எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இந்த நிலம் அமைந்திருக்கிறது. ஆனால் பெரும் பேராசை கொண்ட சில மனிதர்கள் இத்தனை பெரிய நிலத்தைத் தனக்கானதாக மாற்றிக் கொள்ள ஓயாமல் முயற்சி செய்து வருகின்றனர். அப்போது சமூக அமைதி பாதிக்கப்பட்டுச் சீர்குலைகிறது. பொது அமைதியை மீட்டெடுப்பதில் இலக்கியம் கணிசமான இடத்தைப் பெற்றிருக்கிறது. சங்க காலத்திற்கு முற்பட்ட தொல்காப்பியம் தொடங்கிப் பல இலக்கியங்கள் மனிதனை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை என்று வள்ளுவத்தைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறோம். இருப்பினும் காலந்தோறும் இலக்கியங்கள் படைக்க வேண்டிய அவசியம் என்ன?

devadevan bookஒவ்வொரு காலகட்டங்களிலும் வெவ்வேறு சூழல்களால் வெவ்வேறு பிரச்சினைகளை மனித சமுதாயம் எதிர்கொள்கிறது. பாதிக்கப்பட்ட மனங்களை ஆறுதல்படுத்தவும், சிக்கல்களுக்கான தீர்வு காணவும் எல்லா காலத்திலும் இலக்கியங்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற கவிஞர் தேவதேவனின் கவிதைத் தொகுப்பு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலில் இயற்கையும் ஆன்மீகமும் இழையோடிக் கிடக்கின்றன.

கவிஞர் தேவதேவனின் படைப்புகளில் எளிய நடையும், காட்சிப் படிமமும் குடிகொண்டிருக்கும். இயற்கையின் பேரழகை ரசனை குன்றாமல் படைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன வாழ்க்கையில் ரசிக்க மறந்த தருணங்களை, மீண்டும் படைத்துக் காட்டி மனித மனங்களை இளைப்பாற வைக்கிறார். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் வாழ்க்கையின் அழகிய தருணங்களைக் காணாமல் செல்லும் மனிதர்களை, பொருளாதார வேட்டையை முதன்மையாகக் கொண்ட மனிதர்களை முழுமையாக எதிர்க்கின்றன கவிதைகள். கவிதைக்குப் புற அரசியல் தேவையில்லை என்று வாதிடும் கவிஞர் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் தவறவில்லை.

இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் முன்னுரை ஆழமான பொருளுடையது. மொத்தம் ஐம்பது தலைப்புகளில் கவிதைகளைப் படைத்திருக்கும் கவிஞர் இந்த நூலுக்கு முன்னுரையே வேண்டாம் என்கிறார். "தாகம் கொண்ட மண்ணால் உறிஞ்சப்பட்ட நீரைப் போல் சொற்கள் சுருங்கிச் சுருங்கி மறையவும் மூண்டதொரு மௌனம் முன்னுரை வேண்டாம் என்று வலியுறுத்துகிறது" என்ற படைப்பாளரின் காரணம் சிந்தனைக்குரியது. கவிதைகள் பற்றிய விமர்சனத்திற்காகத் தான் காத்திருக்கவில்லை என்று உறுதியோடு கூறும் தேவதேவன் ஒருவேளை தன்னுடைய கவிதைகள் வாசகர்களுக்கு ஒரு மருந்தாகவோ, சத்துணவாகவோ பயனளிக்கிறதா என்று பார்க்கும் ஆவல் கவிதை எழுதியபோது இருந்ததாக முன்னுரையில் பகிர்ந்து கொண்டிருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது. சீர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் இலக்கிய உலகத்தின் புதிய வரவு என்பதில் ஐயமில்லை.

எத்தனையோ நூற்றாண்டுகளாக மனிதஇனம் இந்த மண்ணில் தழைத்திருந்தாலும் சமீப காலமாக எதை நோக்கி ஓடுகின்றோம் என்ற தெளிவில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நின்று நிதானித்து வாழ்க்கையின் பரவசப் பொழுதுகளை அசைப்போட்டுப் பார்க்க மனிதனுக்குப் பொறுமை இல்லை. கேட்டது கேட்டபடி கிடைத்துவிட வேண்டும், நினைத்தது நினைத்தபடி நடந்து விட வேண்டும் என்ற வேட்கை ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மனிதன் சொல்லும் சமாதானத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இயக்கம் தான் வாழ்க்கை என்று கற்பிக்கப்பட்ட உலகத்தில், இயங்காமல் நின்று விட்டால் வாழ்க்கை முடிந்துவிடும் என்ற அரிய கண்டுபிடிப்பைச் சொல்லிக் கொண்டிருக்கிறான் மனிதன். இந்த விடையின் வழியாகத் தன் வாழ்க்கையின் இயலாமைகளுக்குத் தனக்குத் தானே சமாதானம் கற்பித்துக் கொள்கிறான். இதை எப்படி ஒரு கவிஞனால் ஏற்றுக்கொள்ள முடியும்!

கடமைக்காக வாழ்பவன் சுவாரசியமான வாழ்க்கையைத் தவறவிடுகிறான். வலி மிகுந்த வாழ்க்கை அவனுக்குப் பரிசாகிறது. இதை விளக்கும் விதமாக ஒரு தோணிக்கும் தீவுக்குமான வேற்றுமையை ‘துடுப்பு வலித்தல்’ என்ற கவிதை சொல்ல முற்படுகிறது. அசையாமல் இருக்கக் கூடிய பொருள்கள் தீவுகளாக மாறிப் போகின்றன, அசையும் தன்மை கொண்டவை தோணிகளாக உருப்பெறுகின்றன. ஒரு நொடி நின்று விட்டால் கூட வாழ்க்கை முடிந்து போய்விடும் என்ற பரிதவிப்பில் ஓயாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். இப்படித் தோணிக்கும் - தீவுக்குமிடையில் மனித குலம் அல்லாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருத்தப்படுகிறார் கவிஞர்.

இந்தப் பயணத்தில் ஓயாமல் துடுப்பு போட்டுக் கொண்டே இருப்பதால் துடுப்புகளின் வலி உங்களுக்குப் புரியாதா என்ற ரகசிய கேள்வியை எழுப்புகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கொண்டாட்டமாக அனுபவிப்பதற்காகத்தான் இந்தப் பூமிக்கு வந்திருக்கிறது மனித இனம். ஆனால் எதற்காக வந்திருக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் எதையோ பிடிப்பதற்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்ட மனிதர்களை இரக்கத்தோடு பார்க்க வைக்கிறது கவிதை. 

கவிஞனின் தர்பாரில் அன்பு பெருக்கெடுத்து ஓடும்; தவறு செய்தவனுக்கான தண்டனை அவனைத் திருத்தும் மன்னிப்பாக மாறும்; அப்போது அந்தச் சமுதாயம் இலட்சியவாத சமுதாயமாக உருவெடுக்கும். இலட்சியவாத சமுதாயம் அமைவதற்கு வழி செய்து தரக் கூடியவை இலக்கியங்களைத் தவிர வேறில்லை. இந்த உலகத்தின் ஆகப்பெரிய வியப்பு தரும் செயல்பாடு என்பது இன்னும் கூட குழந்தைகள் பிறப்பதும், பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே வளருவதும் தான். குழந்தைகளைக் கொண்டாடும் சமூகம் வன்முறைக்கு எதிர்வினை ஆற்றி விடுகிறது. வலங்கைமான் நூர்தீன் என்ற கவிஞர் குழந்தைகள் வாயில் வைத்துக் கடிக்கும் பென்சிலைப் பற்றி ஒரு கவிதை எழுதி இருப்பார். பென்சிலை வாயில் வைத்துக் கடிக்கும் பிள்ளைகளை நாம் கடிந்து கொள்வது உண்டு. ஆனால் கவிஞரோ அந்தக் குழந்தைகளைத் திட்டாதீர்கள் என்று வக்காலத்து வாங்குகிறார். அவர்கள் எச்சில் பட்டுப் பென்சில் துளிர்க்கலாம் என்று சொல்வதற்கு ஒரு படைப்பு மனம் வேண்டும். இந்த உலகத்தை அன்புக் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பதை இதைவிட அழகாக சொல்லி விட முடியாது

அந்தப் படைப்பு மனம்தான் மனிதர்களுக்கிடையில் பாலங்களை உருவாக்கச் சொல்கிறது. அப்படித்தான் கவிஞர் தேவதேவன் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமிடையில் அன்புப் பாலத்தை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார். அப்படி அன்புப் பாலத்தை உருவாக்கினால், அங்கே ஆறுகளும் – வானமும் - வானத்தை வட்டமிடும் பறவைகளும் - பறவைகள் இளைப்பாற மரங்களும் - அருகிலேயே அமைதியைப் பரப்பும் மனிதர்களும் தோன்றி விடுவார்கள். அதனால் ஒரு கவிஞனாக நான் எப்போதும் பாலத்தை வரைந்து கொண்டே இருப்பேன் என்று சொல்வதன் வழியாக இந்த நூலை வாசிக்கும் வாசகர்களையும் அன்புப் பாலம் கட்டத் தூண்டுகிறார்.

இன்னொரு பக்கம் மரணம் பற்றிய கருத்தியலைப் பதிவு செய்கிறது தொகுப்பு. மனிதர்கள் பிறப்பைக் கொண்டாடுவதற்குத் தயாராக இருக்கின்றனர். ஆனால் இறப்பு என்றால் அவர்களுக்குள் சோகம் குடிகொண்டுவிடுகிறது. எப்போதுமே மரணம் வேதனைக்கு உரியதா என்பதை மனசாட்சியில் கைவைத்து ஒவ்வொருவம் தனக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும். முழுமை பெற்ற வாழ்க்கையில் இருந்து விடை பெற்றுக் கொள்ளும் பிரிவு உபசார விழா தானே மரணம்! அதிலே வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழும். பல ஆண்டுகள் வளர்ந்து காய்த்த பனைமரம், தான் அழியக்கூடிய ஒருநாளில் தன்னுள் இருந்து பூக்களை உற்பத்தி செய்துவிட்டு மரணத்திற்குப் பூங்கொத்து கொடுத்துத் தானே வரவேற்கிறது. மனிதன் மட்டும் ஏன் அந்த முழுமையை நிராகரிக்கிறான்.

வாழ்க்கை முடிந்துவிட்ட பாரிஜாத மலர்கள் மரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுகின்றன. அப்போதும் அவை சிரித்துக் கொண்டே இருப்பதாக கவிஞர் கற்பனை செய்கிறார். தன் பிறப்பிடமான மரத்தை விட்டு நிலத்தில் விழுந்த போதும் சொர்க்கத்திற்கு வந்தவர்களைப் போலச் சிரித்துக் கொண்டே இருக்கின்றன என்கிறார் கவிஞர். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துத் தன் வீட்டில் இருக்கும் மேசையில் நீர் நிரம்பிய பாத்திரத்தில் அழகுக்காக நிரப்பி வைக்கும் போதும் எந்த வருத்தமும் இன்றி சிரித்துக் கொண்டே இருக்கின்றன என்ற ‘பெருவாழ்வு’ என்ற கவிதை மனித வாழ்க்கையின் முழுமையை ரசிக்கச் சொல்லித் தருகிறது.

முழுமை பெற்ற வாழ்வைத் தங்கள் வசப்படுத்திக் கொள்ள மனிதர்களுக்கு ஒரு யோசனையை சொல்லித் தருகிறார் கவிஞர். கிளைக்குக் கிளை தாவும் குரங்குகள் வாய்ப்பு கிடைத்தால் வீட்டுக்குள் நுழைந்து விளையாடி அட்டகாசம் செய்கின்றன. பிறகு மாநகராட்சி ஊழியர்கள் வந்து அந்தக் குரங்குகளை விரட்டியடிக்கின்றனர் என்பது வேறு கதை. உண்மையில் குரங்குகள் மனித வீட்டுக்குள் நுழைந்து விட்டனவா அல்லது காட்டை அழித்து மனிதன் வீடு கட்டிக் கொண்டானா என்ற கேள்வியைக் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். குரங்குகளையும் குழந்தைகளாகப் பாவிக்கும் இந்தப் படைப்பு தயவுசெய்து குழந்தைகளான குரங்குகள் மீதும் அக்கறை கொள்ளுங்கள், அவையும் வாழ்வதற்கு வழி செய்யுங்கள் என்பதாக அந்தக் காட்டு மரங்கள் நினைத்துக் கொள்வதாக எழுதுவதற்கு ஒரு கவிஞனால் தான் முடியும்! இயற்கையை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட மனித சமூகம் இயற்கை வாழ்வுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சூழலியல் சார்ந்த பார்வையைத் தொலைத்துவிட்டு, தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதால் உண்டாகும் இயற்கைச் சீற்றங்களை அனுபவித்து வருகிறோம். இயற்கைச் சீற்றத்தைத் தடுக்க இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது இன்றைய தேவை. எனவே இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்ல இத்தொகுப்பு முழுமையாகத் துணை நிற்கிறது.

எப்போது நினைத்துக் கொண்டாலும் நண்பர்களின் இருப்பு நம்மை மகிழ்ச்சி கடலில் நீந்த வைக்கும். இரத்த சம்பந்தம் இல்லாத உறவுகளாக இருக்கக்கூடிய நட்பு, தன்னலமற்ற நிலையில் தோள் கொடுத்து நம்மைத் தூக்கி நிறுத்தும். ஒருவேளை நண்பர்களைப் பார்க்க முடியாத சூழல் ஏற்படும் போது அவர்களை நினைத்துக் கொண்டதும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை யாரால் தரமுடியும்? அப்படி ஒரு பரவசக் காட்சியை இந்தத் தொகுப்பு வாசகன் மனக்கண்முன் கொண்டு வந்து சேர்க்கிறது. தன் நண்பனை நினைக்கும் ஒருவன் மனக் கண்களிலே அவனுடைய உருவத்தை நினைத்துப் பார்க்கிறான். விழிகள், புருவங்கள், நெற்றி, தலைமுடி, மூக்கு, மீசை, புன்னகை என்று ஒவ்வொன்றாகத் தன்னுடைய மனக்கண்ணில் வரைந்து விடுகிறான்.

அவனுக்கே தெரியாமல் அவன் வரைந்திருந்த நண்பனின் ஓவியம் சுவாசிப்பதை உணர்கிறான். கடைசியாகக் காதுகளைத் தீட்டியபடி "எப்படி இருக்கிறாய் நண்பா" என்று கேட்டபடி அவர்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது. இப்படிப் பல மணி நேரம் மௌன உரையாடலை மனச்சித்திரத்தின் வழியாக நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுதுகளை ‘இனிமை ததும்பும்’ என்று குறிப்பிடுகிறார் கவிஞர். நினைவுகள் என்பது ஒருவகை சந்திப்பு, மறதி என்பது ஒரு வகை பிரிவு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து விடுகிறது கவிதை. அதே கவிதையில் மீசை குறித்த எதிர்நிலையைப் பேசுகிறார்.

மீசை என்பது ஆளுமை என்பதாகக் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த கற்பிதங்களின் மீது கல் எறிந்து போகிறார் தேவதேவன். வீரமற்ற செயல்களைச் செய்யும்போது, நினைக்கும் போது அந்த ஆணை உனக்கு எதற்கு மீசை என்று திட்டுவது வழக்கம். இப்படிப்பட்ட வசைமொழிகளை வசைபாடும் விதமாக, ஒரு சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கக்கூடிய பெண்ணினத்தை ஆண்களுக்கு அடங்கி இருக்க வேண்டியவர்கள் என்று பேசுவது பிற்போக்குத்தனம் என்றும் பெண்ணையும் ஆணையும் சமமாக நினைப்பதற்கு இந்தச் சமுதாயத்தில் பல தடைகள் இருக்கின்றன என்றும் ஆண் பெண்ணை விட உயர்ந்தவன் என்ற வகையில் பேசும் வசனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

முகத்தில் மிகுந்த பொலிவோடு செல்லக்கூடிய ஒரு பெண்ணையும் ஆணையும் காட்சிப்படுத்தும் ஒரு கவிதை, பெண்ணின் முகத்தில் இருக்கும் பொலிவு ஆணின் முகத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்று நெருடலாக இருக்கிறதே என்று குற்றம் சொல்கிறது.

"நிலவுக்கு இல்லாத
சூரியனுக்கு இல்லாத
எந்த மலருக்குமே இல்லாத
இந்த மீசையும் தாடியும்
ஆணுக்கு மட்டும் எதற்கு
ஆண் தான் எதற்கு
சொல்லுங்கள் என் அன்னையே"

என்ற கவிதையில் ஆணாதிக்கத்தின் மீதான ஒரு படைப்பாளியின் கோபத்தை உணர முடிகிறது. படைப்பாளி என்பவர் ஆண் - பெண் என்கின்ற பாலினத்துக்குள் அடக்க முடியாதவர், அடங்க மறுப்பவர் என்பதை இந்தக் கவிதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கவிஞர்கள் எல்லைக் கோடுகளுக்கு எதிரானவர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். உலகத்தையே தனது வீடாக நினைப்பவர்கள். ஒட்டுமொத்த மானுட சமுதாயத்தையும் தன் சொந்த உறவுகளாகப் பார்க்கத் தெரிந்தவர்கள், நேசிக்க தெரிந்தவர்கள். அவர்களுக்கு எல்லைக் கோடுகளும், இன்னும் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளும் உடன்பாடற்றவை. அதனால்தான் அடுக்குமாடி கட்டடங்களைக் கல்லறைகள் என்று காட்டமாகப் பேசுகிறது கவிதை. சமீபகாலமாகப் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் இன்று தெரியாமல் வாழ்வதை நாகரிகமாக நினைக்கும் மனநிலை அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் யாரும் இல்லாத ஆதரவற்ற நிலையில் முதியோர்களும் குழந்தைகளும் பல நேரத்தில் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர் என்ற தினசரி செய்திகள் வருத்தமளிக்கின்றன.

இந்தச் அவலங்களைப் பார்க்கும் கவிஞர் அடுக்குமாடி குடியிருப்புகளை வன்மையாக எதிர்க்கிறார். மரங்களும், மலைகளும், வானத்தைப் பார்த்தபடி வானத்தோடு தனக்கான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. மழையையும், வெளிச்சத்தையும், காற்றையும் தன்னுடன் உறவாடக்கூடிய உறவுகளாகக் கருதிக் கொள்ளும் போது அடுக்கக குடியிருப்புகள் தேவைதானா என்ற கேள்வியைச் சமுதாயத்தின் முன் வைக்கிறார். மேலும் அடுக்கக வீடுகளை மலைகளில் குடியேறிய வாழ்க்கையாக இத்தொகுப்பு விமர்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தாவரங்களும் விலங்குகளும் தன் இயல்புக்கு மாறாமல் ஒரு நாளும் நடப்பதில்லை. ஆனால் மனிதனோ எதற்கும் கட்டுப்பட மறுத்துப் பேராசை பிடித்தவனாக இயற்கையை சூறையாடி தனக்கான அழிவையும் தேடிக் கொள்கிறான் என்று கவிதைகள் ஆதங்கப்படுகின்றன.

பிறப்பின் அடிப்படையில், சமயத்தின் அடிப்படையில், சாதியின் அடிப்படையில் உண்டாகக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைக் களைவது இலக்கியத்தின் முக்கிய நோக்கம். மக்கள் கவிஞர் இன்குலாப் ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் என்று பாடி எந்தச் சமயச் சின்னமும் இல்லாத பரந்த நெற்றியுடன் கூடிய மனிதர்களைப் பார்க்க ஆசைப்படுகிறார். அந்த நேரத்தில் மனிதம் பூமியில் நிரம்பி வழியும் என்று நம்புகிறார். இது போன்ற சாயலைக் கொண்ட ‘திசைகள்’ என்ற கவிதையில் கடவுளின் அரசாட்சி சொல்லப்படுகிறது.

"திசைகளைக் கைவிட்ட
அக்கணமே வந்து நின்றது காண்
திசைகள் அற்ற பெருவெளி
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்"

என்ற வரிகள் ஒரு கவிஞனின் உள்ளக்கிடக்கையை, மனிதத்தால் ஒன்றுபடுவோம் என்ற உணர்வை வெளிப்படுத்துகின்றன.

கவிஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இந்த நூல் அடையாளப்படுத்தும் அழகே தனியழகு! கவிஞர்களை - படைக்கும் கடவுளான பிரம்மாக்கள் என்று சொல்லுவது உண்டு. மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லும் தேர்தலில் நிற்காத சட்டமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லுவது உண்டு. இந்தச் சமுதாயத்தை மீட்டெடுக்கக் கூடிய மீட்பர்கள் என்று சொல்லுவது உண்டு. இவற்றையே திருப்பிச் சொல்வதற்குக் இன்னொரு கவிஞர் தேவையில்லை. இந்தக் கவிஞருடைய பார்வையில் கவிஞர்கள் யார் என்ற பதிவு மிகுந்த கவனத்திற்குரியது.

"கடவுள் தனது
அன்பையும் செய்தியையும் பரப்புவதற்கான
தனது மாற்றுரு போன்ற பிரதிநிதிகள் ஆக
கவிஞர்களைப் படைத்தார்
கவிஞர்கள்
கடவுளின் இந்த அன்பையும் செய்தியையும்
கவிதைகளாகப் படைத்தார்கள்"

என்ற வரிகள் ஒரு கவிஞன் எப்படிப்பட்டவன் என்பதையும் ஒரு கவிதை என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் மறைமுகமாக உணர்த்தி நிற்கின்றன. குரலற்றவர்களின் குரல்களாக ஒலிக்கும் கவிஞர்களின் கவிதைகளுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழக்கூடிய மக்களால் எந்த காலத்திலும் நன்மை நடக்கப் போவதில்லை. சகமனிதனுடைய துன்பத்தில் பங்கு கொள்ளவில்லை என்றால் இந்தப் பூமி மீது எப்படி உரிமை பாராட்ட முடியும்?

மற்ற மனிதர்கள் அல்லல்படும்போது நமக்கென்ன என்று இருப்பது மனிதத்திற்கு முரணானது. அன்பு ஒன்றுதான் இந்த உலகத்தை ஆளும் ஆற்றல் பெற்றது. இப்படி மனிதநேயம் கொண்ட கருத்துக்களை விதைக்கக் கூடிய கவிதைகளை இத்தொகுப்பு வெளிப்படுத்தி நிற்கிறது. அதே நேரத்தில் கவிஞரின் சிந்தனைகளில் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண போர்வைக்கும் இலக்கியத் தகுதி கிடைத்து விடுகிறது. கவிஞரின் பார்வையில் தான் அதிக மகிழ்ச்சியுடன் மக்கள் வானவில்லை பார்ப்பார்கள், அதே பரவசத்தோடு வானவில்லும் மக்களைப் பார்க்கும் என்ற நம்பிக்கை விதைக்கப்படும். கவிஞரின் செவிகளுக்கு மட்டும்தான் மரங்கள் காற்றின் வழியாகப் பாடலை இசைக்கும். கவிஞரின் படைப்புகளில்தான் காமமற்ற காதல் தரிசனமாகும். உணவில்லாமல்கூட வாழ்வதற்கு சாத்தியம் ஏற்படலாம், ஆனால் அன்பில்லாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது. எனவே இந்த மனித சமுதாயத்தை அன்பை நோக்கித் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இத்தொகுப்பை வாசிக்க வேண்டியது மனித குலத்திற்கு அவசியமாகிறது!

நூல் பெயர் : இனி ஒரு விதி செய்வோம்

ஆசிரியர் : தேவதேவன்

விலை : 100/-

வெளியீடு : சீர்மை பதிப்பகம், சென்னை

- முனைவர் மஞ்சுளா