தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள காருகுறிச்சி என்ற ஊரில், சுப்பிரமணியத் தேவர் என்பவரும் அவர் மனைவி கருமறத்தி என்பவரும் வாழ்ந்து வந்தனர். திருமணம் ஆகி முப்பத்தியிரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தைப் பேறில்லை. குலதெய்வத்தை வணங்கிக் கொடை கொடுத்த பின்னர் இரட்டைக் குழந்தைகளாக இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளுக்கு அழகப்பன், சின்னத்தம்பி என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்கள் பதினாறுவயது அடைந்தபோது தாயும், தந்தையும் இறந்தனர். உறவினர்கள், சொத்துக்களைக் கவர்ந்து கொண்டு இருவரையும் விரட்டிவிட்டனர். எனவே வேறுவழியின்றி பிச்சையெடுத்து இவர்கள் வாழத்தொடங்கினர்.

இதேபகுதியில் புதுமாநல்லூர் என்ற ஊர் உண்டு. இங்கு கரையாளப் பிள்ளைமார், நாடார், தேவர், கோனார் ஆகிய சாதியினர் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் இவ்வூரைச் சேர்ந்த பொதிமாட்டுக்காரர்கள் காருகுறிச்சிக்கு வந்தனர். அவர்களிடம் அழகப்பனும், சின்னத்தம்பியும் பிச்சை கேட்டனர். இவர்கள் மீது இரக்கம் கொண்ட பொதிமாட்டுக்காரர்கள் இவர்கள் இருவரையும் புதுமாநல்லூருக்கு அழைத்துவந்து ஊரவரின் மாடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்தனர். அவ்வூரிலுள்ள சிவகாமி அம்மாள் என்பவருக்கும் குழந்தைப்பேறில்லை. எனவே. இருவரையும் அவரிடம் ஒப்படைத்தனர். மாடுமேய்ப்பதால் வரும் ஊதியத்தை சிவகாமி அம்மாளிடம் கொடுத்து விட்டு, அவர் வீட்டில் சாப்பிட்டு இருவரும் வளர்ந்து வந்தனர்.

பெருமாநல்லூரில் இருளப்பக்கரையாளன் என்பவருக்கு வீரமாகாளி என்ற பெண்குழந்தை பிறந்திருந்தது. அக்குழந்தைக்கு ஐந்து வயதாகும் போது பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இக்குழந்தையைக் காணியாடிச்சி என்ற பாட்டி வளர்த்து வந்தாள். அழகப்பனும், சின்னத்தம்பியும் பெருமாநல்லூர் வந்தபோது அப்பெண் பருவமடைந்தாள். வீரமாகாளி ஒரு நாள் தண்ணீர் எடுக்க வரும்போது அழகப்பன் அவளைச் சந்தித்தான். இருவருக்கும் காதல் பிறந்தது. காணியாடிச்சி பாட்டி வீட்டிற்குச் சென்று அழகப்பன் அவளைச் சந்திக்கத் தொடங்கினான். காணியாடிச்சிக்கு இது தெரிந்தாலும் இருவரின் சந்திப்பை அவள் தடுக்கவில்லை. மாறாக இருவரது சந்திப்பும் வெளியே தெரியாமல் இருக்க இருவரும் வீட்டினுள் இருக்கும்போது வெளியே கதவைச் சாத்திப்பூட்டி விடுவாள்.

இச்சந்திப்புகளின் விளைவாக வீரமாகாளி கருவுற்றாள். அவள் கருவுற்றமையும் அதற்கு அழகப்பனே காரணம் என்ற உண்மையும் ஊராருக்குத் தெரியவந்தன. இச்செயலுக்குத் தண்டனையாக அழகப்பனை ஒழித்துக் கட்ட முடிவு செய்து விட்டனர். ஆனால் இது அழகப்பனுக்குத் தெரியாது. ஆமணக்கு முத்துகளைச் (விதைகளை) சேகரித்து வைத்திருந்த பட்டறையில் ஏறி ஆமணக்கு முத்துக்களை அள்ளும்படி ஒரு நாள் அழகப்பனிடம் கூற, அவனும் அவ்வேலையைச் செய்யத் தொடங்கினான். அப்போது அவன் எதிர்பாராத வகையில் அவன் காலைப் பிடித்து தலைகீழாகத் தூக்கிவிட்டனர். கழுத்துவரை தலையானது ஆமணக்கு முத்துக்களில் புதைய, தண்ணீர் தண்ணீர் என்று கதறியவாறு மூன்று நாள் கழித்து அழகப்பன் இறந்து போனான். அவனது உடலை ஊருக்கு வெளியில் உள்ள அடர்ந்த ஆலமரத்தில் யாரும் அறியாதவாறு கொண்டுவந்து தூக்குப்போட்டுக் கொண்டது போல், கழுத்தில் கயிரைக் கட்டி உயரமான கிளையில் தொங்க விட்டனர். அடர்ந்த இலைகளின் மறைவில் அழகப்பனின் பிணம் ஊசலாடிக் கொண்டிருந்தமையால் சட்டென்று யார் கண்ணிலும் அது படவில்லை.

அழகப்பனைக் காணாத சின்னத்தம்பி அவனைத் தேடி அலுத்துப்போய் அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தான். அழகப்பனின் பிணம் சிதையத் தொடங்கியதால் சிறிது ஊண் சின்னத்தம்பியின் மீது விழுந்தது. ஆலமரத்தை அண்ணாந்து பார்த்த சின்னத்தம்பியின் கண்களில் தொங்கும் பிணம்பட்டது. அது அண்ணனின் பிணம் என்பதையறிந்து, துக்கம் தாளாமல், தானும் அதே மரத்தில் தூக்கிட்டுக் கொண்டு இறந்தான். உண்மையறிந்த வீரமாகாளி தலையைக் கல்லில் மோதி தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனாள்.

மூன்று பேரின் ஆவிகளும் சிவனிடம் போய் வரம் பெற்று வந்தன. வரத்தின் ஆற்றலால் அழகப்பனைக் கொல்லக் காரணமாயிருந்த ஊர்த்தலைவர்களின் வாலிபப்பிள்ளைகளை வரத்தின் துணையால் கொன்று பழிதீர்த்தன.அதற்கான காரணத்தை அறியும் வழிமுறையில் கோடாங்கியிடம் குறி கேட்டனர். வாழ வேண்டிய வயதில் அநியாயமாகக் கொலையுண்டும், தற்கொலை செய்தும் இறந்துபோன மூவரின் ஆவி தான் இதற்குக் காரணம் என்பதைக் கோடாங்கி கண்டறிந்தார். மூவரின் ஆவிகளையும் அமைதிப்படுத்தும் வழிமுறையாக மூவருக்கும் கோவில் கட்டி கொடை கொடுக்கும் படி அவர் கூறவே, உதிரமாடன் குடியிருப்பு என்ற இடத்தில் மூவருக்கும் கோவில் கட்டி கொடை கொடுத்தனர். ஆவிகளும் அமைதியடைந்தன.

கோவில் கொடை நிகழ்வின் போது சாமியாரும் சாமியாடுகையில் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டவாறே கீழே விழுந்து விடுவார். பின்னர் தண்ணீர் ஞுகொடுத்து அவரை எழுப்புவர். இது அழகப்பன் தண்ணீர், தண்ணீர் என்று கதறியதை நினைவூட்டும் நிகழ்த்திக் காட்டுதலாகும்.பெரும்பாலான கொலையில் உதித்த தெய்வங்களின் வரலாற்றின் இறுதி இதுபோன்றே அமைந்திருக்கும். இது குறித்து இத்தொடரின் இறுதியில் ஆராய்வோம்.

மேலும் உதிக்கும்...

Pin It