1972 ஆம் ஆண்டு, முழக்கத்தோடு தொடங்கப்பட்ட அதிமுக, இப்போது முனகலோடு ஊர்ந்து கொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது!

ஜெயலலிதாவிற்கு மக்களிடம் ஒரு செல்வாக்கு இருந்ததால், எம்ஜிஆருக்குப் பிறகும், அந்தக் கட்சி தொடர்ந்தது! ஆனால் ஜெயலலிதாவுக்குப் பின்னால் கட்சியை வழி நடத்தக் கூடிய ஒரு தலைமையும், ஆளுமையும் இல்லாமல் போய் விட்டது! இப்போது அந்தக் கட்சி நான்கு துண்டுகளாக உடைந்து கிடக்கிறது! ஒப்பீட்டளவில் எடப்பாடிக்குக் கொஞ்சம் கூடுதல் ஆதரவு இருக்கலாம். ஆனால் அதுவும் கூட, இனிமேல் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்குப் போதுமானதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் !admk head officeமற்ற மூன்று துண்டுகளும் மிகப் பலவீனமாக உள்ளன. சசிகலா அரசியலில் இருக்கிறாரா, இல்லையா என்பது அவருக்கே தெரியாத ரகசியமாக இருக்கிறது. டிடிவி தினகரன் பணத்தையும், சாதியையும் மட்டுமே நம்பி இருக்கிறார். எடப்பாடிக்குச் சரியான போட்டியாக வருவார் என்று நம்பப்பட்ட ஓபிஎஸ் நிலைமை கவலைக்கிடமாக ஆகி இருக்கிறது!

ஓபிஎஸ் தன் கட்சிக்கென்று ஒரு தொலைக்காட்சி, ஒரு பத்திரிகை வேண்டும் என்று கருதியதாகவும், அதன் முதல் கட்டமாக, புரட்சித் தொண்டன் என்னும் ஏட்டினைத் தொடங்கியதாகவும் நாம் அறிகிறோம். ஆனால் அந்த ஏடு தொடங்கப்பட்ட ஓராண்டிற்கு உள்ளாகவே முடங்கிக் கிடக்கிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் கூடச் சரியாக வருவதில்லை என்று சொல்வதாக ஒரு தொலைக்காட்சி கூறுகிறது. எனவே எந்த நிர்வாக இயந்திரமும் இல்லாமல், தன் கூட ஒரு பத்துப் பேரை வைத்துக் கொண்டு, ஓபிஎஸ் அதனை ஒரு கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். விரைவில் ஏதோ ஒரு ஜோதியில் கலந்து விடுவார் என்று கூறுகிறார்கள்!

இப்படி மூன்று பிரிவுகள் அதிமுகவில் வலிமை இழந்து கிடந்தாலும், அதனைப் பயன்படுத்தி எடப்பாடி தன் கட்சிப் பிரிவை வலிமையாக்கி விடவில்லை. அங்கேயும் உட்கட்சிச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று செய்திகள் வருகின்றன.

இப்படி அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து கொண்டிருப்பதில் நமக்கு மகிழ்ச்சி இல்லை. அப்படி நடந்து விடுமானால், அந்த இடத்திற்கு இன்னும் மோசமான இன்னொரு பிற்போக்குக் கட்சி வந்து நிற்கக் கூடும். அந்த நிலை தவிர்க்கப்பட்டு, அதிமுக எப்போதும் எதிர்க்கட்சியாகவாவது விளங்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்!

- சுப.வீரபாண்டியன்