இலக்கியம் என்பது அழகான அல்லது ஏதோ ஒருவகையில் சிறப்பான புகழ்பெற்ற கூற்றுகளைக் கொண்டிருக்கும் என்று மொழியியல் அறிஞர் புளூம்பீல்டு குறிப்பிடுவார்.1 இந்த வரையறை நாம் நம்முடைய மொழி, பண்பாடுவழி அறிந்து கொண்டிருக்கும் இலக்கியத்திற்கு மட்டும் பொருந்துவதோடல்லாமல் உலக இலக்கியத்திற்கே பொருந்தக்கூடிய ஒரு பொதுவான வரையறை. எழுத்துவடிவில் காலங்காலமாக இருந்துவரும் இலக்கியமாக இருந்தாலும் சரி பேச்சு வடிவில் வாய்மொழி வழியாகப் பாதுகாக்கப்படும் இலக்கியமாக இருந்தாலும் சரி எல்லாமே அழகான கவர்ச்சியான கூற்றுகளைக் கொண்டிருக்கும். ஏதோ ஒரு வகையில் சிறப்பான கூற்றுகளைக் கொண்டு விளங்கும். இந்தப் பண்பினாலேதான் இலக்கியங்கள் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. திரும்பத் திரும்ப பாடப்படுகின்றன அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எல்லாச் சமூகத்திற்கான ஒரு பொதுப் பண்பைப் பெற்றிருப்பதோடு ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திடமிருந்து வேறுபடுத்தும் பணியையும் இலக்கியங்கள் செய்கின்றன.
நாட்டுப்புறப் பாடல்கள்
இலக்கியங்களை ஏட்டில் எழுதப்பெற்றவை என்றும் வாய்மொழி வழியாக வழங்குவன என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பகுப்பார்கள். இவற்றுள் வாய் மொழி இலக்கியங்கள் ஏட்டில் எழுதப்படாதவை. நினைவில் பதிவுசெய்து அவ்வப்போது பாடப்படுபவை. இதனால் மாற்றங்கட்கு உட்படுபவை. எட்டில் எழுதப் பட்ட இலக்கியங்களைப் போலவே வாய்மொழி இலக்கியங்களும் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக் கின்றன. அவர்களின் அழகியல் உணர்வையும் பிற நம்பிக்கை களையும் வெளிப்படுத்துகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களில் முக்கியமான பிரிவாக விளங்குகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் எதுகை மோனை கொண்டு ஏதோ ஒரு வகையில் ஒழுங்கான ஓசை அமைதி கொண்டு விளங்கும் என்றும், வழக்கில் மாத்திரம் வழங்கும் சொற்களும் சிதைந்த சொற்களும் மிகுதியாக வந்து அமையும் என்று கி.வா.ஜ. விளக்குவார் (காண்க : மலையருவி, 2014 (பக். 24-30). நாடோடிப் பாடல்களில் சொன்னதையே மடக்கி மடக்கித் திருப்பிச் சொல்வது மரபு என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுவார்.
பேராசிரியர் அகத்தியலிங்கம் ஒரு அமெரிக்க அறிஞரின் கருத்தை மேற்கோள் காட்டி, நாட்டுப்புறப் பாடல்களில் கருவும் உருவும் மிக அருமையாக இழையோடி இளகிய நிலையில் இருப்பதால்தான் அவை சிறந்து நிற்கின்றன என்று விளக்குவார் (fluidity in form and content. எல்லோருக்கும் புரிகின்ற உள்ளடக்கம், எளிமையான உருவ ஆக்கம் என்ற இரண்டும் இணைந்து நிற்கின்ற நிலையில்தான் இவை உள்ளம் கவரும் நிலையில் உள்ளன என்றும் அகத்தியலிங்கம் விளக்குவார்.
இந்தவொரு சிறு முன்னுரையின் பின்புலத்தில் மலைப்புலயர்களில் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து விவரிக்க முற்படலாம்.
மலைப்புலயர் மொழியில் சொல்வளம் குறித்து ஏற்கனவே உங்கள் நூலகம் இதழில் (சூன் 2018, பக். 35-39) கட்டுரை எழுதியுள்ளேன். அக்கட்டுரையில் அம்மக்களைக் குறித்து அறிமுகம் கொடுத்துள்ளேன்.
மலைப்புலயர் நாட்டுப்புறப் பாடல்களில் காதல் பாடல்களே அதிகம் காணப்படுகின்றன. காதல் பாடல்களை ஜோடிப் பாட்டுகள் என்றே கூறுகின்றனர். விறகு வெட்டப்போகும்போதும் ஆடு, மாடு மேய்க்கப் போகும்போது இவை பாடப்படுகின்றன. காதலனை நோக்கிப் பாடும் பாடல்களை ‘மச்சானுக்குப் பாட்டு உடறது’ என்று கூறுகின்றனர். வேறு சில பாடல்கள் அவர்கள் வாழும் இடங்களையும், இயற்கையையும் விவரிப்பதாக அமைந்துள்ளன. நோன்பு திருவிழா காலங்களில் பாடப்படும் தெய்வப் பாட்டுகளும் தாலாட்டுப் பாட்டுக்களும் சில காணப்படுகின்றன. வேகமாக மாறிவரும் சமூக மாற்றங்களினால் மலைப் புலயர் வாய்மொழி இலக்கியங்கள் மறைந்து வருகின்றன. ‘பாட்டெல்லாம் நெறைய இருந்துச்சு. இப்பொ அம் முட்டு பாடுதில்லெ’ என்று தகவலாளிகள் கூறுகின்றனர்.
நாட்டு வளம், நீர் வளம்
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் வடக்குப் பக்கமாக அமைந்திருப்பது அஞ்சுநாடு நிலப்பகுதியாகும். மறையூர், காந்தளூர். கீழாந்தூர், காரையூர் போன்றவை அஞ்சுநாடு ஆகும். எனவே மறையூரையும் காந்தளூரையும் பிற அஞ்சுநாட்டுப் பகுதிகளையும் பெருமைபடப் பாடும் பாடல் வரிகள் காணப்படுகின்றன.
நாசி வெயிலு மாசி வெயிலு
நயமான காந்த நாடு
சந்தன வெளெஞ்சதெல்லாம்
சாமியுள்ள மறையூரு.
தாழில சோறாக்கி
தானமிடும் காரையூரு
முட்டியிலெ சோறாக்கி
மூடி வைக்கும் கீழாந்தூரு
காரையூர், நாச்சி வயல், மாசி வயல், காந்தளூர், கீழாந்தூர் ஆகியவை அஞ்சுநாடு இடப்பெயர்களாகும்.
அஞ்சநாட்டுப் பகுதியில் குறைவில்லாமல் மழை பெய்யும். நீர்வளம் மிக்க பகுதி அது. அப்பகுதியில் ஓடுகிற ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடும். பாம்பாறு எனப்படும் அந்த ஆறே அம்மக்களின் நீர் ஆதாரமாக விளங்குகின்றது. பாம்பாற்றை பெரி யாத்து என்றும் கூறுகின்றனர். ஆத்து என்ற சொல்லே புலயர் மொழியில் காணப்படுகிறது. ஆற்றில் மீன் பிடித்தல், ஆடைகளைத் தூய்மை செய்தல், ஆற்றின் கரைகளில் காலார நடந்தும் குளித்தும் பொழுது போக்குதல் அவர்களது முக்கிய பணிகளாகும். பூப்புச் சடங்கு, திருமணச் சடங்குகளும் ஆற்றோடு தொடர் புடையன. அத்தகைய ஆற்றின் சிறப்பைப் புலப் படுத்தும் பாடல்கள் உள்ளன.
மறையூரு மலெ மேல
கார்மேகம் எறங்கி வரும்
கார்மேகம் எறங்கி வந்தா
அஞ்சுநாடு மலெ பொளியும்
ஆடியிலெ பெருக்கெடுத்து
ஓடிவரும் பாம்பாறு
பாம்பாறு அருகினிலே
சிவபெருமான் கோயிலம்மா
சிவபெருமான் பாதந்தொட்டு
வணங்கி செல்லும் பாம்பாறு
தெக்கிருந்து வடக்கோடு
தென்னாட்டு பாம்பாறு
ஆடியிலெ பெருக்கெடுத்து
ஆனந்தமா ஓடிவரும்
அமராவதி அணெபோயி
அமைதி கொள்ளும் பாம்பாறு
(கண்ணம்மா, பொங்கம்புளி)
பாம்பாற்றைத் தென்னாட்டு நதி என்று கூறுவதும் ‘அமராவதி நதி போயி அமைதி கொள்ளும் பாம்பாறு’ என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது. தேவிக்குளம் தாலுக் காவில் உள்ள மறையூர், காந்தளூர் ஆகிய பகுதிகள் ஏற்கனவே தமிழ்நாட்டின் பகுதிகளாக விளங்கின என்பதனைக் காட்டுகின்றது. ‘நாங்க தமிழ்நாடுதான், கேரளத்தார் எங்களெ தத்தெடுத்தவங்கதான்’ என்று ஒரு தகவலாளி கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏன் இன்றும்கூட இம்மக்கள் உடுமலைக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் பழனிமலைக்கு அடிக்கடி வந்து செல்வதும், பழனிமலை முருகனின் பெயர்கள் அதிகம் இவ்வினத்தாரிடையே காணப் படுவதும் இவர்கள் தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள மதிப்பைக் காட்டுகின்றன.
சுட்டக்கிழங்கும் சுடு தேனும்
மலைப் புலயர்களின் முக்கியமான உணவாக கிழங்குகள் இருந்து வந்துள்ளன. சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் மலெயங் கௌங்கு என்ற கிழங்கே அவர்களது உணவாக இருந்து வந்தது. கொளுவுக் கோல் எனப்படும் ஒருவகை கருவியின் உதவியால் காட்டில் சென்று கிழங்கு இருக்கும் இடத்தைக் கண்டறிந்து ஐந்தடி ஆறடி மண்ணை வெட்டி ‘மலெயங் கௌங்கை’ தோண்டி எடுப்பார்களாம். அது சுவையாக இருக்குமாம். ஒரு குடும்பத்துக்குத் தேவையான கிழங்கு கிடைத்து விடுமாம். தேன் எடுத்தல் அவர்களது மற்றொரு தொழிலாகும். தேனில்தான் எத்தனை வகை? அளெத்தேனு, சிறுதேனு, பெருந்தேனு, கொம்பன் தேனு, முலைக்கொம்பன் தேனு, கொசுவந்தேனு என்று பல்வேறு தேன் வகைகள் அவர்களுக்குத் தெரியும். தேன் இருக்கும் இடத்தை தேன்மனை என்று கூறு கின்றனர். தேனீக்களின் பறக்கும் திசையினைக் கொண்டு தேனிருக்கும் இடத்தினை அறிகின்றனர். தேனும் கிழங்கும் அவர்களது வாய்பாட்டில் இடம்பெறாமல் இருக்குமா?
காட்டுக் கௌங்கிருக்கு
மரங்கொம்பில் தேனிருக்கு
சுட்டக் கெழங்கு சுடுதேனும்
கொண்டு வாங்க
தின்னு பாப்போம்
விறகு வெட்டுதல்
விறகு வெட்டுதல் பெண்களோடு ஆண்களும் செய்யும் வேலையாகும். பொதுவாக பெண்கள் நான் கைந்து பேர் சேர்ந்தே விறகு வெட்டச் செல்வார்களாம். விறகுகளைச் சேர்த்துச் சேர்த்து மூன்று கட்டாகக் கட்டி தலையில் சுமந்து வருவது வழக்கம். வெறகு வெட்டும் போது ஆனைகள் எதிர்படலாம். காட்டெருமைகள் எதிர்படலாம். அவற்றைச் சாதுர்யமாகக் கண்டறிந்து தப்பித்து வருவது இவர்களுக்குக் கைவந்த கலை.
விறகு வெட்டும்போது தண்ணீர் தாகம் எடுத்தால் அதற்கென்று சில காட்டுக் கொடிகள், தழைகள் உள்ளனவாம். விறகு கட்டுகளைத் தூக்கித் தலையில் வைப்பதற்கு தன் மச்சானை அழைக்கிறாள் ஒரு பெண்.
காரா வெறகு வெட்டி
நேரான கெட்டுங் கெட்டி
தூரந்தொலை போறகட்டெ
தூக்கிவிடு கூள மச்சான்
மச்சான் வந்து தூக்கிவிட்டால் விறகுக்கட்டின் சுமை துன்பம் தெரியுமா என்ன? கூள மச்சான் குள்ளமான மச்சான்தான். அவன் எவ்வாறு விறகுக் கட்டைத் தூக்கி தலையில் வைக்கமுடியும். அவ்வாறு விறகுக்கட்டெத் தலையில் தூக்கி வைக்கும் சாக்கில் தன்னுடைய மார்பகங்களைத் தொட்டு விடாதபடிக்கு எச்சரிக்கையும் செய்கிறாள் ஒரு பெண்மணி.
காரெ விறகு வெட்டி
நேரான கெட்டுங் கெட்டி
தூரந்தொலை போற கட்டெ
தூக்கிவிடு சின்ன மச்சான்
கொம்பு ரண்டும் தாவிடாதே
அந்தப் பெண்மணிக்கு எதிர்ப்பாட்டாக இன்னொரு ஆண் கீழ்க்கண்டவாறு பாடுகிறான்.
தூக்குவின் தூக்குவென்டி உன்பின்னாலெ
கூடகுத்தா தூக்குவென்டி
ஒன்புருஷன் கோவக்காரன்
ஒன்னவெச்சி வாழமாட்டான்
(சந்திரன், செம்பக்காடு)
மலைப்பகுதியில் நெல் பயிரிட வாய்ப்பில்லை. ஆனை சல்லியமும், காட்டு எருமை சல்லியமும் (சல்லியம்-தொந்தரவு) அதிகம். நெற்பயிரை அழித்து துவம்சம் செய்துவிடும். இருந்தாலும் நெற்பயிர் குறித்துப் பாடல்கள் காணப்படுகின்றன.
கார்த்திகையிலெ கருதறுப்போம்
களஞ்சியத்துலெ சேர்த்திருவோம்
தைமாசம் வந்ததுமே
தை பொங்கலு திருநாளு
பச்சரிசி குத்தி
பசும்பாலு கலந்து வெச்சி
பூமி தாய்க்குப் பொங்கலிட்டு
பூமித்தாயெ வணங்கிடுவோம்
மலப்புலயர் தைத்திருநாளை ஒருநாள் மட்டும் கொண்டாடுகின்றனர். அதனை மனைப் பொங்காலு என்று அழைக்கின்றனர். ஆடுகளுக்கு வாழையிலையில் பொங்கல் வைத்துப் படைக்கிற ஆட்டுப் பொங்கலும் அவர்களிடையே காணப்படுகின்றது,
தெய்வங்கள் குறித்த பாடல்கள்
தமிழக எல்லையில் இருக்கிற கோடாந்தூர் என்ற வனப்பகுதியில் உள்ள சாப்ளி நாச்சியம்மா என்ற வனதேவதையையே புலயர் இன மக்கள் வழிபடு கின்றனர். ஆண்களுக்கு சாப்ளி என்றும் பெண்களுக்கு சாப்ளியம்மா என்றும் பெயரிடும் முறை இன்றும் காணப்படுகிறது. தவிர மாரியம்மா, காளியம்மா போன்ற பெண் தெய்வங்களையும், கருப்பன் போன்ற ஆண் தெய்வங்களையும் வழிபடுகின்றனர். மறையூர், காந்தளூர், தமிழக உடுமலை, பழனிக்கு அருகில் அமைந்துள்ளதால் முருகனையும் வழிபடுகின்றனர். இதனை ஏற்கனவே குறிப்பிட்டோம். நோன்பு காலங் களில் இரவில் நெடுநேரம் ஆட்டம் பாட்டம் இருக்கும். அப்போது பலவகை நடனங்களை ஆடி பாட்டு பாடுவர். பின்வரும் பாடல்கள் திண்டுகொம்பு என்ற குடியில் திரட்டப்பட்டவை.
காரு வரதும் பாருங்கம்மா
காரு கதறி வரதும் பாருங்கம்மா
காருக் குள்ளிருக்கும் காளியம்மா தாய்க்கு
கண்ணாடி மின்னலும் பாருங்கம்மா
தன்னன னாதினம் தன்னன னாதினம்
தன்னன னாதினம் தன்னானே.
மோட்டர் வரதும் பாருங்கம்மா
மோட்டர் மொரங்கி வரதும் பாருங்கம்மா
மோட்டர்குள்ளிருக்கும் முத்தம்மா தாய்க்கி
மூக்குத்தி மின்னலெ பாருங்கம்மா
தன்னன னாதினம் தன்னன னாதினம்
தன்னன னாதினம் தன்னானே.
சொர படர்ந்ததும் பாருங்கம்மா சொரெ
சுத்திப் படர்ந்ததைப் பாருங்கம்மா
சொர கொடிப்போல நம்ம மாரியம்மா
சொல்லு வரிசையெ பாருங்கம்மா
தன்னன னாதினம் ...
கோவ படர்ந்ததெ பாருங்கம்மா கோவெ
சுத்திப் படர்ந்ததைப் பாருங்கம்மா
கோவ கொடிப்போல நம்ம மாரியம்மா
கொலு விருப்பதெப் பாருங்கம்மா
தன்னன னாதினம் தன்னன னாதினம்
(மணியம்மா, திண்டுகொம்பு)
சுரைக்காய், கோவைக்காய் போன்றவை மரபார்ந்த மலைப் பகுதியில் கிடைக்கும் காய்கள். இவற்றைப் புனைந்து பாடுவதோடு கால முன்னேற்றத்தால் புழக்கத்திற்கு வந்த காரு, மோட்டார் போன்ற வாகனங் களைப் பயன்படுத்தியும் பாடல்கள் புனைந்துள்ளதைக் காணமுடிகின்றது. கோவைக் கொடி வேலி மீது படர்ந்து அதனை மறைத்து காட்சியளிப்பதைப் போல மாரியம்மா கொலு வீற்றிருக்கிறாள் என்ற கற்பனை மிகவும் நயமாக உள்ளது. காரு, மோட்டாரு, சொரை, கோவை போன்ற சொற்கள் பாடலில் திரும்பத்திரும்ப வந்து ஒரு சந்த நயத்தைக் கொடுக்கின்றன. கதறி வருதல், மொரங்கி வருதல் ஆகிய பேச்சு வழக்குச் சொற்களின் அழகே அழகு. மொரங்குதல், கதருதல் இரண்டு சொற்களுமே சப்தம் எழுப்பிக் கொண்டு வருவதைக் குறிக்கின்றன.
மாரியம்மா கோயிலிலேவாசப்படி ஒன்டு
அவ வயிரமணி திண்டு
அவ கையளவு கால் அளவு
பச்செ வாழத் தண்டு
எல்லோரும் குடிக்கும் தண்ணி
ஆத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி
நம்ம மாரிகுடிக்கும் தண்ணி
நெற கொடம் மஞ்ச பாலு
எல்லோரும் பல்விளக்கும்
ஆலங்குச்சி அரசங்குச்சி
நம்ம மாரி பல்விளக்க எட்டுரூபா ரத்னகுச்சி
(மணியம்மா, திண்டுகொம்பு)
ஒன்று, திண்டு, தண்டு போன்ற அடி இறுதியில் வரும் சொற்கள் சொல் இயைபு என்ற நிலையில் அமைந்து பாடலுக்கு நயம் உண்டாகிறது. அது போலவே தண்ணி, குச்சி ஆகிய சொற்கள் திரும்ப மடக்கி மடக்கி வந்து நயமாக உள்ளன,
தாலாட்டுப் பாடல்
தாலாட்டுப் பாடல் ஒன்று வள்ளி, தெய்வானை, வேலவர் ஆகிய கடவுளரை மையப்படுத்தி இருதார மணத்தில் குடும்பத்தில் ஏற்படும் சிக்கலைக் குறிப்பாய் உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
வள்ளி அழகுக்கோ வலதுபறம் தேனிருக்க
வள்ளிமேல் குத்தமில்லெ
மயித்துவிடு தெய்வானெ,
ஓடுனாவள்ளி ஒளிஞ்சா வனந்தேடி
தேடுனார் வேலவரு திருபாற் கடலோரம்
ஆரீரீ ராரிரரோ என் கண்ணே
ஆராரீ ஆரீரரோ
முத்துகொடெ மேலிருந்து வேலவரு
முத்தேரு கொண்டாராம்
ஆறுவண்டி நூறு சட்டம் வேலவர்க்கு
அசையாத மணித்தேராம்
தேரசைய மணி குலுங்க
தேசமெல்லாம் கையெடுக்க
ஆரீரீ . . . ராரிரரோ . . . .
(பழனியம்மா, கணக்காயம்)
இத்தகைய தாலாட்டுப் பாடல்கள் வேறு பகுதிகளி லிருந்து சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் மலைப் புலயர்கள் முருகன் மீது பற்றுடையவர்கள். பழனி, பழனிசாமி. சுப்பிரமணி என்றெல்லாம் பெயர்கள் ஏராளமாக அங்கே காணப்படுகின்றன.
இன்னொரு தாலாட்டுப் பாடல் வேறு குடியில் சேகரிக்கப்பட்டது,
ஜோ ஜோ கண்ணே!
என் ராராரி ராராரோ!
கோளி போல கண்ணடக்கி
குயிலு போல தூங்கி எழுந்து
மாம் போல கண்ணடக்கி
மயிலு போல தூங்கி எழுந்து
யாரடிச்சு ஏனமுத அய்யாநீ
யாரு பெத்த பாலகனோ
தூக்கி வைக்கும் கால்களுக்கு
துத்திபூ சொல்லடமும்
எடுத்து வைக்கும் கால்களுக்கு
எலுமிச்சம் பூ சொல்லடமும்
தூங்காத கண்க் கல்லோ!
தூருமை கொண்டு மைஎளுத
ராராரி ராராரோ
(மணியம்மா. திண்டுகொம்பு)
இப்பாடல் மோனை தொடையும், கற்பனை வளமும் செறிந்து கேட்போரைப் பிணிக்கும் வகையில் அமைந்துள்ளது,
ஜோடிப் பாட்டுகள்
ஜோடிப்பாட்டுகள் அகத்திணைக் கூறுகள் கொண்ட பாட்டுகளாகத் திகழ்கின்றன. ஒரு காதலன் தன் காதலி கள்ளிப்பழம் சாப்பிடுவதைக் காண்கிறான். அவள் மீது கொண்ட காதல் பெருக்கின் காரணமாக இனிய பழமொன்றைத் தருவதற்கு முன்வருகின்றான். அவளோ நீ கொடுக்கும் வாழைப்பழம் எனக்கு வேண்டாம். உன் வாயுறவே போதும் என்று பதில் அளிக்கிறாள். அவளது எச்சரிக்கை அறத்தின் பாற்பட்டதாகவே உள்ளது.
இட்டேறி கள்ளிபளம்
இந்தா நங்கெ வாளபளம்
வாளபளம் வேண்டாம் மச்சான் - உன்
வாயுறவே போதும் மச்சான்
(சந்திரன், செம்பக்காடு)
இப்பாடல் நமது சங்கப் பாடல்களில் வரும் கையுறை மறுத்தல் என்ற துறை வகையை நினைவுறுத்து வதாக அமைந்துள்ளது.
காதலர்கள் இரவு நேரத்திலும், பகல் நேரத்திலும் தனியாகச் சந்தித்து உறவு கொள்வார்கள். அவர்கள் சந்திப்பிற்கு ஏராளமான இடையூறுகள் ஏற்படும். அத்தகைய இடையூறுகளையெல்லாம் களைந்து இருவரும் ஒன்று சேர்வர். மலைப்புலயர் பாடல்களிலும் காதலர் கூட்டங்கள் குறித்த செய்திகள் காணப்படு கின்றன.
மலைக்கி மலையோரம்
மாடு மேயும் புல்லோரம்
செடிக்குச் செடியோரம்
சேர்ந்துவர மாட்டியா?
(பழனியம்மா, கணக்காயம்)
உச்சி மலை மேலே
உளி அடிக்கும் ஆசாரி
சத்தம் கொண்டு உளி அடிச்சா(ல்)
சாதம் கொண்டு நா வருவேன்
(கண்ணம்மா, பொங்கம்புளி)
இப்பாடலில் குறிப்புப்பொருள் எவ்வளவு அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கலாம். உன் விருப்பத்தைத் தெரிவித்தால் நான் உடனடியாக வந்துவிடுகிறேன் என்பதை நாசுக்காகத் தெரிவிக்கிறாள்.
கோடாலி தோளிலெ இட்டு
கோம்பையிலெ போறெ புள்ளெ
கோம்பையிலெ மழை பேஞ்சா - உன்
கோசக்கம் நனையாதா!
கோம்பை என்ற சொல் ‘புதர்’ மண்டிக் கிடக்கும் காட்டு வழியைக் குறிக்கும். கோசக்கம் (கொசுவம்) என்ற சொல் சேலை முந்தானையைக் குறிக்கும். இப்பாடல் காதலியின் அழகினை வருணிப்பதாய் உள்ளது. ‘நலம் புனைந்துரைத்தல்’ என்றவாறு அழகினை புனைந்துரைப்பதோடு அவளது அழகு மழையில் கெட்டுவிடுமே என்று இரக்கம் கொள்வதாகவும் உள்ளது.
சில காதலர் ஊருக்கும் உற்றாருக்கும் அச்சப் பட்டுத் தம் காதலை நிறைவேற்ற முடியாமலே போவதுண்டு. உலை வாயை மூடினாலும் மூடலாம். ஊர் வாயை மூட முடியாது என்பார்களல்லவா? ஊராரின் அலர் குறித்தும் நமது இலக்கியங்கள் குறிப்பிடு கின்றன. காதலர் உடன்போக்கு நிகழ்த்துவதும் சில நேரம் நடைபெறுகின்றன. ஒரு காதலி உடன்போக்கு நிகழ்த்த தயாராக இருப்பதைப் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறாள்.
மூங்க வெட்ட போற பையன்
ஓங்கி வெட்ட மாட்டனா?
கருத்த புள்ளெய கண்ணுலெ
கண்டா தூக்கிவர மாட்டனா?
(பாப்பா, கணக்காயம்)
குடும்பத்தில் சிக்கல்
‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்று கூறுவர். இல்லறவாழ்க்கையில் ஓரிரு மாதங்கள் கழிந்த பின்னரே உண்மை குணங்கள் தெரியவரும். குடும்பத்தில் சிக்கல் எழும். அந்நேரத்தில் வெறுப்பும் கசப்பும் தோன்றும். சேர்ந்து வாழ விருப்பமின்றி பிரிந்து செல்கிற நிலைகூட ஏற்படும். அப்படி ஒரு பாடல்
பூசணி பூவே பூத்ததல்லோ இளம்பூவே
நாதியத்த மகன்கிட்டெ நானிருந்து
வாளமாட்டன்
பூசணி பூவே பூத்தல்லோ இளம்பூவே
நாதியத்த மகன்கிட்டெ நானிருந்து
வாள மாட்டன்
(பழனியம்மா, கணக்காயம்)
இளம்பூவே என்று விளிப்பதிலிருந்து இளம் வயது நங்கைக்கு ஏற்பட்ட இன்னலாகவே உணரமுடிகிறது.
முடிவுரை
மலைப்புலயர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் எதுகை, மோனை, ஓசை இன்பம் ஆகிய எல்லாப் பண்புகளையும் கொண்டுள்ளன. ஜோடிப் பாடல்கள் அகத்திணைக் கூறுகளைக் கொண்டுள்ளன. மலையில் வாழ்ந்த மக்கள் தம் தொழில், இயற்கை ஆகிய தன்மைக் கேற்ப பாடல்கள் பாடி மன மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர்.
“ஆதிவாசி மக்களின் வாழ்க்கை சிறந்ததா, நம்முடைய வாழ்க்கை சிறந்ததா, எது சிறந்தது என்று என்னால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. சில வழிகளில் அவர்களது வாழ்க்கை முறையே சிறந்தது என்று உறுதியாக நம்புகிறேன். அவர்களின் பண்பாட்டி லிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. உயர்ந்த நாகரிகமென்று சொல்லிக் கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிற நம் போன்ற மக்களைக் காட்டிலும் ஆட்டம் பாட்டங்களோடு வாழ்க்கையை அதிக மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றனர் ஆதிவாசிகள்” என்று முதல் பிரதமர் பண்டிட் நேரு (1952) கூறியதை இங்கே நினைவு கூரலாம்.
Foot Notes and References
1. Literature, whether presented in spoken form,as is now our custom, in writing consists ofbeautiful or otherwise notable utterances (Bloomfield,1935:21-22) quoted in John Lyons, 1981:296.
2. அகத்தியலிங்கம், ச. (1999) கவிதை உருவாக்கம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
3. சண்முகம்,செ.வை. (2003) மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
4. மலையருவி நூல் (2014) சரசுவதிமகால் நூலகம், தஞ்சாவூர், 1958.