கிறார்கள்.” என ‘ மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் ’ என்ற நூலில் இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பாராட்டியுள்ளார்.
- பி.தயாளன்