edappadi k palaniswami‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு கட்டுரை

தமிழ்நாட்டில் நடந்த வாக்குப் பதிவுக்குப் பிறகு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஏப்.10) செய்தி வெளியிட்டுள்ளது.

‘மிகப் பெரும் வெற்றிக்காக தி.மு.க. வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்’ என்று தலைப்பிட் டுள்ளது. வாக்குப் பதிவு நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறப் போகும் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறார்கள் என்றும் சென்னைக்கு வந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினோடு தங்கள் தொகுதி நிலவரம் - வாக்காளர்கள் மன நிலையை விரிவாக விளக்கி வருகிறார்கள் என்றும் அந்த செய்தி கூறுகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில் - தமிழ்நாடு முழுதுமிருந்தும் தி.மு.க. அணி வேட்பாளர்களிடமிருந்து வரும் கருத்துகள் வெற்றியை உறுதி செய்து ஒருமித்து இருக்கிறது என்றும் கூட்டணியை உருவாக்கியதில் தி.மு.க. தலைவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதையும் அ.தி.மு.க. கூட்டணி உருவாக்கத்தில் குழப்பங்கள் மேலோங்கி சில கட்சிகள் விலகிப் போனதையும் சுட்டிக் காட்டினார்.

10.5. சதவீத வன்னியர் ஒதுக்கீடு காரணமாக சில மாவட்டங்களில் பா.ம.க.வினர் உற்சாகமாக வேலை செய்தனர் என்றாலும் பெரும் பாலான தொகுதிகளில் பா.ம.க. வினர் ஓட்டு அ.இ.அ.தி.மு.க. வுக்கு விழவில்லை என்றும், பா.ம.க. கூட்டணி இருந்திருக்காவிட்டால் அ.இ.அ.தி.மு.க. மேலும் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் என்றும் மன்னார்குடி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. களப் பணியாளர்கள் சோர்வடைந்த நிலையில் அடக்கியே பேசுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ள அந்த ஆங்கில நாளேடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குப் பதிவுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் கொங்கு மண்ட லத்தில் உள்ள மூத்த காவல் துறை அதிகாரிகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் வலி யுறுத்தினார் என்ற செய்தியைப் பதிவு செய்திருக்கிறது.

கட்சிக்காரர்கள், தேர்தலில் முனைப்புடன் ஜெயலலிதா காலத்தில் வேலை செய்தது போல் வேலை செய்யவில்லை என்று எடப்பாடி வருந்துவதாகவும் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது என்ற தகவலையும் அந்த ஏடு வெளியிட்டிருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு எதிராக தி.மு.க.வினர் செய்த கடைசி நேர பரப்புரை, வாக்காளர்களை அ.இ. அ.தி.மு.க.வுக்கு எதிராக திருப்பி விட்டுவிட்டது என்றும், இதை வலிமையாக அ.இ.அ.தி.மு.க. தலைமை எதிர்கொள்ளவில்லை என்றும் அ.இ.அ.தி.மு.க. மூத்தத் தலைவர் ஒருவர் கூறியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்.பி. உதயகுமார் என்ற அமைச்சர், அ.இ.அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It