தேர்தல் களத்தை சர்க்கஸ் கூடாரத்தோடு ஒப்பிடலாம். அரசியல் யானைகள், விதவிதமான குரங்குகள், வில்லங்கமான சிங்கங்கள், பசுத்தோல் போர்த்திய புலிகள், எதையும் விழுங்கும் நீர்யானைகள், இவற்றை ஆட்டி வைக்கும் ரிங்மாஸ்டர்கள் என அனைத்து அம்சங்களும் தேர்தல் களத்தில் காணப்படும்.

Vijaykanthசர்க்கசிற்குப் பார்வையாளர்கள். தேர்தலுக்கு வாக்காளர்கள். சர்க்கஸ் கூடாரத்திற்குள் டிக்கெட் வாங்கியபிறகு நுழைய வேண்டும். தேர்தல் களத்தில் எல்லாவற்றையும் பார்த்து விட்டு வாக்குச் செலுத்த வேண்டும்.

எந்த சர்க்கசாக இருந்தாலும் அதில் சுவாரஸ்யத்திற்காக பபூன்கள் எனப்படும் கோமாளிகள் வந்து கிச்சு கிச்சு மூட்டுவார்கள். தேர்தல் களத்திலும் அப்படிப்பட்ட கோமாளிகள் வந்து போவது உண்டு. சுப்பிரமணிய சாமி எனும் அகில இந்திய கோமாளி தமிழக தேர்தல் களத்திற்கு அடிக்கடி வந்து கிச்சுகிச்சு மூட்டிவிட்டுப் போனதுண்டு. வரப்போகும் தேர்தல் களத்தில் எத்தனை பேர் கிச்சுகிச்சு மூட்டுவார்கள் என்ற எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஆனால், இரண்டு பேர் முன் கூட்டியே வந்து கிச்சுகிச்சு மூட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

முதலாமவர், நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த். கட்சியைப் பதிவு செய்யும் விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கே சிரிப்பு மூட்டியவர் ஆவர். "கட்சியில் ஆட்களை சேர்ப்பது என்றாலும் நீக்குவது என்றாலும் தலைவரின் முடிவு தான். கட்சியில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தலைவர்தான் எடுப்பார்'' என்று சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு போய் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்கள் தே.மு.தி.க.வினர். அரண்டு போய்விட்டார்கள் தேர்தல் ஆணையர்கள். ஜனநாயக நாட்டில் இப்படியொரு சட்டதிட்டத்துடன் கட்சியா என நொம்பலச் சிரிப்புடன் தே.மு.தி.க.வின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் தன் கட்சியில் பழைய பலாப் பழமான பண்ருட்டி ராமச்சந்திரனை அவைத்தலைவராக வைத்திருக்கிறார் விஜயகாந்த். அப்புறம் பொதுச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் எல்லோரையும் நியமித்திருக்கிறார். அத்தனை பேரையும் வைத்துக்கொண்டு, நான்தான் முடிவெடுப்பேன் என்று சட்டதிட்டம் வகுத்தால், அவர்களெல்லாம் எதற்கு என்ற கேள்வியை சாதாரணத் தொண்டன்கூட கேட்பான். மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களையும் 40 எம்.பி.க்களையும் மேடைக்கு மேடை கேள்வி கேட்டுச் சிரிப்பு மூட்டும் விஜயகாந்த்துக்கு, தன்னுடைய கட்சியின் சட்ட திட்டம் பற்றித் தேர்தல் ஆணையம் கேள்வி கேட்குமே என்ற அரசியல் அடிப்படை தெரியாமல் போய்விட்டது.

ஆந்திராவில் கிளுகிளுப்பை மூட்டிக்கொண்டிருப்பவர் நடிகை விஜயசாந்தி. அவரது கட்சியைக் கூட உடனடியாகப் பதிவு செய்துவிட்டது தேர்தல் ஆணையம். பாவம் விஜயகாந்த். மறுபடியும் சட்ட திட்டம் வகுத்துத் தன் கட்சியை பதிவு செய்ய வேண்டியதாயிற்று. தேர்தல் பிரச்சாரத்திலும் வேட்பாளர்கள் விண்ணப்பத்திலும் இன்னும் என்னென்ன வகையில் சிரிப்பு மூட்டப்போகிறார் விஜயகாந்த் என்பதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

"லஞ்ச உழலை ஒழிப்பேன்'' என்று ஏற்கனவே எம்.ஜி.ஆர். மூட்டிய சிரிப்பை, கறுப்பு எம்.ஜி.ஆர். இன்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த்தும் மூட்டிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சி மாநாடு, பொதுக் கூட்டம் எதுவாக இருந்தாலும் அதுபற்றிச் செய்தி போடும்படி பத்திரிகையாளர்களுக்குப் கொடுக்கப்படும் ‘கவர்' லஞ்ச ஊழல் ஒழிப்பின் முதல் அத்தியாயம் என அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று அவர் மேடைக்கு மேடை சொல்வது நல்ல அம்சம்தான். ஆனால், இன்றுள்ள நிர்வாகத்தை மனத்தில் வைத்து எடைபோடும் மக்களோ, விஜயகாந்த்தின் பலமான சிரிப்பாகத்தான் அதைப் பார்க்கிறார்கள்.

Karthikஇன்றைய தமிழக அரசியலில் சிரிப்பு மூட்டும் இரண்டாம் நபர், நடிகர் கார்த்திக். விஜயகாந்த், தேசியக் கட்சியின் தலைவர் என்றால், கார்த்திக்கோ அகில இந்தியக் கட்சியின் மாநிலத் தலைவர். பார்வார்டு பிளாக் எனும் மாபெரும் கட்சி இந்தியாவில் இருக்கிறது. கொல்கத்தாவில் ஒரு கிளை, உசிலம்பட்டியில் ஒரு கிளை எனப்பரந்து விரிந்திருக்கும் இந்த கட்சிக்குத்தான் திடுமென மாநிலத் தலைவராயிருக்கிறார் கார்த்திக். ராத்திரியில் பேசும்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சிரிப்பு மூட்டுகிறார். பொழுது விடிந்ததும் கலைஞரைப் போய்ப் பார்த்துச் சிரிப்பு மூட்டுகிறார். சர்க்கசில் கோமாளிகள் சில நேரம் ‘பார்' விளையாட்டு விளையாடி அங்கும் இங்குமாகத் தாவுவது உண்டு. கார்த்திக்கின் "பார்'' விளையாட்டு, அவரோடு நெருங்கியவர்களுக்கு தெரிந்த சங்கதிதான். அதன் விளைவாக, ராத்திரியில் ஒரு கூட்டணி, காலையில் இன்னொரு கூட்டணி என்று சிரிப்பு மூட்டுகிறார்.

அவர் மூட்டுகிற சிரிப்பு ஒரு பக்கம் என்றால், அவருக்கு ரசிகர்கள் மூட்டுகிற சிரிப்பு இன்னொரு பக்கம். அகில இந்தியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆவதற்கு முன்பு தன்னுடைய ‘சரணாலயம்' அமைப்பின் சார்பில் தென்மாவட்டங்களில் ஒன்றிரண்டு இடங்களில் கூட்டம் போட்டார் கார்த்திக். அந்தக் கூட்டங்களில் அவர் மேடையேறியதும் ரசிகர்கள் முண்டியடித்து, அங்கே தொட இங்கே தொட, கிச்சுகிச்சுக் கூச்சம் தாங்க முடியாமல் கூட்டத்தில் பேசாமலேயே கார்த்திக் ஓடியதெல்லாம் நல்ல நகைச்சுவைக் காட்சிகள். அதைவிட நகைச்சுவை, காலையில் அவர் கட்சித் தலைவரானவுடன் மாலையிலேயே ‘வருங்கால முதல்வர்' என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன.

கலைஞரும் வருங்கால முதல்வர்தான், கார்த்திக்கும் வருங்கால முதல்வர்தான், வைகோவும் வருங்கால முதல்வர்தான், விஜயகாந்த்தும் வருங்கால முதல்வர்தான். தமிழகத்தில் ஒட்டுப் போடவரும் வாக்காளர்களுக்கு பஞ்சம் எற்பட்டாலும் வருங்கால முதல்வர்களுக்கு பஞ்சமே ஏற்படாது. சினிமாவில் ஒரே பாடல் காட்சியில் பெரும் கோடீசுவரன் ஆகிவிடுவதுபோல, ஒரே தேர்தலில் எம்.ஜி.ஆர். போல முதல்வராகிவிடலாம் என்ற கனவு, சிரிப்பு மூட்டும் வருங்கால முதல்வர்களுக்கு அடிக்கடி வருகிறது. நமது ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம் என்கிற முந்தைய உதாரணங்களால் இத்தகைய கனவுகள் கலையாமல் இருக்கின்றன. கனவு நிலையிலேயே ஆளாளுக்குக் சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊருக்குள் எந்த நடிகர் வந்தாலும் முண்டியடித்துக் கொண்டு போய்ப் பார்க்கும் ஆர்வமிக்க தமிழர்கள் அதிகரிக்க அதிகரிக்க ‘வருங்கால முதல்வர்கள்' அரசியலில் தாக்குப் பிடித்து வாழ்வார்கள். ஆனால் தமிழகம்....?

- செவ்வேல்

Pin It