பழங்காலத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்துப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார் பதிவிரதைக்கு இன்னல்வரும் பழையபடி தீரும்“

என்று கேலியாக எழுதுவார். இன்று தமிழ்நாட்டின் அரசியல் நிலை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்தின் ஆளுநர், ஆளுங்கட்சிக்கு அருள்புரிய அவ்வப்போது வந்து வந்து போகின்றார்.  ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகிய பதிவிரதைகளுக்கு அவ்வப்போது இன்னல் வருகிறது. பழையபடி தீர்கிறது!

ஒருவரைப் பார்த்து ஒருவர் 420 என்று தீட்டித் தீர்த்துக் கொள்கிறார்கள். இது ஊழல் ஆட்சி என்கின்றனர். மறுநாளே இது அம்மாவின் ஆட்சி என்று கூறுகின்றனர். (இரண்டும் ஒன்றுதான்  என அவர்களுக்குத்  தெரியும்தானே!)

சட்டமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா விடுதிகளில் வெளியூர்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அன்றாடம் ஒரு சட்டமன்ற உறுப்பினராவது அணி மாறுகிறார். பெரும்பான்மையை இழந்து ஆட்சி இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் சட்டமன்றத்தைக் கூட்டுங்கள் என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கோரிக்கை எவர் காதிலும் விழுவதில்லை.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் சொன்னதற்காக, 19 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் ஆளுங்கட்சிக் கொறடா. அவர் பொழுது போகாத நேரத்தில் சட்டமன்ற விதிகளை ஒருமுறை படித்தால் நல்லது.

இத்தனை குழப்பங்கள் நாட்டில் நடந்து கொண்டுள்ளன. தமிழகம் தாழ்ந்து தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நம் பிரதமர் மோடி சொல்கிறார், “தமிழகம் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. இனிமேல் தமிழகம் வளர்ச்சியின் உச்சத்தை எட்டும்.”

ஐயோ, இதற்கு மேலும்  வேறு உச்சம் இருக்கிறதா?

Pin It