குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு புது பேட்டரி சொருகும் போது வீரியமாக இயங்கும். பிறகு பேட்டரியின் வீரியம் குறைய பொம்மையின் துடிப்பும் குறைந்து விடும். பலமான, நிரந்தரமான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை பலநேரங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் மறந்து விடுகிறது. இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக டி.என்.சேஷன் இருந்தபோதுதான் இந்த ஆணையம் தனது அதிகாரத்தை உணர ஆரம்பித்தது.

அதேநேரத்தில், தேர்தல் ஆணையத்தில் சீரமைப்பு என்ற வார்த்தையும் புதிதாக எழுந்தது. அப்போது தொடங்கிய அலைதான் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அந்த அமைப்பு ஓரளவு சுறுசுறுப்பாக இயங்க காரணமாக அமைந்தது. ஆனால், இந்த சுய தன்னாட்சி அமைப்பு இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. எப்படி அரசியல்வாதிகள் உண்மையான பிரச்சனைகளை மறைத்து மக்களுக்கு இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிக்கிறார்களோ அதுபோலவே, தேர்தல் ஆணையம் பணப் பதுக்கலை கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் மிகமுக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் விட்டு இருக்கிறது. வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் சொத்துக்கணக்கின் உண்மைத் தன்மையை ஆராய்வது, மூலத்தை தெரிந்து கொள்வது, குற்றப்பின்னணி கொண்டவர்களை வடிகட்டுவது மற்றும் வேட்பாளர்களின் செலவு பட்டியலை தீவிரமாக கண்காணிப்பது ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் கோட்டை விட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டின் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பை கொண்ட தேர்தல் ஆணையம் அவ்வப்போது ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறிவிடுகிறது. பொதுவாக தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா தலைவிரித்தாடும். அப்போது, ஆளும் கட்சிக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் செயல்படுவது வழக்கம். தேர்தல் ஆணையத்திடம் அதே ஒத்துழைப்பை இத்தேர்தலிலும் எதிர்பார்த்த ஆளும் கட்சிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி’ நடைபெறுகிறது என்று முதல்வர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தை திட்டி தீர்த்தபோதிலும், அந்த ஆணையத்தால் பணப்பட்டுவாடாவை கள அளவில் முழுமையாக தடுக்க முடியவில்லை.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த மார்ச் - 1 முதல் ஏப்ரல் - 12ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் 54கோடியே 17லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் சாதனையாக சொல்லும் இந்த 54கோடி ரூபாயை கைப்பற்றி இருப்பது வெறும் தூசிதான். இதில் உரிய ஆவணங்களை காட்டி வெறும் 5கோடியே 7லட்சம் ரூபாய் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமிருக்கும் சுமார் 50கோடி ரூபாய் கேட்பாரற்று கிடப்பது இது கருப்பு பணமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அரசியல் கட்சிகள் புது புது யுக்திகளை பயன்படுத்தி சுமார் 750கோடி ரூபாய் அளவு பட்டுவாடா செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலாவது ஆணையத்திற்கு தெரியுமா?

ஒவ்வொரு வேட்பாளரும் 16லட்சம் ரூபாய் மட்டுமே தேர்தல் செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஆணையம் வரையறுத்திருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மையான வேட்பாளர்கள் வெறும் 6 முதல் 7 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்கள் என்ற தகவல் நம்பும்படியாக இல்லை. ஒவ்வொரு வேட்பாளருக்கும் இரண்டு நுண் பார்வையாளர்களை ( மைக்ரோ அப்சர்வர்கள் ) நியமித்த ஆணையம், தேர்தல் செலவு கணக்கை ஏனோதானோ என்று முடிக்கவே பார்க்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்திருந்தாலும் கூட வேட்பாளர்கள் சில லட்சங்கள் மட்டுமே செலவு செய்தோம் என்று சொல்வதை ஆணையம் கேட்டு தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இதன் மூலம் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதன் நோக்கம் அடிபட்டு போயிருப்பதோடு, வேட்பாளரின் செலவை கட்டுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பதிலும் இந்த ஆணையம் தோல்வியை தழுவி இருக்கிறது.

மேலும், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்துக் கணக்கின் உண்மைத் தன்மையை இந்த ஆணையம் ஆய்வு செய்யத் தவறி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வேட்பாளர்கள் காட்டும் சொத்துக்களின் மதிப்பு நடைமுறையில் பன்மடங்கு உயர்ந்திருந்தாலும் அவர்கள் குறைத்துக் காட்டியே வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து கண்ணைக்கட்டிக் கொண்டு இருக்கும் ஆணையம் எப்போது விழி திறக்குமோ? பழைய பேப்பர் கடைக்காரரிடம் குவியும் நாள் கடந்த செய்தி தாள்களுக்கும், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் சொத்து பட்டியலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒவ்வொருமுறையும் சமர்ப்பிக்கப்படும் சொத்துப்பட்டியலில் வேட்பாளர் சொல்லி இருக்கும் சொத்து விவரம், மதிப்பு, மூலம் ஆகியவற்றை குறித்து இந்த ஆணையம் கொஞ்சமும் யோசிக்கவில்லை.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், புதிய முதலீடுகள் ஆகியவை மூலம் சொத்துக்களை பெருக்கி இருப்பது அனைவரும் அறிந்தது. அவர்கள் மீண்டும் சமர்ப்பித்துள்ள சொத்துப்பட்டியலில் அது குறித்து எந்த கணக்கும் காட்டப்படவில்லை. உதாரணமாக 2006 தேர்தலின் போது ஒரு லட்சம் ரூபாய் சொத்துகணக்கு காட்டியவர் இந்த தேர்தலில் 10லட்சம் ரூபாய் கணக்கு காட்டும் போது, சொத்து அதிகரித்தது குறித்து ஆணையம் எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை. பெரும்பான்மையான அரசியல்வாதிகள் வருமானவரி விலக்கு பெற்ற டிரஸ்ட்டுகளை உருவாக்கி அதில் பல கோடிகளை முதலீடு செய்து ஏமாற்றி வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரோ அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் டிரஸ்ட்டுகள் பற்றி தேர்தல் ஆணையம் கண்டிப்பாக தகவல்களை கோர வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் கொல்லைப்புறமாக சம்பாதித்த சொத்துக்கள் பற்றிய விவரம் வெளிவர வாய்ப்பு உள்ளது.

கிரிமினல்கள் தேர்தலில் நிற்பதை ஒழித்தாக வேண்டும் என்பதைப் பற்றி பேசி வந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் இம்மியளவும் முயற்சி எடுக்கவில்லை. 2011 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட ஒட்டு மொத்த வேட்பாளர்களில் 54.6 சதவிகிதம் பேர் கிரிமினல் வழக்கு பின்னணி கொண்டவர்கள். இதில், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தவிர, திமுக, பாமக, காங்கிரஸ் என்ற வரிசையில் அதிகப்படியான குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இந்த தகவல்களை தேர்தல் ஆணையம் முற்றிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. 2006 சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் உறுப்பினர் வேல்துரை தன்மீதான குற்றப் பின்னணியை பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை ஆணையம் கண்டு கொள்ளாமல் விட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், 2011 தேர்தல் ஓட்டு பதிவு முடிந்த பிறகு உச்சநீதிமன்றம் அவரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது. அவர் பதவி காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகு கிடைத்த இந்த தீர்ப்பால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது.

கிரிமினல்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க ஆணையம் புதிய விதிகளை உருவாக்கிட வேண்டும். பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் மீதான குற்றப்பின்னணி குறித்து தீர்க்கமான முடிவு செய்து அவர் தேர்தலில் தகுதியானவரா என்பதை அந்த காலக்கட்டத்திற்குள்ளேயே முடிவு செய்ய வேண்டும்.தேர்தல் என்பது நாட்டை ஆள்வதற்கு யார் சரியானவர் என்பதை மக்கள் தீர்மானிக்கும் முறை. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றும் திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் அறிவிப்பது மாறி, வெறும் இலவசங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. இன்றைக்கு வாக்காளர்களுக்கு அதிகாரப்பூர்வ லஞ்சமாக இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இதையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்றால் போட்ட முதலைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார். இந்த நடைமுறை நிலைமையை மாற்ற தேர்தல் ஆணையம் தொலைநோக்கோடு செயல்பட்டாக வேண்டும். இந்த நிலைமையிலிருந்து மாற்றம் காண பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரும்புவதாக தெரியவில்லை. இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே வேட்பாளர் தனது சொந்த பணத்தை செலவு செய்யக்கூடாது. கட்சியே முழுத்தொகையையும் செலவழிக்கும் என்று நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையம் நினைத்தால் இதை மாற்ற வாய்ப்பிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க தொடங்கி இருக்கும் தேர்தல் ஆணையம் அதையும் தாண்டி யோசிக்க வேண்டி இருக்கிறது. வேட்பாளர்களுக்கு ஆகும் செலவை ஆணையமே ஏற்றுக் கொண்டால் கருப்பு பணப்புழக்கம், பணப்பட்டுவாடா, இலவசங்கள் உள்ளிட்டவைகளை தடுக்க முடியும். ஆணையம் புதிய புதிய விதிமுறைகளை உருவாக்கினால் மட்டும் போதாது அவைகளை கள அளவில் சமரசமின்றி செயல்படுத்தினால் மட்டுமே 2016இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் இளந்தலைமுறை ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கையோடு வாக்களிக்கும்.

Pin It