கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்த நீதியரசர் ஆறுமுகச்சாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்த நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 18.10.2022 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டதால் அதை எதிர்கொள்ள அச்சமுற்ற பழனிச்சாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அணி எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை முன் வைத்து சட்டப் பேரவையில் அமளி செய்து வெளியேறினர்.

justice aruna and arumugasamyசுமார் 5 ஆண்டுகளாக 158 பேரிடம் விசாரணை நடத்திய நீதியரசர் ஆறுமுகச்சாமி ஆணையம் அளித்த 611 பக்க அறிக்கையின் முடிவுரையில் சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்பல்லோ நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டி, அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், மருத்துவர்கள் Y.V.C ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்” (948)

என்கிறது வள்ளுவம். நோய் என்ன? நோயின் காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

“காலாழ் களரில் நரியிடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்தக் களிறு “ (500)

என்றும் வள்ளுவர் கூறுகிறார். அதாவது வேல் ஏந்திய வீரரைக் கோர்தெடுத்தக் கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்று விடும்

ஆகிய இரண்டு குறட்பாக்களை அறிக்கையின் நிறைவில் நீதியரசர் ஆறுமுகச்சாமி குறிப்பிட்டு உள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில், அறிக்கை வெளியான பிறகும் அ.இ.அ.தி.மு.க தலைவர்களும் தொண்டர்களும் அமைதி காப்பதைப் பார்க்கும் போது அம்மையார் மீதான அவர்களின் அக்கறையின்மை தெளிவாகத் தெரிகிறது. இதைப் பார்க்கும் போது “தாசில்தார் வீட்டு நாய் இறந்தால் எல்லோரும் கவலைப்படுவார்கள். ஆனால் அந்த தாசில்தார் இறந்தால் ஒருவர் கூட கவலைப்பட மாட்டார்கள்” என்கிற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது. முத்தாய்ப்பாக அனைத்திற்கும் பொறுப்பாக சசிகலாவை விட்டு விட்டு ஏதும் சொல்ல முடியாது என்று ஆணையம் புள்ளி வைத்து விடுகிறது.

அதே போன்று, கடந்த நான்கு ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட 3,000 பக்கங்கள் கொண்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையினர் 17 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், போராட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை “டிவியில் பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும்’’ என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது அனைத்தும் பொய். தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும், பொறுப்பற்று இருந்த எடப்பாடியைச் சுட்டிக்காட்டுவதுடன், “சமூக விரோதிகளால்தான் தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்றும், ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அதற்கான ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அன்றைய முதல்வர் பழனிச்சாமி கூறியது பொய் என்பது ஆணைய அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. அம்மையார் ஜெயலலிதா மரணத்தை முன் வைத்துத் தர்ம யுத்தம் நடத்திய பன்னீர் செல்வம் விசாரணைக்கு வராமல் காலம் தாழ்த்தியதை ஆணைய அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.

இருவரும் ஒன்றிய அரசுக்குக் காவடி தூக்கி தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் முனைப்பு காட்டினார்களே தவிர தங்கள் தலைவியின் உயிர் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் துளியளவும் அவர்கள் மனதில் இல்லை என்பதை ஆணைய அறிக்கை படம் பிடித்துக் காட்டி உள்ளது.

இந்த இரண்டு ஆணைய அறிக்கைகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார். அதன்படி இந்தக் காலக்கட்டங்களில் முதல்வராக இருந்து குற்றவாளிகளுக்கு உறுதுணை புரிந்த முன்னாள் முதல்வர்கள் பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் இருவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு இணைந்து தண்டனைக்கு உள்ளாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போதுதான் சாமானியர்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படும்.

வழக்கறிஞர் இராம.வைரமுத்து