ஊழல் பேர்வழி ஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பன்னீர்செல்வத்தால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் இறுதிக் காட்சி தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் பொதுச்செயலாளராக மன்னார்குடி மாஃபியா கும்பலின் தலைவி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டபோது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஜெயலலிதாவின் ஆவியால் பீடிக்கப்பட்ட பன்னீர்செல்வம், அவரது சமாதியில் உட்கார்ந்து தன்மீது ஜெயலலிதாவின் துர் ஆத்மாவை தியானத்தின் மூலம் வரவழைத்து, ஊடகங்கள் முன்னிலையில் தன்னை கட்டாயப்படுத்தி மன்னார்குடி மாஃபியா கும்பல் பதவி விலகச் செய்ததாக குறி சொன்னார். பின்பு அவர் அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், அதிமுகவில் இருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்களையும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களையும், 8 மக்களவை உறுப்பினர்களையும் தன்பக்கம் இழுத்து சசிகலா கும்பலுக்குக் கிலியை ஏற்படுத்தினார்.

sasikala and ops and edapppadiதமிழகத்தில் பிஜேபி காலூன்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் சதி செய்வதாகவும் அவரது பின்னால் சென்ற பலபேர் குறிப்பாக மைத்ரேயன், பாண்டியராஜன் போன்றோர் பிஜேபி ஆதரவாளர்கள் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சசிகலா தலைமையிலான அணி ஆர்.எஸ்.எஸ் பிஜேபி எதிர்ப்பு அணியாகவும், பன்னீர்செல்வம் தலைமையிலான‌ அணி ஆர்.எஸ்.எஸ் பிஜேபி ஆதரவு அணியாகவும் அடையாளப்படுத்தப்பட்டது. பன்னீர்செல்வம் காபந்து முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது பிஜேபியோடு பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் நெருக்கத்தை உறுதிப்படுத்துவதாகப் பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆட்சியைக் காப்பாற்ற‌ எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் கடத்தி வைக்கப்பட்டதும், சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டதும், எடப்படி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றதும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததும், ஸ்டாலின் சட்டை கிழிந்ததும், சபாநாயகர் தனபாலின் சட்டை மர்மமான முறையில் கிழிக்கப்பட்டதும் நமக்குத்தெரிந்ததுதான்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தமிழகம் ஒரு பரபரப்பு நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தின் பிரதான பிரச்சினைகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் அன்றாட அணிமாறும் காட்சிகளும், வெற்று சவடால் பேச்சுகளுமே முக்கிய செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டன. தமிழகத்தில் எந்த ஒரு அரசுத் திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை, ஆட்சி என்ற ஒன்று நடக்கின்றதா என்று தெரியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெரிய அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது எனக் காரணம் கூறி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்தது. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பாக பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியதாக சொல்லப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 60 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க முயன்றதாகவும், அதில் 10 கோடி ரூபாயை முன்பணமாகக் கொடுத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. தினகரன் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இனிமேலும் தினகரனை ஆதரித்து வந்தால் தன்னுடைய வீடுகளுக்கும் வருமான வரிச்சோதனை நிச்சயம் வரும் என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்ட அதிமுக அம்மா கட்சியின் கொள்ளைக்கூட்டம் தற்போது தினகரனையும், சசிகலா குடும்பத்தையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. அதே போல ஓபிஎஸ் அணியும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியிருக்கின்றது. கூடிய விரைவில் நாகபதனியும், நாகப்பதனியும் ஒன்றாக இணைந்துவிடும் என்பதில் அய்யமில்லை. ஆனால் ஏதோ தினகரனும், சசிகலா கும்பல் மட்டும்தான் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டது போன்றும், மற்ற அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உத்தமர்கள் போன்றும் ஒரு தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்த முயற்சி செய்கின்றார்கள். அதிமுக அமைச்சர்கள் அனைவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன‌ என்பதும், நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்றால் ஒட்டுமொத்த அதிமுக கூட்டமும் தமிழகத்தைக் கொள்ளையடித்து, பல ஆயிரம் கோடிகள் சொத்து சேர்த்தது உண்மை என்பதும் தெரியவரும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் ஒரு சதவீதம் கூட இந்த மானங்கெட்ட அமைப்பு முறையில் இல்லை என்பதுதான் உண்மை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவடா செய்யப்பட்டதற்காக தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர அதே தினகரன் கும்பலிடம் பணம் வாங்கியிருப்பதும் தற்போது அம்பலமாகி இருக்கின்றது. இதுதான் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.

அதிமுகவில் இனியும் இருந்தால் தனக்கு பெரிய ஆப்பை மத்திய பிஜேபி அரசு வைத்துவிடும் என்பதை உணர்ந்த தினகரன் தற்போது அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் நாஞ்சில் சம்பத் போன்ற சூடு சுரணையற்ற ஜென்மங்கள் இவ்வளவு நடந்த பிறகும் வாங்கிய காசுக்கு விசுவாசம் காட்ட நினைக்கின்றார்கள். ஊழல் பேர்வழி தினகரனை பிஜேபியிடம் இருந்து திராவிட சித்தாந்ததையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற‌ வந்த உத்தமன் போன்று பேசித் திரிகின்றார்கள். அப்படி என்றால் கடந்த மாதம் தினகரன் சங்கரமடத்திற்குச் சென்று பிரபல செக்ஸ் சாமியார் ஜெயந்திரனையும், விஜேந்திரனையும் சந்தித்தது பெரியாரின் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் எப்படி பரப்புவது என்று ஆலோசனை நடத்தவா என்று தெரியவில்லை. நாஞ்சில் சம்பத் போன்ற கூலிக்கு மாரடிக்கும் ஜென்மங்கள் காசு கொஞ்சம் சேர்த்துக்கொடுத்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் புனிதர் பட்டம் கொடுத்து விடுவார்கள். எப்படி ஓ.பன்னீர்செல்வம் பி.ஜேபியின் கைக்கூலி என்பது உண்மையோ, அதே போலத்தான் தினகரனும். சில தினங்களுக்கு முன்புகூட இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கும் பிஜேபிக்கும் சம்மந்தம் இல்லை என்று அவரே கூறியிருந்தார். ஆனால் கைப்பிள்ளைகள் எவ்வளவுதான் அம்பலப்பட்டாலும் சுற்றியிருக்கும் கூட்டம் தனது பிழைப்பு கெட்டுவிடக்கூடாது என்று தொடர்ந்து இந்த அயோக்கியனை ஆதரித்து வருகின்றார்கள்.

edappadi dinakaran

தமிழ்நாட்டின் வளங்களை ஒட்டுமொத்தமாக சுரண்டி கொள்ளையடித்த இந்தக் கும்பலை ஆதரிப்பது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அதிமுக கும்பலும் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்து வைத்திருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. சில திருடர்களைத் தற்காலிகமாக பலிகொடுத்து, தங்களது திருட்டுத்தொழிலுக்குத் தற்காலிகமாக எந்தப் பங்கமும் வராமல் பார்த்துக்கொள்ளும் உத்திதான் தற்போது அதிமுகவில் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது. மற்றபடி நீதி, நேர்மை, நாணயம் எல்லாம் கொள்ளையடிப்பதில் தவிர வேறு எதிலும் கடைபிடிக்காத மோசமான குற்றக்கும்பல்தான் அதிமுக கும்பல்.

ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய போது அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பின்பு முதலமைச்சர் ப‌தவியை இழந்து தனியே பிரிந்துசென்ற போது, 'ஆமாம் எனக்கும் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாகத் தெரிகின்றது' எனத் தெரிவித்தார். தான் ஆட்சிக்குவந்தால் அதுபற்றி விசாரிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி போன்று டம்மியாக தயார் செய்யப்பட்டு ஊர்வலம் எல்லாம் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் அசிங்கப்படுத்தி விட்டதாகவும், அதை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் குற்றம் சாட்டினர். தற்போது இரண்டு அணிகளும் ஒன்றாகச் சேரும் சூழல் உருவாகியுள்ள நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடைபெறும் என்று எடப்பாடி தரப்பு நிலைப்பாடு எடுத்துள்ளதாக பத்திரிக்கையில் செய்திகள் வெளிவந்துள்ளன. பதவிக்காகவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி மாற்றி பேசும் கீழ்த்தரமான பொய்யர்கள்தான் இவர்கள் என்பது தற்போது மக்கள் முன் அம்பலமாகி இருக்கின்றது.

எனவே தினகரனையும் சசிகலாவையும் கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டதால் அதிமுக புனிதமானதைப்போல உருவாக்கப்படும் தோற்றத்தைக்கண்டு தமிழக மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். தற்போது அதிமுகவில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளின் பின்னாலும் பிஜேபியின் கை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இதைக் காரணம் காட்டி அதிமுகவை ஆதரிக்கும் அயோக்கியர்களின் சுயநலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுப்பொறுக்கிகளுக்குத் தங்கள் பிழைப்புவாதத்தை மறைத்துக்கொள்ள ஏதாவது ஒரு காரணம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அவர்கள் அதையே உண்மை என்றும் நம்மை நம்ப வைக்கவும் பார்க்கின்றார்கள். பிஜேபி பார்ப்பனியத்துக்கு நேரடியாகப் பிறந்தது என்றால் அதிமுக கள்ளத்தனமாகப் பிறந்தது என்பதுதான் உண்மை. இதை மக்களிடம் இருந்து மறைக்க நினைக்கும் அனைவரும் உண்மையில் திராவிட இயக்க சித்தாந்தத்தின் எதிரிகளே ஆவர்கள்.

- செ.கார்கி

Pin It