பணம் ஒரு மனிதனிடம் இருந்து அனைத்தையும் அழிக்கின்றது. வெட்கம், மானம், சுயமரியாதை போன்ற குணங்களைப் பார்த்து அது எள்ளி நகையாடுகின்றது. ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற அது கூட்டிக்கொடுக்கவும் தயங்குவதில்லை, அது யாரையாக இருந்தாலும் சரி. கேடுகெட்ட மனிதர்களும், உலுத்துப்போன அயோக்கியர்களும் மிக தாராளமாக ஒரு இடத்தில் பிரவேசிக்க முடியும் என்றால் அது அரசியல்தான். அதிலும் தேர்தல் அரசியல் தான். ஊருக்குப் பாரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொறுக்கிகளும், ரவுடிகளும், சல்லிப்பயல்களும், மொள்ளமாரிகளும் தங்களுக்கு அங்கீகாரம், அதிகாரமும், பணமும் கிடைக்கும் இடமாக அரசியலை மாற்றியிருக்கின்றார்கள். எவனையாவது ஒருவனை கைகாட்டி இவன் தேர்தல் அரசியலில் நின்று நேர்மையாக மக்களுக்கு உழைத்தவன், முதலாளிகளின் காலை நக்கிப் பிழைக்காதவன், இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளையடிக்காதவன், சாமானிய மக்களின் முன்னேற்றத்தையே தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டவன் என்று சொல்ல முடியவில்லை. அந்தளவிற்கு நாறி நாற்றமெடுத்துக் கிடக்கின்றது ஒட்டுமொத்த தேர்தல் அரசியலும்.

ttv dinakaran edapadi palanichamy

இதை எல்லாம் அம்பலப்படுத்தி மக்களை ஒரு மாற்று அரசியலை நோக்கி தயார்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களும் , சமூக செயல்பாட்டாளர்களும் பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாய், அரசியல்வாதிகள் வீட்டு எச்சிலையில் படுத்துப் புரளும் பன்றிகளாய் இருக்கின்றார்கள். அது போன்ற ஈனப்பயல்களுக்குதான் தமிழ்நாட்டில் அனைத்துவிதமான பட்டங்களும், பதவிகளும், விளம்பரங்களும் கிடைக்கின்றன; விபச்சாரப் பத்திரிக்கைகளில் நல்ல இடமும் கிடைக்கின்றன. ஒரு சிலர் துணிந்து இந்த அயோக்கியர்களை அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டமும், தேசிய பாதுகாப்பு சட்டமும் போடப்பட்டு அவர்கள் மட்டும் அல்லாமல் அது போன்ற சிந்தனைப் போக்குள்ள மற்றவர்களும் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இப்படி இருந்தால் எப்படி நாட்டையும் மக்களையும் அறிவு பெற்றவர்களாய், முற்போக்குவாதிகளாய் மாற்றி ஒரு பொதுவுடமை அரசியலைக் கொண்டுவர முடியும்?

எவ்வளவு கீழ்த்தரமான மக்கள் விரோத ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது! தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு அறிவிலிகளாகவும், சுரணையற்றவர்களாகவும் நினைத்திருந்தால் இப்படி எந்தவித கூச்சமும் இன்றி ஊரே பார்க்க நாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதிமுக ஒரு திருட்டுக் கும்பல் என்றும், குற்றக்கும்பல் என்றும், இது நாள் வரை எதிர்க்கட்சிகளும், மக்களும் சொல்லிவந்த நிலை மாறி, எப்படி நாய்கள் சண்டை போட்டுக்கொண்டால் பரஸ்பரம் மாறி மாறி குரைத்து, தனது எதிர்ப்பைக் காட்டுமோ, அதே போல இன்று நாய்ச் சண்டை முற்றி அது தெருவுக்கு வந்திருக்கின்றது. தினகரன் எடப்பாடியைப் பார்த்து 420 என்று சொல்வதும், எடப்பாடி தினகரனைப் பார்த்து 420 என்று சொல்வதும், எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்த அதிமுக அணிகளுமே 420கள் தான் என்று சொல்வதும், உள்ளபடியே அதிமுக கூட்டம் சூடு சுரணை ஏதுமற்ற களவாணிக் கூட்டம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்றது; டெங்கு காய்ச்சலால் மக்கள் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்; இன்னும் மர்மக் காய்ச்சலால் மரணம் என்ற செய்திகள் தினம் தினம் நாளேடுகளில் வந்தவண்ணம் இருக்கின்றன. என்ன மர்மக் காய்ச்சல் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் பற்றி அரசுக்கும் கவலை இல்லை. ஒரு பக்கம் நீட் தேர்வு கூடாது என பெரும்பாலான மாணவர்கள் போராட்டம் நடத்தினால், சில சில்லரை பிழைப்புவாதிகள் நீட் தேர்வு வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஒ.என்.ஜி.சி க்கு எதிராக கதிராமங்கலத்திலும், ஹைட்ரோ கர்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலிலும் போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களை மத்திய அரசு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து, தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றது. மக்கள் மதுக்கடைகளை அடித்து உடைக்கின்றார்கள். ஆனால் மானங்கெட்ட அரசு மீண்டும் மீண்டும் அதை எப்படியாவது திறப்பதிலேயே முழு மூச்சாக இருக்கின்றது. வெளிப்படையாக அனைத்துப் பகுதிகளிலும் எந்தவிதத் தடையும் இன்றி பார்கள் திறக்கப்பட்டு மதுவகைகள் குடிமகன்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை காவல்துறையின் துணையுடனும், அதிமுக குண்டர்களின் துணையுடனும் எந்தவித ஒளிவு மறைவும் இன்று வெளிப்படையாக நடந்து வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாடே நாசமாய் போய்க்கொண்டு இருக்கின்றது.

ஆனால் மாநிலத்தை ஆளும் முதுகெலும்பு இல்லாத கோழைகளின் ஆட்சி மோடி பஜனை பாடிக்கொண்டு தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி கொண்டுவந்தால் என்ன, நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவந்தால் என்ன, ரேசன்கடையை எல்லாம் இழுத்து மூடவைத்தால் என்ன, இல்லை ஒவ்வொரு தமிழனையும் முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்தால்தான் என்ன, 'எங்க வீட்ல ரெய்டு மட்டும் செஞ்சிராத தெய்வமே' என்ற அளவிற்கு நெடுஞ்சாண்கிடையாக டெல்லியில் போய் விழுந்து கிடக்கின்றார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் டெல்லி போய் மோடியின் காலை நக்கிவிட்டு வெளியே வந்து நீட் நுழைவுத்தேர்வு சம்பந்தமாகப் பேச வந்தேன் என்பதும், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் பற்றி மோடியிடம் பேச வந்தேன் என்று சொல்வதையும் கேட்டுக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் செம காண்டில் இருக்கின்றார்கள்.

modi panneerselvam

இது போன்ற ஒரு அடிமைக்கூட்டத்தை இதற்கு முன்போ, பின்போ தமிழ்நாடு நிச்சயம் பார்க்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. இவர்கள் எந்த அளவிற்கு வெட்க, மானமற்ற பேர்வழிகள் என்பதற்கு ஓர் உதாரணம் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசனைப் பற்றி, அவர் சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படம் தன்னிடம் இருப்பதாகவும், தன் காலில் விழ அவர் வந்த போது தான் அதைத் தடுத்து விட்டதாகவும், இந்தப் புகைப்படங்களை வெளியிட்டால் அவருக்கு அவமானமாகிவிடும் என்றும் கூறுகின்றார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் தான் கேட்காமலேயே பொருளாளர் பதவியை அளித்ததால் சசிகலாவின் காலில் தான் விழுந்தது உண்மைதான் எனவும், அதே சமயம் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் தன் காலிலும் செங்கோட்டையான் காலிலும் தினகரன் விழுந்ததாகவும் ‘பதிலடி’ கொடுக்கின்றார்.

எவனாவது ஒரு தன்மானமுள்ள சுயமரியாதை உள்ள மனிதன் இந்தக் கதையைக் கேட்டால் காறித் துப்பமாட்டானா? பதவிக்காக காலில் விழுவதும், பின்பு காலை வாருவதும் தேர்தல் அரசியலில் ஒரு பெரிய சம்பவம் இல்லை என்றாலும், அதையே ஒரு தொழில் நேர்த்தியோடு கட்சியின் அடிப்படைக் கொள்கையாக வளர்த்தெடுத்தது அதிமுக குற்றக்கும்பல் தான். பணமும் பதவியும் அதிகாரமும் கிடைக்கும் என்றால் வேட்டியை மட்டுமல்ல, அண்டர்வேயரைக் கூட கக்கத்தில் வைத்துக்கொண்டு கூழைக்கும்பிடு போடும் அடிமைக்கூட்டம்.

தினகரன் சொல்கின்றார், தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று. ஆனால் உண்மை என்னவென்றால் தமிழக அரசு அதிமுகவுக்கு மட்டும் அல்லாமல், தமிழக மக்களுக்கே சம்மந்தம் இல்லாமல்தான் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகின்றதா என்று இன்று யாருக்குமே தெரியாது. ஒபிஎஸ், இபிஎஸ், தினகரன் திருட்டுக் கும்பலின் நாய்ச் சண்டைத்தான் இன்று தமிழ்நாட்டு மக்கள் அரசியல் செய்திகளாக, நாட்டு நடப்புகளாக தெரிந்து கொண்டிருக்கின்றார்கள். காலையில் எழுந்து, இரவு படுக்கப் போகும் வரை ஓயாது குரைப்புச்சத்தம் காதை கிழித்துக் கொண்டிருக்கின்றது. சேருவாங்களா, சேரமாட்டாங்களா தேர்தல் வருமா, வராதா என்று ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுசுகள் கூட பேசிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். இப்படியே போனால் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும், தினகரனும் இன்னும் அவ்வப்போது வந்து உள்ளேன் அய்யா சொல்லிவிட்டுப் போகும் மன்னார்குடி மாஃபியாக்களும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கூறுபோட்டு அதற்கு வேலி போட்டு பாட்டாவும் போட்டுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை தங்களின் பாட்டனின் சொத்தாகவும், அப்பனின் சொத்தாகவும் நினைத்துக்கொண்டு தங்களுக்கு மட்டுமே முழு பாத்தியதை உள்ளது போல பேசியும் செயல்பட்டும் வருகின்றர்கள்.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினை நீட் நுழைவுத் தேர்வோ, ஹைட்ரோ கார்பன் திட்டமோ, ஓ.என்.ஜி.சியோ, பெட்ரோ கெமிக்கல் மண்டலமோ, வறட்சியோ, இல்லை குடிநீர் பிரச்சினையோ அல்ல; யார் உண்மையான 420 என்பதுதான். களத்தில் பல பேர் போட்டியில் உள்ளார்கள். அதில் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்றவர்கள் முன்னிலையில் உள்ளார்கள். அதனால் சரியான 420 யார் என்பதையும் அப்படி வெற்றிபெறும் 420களுக்கு என்ன பரிசு கொடுப்பது என்பதையும் மானமுள்ள, சுயமரியாதை உள்ள தமிழ் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It