எடப்பாடி பழனிச்சாமி அணி என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணி என்றும் இரண்டு அணிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன, அ.தி.மு.கவில். அது மட்டும் இல்லாமல் சசிகலா என்றும், டி.டி.வி.தினகரன் என்றும் கொசுறுகளும் கூட அங்கே இருக்கின்றன.

அவையெல்லாம் நமக்குத் தேவையில்லை. அது குறித்துப் பேசப்போவதும் இல்லை. அது அவர்கள் உள்கட்சிப் பிரச்சனை.

ஆனால், 18-10-2022 அன்று காலை தமிழக சட்டமன்றக் கேள்வி நேரத்தின் போது அவையை நடத்தவிடாமல் கூச்சல் குழப்பம் செய்த எடப்பாடி அணியினரை வெளியேற்றினார் அவைத்தலைவர் அப்பாவு அவர்கள்.

வெளியேற்றப்பட்ட எடப்பாடி, செய்தியாளர்களிடம் “முதல் அமைச்சரின் ஆணைக்கிணங்க ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-யை பிடீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறார்’’ என்றார்.

மறுநாள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது, முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் அரை மணி நேரம் ரகசியம் பேசினாராம்.

அதற்குப் பன்னீர் செல்வம் ஒன்று நிரூபி, அல்லது அரசியலை விட்டு வெளியேறு என்று காட்டமாகப் பதில் சொன்னார். அதற்கு இதுவரை பழனிச்சாமியிடம் இருந்து பதிலே வரவில்லை.

பிரச்சனை இதுதான். எடப்பாடியின் அணியைச் சேர்ந்த உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அங்கீகரிக்கச் சொன்னார் எடப்பாடி.

விதிகளுக்கு உள்பட்டு அதை ஏற்க மறுத்தார் பேரவைத் தலைவர். இதை முன் கூட்டியே அலுவல் ஆய்வுக் குழுவின் போதே அவர் தெரிவித்துவிட்டார்.

ஆனாலும் அமளி,ஆர்ப்பாட்டம் என்பதோடு, எந்த ஆதாரமும் இல்லாமல் தி.மு.க மீது குற்றம் சொல்லிவிட்டார் எடப்பாடி.

உண்மை என்னவென்றால் ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கையும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் பேரவையில் வைக்கப்படும் போது அதன் ‘சூட்டை’த் தாக்குபிடிக்க முடியாது என்பதனால் உப்புக்கும், புளிக்கும் உதவாத ஒரு நாடகத்தை நடத்தி அவையை விட்டு வெளியேறிவிட்டார் எடப்பாடி.

அதற்காக அவர் கையாளும் அரைவேக்காடு அரசியல் நாடகம்தான் தி.மு.க மீது பழிபோடுவது.

கயிறு எட்டும் வரைதான் ஓட முடியும். அதன் பின்னர் வட்டத்தை விட்டு வெளியே போக முடியாது.

மக்களுக்கான அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தி.மு.க மீது பழிபோடும் “தனிநபர்” அரசியல்வாதியாக மாறி விட்டார், பாவம் எடப்பாடி!

Pin It