கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“என்று முடியும் இந்த மொழிப்போர்?”, “Struggle for Freedom of Languages in India” ஆகிய நூல்களின் ஆசிரியராக, இன்றும் தொடரும் இந்தித் திணிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தித் திணிப்பை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று இந்தி படிப்பது. இன்னொன்று இந்தியை ஆட்சி மொழியாக ஏற்பது. இந்தி படிப்பதில் நமக்கு எந்தத் தடையும் இல்லை. கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று சொல்லும் போதுதான் ஆட்சேபணை வருகிறது. இந்தியைத் திணிக்க வேண்டும் என்பதற்காகக் கட்டாயப்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

 அதேபோல் இந்தி ஆட்சி மொழியாக இருப்பதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதுதான் பிரச்சனை. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நாம் கேட்கிறோம். 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை அன்று பிரதமர் நேரு சொன்னார். ஆனால் இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஒரு செய்தியை ஒரு நொடியில் பல மொழிகளிலும் கொண்டு வந்துவிடலாம். அதனால் அந்த 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கேட்கிறோம். ‘தமிழ்’ ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

பயிற்றுமொழி “Medium of Instruction” இந்தியில் கொண்டு வருவது என்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை - இந்தி பேசுகிற மாநிலங்களில். மத்தியப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் திருவாரூரில் ஒன்று இருக்கிறது. அங்கே பயிற்று மொழியாக இந்தியைக் கொண்டு வருவதை நாம் எதிர்க்கிறோம்.

இந்தித் திணிப்பிற்கு எதிராக, தமிழக சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றிய உங்கள் கருத்து.

ஒரு மாநில அரசு ஒன்றிய அரசின் கொள்கையை எதிர்ப்பதே ஒரு பெரிய செய்தி. 1965இல் நாங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய போது, மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்றுதான் சொன்னோம். அப்போது மாநில அரசு, துப்பாக்கியை எங்கள் முன் காட்டியது. இன்று அந்த நிலை இல்லை. மாநில அரசே இந்தியை எதிர்ப்பது என்பது ஒரு பெரிய அடி. உலக அளவில் இது கவனிக்கப்படும். நீட் தேர்வை நாம் மட்டும்தான் எதிர்க்கிறோம். அவர்களால் நம்மை அமைதியாக்க முடியவில்லை. ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், அது நடந்து விடுமா என்றால், நடக்கும். காத்திருப்போம். காலம் வரும்.

- பேராசிரியர் அ.இராமசாமி, துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்