தலைகீழாக மாறிவிட்டது தாய்லாந்து.  எல்லாமே தாறுமாறாய் நடக்கிறது.  தலைநகர் பாங்காக் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் தடுமாறுகிறது.கடந்த மே 14 வெள்ளிக்கிழமை அன்று இரவு போல அப்படியொரு பயங்கர இரவு பாங்காக் மக்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

தெரு விளக்குகள் அணைக்கப் பட்ட சாலைகளில் விரைந்தோடும் இராணுவ வாகனங்கள் மீது ஆர்ப்பாட்டக் காரர்கள் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.  தீப்பற்றிய வாகனங்களிலிருந்து இராணுவ வீரர்கள் குதித்தோடி தப்பினார்கள்.  சாலைகளில் அமைக்கப் பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடிகளை நோக்கி, எரியும் டயர்கள் உருண்டோடி வந்து விழுந்தன.  மண்ணெண்ணெய் நிரப்பப் பட்ட டயர்களாதலால், சோதனைச் சாவடிகள் உடனுக்குடன் பற்றிக் கொண்டு கொழுந்துவிட்டு எரிந்தன.  இருளில் தலை தெறிக்க ஓடும் இராணுவ வீரர்கள், இருக்கும் இடம் தெரியாத ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது இலக்கின்றி சுடுகிறார்கள்.  இரவு முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால், பாங்காக் நகர மக்களின் தூக்கம் மட்டுமல்ல, அமைதியும் தொலைந்து போனது.  எல்லா தார்ச் சாலை களிலும் ஏதேனும் ஒரு வாகனம்  எரிந்தபடியே இருக்க, இருளில் தீச் ஜூவாலைகளும் அவை எழுப்பும் கரும் புகையும் பல கிலோமீட்டர்  தூரத்திற்கு அப்பாலும் தெரிகிறது.

சிவப்புச் சட்டை அணிந்த ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடந்த மே 14 வெள்ளியன்று நடந்த மோதலில் மட்டும் 25 பேர் பலியானார்கள்.  250க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.

மே 13, 14, 15 இம் மூன்று நாட்களில் நடந்த கலவரங்களால் புயலடித்து ஓய்ந்தது போல் பொலிவிழந்து கிடக்கிறது பாங்காக்.

என்னதான் நடக்கிறது தாய் லாந்தில்?  தெரிந்து கொள்வோம், வாருங்கள். மன்னராட்சி நடைபெறும் தாய்லாந்தில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவையும் அதற்கென்று ஒரு பாராளுமன்றமும் உண்டு.

ஏப்ரல் 2009இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், அபிஷித் வெஜாஜிவா புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.  இராணுவத்தின் துணையுடன் முறைகேடான தேர்தல் நடத்தி இவர் வெற்றி பெற்றதாகவும், அதனால் இப்போதைய பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் தக்கின் ஷினவத்தாவின் ஆதரவாளர்கள் கடந்த ஒரு ஆண்டாய் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  2010 புத்தாண்டு முதல் பிரதமருக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள், நாட்டின் உட் பகுதிகளில் உள்ள மக்களும் தலைநகர் பாங்காக்கிற்கு வந்து போராட்டங்களில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத் தனர்.

இதனால் பல்லாயிரக்கணக்கான தாய்லாந்தியர்கள் தலைநகர் பாங் காக்கிற்கு வந்து நாளுக்கொரு போராட்டத்தை நாடே அதிரும்படி நடத்தி வருகின்றனர்.  அரசுக்கு எதிராக போராடும் இவர்கள், தங்களின் அடையாளமாக சிவப்பு சட்டைகளை அணிந்து கொண்டு, பாங்காக் நகர வீதிகளிலேயே உண்டு உறங்கி எழுந்து அரசுக்கெதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஓராண்டாகவே அரசுக் கெதிரான போராட்டத்தில் நாளொன்றுக்கு 2 - 3 பேர் பலியாக, கடந்த மார்ச்சு 12ஆம் தேதியிலிருந்து மே 15 தேதி வரைக்குமான கால கட்டத்தில் மட்டும் 100 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது.

மே முதல் வாரத்தில் பிரதமர் பதவி விலகக் கோரி தாய்லாந்து பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக் காரர்கள் முற்றுகையிட்டதில், எம்.பி.க்களை வான் வழியே ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வரும் அளவுக்கு நிலைமை முற்றிப் போய்விட்டது.  காரணம் நகரின் தரை வழிகள் அனைத்தும் ஆர்ப்பாட்டக் காரர்களால் மூடப்பட்டது.  போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.  என்ன செய்தும் தலைநகர் பாங்காக்கிலிருந்து ஆர்ப்பாட்டக் காரர்களை விரட்ட முடியாததால் பிரதமர் அபிஜித் வெஜ்ஜாஜிவா நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு இராணுவத்தை யும் கொண்டு வந்து இறக்கினார்.

கடந்த மூன்று மாத காலமாக, வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள், பள்ளிகள், கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டு, இயக்கம் இன்றி முடங்கிக் கிடக்கும் தாய்லாந்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அறவே நின்று விட்டது.  நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், என்ன செய்தும் சட்டம் - ஒழுங்கு இயல்பு நிலைக்குத் திரும்பாததில், ஆத்திரமான தாய்லாந்து இராணுவம்  காட்டியாசவஸ்திபோல் எனும் தனது இராணுவ அதிகாரி ஒருவரையே, ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு ஆதரவு அளித்ததாகக் கூறி  சுட்டுக் கொன்றது.

மூன்று மாதத்திற்குள் பேசித் தீர்க்கலாம் என பிரதமர் அபிஜித் வெஜ்ஜாஜிவா சற்றே இறங்கி வந்து பேசினாலும், நாடாளுமன்றத்தைக் கலைக்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்து, ஆர்ப்பாட்டக் காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.  இந்தக் கெடு மே 25 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், அடுத்து என்ன நடக்குமோ என தாய்லாந்தே கதி கலங்கிக் கிடக்கிறது.

கடந்த ஏப்ரல் 10, 2009இல் நாட்டில்  நெருக்கடி நிலையை அறிவித்தபோது, பிரதமர் அபிஷித் வெஜ்ஜாஜிவா சொன்னார், “நாட்டில் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.  ஆனால் அந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் இல்லை.  நாளுக்கு நாள் வன்முறை அதிகமாகிக் கொண்டே போவதுதான் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது.”

ஓராண்டுக்கு முன்பே, தாய்லாந்தின் நிலைமை இப்படி என்றால், 2010 மே மாதத்தின் நிலையோ படுமோசமாக இருக்கிறது.

இந்தப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த சிவப்புச் சட்டை அமைப்பின் தலைவர்களின் ஒருவரான ஜான் பிந்தாபிக்சாய்,

“கெடு விதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்.  இல்லாவிட்டால் புதிது புதிதாக வன்முறை நாடு முழுவதும் வெடிக்கும்.  அதை இந்த அரசு மட்டுமல்ல, எந்த அரசும் தாங்காது.”

மன்னர்  ஆட்சி செய்யும் பூமியில் மக்கள் இப்படி கொந்தளித்து எழ என்னதான் காரணம்?  புதிய பிரதமர் பொறுப்பேற்ற இதே காலகட்டத்தில் தான் அண்மையில் தாய்லாந்தில் நான் பயணம் செய்தேன்.  இரண்டு வாரங்கள் தாய்லாந்தின் குறுக்கும் நெடுக்குமாக நான் பயணம் போனதில்  நான் கண்டதென்ன...?  கொடுமை.

தனிச்சிறப்பு மிக்க வரலாறும், இயற்கை வளமும், நல்லியல்பு கொண்ட நன் மக்களும் உள்ள தாய்லாந்தே, அய்ரோப்பாவின் அந்தப்புரமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனேன்.

தொடரும்..

Pin It