joe bidenஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பது உறுதியாகிக் கொண்டு இருக்கின்றது. உலகை அமெரிக்காவின் நண்பன், அமெரிக்காவின் எதிரி என இரண்டு முகாமாக மட்டுமே இருக்க அனுமதிக்கும் ஒரு ஏகாதிபத்திய வெறிகொண்ட நாட்டின் அதிபராக அவர் பதவி ஏற்கப் போகின்றார்.

எப்படி அமெரிக்க மக்களுக்கு குடியரசுக்கட்சி, ஜனநாயகக்கட்சி என இரண்டைவிட்டால் மாற்று எதுவும் இல்லையோ அதேபோல உலக நாடுகளுக்கும் வேறு எந்த மாற்றுமே இருப்பதில்லை. ஒன்று நீங்கள் அவர்களோடு இருந்தாக வேண்டும் இல்லை என்றால் நீங்கள் தீவிரவாதியோடு இருக்கின்றீர்கள் என்று பொருள் கொள்ளப்படும்.

நிச்சயமாக டிரம்ப் மண்ணை கவ்வுவார் என்பதும் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்பதும் அமெரிக்காவை தாண்டி எதிர்ப் பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

இதுவரை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவர்களிலேயே உலகமே பார்த்து காறித்துப்பும் கோமாளியாக டிரம்ப் இருந்ததும், கொரோனோ நோய்த் தொற்று காலத்தில் சொந்த நாட்டு மக்களையே காப்பாற்ற வக்கற்று சாகவிட்டதும், அதிகரித்துவந்த வறுமையும், ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையும் கணிசமான அமெரிக்க மக்கள் மத்தியில் கோமாளி டிரம்ப் மீது அளவுகடந்த வெறுப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது. அதுவே ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்தது.

மற்றபடி ஊடக துதிபாடிகள் சொல்வதுபோல் ஜோ பைடன் சிறப்பான ஆட்சியைத் தருவார் என்ற எண்ணத்திலெல்லாம் பெரும்பாண்மை அமெரிக்க மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ள சூழ்நிலையில் அவர்கள் ஒன்று பேயைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் அல்லது பிசாசைத் தேர்தெடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் அவர்கள் ஜோ பைடனை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்.

குடியரசு கட்சி மட்டுமல்லாமல் ஜனநாயகக் கட்சியும் வால் ஸ்ட்ரீட் எஜமானர்களால் நிதியளிக்கப்பட்டு பேணிக்காக்கப்படும் கட்சியாகவே இருக்கின்றது. அமெரிக்க நலன் சார்ந்த ராணுவ நடவடிக்கைகளை இரண்டுமே ஆதரிக்கும் கட்சிகள்தான்.

அமெரிக்கா அதிகாரவர்க்கத்தின் ரத்தத்தில் கலந்துபோயுள்ள கம்யூனிச வெறுப்புக்கு ஜனநாயக கட்சி மட்டும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவின் வெளியுறவு கொள்ளை என்பது குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயக்கட்சி இரண்டுக்குமே ஒன்றுதான். அது உலகை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான். இதற்கு இரண்டு கட்சிகளுமே ஒரு போதும் விதிவிலக்காக இருந்ததில்லை.

ஆனால் உலக நாடுகளால் ஜனநாயக் கட்சியானது குடியரசு கட்சியைவிட லிபரலாக பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையோ அப்படி எல்லாம் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது. கடந்த அறுபது ஆண்டுகளில் ஜனநாயகக்கட்சியை சேர்ந்தவர்கள் எந்த வகையிலும் குடியரசுக்கட்சியின் போர்வெறிக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதைத்தான் நிரூபித்துவந்திருக்கின்றார்கள்.

1961-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி உத்தரவின்பேரில் சிஐஏ-வால் ஏவப்பட்ட 1200 கியூபா நாட்டுக்காரர்கள் பிக்ஸ் வளைகுடா வழியாக கியூபாவுக்குள் நுழைந்தனர். இந்த முயற்சியை பிடல் காஸ்ட்ரோ படை முறியடித்தது. 100 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயத்தில்தான் வியாட்னாம் போர் விரிவுபடுத்தப்பட்டு மிக உக்கிரமாக நடத்தப்பட்டது

அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருக்கும்போது, கொசோவாவில் தங்களது படைகள் பின்னடைவைச் சந்தித்த வேளையில், 15,000 அடி உயரத்திலிருந்து இலக்கே இல்லாமல் சரமாரியாகக் குண்டுமழை பொழிந்து எதிரிகளைத் தாக்குகிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலி வாங்கப்பட்டனர்.

ஒபாமா தன்னுடைய பதவிக்காலம் முடிகின்ற வரையிலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திக் கொண்டிருந்த போர் பெரிய மாற்றமின்றியே நடந்து கொண்டிருந்தது.

மேலும் லிபியா, பாகிஸ்தான், சோமாலியா, மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலும் அமெரிக்க படைகள் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. போகோ ஹாராம் கிளர்ச்சியை ஒடுக்குவதாக சொல்லிக் கொண்டு நைஜீரியா, கேமரூன், நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கப் படைகள் அனுப்பட்டன.

குடியரசுக்கட்சியின் வெளியுறவு கொள்கையும் ஜனநாயகக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையும் எப்போதுமே முரண்பட்டு நின்றதில்லை. காரணம் அவை அமெரிக்க பெரும் முதலாளிகளின் வர்த்தக நலன் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருப்பதால்தான்.

அமெரிக்காவை பொறுத்தவரை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே வெள்ளையர்களின் கைகளில்தான் எப்போதுமே இருந்து வருகின்றது. இதில் குடியரசுக் கட்சி வெளிப்படையாக வெள்ளை நிறவெறியர்களை ஆதரித்தும், முதலாளிகள், உயர் வகுப்பினரை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியும் வரும் கட்சியாகும்.

ஜனநாயகக் கட்சியோ இவற்றை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சியாகும். நேரத்துக்கேற்றபடி அமெரிக்க முதலாளிகள் இந்தக் கட்சிகளை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்வர்கள்.

மேலும் இரண்டு கட்சிகளால் அதிபர் பதவிக்கும் துணை அதிபர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை ஊடக முதலாளிகள் திட்டமிட்டு பிரபலங்களாக மாற்றும் வகையில் பல செய்திகள், கருத்துக் கணிப்புக்கள், நவீன தொழில் நுட்ப விளம்பரங்கள் முதலியவற்றைச் செய்வார்கள்.

இந்தச் செலவுகளுக்கான பணத்தை இரண்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் அமெரிக்க பெருமுதலாளிகள் மற்றும் நிறுவனங்களிடம் வசூல் செய்வார்கள். முதலாளிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பல மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.

இன்று ஜோ பைடன், கமலா ஹாரிஸ் போன்றவர்களின் வெற்றிக்குப் பின்னாலும் இந்த அமெரிக்க பெருமுதலாளிகள்தான் உள்ளார்கள். இவர்களின் வர்த்தக நலன்களை முன்னெடுத்துச் செல்லத்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அமெரிக்காவின் வர்த்தக நலன் என்பது தன்னைத்தவிர வேறு யாருமே களத்தில் இருக்கவிடாமல் செய்யும் மேலாதிக்க வெறியாகும். இதைச் செய்ய தகுதியுள்ள நபர்களை மட்டுமே அமெரிக்க முதலாளிவர்க்கம் முன்னிறுத்துகின்றது.

எப்படி காங்கிரசுக்கு மாற்றாக பிஜேபியையும் பிஜேபிக்கு மாற்றாக காங்கிரசையும் இந்திய ஆளும்வர்க்கம் மாற்றி மாற்றி முன்னிறுத்துகின்றதோ அதே போல்தான், அமெரிக்காவிலும்.

மக்களின் வெறுப்பு எப்பொழுதெல்லாம் சமூகத்தில் மேலோங்குகின்றதோ அப்பொழுதெல்லாம் ஆளும் வர்க்கம் தன்னை பாதுகாத்துகொள்ள ஒரு மாற்றை முன்னிறுத்தும். ஆனால் அந்த மாற்று ஏற்கெனவே இருந்த சமூக ஒழுங்கை நிலை நிறுத்தி அதை மேலும் கட்டிக் காப்பாற்றும் மாற்றாக இருக்குமே ஒழிய அதை புரட்டிப்போடும் மாற்றாக ஒருபோதும் இருக்காது.

அதனால் ஜோ பைடனோ, கமலா ஹாரிஸோ அமெரிக்க மக்களின் பிரதிநிதிகள் என்பதைவிட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் என்பதுதான் சரியாக இருக்கும். டிரம்பைவிட ஜோ பைடன் கொஞ்சம் தாராள மனதுடன் அமெரிக்க மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று நாம் நம்பினாலும் அதனால் அமெரிக்காவை தாண்டிய மற்ற நாடுகளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

ஏகாதிபத்திய நாடுகள் எப்போதுமே தங்களின் சுரண்டலை நிலை நிறுத்திக்கொள்ள நியாயப்படுத்திக்கொள்ள ஒப்பீட்டளவில் தங்கள் நாட்டு மக்களுக்கு தாங்களால் சுரண்டப்படும் நாடுகளைவிட அதிகமான அளவுக்கு கூலிகளை கொடுப்பது வழக்கமானதுதான்.

எனவே ஜோ பைடன் வெற்றியை அமெரிக்க வேண்டுமானால் தற்போதைக்கு கொண்டாடிக்கொள்ளலாம். சில சில்லரை சீர்திருத்தங்களை அறிவிப்பதன் மூலம் கொதித்திக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்களை அது அசுவாசப்படுத்தலாம்.

ஆனால் அமெரிக்க மேலாதிக்க வெறியால் தங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து நிற்கும் நாடுகளுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. அக்கிரகாரத்து பட்டாசுகளும், கோலங்களும், கட் அவுட்டர்களும் எப்படி ஒரு பேராசைப் பிடித்த சனாதன குள்ளநரிக் கூட்டத்தின் அற்ப கனவாக இருக்குமோ அதே போலத்தான் ஜோ பைடைன் வெற்றியைக் கொண்டாடுபவர்களுக்கும் வருங்காலத்தில் இருக்கும்.

- செ.கார்கி

Pin It