Tnm artநண்பர்களோடு இருப்பது பலம். அதுவும் பயணங்களினூடாக அவை இன்னும் இன்னும் இலகுவாகி மிதக்க ஆரம்பிக்கிறது. இலகுவான ஒன்றே பலமானதாகவும் இருக்கும். தேக்கடியில் என்ன இருக்கிறது என்போருக்கு அங்கே காடு இருக்கிறது என்கிறேன். தேனி பயணமே ஒரு ஜில் ஈரக்காற்றின் வழியாகத்தான் நிகழ்ந்தது. 

நான்... நண்பன் கமல்... தம்பி காதலாரா... டியர் கோபி சேகுவேரா... டியர் சுகன் சேகுவேரா... அன்பன் விவே... ஆறு முகங்களோடுதான் அன்று தேனி விடிந்தது.

இலக்கல்ல வாழ்க்கை. இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை. புத்தர் ஒரு முறை சொன்னது. நான் பல முறை சொன்னது. இம்முறையும் உணர்ந்தேன். இன்னதென இல்லாத எல்லாமும் பேச இலக்கியம் சிறகு முளைத்து திரிந்ததைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது தான்... ஆக சிறந்த விடுதலை.

புகைப்படங்கள் கால சாட்சி. ஒவ்வொன்றிலும் காலத்தை நிறுத்தி நிறுத்தி நகர்த்தியது நண்பர்களின் ரிமோட் விரல்கள். பொதுவானவனாக இருப்பது தனித்து சிறக்க வழி அமைக்கும். வாழ்வின் மிக நுண்ணிய வளைவுகள் எல்லாம் பயணங்களே கொண்டிருக்கின்றன.

அறிவு சார்ந்த ஆன்ம விசாரணைக்கு தத்துவார்த்தமான திரிபுகளை கால் கொண்டே அலைந்து கண்டடைய... தேக்கடி... தேன் பா வாய் காடுகளின் மடியில்... சிறு கடலின் நினைப்பில் தகதகத்துக் கிடந்தது. முன்னொரு முறை பள்ளி நாட்களில் சென்றது. இருபது வருடங்களை முழுங்கி விட்டு.. அரூப விழிகளில்... காத்துக் கிடந்ததோ... அசரீரி எனக்குள் அசையாத குரங்கொன்றை வால் ஆட்ட செய்தது.

முதல் நாள் முழுக்க சுற்றல். பகல் மின்ன பாத யாத்திரர்கள் நாங்கள். இரவின் மடியில்... கவிதைகள் மறந்தோம்... மறுநாள் தேனிக்கு வந்த வேலை "தேன் காற்று வந்தது..." என்று முணுமுணுத்துக் கொண்டே நிகழ ஆரம்பித்தது.

"தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை" விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டோம். நீண்ட நாட்களுக்கு பின் மனிதர்களோடு எங்களை இணைத்துக் கொண்டோம். இந்த அமைப்பின் ஆறாவது ஆண்டு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

"விருது என்பதைத் தாண்டி மாநிலம் தழுவிய ஒரு இலக்கிய கூடுகையாகத்தான் இந்த நிகழ்வை நாங்கள் பார்க்கிறோம்" என்று தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சொல்வது போல... விருதுகள் எல்லாம் விருதுகள் என்பதைத் தாண்டி... பரிசுப் பொருள்கள் என்பதைத் தாண்டி... நாம் தொடர்ந்து இலக்கிய பயணத்தில் இருந்து கொண்டிருக்க அவ்வப்போது கிடைக்கும் ஆசுவாசம்.. ஊக்கம்... என்று தான் பார்க்கிறேன். 

தருவோரை விட பெறுவோருக்கே ஆழமாக தெரியும். அந்த குறிப்பிட்ட விருது தனக்கு தகுதி ஆனாதா என்று. அந்த வகையில்... நான் என் தகுதி அறிவேன். ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு அனுபவம். எதை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா அது நம்மை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான மைல்கல்கள் தான் விருதுகள். ஆக, எனக்கு கிடைத்திருக்கும் "அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விரு"தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். என்னோடு சேர்ந்து விருது பெற்ற யாவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோன்றும் போது எழுதுபவன் அல்ல நான். என் தோன்றலே எழுதுவது தான் என்று நம்புகிறவன். பாரதி சொன்னது தான். எழுத்து என் தொழில். ஒரு நாளைக்கு 3 மணி நேரம் எழுதுவதற்கு தான் மற்ற 8 மணி நேரம் வேலை செய்கிறேன்.

இந்த அமைப்பின் தனித்தன்மையாக நான் இரண்டு விஷயங்களை கவனித்தேன். ஒன்று இந்த மேடை அமைப்பு 'மேடை'க்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதாவது.. மேடை கலாச்சாரம் மீது எப்போதுமே எனக்கு ஒப்புமை இருந்ததில்லை.

மேடையில் அமர்ந்திருப்போர் தனித்த மனிதர்களாகவோ கீழே அமர்ந்திருப்போர் வேடிக்கை காண்போராகவோ ஒரு தோற்ற பிழைக் கொண்டு விடும் அந்த கலாச்சாரத்தில்.. மேடையற்ற ஒரு மேடையினை நிகழ்த்தி ஆச்சரியப் படுத்தினார்கள்.

எழுதுபவர்களும் வாசகர்களும் இணைந்தமர்ந்து இருந்தது தான் ஆக சிறந்த பொதுவுடைமை. தேவைக்கு மேடையில் நிகழ வேண்டியது மட்டும் தான் மேடையில். மற்றபடி... அமர்தல் எல்லாமே சம தளத்தில் தான். 

இன்னொன்று... இயல்பாகவே இலக்கிய கூட்டத்தில் ஒருவரை பாராட்ட... மரியாதை செலுத்த... பொன்னாடை… துண்டு இவைகளைத்தான் அணிவிப்பார்கள். ஆனால் மேடை அமைப்பு... விருது வாங்கிய ஒவ்வொருவருக்கும் பூ மாலை அணிவித்து ஸ்தம்பிக்க வைத்தது.

படைப்பாளிக்கு தர வேண்டிய மிக நுட்பமான மரியாதையை வெகு சிறப்பாக கொடுத்ததாகவே கருதினேன். அதுவும் கவிஞர் சுகிர்தராணி அவர்களுக்கு அணிவித்த மாலை ஒரு வாழ்நாளுக்கானது. கொண்டாட்டத்தின் உச்சம் அது. மாலை போட்டுக் கொண்டு நிற்பது கொஞ்சம் கூச்சமாக இருந்தால் கூட.. மிக தெளிவான சிந்தையில் பிறந்த பாராட்டு முறையில் அமர்க்களப்படுத்தி இருந்தார்கள்.

மிக தெளிவான திட்டமிடதலின் கூடுகையாக அமைந்த விழாவில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. நம்மைச் சுற்றி இருக்கும் திறமை வாய்ந்த... சமூகத்துக்கு தேவையான படைப்பாளிகளோடு சேர்ந்து பயணிக்க இன்னும் இன்னும் நம்மை தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் வந்தது.

வாள் எடுத்தவனுக்கும் எழுதுகோல் எடுத்தவனுக்கும் ஒரு போதும் நிம்மதி இல்லை. அந்த இன்மையில் தான் இந்த சமூகம் மெருகேறுகிறது. மெய் கூடுகிறது. மற்றோருக்காக உருகும் எழுது கோல் தான் எழுதுபவன். அதற்கு அவ்வப்போது ஊற்றப் படும் எரிபொருள் தான் இம்மாதிரி விருதுகள். 

சிறப்புரை ஆற்றிய கவிஞர் சுகிர்தராணி அவர்கள்... தன் எழுத்து போலவே தெறித்து கொதித்தார். ஏன் எழுத வேண்டும் என்று பேச்சிலேயே எழுதி காட்டினார். பேச பேச ஏகப்பட்ட காரண காரியங்களை நமக்குள் கிளறி விட்டார். படபடவென தலை ஆட்டிக் கொண்டே பேசிய போது மனம் அசையாமல் கவனிக்க வைத்தது அறிவு தாகம். சிந்தனைச் செழுமைக்கு சித்திரம்... மேடை விழாவில் அவர்தான்.

இந்த மானுட சமூகம் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம் எழுத்தால் வந்தது. இன்னும் அடுத்த கட்டமும் அதே எழுத்தால் தான் நிகழ இருக்கிறது. ஆக... அவர்களை போலவே நாமும் எழுதுகிறோம். நம்மை போலவே இனி வரும் அவர்களும் எழுதுவார்கள். இந்த சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும்... கால திறவாக காத்துக் கிடக்கும் CCTV கேமரா தான் எழுதுபவர்கள்.

அவர்களின் கண்களில் இருந்து எந்த ஒரு பிழையும்... நிலையும்... தப்பிக்கவே முடியாது. தப்பிக்கவே கூடாது. இந்த உலகத்தை சுழற்றுபவர்கள் எழுதுபவர்கள் என்று தோழர் முருகேசபாண்டியன் அவர்கள் சொன்னது போல... இங்கே இந்த உலகம் எதையோ நிகழ்த்திக் கொண்டிருப்பதை உணர்ந்து மற்றோருக்கும் அதை உணர வைப்பவன்தான் எழுதுபவன்.அவன் உறுதி கொண்டு சூளுரைப்பது... இந்த மானுடம் நலம் பெற நல்லதோர் வீணையை மீட்டிக் கொண்டே இருப்போம் என்பதுதான்.

"இது ஆதி தமிழ் பறையடா.. இதை அடித்து பகை முகத்தில் அறையடா" என்று முழங்கிய அந்த சிறுமியின் சிறகை... எழுந்த ஒவ்வொரு அதிர்விலும் கண்டோம். ஆயுதம் அறிவு. பற்றிக் கொள் மனமே என்றிருந்தது. 

"ஒரு பெண் பறை அடித்துக் கொண்டிருக்கிறாள்
அவளுக்கு புத்தக வடிவில் சிறகு முளைத்திருக்கிறது 
அவள் அணிந்திருந்த ஆடையில் எழுதுகோல் முளைத்து 
அவளின் கால்களில் அச்சாணியாய் நிற்கிறது
ஆதி மனுசி வீறு கொண்டு எழுகிறாள்" 

மெய் சிலிர்க்க வைத்த லோகோ. மனம் லயிக்க வைத்த சிம்பாலிஸம். அறிவே சிறகு பொருத்தும். அறமே சிகைக்கு அழகு பொருத்தும். பெண் விடுதலையே உலக விடுதலை. அதை மிக நேர்த்தியாக வடிவத்துள் கொண்டு வந்த ஓவியர்க்கு பாராட்டுக்கள்.

அரங்கு நிறைந்த விழாவில்.. ஒற்றை யானையாக விசாகன் சார் அமைதியாய் தேரை நகர்த்திக் கொண்டு போன விதம்... கற்றுக் கொள்ள வேண்டியது. செல்லம் ரகு சார் இருந்திருக்க வேண்டிய விழா.

சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் இல்லாத குறை ஒன்று தான். இருவருக்கும் மனம் கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும். விழாவை மிக நேர்த்தியாக நடத்திய அமைப்பு சார்ந்த அத்தனை தோழர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 

சிவகுமார் சார்... முத்து மீனாட்சி... மகேந்திரன் கோ... சுபசெல்வி... வில்வம் சார்... கதிரவன் சார்... உள்ளிட்ட சக படைப்பாளர்களை – தோழர்களைக் கண்டு பேசியதில்... மனம் நிறைந்த சந்தோசம்.

மொத்தத்தில்... தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் மடை திறந்த இலக்கிய சாரல் தேனி தேசம் முழுக்க வானம் தாண்டியும் வீசியது.

- கவிஜி

Pin It