எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் எண்ணற்ற படைப்புகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தார் மிக நேர்த்தியாகப் பதிப்பித்துள்ளனர். அந்த வரிசையில் “தனுஷ்கோடி ராமசாமியின் படைப்பாக்கத் திறன்” என்ற திறனாய்வு நூல் அறிமுகக் கூட்டம் 24.12.17 அன்று சாத்தூர் தனுஷ்கோடி அரங்கில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாத்தூர்கிளை மற்றும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அறக் கட்டளையின் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் தலைமை ஏற்றுப் பேசியதாவது.

“1970களில் தனுஷ்கோடி ராமசாமியை முதன் முதலாக எட்டயபுரம் பாரதி விழாவில் சந்தித்தேன். த.ரா. அன்பின் திரட்சி. அருளின் திரட்சி. கனிவின் திரட்சி. சிறுகதைகளில் ஜெயகாந்தன் பெண்விடுதலையையும் மனித நேயத்தையும் பேசினார்.  புதுமைப்பித்தன் தன் கதைகளில் பல உட்பொருள்கள் வைத்து எழுதினார். ஆனால், த.ரா. அடித்தட்டு மக்களின் வறுமை, இயலாமை இவைகளின் பரிதாபத்தை  கதைகளாக்கினார். இந்த பரிதாபத்தை தமிழ் இலக்கிய உலகில் இவ்வளவு ஆழமாக  நெஞ்சைப் பிழியும் வகையில் இவரைப்போல் எழுதியவர்கள் எவருமில்லை. பெண்களை தோழமை யோடு நேசிக்கக் கற்றுக் கொடுத்தார். தோழமை என்ற சொல்லில் அவ்வளவு ஈடுபாடு. தோழராகப் பழகுவதில் அப்படிப்பட்ட உச்ச நிலையில் இருந்தவர் த.ரா.

நூலாசிரியர் அகிலா, தேன் உண்டு கிறங்கி பூவுக்குள்ளேயே கிடக்கும் வண்டு போல த.ரா.வின் படைப்புகளுக்குள் தன்னை ஒப்புவித்து, நான்கு ஆண்டுகள் அதற்குள்ளேயே இருந்து மிக நுட்பமாக ஆய்வு செய்துள்ளார்.  த.ரா.வின் குறுநாவலை நெடுங் கதைகள் எனச் சொல்கிறார். அதற்கான விளக்கத்தையும் முன்வைக்கிறார். எந்தவித சமரசமும் இல்லாமல் நேர்மையாக ஆய்வு செய்திருப்பதை இந்த நூலின் வழியாகப் பார்க்க முடிகிறது. முற்போக்கு இலக்கியம் குறித்த நூலாசிரியரின் விளக்கம் வியப்பில் ஆழ்த்து கிறது. இலக்கியக் கல்விப்புலம் மட்டுமே சாராமல் மருத்துவம் சார்ந்த கல்வி பயின்றவர் என்பதால் மனதில் பட்டதை துணிச்சலாகச் சொல்கிற மனோபாவம் இருப்பது பாராட்டுக்குரியதுÓ என்றார்  பொன்னீலன் அவர்கள்.

முனைவர் நையினார்  அவர்கள், இதுபோன்ற முழுமையான திறனாய்வு நூல்கள் அதிகம் வரவேண்டும் என்றார். நூல்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் அதன் தரத்தை பறைசாற்றும் விதமாக அவைகளோடு பயணப்படுகிற நியூ செஞ்சுரி நிறுவனத்தார் பாராட்டுதற்குரியவர்கள். அந்த வகையில், மதுரை மாவட்டகிளை மேலாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பங்கேற்றார்கள். இப்படியான தரமான நூல்களை வெளிக்கொணர்வதே எங்கள் நோக்கம் என்றும், இந்தப் புத்தகத்தின் மூலம் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியை முழுவதும் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

நூலாசிரியர் அகிலா ஏற்புரை வழங்கினார். “கணவர், மகன் என்ற சிறிய வட்டத்திற்குள் இருந்த என்னை சமூகம் நோக்கிய விசாலமான பார்வைக்கு உந்தியது த.ரா.வின் எழுத்துக்கள். அறிவுவயப்பட்ட ஆரோக்கியமான ஆண்பெண் நட்பையும், இந்தச்  சமூகத்தைப் பற்றி சிந்திக்கிற சமூகத்திற்காகப் போராடுகிற அத்தனை பேரும் தோழர்கள்தான் என்கிற உன்னத தத்துவத் தையும் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது த.ரா.வின் எழுத்துக்கள்.

ஆண்களுக்கு எதிராக ஆண்களை முற்றிலும் புறக்கணிப்பது த.ரா.வின் பெண்ணியமல்ல. பெண்கள் தங்கள் உணர்வுகளை, தன்மானத்தை, சுயமரியாதையை வீழ்த்துகிறவர்களுக்கு எதிராக, தங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்காக தொடுக்கப்படும் போர் என்கிறார். இந்த நூல் இத்தனை வெளிப்படையாக வந்திருப்பதற்குக் காரணம் நெறியாளர் இரா.காமராசு அவர்கள். தன் தனிப்பட்ட சிந்தனைகளைத் திணிக்காமல், கருத்து சுதந்திரம் கொடுத்தவருக்கு நன்றி. த.ரா.வை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் கம்பீரமான அட்டைப்படமும், அழகான அச்சுக்கோப்பும் மேலும் அழகு சேர்க்கிறது.

இந்த விழாவினை அழகாகத் திட்டமிட்ட எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் மகன் மருத்துவர் அறம் அவர்கள் பேசினார்கள். தன் அப்பாவை நினைக்கச் செய்கிற நெகிழ்வான தருணம் இது.  நிழல், ஒரு கவிதை குறுநாவலை உளவியல் நோக்கில் ஆய்வு செய்திருக்கும் விதம் பிரமிப்பாக இருக்கிறது. நூலாசிரியருக்கு நன்றி எனவுக் கூறினார்.

த.ரா. அவர்களின் துணைவியார் சரஸ்வதி அம்மாள், மருமகள் மருத்துவர் மலர்விழி மற்றும் பேரக்குழந்தைகள் நிகழ்வினை சிறப்பித்தனர். கூட்டத்தை  கிளைச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Pin It