ஆங்கில நாளேட்டில் ஆய்வாளர்கள் கட்டுரை
எதிர்காலத் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் வழிகாட்டக் கூடிய வாய்ப்புகளை தி.மு.க.வின் வெற்றி உருவாக்கியிருக்கிறது என்று சமூகப் பொருளியல் ஆய்வாளர்கள் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மே 3, 3031) எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘எம்.அய்.டி.எஸ்.’ ஆய்வு மய்ய பேராசிரியர் விஜய் பாஸ்கர், இலண்டன், ‘கிங்க்ஸ் இன்ஸ்ட்டியூட்’ ஆய் வாளர் விக்னேஷ் கார்த்திக், அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலை யரசன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளனர். கட்டுரையின் சுருக்கமான கருத்துகள்.
இந்தத் தேர்தல் முடிவுகளை தமிழ் நாட்டின் எதிர்காலத்துக்கு, இந்தியாவின் எதிர்காலத்தையும் இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது. தேர்தல் களத்தில் மூன்று அடிப்படை வாதங்கள் முன்னிறுத்தப்பட்டன. ஒன்று மத அடிப்படை வாதம் (பா.ஜ.க.), மொழி இன அடிப்படை வாதம் (நாம் தமிழர் கட்சி), ஜாதி அடிப்படை வாதம் (தலித் முன்னேற்றத்தை விரும்பாத சில இடைநிலை ஜாதிக் குழுக்கள்).
இந்த மூன்று அடிப்படை வாதங்களும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு, ‘திராவிட - தமிழ்’ அடையாளத்துக்கு சவால்விட்டு எதிர்த்தன. தமிழ்நாட்டில் ‘திராவிட - தமிழ்’ அடையாளம் என்பது அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வழியமைத்தது. தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்த மூன்று அடிப்படை வாதங்களையும் எதிர்க்க வேண்டியிருந்தது. அத்துடன் திராவிட அடையாளமான மாநில சுயாட்சியையும் தி.மு.க. பேசியது.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை தேர்தல் களத்தில் வலுவான கட்சியல்ல என்றாலும், ‘திராவிட’ கோட்பாட்டின் கீழ் மக்களை அணி திரட்டுவதற்கு எதிரான கருத்துகளை பா.ஜ.க. தனது கொள்கையாக முன் வைத்தது. கடந்த காலங்களைப்போல் இந்து மத அடையாளத்தை மட்டும் பேசாமல், ஈழத் தமிழர் பிரச்சினையையும், ‘தமிழ்க் கடவுள்’ முருகன் என்ற அடையாளத்தையும் முன்னிறுத்தி வேல் யாத்திரையையும் நடத்தி, தமிழ்த் தேசிய உணர்வுகளோடு மதத்தை இணைத்துக் கொண்டு தி.மு.க.வை எதிர்த்தது. ‘திராவிடம்’ என்பது பிரிட்டிஷார் உருவாக்கிய பிரித்தாளும் கொள்கை; தமிழர்களின் கடந்த கால வரலாறுகள் சமயம் சார்ந்தவை என்பதாகப் பேசியது.
பா.ஜ.க.வின் ‘தமிழர் மத’ அடையாளத் துக்கு வலிமை சேர்த்தது நாம் தமிழர் கட்சி. தமிழர்களை கடந்தகால ‘இந்து’ வரலாற்றுப் பெருமிதத்தோடு இணைத்த நாம் தமிழர் கட்சி, ஜாதி அடிப்படையில் தூய்மைத் தமிழர்களைப் பிரித்தெடுத்து கூறு போட்டது.
தி.மு.க. தலைவர்கள் பலரும் பிற மொழிக்காரர்கள்; அவர்கள் சுத்தமான தமிழர்கள் அல்ல; எனவே தான் தமிழர்கள் உரிமைக்கு துரோகம் செய்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது. பா.ஜ.க.வும் - நாம் தமிழர் கட்சியும் ஒரே புள்ளியில் மய்யம் கொண்டு தி.மு.க. எதிர்ப்பை முன் வைத்தன.
மூன்றாவதாக தேர்தலில் ஜாதி முக்கிய காரணியாக மாற்றப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. தலைவர்கள், முதலமைச்சர் உள்ளிட்டோர் பெரும் எண்ணிக்கையில் உள்ள தங்கள் ‘வெள்ளாளர் கவுண்டர்’ ஜாதி அடையாளத்தை ‘இலைமறை காய்மறையாக’ முன்னிறுத்தினர். வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அவசர அவசரமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த முடிவு அ.இ.அ.தி.மு.க.வும் சில கூடுதல் இடங்களில் வெற்றியைத் தந்திருக்கலாம். ஆனால் இந்த முடிவு தேர்தல் களத்தை ஜாதி அடிப்படையில் அணி திரட்டும் முயற்சிக்கே வித்திட்டது.
ஆனாலும் தமிழ்நாடு மக்கள் பொதுச் சிந்தனையில் ஊறிப் போன திராவிட உணர்வுகள் மேலும் வலிமையடைவதற்கே இவை பயன்பட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. நீட், ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை வழியாக மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதையும் ஆளும் கட்சி மத்திய அரசிடம் சரணடைந்து விட்டதையும் தி.மு.க. தனது பரப்புரையில் முன் வைத்தது.
இந்த நிலையில் தி.மு.க., திரிணாமுல் (மே. வங்கம்), மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் (கேரளா) கட்சிகளின் வெற்றிகள் இந்தியாவுக்கு ஒரு பாடத்தை வலிமையாக உணர்த்துகின்றன. இது ஒற்றை நாடு அல்ல; பன்முகத் தன்மைக் கொண்ட நாடு என்பதே அந்தப் பாடம். இக்கட்சிகள் மாநிலம் சார்ந்து இயங்குவதாகும்.
பா.ஜ.க.வினரால் தேச விரோத கட்சியாக எந்தக் கட்சி சித்தரிக்கப்பட்டதோ, அதே கட்சி அரசியல் சட்டத்iயும் அதன் மதச்சார்பின்மை, கூட்டாட்சி கோட்பாடுகளையும் கட்டிக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது. இந்தியாவை கூட்டாட்சி நோக்கி அழைத்துச் செல்லும் போக்குகளையே தேர்தல் முடிவுகள் உருவாக்கி இருக்கின்றன.
நிதிச் சுமை அதிகார பறிப்புகளுக்கிடையே வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய சவால்கள் தி.மு.க.வை எதிர்நோக்கியிருக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு கல்வி நிறுவனங்களுக்குமிடையே உள்ள ‘இடைவெளி’ நீக்கப்பட்டு, சமூக நீதி அடிப்படையிலான கல்வி கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் தந்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையும் காத்திருக்கிறது. மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வெற்றிக்கு ஜாதி துணை நின்றது. வடக்கு மண்டலத்தில் ஓரளவு பா.ம.க. வெற்றிக்கும் ஜாதி துணை நின்றிருக்கிறது.
இந்த சூழலில் தி.மு.க. தனது சமூக நீதியை உள்ளக்கிய ஜாதி எதிர்ப்பு செயல் திட்டங்களை உண்மையான சமூகக் கவலையுடன் முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் தி.மு.க. எதிர் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். சிவில் சமூகத்தில் இளைஞர்களுக்கான ஜாதி எதிர்ப்புக்கான சமூக நீதியை உள்ளடக்கிய திட்டங்களை தி.மு.க. ஆட்சி முனைப்புடன் அமுல்படுத்த வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்