பெண்கள் இரவுக்குள் வீடு திரும்பவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் ரேஞ்சுக்கு அருள்வாக்கு வழங்கியுள்ளார் டில்லி முதலமைச்சர் மாண்புமிகு. ஷீலா தீட்சித் அவர்கள். இந்தியாவின் தலைநகரமான புதுடில்லி பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இல்லை. பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகி வருகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு பதில் கூறுகையில் ஒரு பெண் முதலமைச்சர் இவ்வாறு பேசியுள்ளதைக்கேட்டு யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை.

ஏனெனில் நாட்டை ஆள்வதற்கு 99 ஆண்டு குத்தகை எடுத்துள்ளதாக கருதும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர், சுதந்திர தின உரையைக் கூட, குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள்ளிருந்து பேசுவதைக்கண்டே பதறாதவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது ஒரு பிரச்னையே இல்லை என்று கூறி குற்றச்சாட்டை புறக்கணிக்காமல் பதில் சொன்னதற்கே அவர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். ஒரு பெண்ணை தன் தலைவராக கொண்டுள்ளதால் தான் இந்த பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளது போலும். ஆனால், எதற்கும் அஞ்சாமல் நாட்டை ஆள்வது தங்களுக்கு கை வந்த கலை என்பதை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது அவர்களுக்கு கட்டாயம் வருத்தம் அளித்திருக்கும்.

இந்திய மோப்ப நாய்களைக்கூட நம்பாமல், தன் கூடவே நாய்களையும் அழைத்து வந்த ஒபாமா ஆளும் அமெரிக்காவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத போது, ஏழை நாடான இந்தியாவில் அது ஒரு பிரச்னையே இல்லை என பதில் சொல்லாமல் இரவுக்குள் பெண்கள் வீடு திரும்ப வேண்டும் என்று அன்பும், அக்கறையும் கொண்டு சொன்னதற்காக முதலமைச்சரை பாராட்டக் கடமைப்பட்டவர்களாக நாம் உள்ளோம். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறியுள்ளனர் என்ற கூற்று பெண்களின் கடும் உழைப்பினால் மட்டும் தான் உண்மையாக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து துறைகளிலும் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதற்கு யார் பொறுப்பு? தனிநபர்கள் தன் விருப்பம் போல் பேசிக்கொள்ளலாம். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு சமூக கொடுமைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தை பலப்படுத்த வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நெறிகளை உருவாக்கித்தரக்கூடாது.

..............................................................................

தன்னைக் கடவுள் என்று சொன்னவர், கிருமி தாக்குதலால், ஒரு மாதம் நோய் வாய்ப்பட்டிருந்து, உடலின் பல பாகங்களுக்கும் அக்கிருமி பரவியதால், தீவிர சிகிச்சை பலனளிக்காமல் கஷ்டம் அனுபவித்து மரணத்தை தழுவியுள்ளார். லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கதறி. துடித்து துவண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இடதுசாரிக் கட்சிகள் தவிர ஏறக்குறைய அனைத்து கட்சித்தலைவர்களும் கலந்துள்ளனர்.

தமிழக முதல்வர் சார்பாக துணை முதல்வர், ஆந்திரா முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர், கர்நாடகா, குஜராத் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் சென்றுள்ளனர். அனைத்திற்கும் மேலாக, கடந்த மாதம் நடைபெற்ற அஸ்ஸாம் சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்கக் கூட செல்லாத பிரதமர் நேரடியாக வந்து, மனம் உருகி கும்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடன் அரசை வழி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவியும் வந்துள்ளார்.

பா.ஜ.க.வோ தன் குடும்பத்தில் ஒருவர் இறந்தது போன்று அனைத்து தலைவர்களையும் களமிறக்கி அஞ்சலி செலுத்த வைத்துள்ளது. மறைந்தவரின் சொத்தில் எந்த பங்கும் கேட்காத, ஆனால் தாங்களும் கடவுள்தான் என அறிவித்துக் கொண்ட பலரும் வந்துசென்றது நமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால் தேசியக்கொடி போர்த்தப்பட்டு முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இப்படி ஒரு உதாரணத்தை இன்று துவக்கிவைத்து விட்டனர். ஆனால், ஊருக்கு ஒரு கடவுள் உள்ள இந்தியாவில் அனைவருக்கும் அரசு மரியாதை என்றால் அரசியலைப்புச் சட்டம் என்னாவது?

அரசுப்பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் மத உணர்வுகளை தேசிய உணர்வாக சித்தரிப்பது நாட்டு எதிர்காலத்திற்கு நல்லதா? சாய் பாபாவின் சேவைகளுக்காக என்று வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும், அவரின் மாய ஜால நடவடிக்கைகள், மூட நம்பிக்கை அடிப்படையிலான மத பிரச்சாரங்களை அரசு எப்படி அங்கீகரிக்க முடியும்? பகுத்தறிவு வழி வந்தவர்கள் அவரை குடும்ப நண்பராக்கி, பின்னர் சேவைக்காக என்று கூறி பாராட்டத்துவங்கிவிட்டனர். ஆனால்,தனிமனிதரை கடவுள் என வழிபடுவதை அரசு எப்படி ஆதரித்தது என குரல் எழுப்புவது பகுத்தறிவு அடிப்படையில் மிகத்தேவையாகும்.

Pin It